நேற்றொரு தோற்றம்! இன்றொரு மாற்றம்! உள்ளாட்சி நாடகங்கள்!

-சாவித்திரி கண்ணன்

அதிமுக அரசு உள்ளாட்சி விவகாரங்களை அணுகியதைப் போலவே, திமுக அரசும் தற்போது அணுகுகிறது. கிராம சபை கூட்டங்கள் ரத்து, உள்ளாட்சி தேர்தலை ஆனவரை தள்ளிப் போடுவது, உள்ளாட்சி அதிகாரங்களை ஊனப்படுத்துவது…என்பது தொடர்கதையா..?

முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாளான சென்ற ஞாயிற்றுகிழமையில் வடபழனி உள்ளிட்ட தமிழகத்தின் பல கோவில்களில் குடமுழுக்கு நடைபெற்றன. அதில் அமைச்சர்கள், விஐபிக்கள் பங்கேற்றனர். அதே போல முதல்வர் ஸ்டாலினே அறிவாலயத்தில் திமுக நிர்வாகி பூச்சி முருகன் திருமணத்தை திமுக உயர்மட்டத் தலைவர்கள் உடை சூழ நடத்தை வைத்தார். அப்படி இருக்க குடியரசு நாளில் நடக்க இருந்த கிராம சபை கூட்டங்கள் நடக்கக் கூடாது என அதிரடியாக தடுத்துள்ளது திமுக அரசு!

சட்டமன்ற கூட்டத் தொடர்கள், நாடாளுமன்ற கூட்டம் ஆகியவை கூட கொரானா காலத்தில் தடையில்லாமல் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், சுமார் 50 தில் இருந்து 100 பேர் வரை வெட்டவெளியில் கூடி ஒரு சில மணி நேரங்கள் கிராம வளர்ச்சி மற்றும் தேவைகள் குறித்து பேசுவது மட்டும் தடுக்கப்பட்டு உள்ளது. சமீபத்தில் ரேஷனில் வழங்கப்பட்ட பொங்கல் தொகுப்பு குறித்த விமர்சனங்கள் உள்ளாட்சி கிராம சபை கூட்டங்களில் விவாதிக்கப்படும். ஆகவே தடுக்க வேண்டும் என கருதி திமுக அரசு கிராம சபை கூட்டங்களை ரத்து செய்திருக்கலாம் என பரவலான பேச்சும் உள்ளது!

அதிமுக ஆட்சியாளர்கள் உள்ளாட்சி தேர்தலை மீண்டும்,மீண்டும் தள்ளிப் போட்டு வந்தனர். இதனால் உள்ளாட்சிகளுக்கு மத்திய அரசு தரும் நிதி உதவிகள் சென்று சேரமுடியாத நிலைமைகள் இருந்தன! மேலும் கிராம மற்றும் நகர்புறங்களின் அடிப்படை சுகாதார கட்டமைப்பு மற்றும் உள்ளூரின் அடிப்படை தேவைகள் கவனிப்பாரற்று அலட்சியப்படுத்தப்பட்டு வந்தன!

அப்போது அதிமுக அரசின் இந்த அணுகுமுறையை ஸ்டாலின் கடுமையாக விமர்சித்தார். அதிமுக அரசுக்கு உள்ளாட்சிகள் மீது அக்கறையே இல்லை. உள்ளாட்சி அதிகார பகிர்வில் விருப்பமில்லை. தேர்தலை சந்திக்க பயப்படுகின்றனர்..என அவ்வப்போது அனல் கக்கும் அறிக்கைகள் வெளியிட்டு வந்தார்.

ஆனால், திமுக ஆட்சிக்கு வந்ததும் அதிமுக ஆட்சியின் அதே போக்கைத் தான் தாங்களும் கடைபிடிக்கின்றனர் என்பது உள்ளாட்சி ஆர்வலர்களை வருத்தமடைய வைத்துள்ளது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த மேலும் நான்கு மாதம் அவகாசம் வழங்கக் கோரி திமுக ஆதரவாளர் சங்கர் என்பவர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப் பட்டுள்ளது. இந்த சங்கர் தான் அதிமுக ஆட்சியில் உள்ளாட்சி தேர்தல் தாமதம்படுத்தப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

திமுக அரசின் நோக்கத்தை விளக்கும்வண்ணம்  மாநில தேர்தல் ஆணை யம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, நகர்புற உள்ளாட்சி தேர்தல்கள் நடத்த மேலும் நான்குமாத அவகாசம் கேட்டார்.

ஏற்கனவே  தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த நான்கு மாத அவகாசம்  வழங்கி கடந்த செப்.27-ல் உத்தரவிட்டோம். அந்த காலக்கெடு வரும் ஜன.27-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில், தற்போது மீண்டும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த மேலும் 4 மாத அவகாசம் கேட்கிறீர்கள். ஐந்து மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல்களை நடத்தாலாம் என்றால் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த எப்படி தடை கொடுப்பது’’ என மறுத்து விட்டனர்.

இதே போல திமுக அரசின் தூண்டுதலால் நகர்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க கோரி உயர் நீதிமன்றத்திலும் வழக்கு போடப்பட்டது.

அதற்கு நீதிபதிகள், ‘‘ஏற்கெனவே 5 மாநில தேர்தல்களுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதிக்க மறுத்து விட்டது. இதுதொடர்பான வழக்கும் ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் தேர்தலை தள்ளிவைக்கக் கோரி நீங்கள் உச்ச நீதிமன்றத்தைத்தான் அணுக வேண்டும்’’ எனக் கூறிவிட்டனர்.

இந்த அணுகுமுறைகளை பார்க்கும் போது உள்ளாட்சி அதிகார பகிர்வில் திமுக அரசுக்கும் ஆர்வம் இல்லை என்பது நன்கு தெரிய வருகிறது. மேலும் உள்ளாட்சி நலன்களைவிட கட்சியின் ஆதிக்கத்தை அங்கு நிலை நாட்டுவது தான் இவர்கள் குறிக்கோளாக உள்ளது.

இதேபோல கிராம சபை கூட்டங்களை நடத்துவதற்கு அதிமுக அரசு மீண்டும், மீண்டும் கொரானா உள்ளிட்ட பற்பல காரணங்களை சொல்லி தடுத்தது!

தமிழகத்தில் உள்ள 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் ஆண்டுதோறும் ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15 மற்றும் அக்டோபர் 2 ஆகிய 4 நாட்கள் கிராமசபை கூட்டம் நடத்தப்பட வேண்டும். இந்த கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்று தங்கள் பகுதியின் அடிப்படை தேவைகள் குறித்து பேசுவர். மேலும், அந்தந்த கிராமத்தில் நடக்கும் வளர்ச்சி திட்டப் பணிகள், அடிப்படை தேவைகள் குறித்து தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டு, அதன் பின் அதற்கான நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் மேற் கொள்ளப்படும்.கிராம சபை கூட்டங்களுக்கு முற்றிலும் தடை போடும் போது இவை யாவுமே பாதிக்கும்.

அதிமுக அரசு கிராம சபை கூட்டங்களை நடத்த தடைவித்தித்த போது ஸ்டாலின் கட்சி தொண்டர்களுக்கு, எழுதி கடிதம் தற்போது நினைவுகூறத்தக்கது; தி.மு.க., 16 ஆயிரத்து, 500 ஊராட்சிகளில், கிராம சபை கூட்டம் நடத்துகிறது. மக்கள் ஆர்வமுடன் வருகின்றனர். இரண்டு நாட்களில், 1,600க்கும் அதிகமான, கிராம சபை கூட்டம் நடந்துள்ளன.இந்த கூட்டங்கள் நீடித்தால், மக்கள் ஒட்டுமொத்தமாக, தி.மு.க., கூட்டணியை நோக்கி சென்று விடலாம் என்ற அச்சம், ஆட்சியாளர்களை ஆட்டி படைக்கிறது. கிராமசபை கூட்டம் நடத்த, மாவட்ட கலெக்டர்கள் அனுமதிக்கக் கூடாது என, ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் தலைமை செயலர் அறிக்கை வெளியிட்டுள்ளார். இத்தகைய அடக்கு முறைகளை, எத்தனையோ காலமாக, தி.மு.க., சந்தித்துள்ளது. அதிகாரத்தையும், சட்டத்தையும் காட்டி, தி.மு.க.,வை ஒருபோதும் அடக்கி ஒடுக்கிவிட முடியாது. அதிகார மிரட்டல்களுக்கு அணு அளவும் அஞ்சாமல், தி.மு.க.,வின் மக்கள் கிராம சபை கூட்டங்கள் திட்டமிட்டபடி, ஜன.,10 வரை தொடரும்; இது உறுதி’’

என்று ஸ்டாலின் அப்போது கூறினார். அவரே பல கிராம சபை கூட்டங்களை வழக்கத்திற்கு மாறாக பிரம்மாண்டமாக கூட்டியதோடு, நேரடியாக சென்று கலந்து கொண்டு பேசினார்.

ஆனால் குடியரசு தினத்திற்கு நடக்க வேண்டிய கிராம சபை கூட்டத்தை அதிமுக ஆட்சியைப் போலவே அதிகாரிகளைக் கொண்டு அறிக்கை வெளியிட்டு தடை செய்துள்ளார். கிராம சபை கூட்டம் நடத்துவதற்கு மாநில அரசு அனுமதி என்பதே தேவையற்றது. அதிகாரத் திணிப்பு. அது அந்தந்த கிராம பஞ்சாயத்து தலைவர்களின் தனிப்பட்ட சுதந்திரம் என உயர்நீதிமன்றம் ஏற்கனவே கூறியுள்ள நிலையில் தற்போது கிராம சபை கூட்டத்தை திமுக அரசு வலிந்து தலையிட்டு ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது! ஒரு பக்கம் மத்திய அரசிடம் மாநில உரிமைகளுக்கு குரல் எழுப்பும் திமுக அரசு மறுபக்கம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அரசியல் சட்டம் அளித்துள்ள அடிப்படை உரிமைகள்,கடமைகள் ஆகிவற்றை செய்யக் கூட தடை போடுவது ஆச்சரியமாக உள்ளது.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்