பீஸ்ட் பட நஷ்டத்திற்கு யார் பொறுப்பு ஏற்க வேண்டும்?

- சாவித்திரி கண்ணன்

வேல்முருகன், சுங்குவார்சத்திரம் , காஞ்சிபுரம்

தமிழக கவர்னருக்கே பாதுகாப்பில்லை என பொங்குகிறார்களே, ஒ.பி.எஸ்சும், இ.பி.எஸ்சும்?

ஐயோ பாவம்! சொந்தக் கட்சியையே பாஜகவிடம் இருந்து பாதுகாக்க முடியாதவர்கள் கவர்னரின் பாதுகாப்பு குறித்து கதறுவது வேடிக்கை!

பாண்டித்துரை, அரசரடி, மதுரை

தனக்கும், ஆளுநருக்கும் பரஸ்பரம் நல்ல மரியாதையும், நட்பும் உண்டு என்கிறாரே ஸ்டாலின்?

இருக்கட்டும்! அதனால், தமிழக மக்களுக்கு எந்தப் பயனுமில்லையே!

எஸ்.ராஜலட்சுமி, மதுரவாயில்

பீஸ்ட் பட விவகாரத்தில் ஏற்பட்டுள்ள பெரிய நஷ்டத்திற்கு நடிகர் விஜய்யிடம் ஏதாவது பரிகாரம் செய்ய சொல்கிறார்களே விநியோகஸ்தர்கள்?

விஜய் என்ற ஸ்டார் அந்தஸ்த்திற்காக- அவர் முகத்திற்காகத் தான் – பெரும் தொகை கட்டி படத்தை எடுத்தார்கள் என்ற வகையில் கேட்பது தவறல்ல! அதே சமயம் சன் பிக்சர்ஸ், ரெட்ஜெயண்ட் என இரு நிறுவனங்களும் நல்ல விலைக்கு நிர்பந்தித்து விநியோகஸ்தர்களிடம் பெரிய அளவு பணம் பார்த்துள்ளனர்! ஆக, இவர்களும் தார்மீகப் பொறுப்பு ஏற்க வேண்டும்!

எஸ்.கண்ணப்பன் ,சேத்தியாதோப்பு கடலூர்

ஆளுநருக்கு பாதுகாப்பு கொடுக்க தவறிய ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என்கிறாரே அண்ணாமலை?

பாதுகாப்பில்லாத இடத்தில் ஆளுநர் வாழக் கூடாது! ஆகவே, அவர் டெல்லி புறப்படும் தேதியை குறித்துக் கொடுத்து விடுவது உத்தமம்!

ஆர்.ரமேஷ், பெங்களூர்

தமிழகத்தில் ஆன்மீக அரசு நடக்கிறது என்கிறாரே சேகர்பாபு?

மகிழ்ச்சி! ஆன்மீக அரசாக இருப்பது தவறில்லை. மதவெறி அரசாக இருப்பது தான் ஆபத்து!

மு.கருப்பசாமி, அருப்புகோட்டை, விருதுநகர்

பாரம்பரிய மருத்துவத்திற்கு சர்வதேச முக்கியத்துவம் என 1,800 கோடியை ஆயுர்வேத ஆராய்ச்சி மையம் உருவாக்கப்பட்டு இருக்கே?

சிறப்பு! ஆயுர்வேதத்திற்கு ஏராளமான கல்லூரிகள்,பல்கலைக் கழகங்கள், ஆராய்ச்சி மையங்கள்..என ஏற்கனவே உள்ளது போதாது என உலகத் தரத்தில் ஒன்று ஆரம்பிக்கப்பட்டு உள்ளது. ஆனால், ஆயுர்வேதத்தைக் காட்டிலும் ஆழமான சித்த மருத்துவத்திற்கு தமிழகத்தில் ஒரு பல்கலைக் கழகம் வேண்டும் என்றால் கூட, அவர்களுக்கு கோபம் வருகிறதே!

க.அப்துல் நாசர், ஹைதராபாத்

கிரிப்டோ கரன்சி பயன்பாட்டுக்கு சர்வதேச ஒழுங்கு முறை சட்டம் வேண்டும் என நிர்மலா சீதாராமன் சர்வதேச நிதியத்தில் கோரிக்கை வைத்துள்ளாரே?

மானக்கேடு! இது, எந்த அளவுக்கு கறுப்பு பணத்தை பாதுகாப்பதில் இவர்கள் வெட்கங் கெட்டுள்ளனர் என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு!

கோமதி நாயகம், கோவை

இளையராஜாவிற்கு மோடியை புகழ்ந்துரைக்க உரிமை இல்லையா என்ன? எதற்கு அவர் மீது இத்தனை விமர்சனங்கள்..?

இளையராஜாவிற்கு மட்டுமல்ல, யாருக்குமே உரிமை உண்டு! அதே போல அவரது கருத்துக்கு எதிர் கருத்துரைக்கவும் உரிமை உண்டு! அதை எதிர்கொள்ளும் கடமையுமவருக்கு உண்டு!

மு.ரத்தினவேல், விருதாச்சலம்.

நான் ஒன்றும் ரப்பர் ஸ்டாம்ப் கிடையாது! மாநில முதல்வர் சொல்லும் இடத்தில் கையெழுத்து போட என்கிறாரே தமிழிசை?

ஆமாம்! அமித்ஷா,மோடி ஆகியோருக்கு மட்டுமே அவர் ரப்பர் ஸ்டாம்ப்!

எல்.ஞானசேகரன், ஈரோடு

சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் பற்றிய உங்கள் மதிப்பீடு என்ன?

நல்லவர், ஆற்றல் மிக்கவர், பொதுநல ஆர்வலர்! ஆனால், மிகப் பெரிய துர்அதிர்ஷ்டம், சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மா.சுவை மிஞ்சிய அதிகார மையமாக இருப்பது! சுகாதாரத்துறையை பொறுத்த அளவில் அங்கு தற்போதும் விஜயபாஸ்கர் ஏற்படுத்திய ஊழல் கட்டமைப்பே நிலவுகிறது! அதற்கு பாதுகாவலராக திகழ்ந்து கொண்டிருப்பவர் ராதாகிருஷ்ணன்!

எம்.சத்தீஸ், கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு

தமிழகத்தில் கடந்த 15 மாதங்களில் 131 யானைகள் இறந்துள்ளன?

யானைகளுக்கான இருப்பிடங்களான காடுகளில் மனித சமூகத்தின் ஊடுருவலே இதற்கு முக்கிய காரணம்! இதில் 15 வயதிற்குள் உள்ள யானைகளின் எண்ணிக்கை 52 என்பது கவலையளிக்கிறது. ஆட்சியாளர்களின் தயவின்றி வாழக்க்கூடிய காட்டு விலங்கினங்களுக்கே பாதுகாப்பற்ற நிலையில் நம் சமூக மன நிலை இருப்பது ஆபத்தானது!

ஆர்.தணிகாச்சலம், திருக்கோவிலூர்,விழுப்புரம்

இலங்கை பிரச்சினைக்கு குறைந்தபட்ச ஒரு உடனடி தீர்வு சொல்ல முடியுமா?

ராஜபக்சே குடும்பம் பதுக்கிய சொத்துக்களை  நாட்டுடமை ஆக்குவது உடனடியான குறைந்தபட்ச தீர்வாக இருக்கும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது!

எம்.ரகுமான்கான், சேலம்

பிரசாந்த் கிஷோரை அழைத்து காங்கிரஸ் தலைமை ஆலோசனை கேட்டுள்ளதே?

இதே பிரசாந்த் கிஷோர் தான் சில மாதங்களுக்கு முன்பு தான் காங்கிரஸ் இல்லாத எதிர்கட்சிகளின் கூட்டணியை மம்தா தலைமையில் உருவாக்க களம் கண்டவர். பாஜக தலைமைக்கு இன்று வரை நெருக்கமானவர். இவரை ஆலோசனை கேட்டுத் தான் காங்கிரஸ் பிழைக்க முடியும் என்பது பரிதாபம்!

அ.அறிவழகன், மயிலாடுதுறை

மோடியை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள் என்கிறாரே பாக்கியராஜ்?

குறை பிரசவத்தில் பிறந்தது குழந்தையின் குற்றமல்ல! இப்படி அடிவருடி அரசியல் செய்யும் நிலை பாக்கியராஜிக்கு போய் ஏற்பட்டுவிட்டதே ஐயோ பாவம்!

குறிப்பு;

https://forms.gle/g3i6Bd5S4DD9FGWD8

கேள்வி கேட்க விரும்புபவர்கள், இந்த லின்கில் சொடுக்கி, உங்கள் கேள்வியை சுலபமாக பதிவு செய்யலாம்.