பெண்களை போராளியாக்கிய காந்தியவாதி சுந்தர்லால் பகுகுணா!

-ஏ.பாஸ்கர்

சுற்றுச் சூழலுக்காக போராடி வருகின்ற இன்றைய இந்திய இளம் தலைமுறையினருக்கு எல்லாம் இவரே முன்னோடி! ஆறு, மலை,காடுகள் உள்ளிட்ட இயற்கை வளங்களை பாதுகாக்கும் காந்தியத்தின் கடைசி எச்சமாக நம்மிடையே வாழ்ந்த இந்த காந்தியவாதி கடந்து வந்த பாதை கரடுமுரடானது! உறுதியானது! நாம் பின்பற்றுவதற்கான நிறைய செய்திகளைக் கொண்டிருப்பது…!

வனங்களின் பாதுகாப்பிற்காக ஆற்றிய அளப்பரிய பங்களிப்புகளுக்காக உலகளவில் போற்றப்படும் இந்தியாவின் ஆகப்பெரிய சுற்றுச்சூழல் போராளி சுந்தர்லால் பகுகுணா அவர்கள் கொரோனா நுண் கிருமி பேருந்தொற்றுக்கு ஆளாகி, சிகிச்சை பலன் அளிக்காது இன்று இயற்கை எய்தினார் என்னும் செய்தி நம்மை சொல்லொணாத் துயரத்தில் ஆழ்த்தி உள்ளது.

அவர் 1973 ஆம் ஆண்டில் சிப்கோ ( மரத்தைக் கட்டிப்பிடி என்று பொருள் ) இயக்கத்தை நிறுவினார், இது வன்முறையற்ற அகிம்சை வழி போராடும் அமைப்பு. இதன் போராட்ட முறைகள், காந்தியிடம் இருந்து பின்பற்றப் பட்டது. அதாவது, நீடித்த உண்ணா விரதங்கள், பல்லாயிரக் கணக்கான கிலோ மீட்டர்கள் கொண்ட நெடிய பாத யாத்திரைகள் போன்றவை குறிப்பிடத் தக்கது. தேசிய மற்றும் சர்வதேச அளவில் நிகழ்த்தப் பெற்ற அவரது உரைகள் மற்றும் அவருடைய கட்டுரைகள் மிகவும் பிரசித்தி பெற்றவை. அவருடைய, ‘சூழலியல் என்பதே நிரந்தர பொருளியல்’ என்று பொருள் படும் ‘Ecology is the Permanent Economy’ எனும் மிகவும் பிரபலம் அடைந்த முழக்கத்தையே ஆல்பிரட் ஜேம்ஸ் தன்னுடைய ஒரு ஆங்கில புத்தகத்தின் தலைப்பாகப் பெயர் சூட்டி உள்ளார். இந்த நூல், பகுகுகுணாவின் வாழ்வு, தத்துவம், இயக்கம் ஆகியவை குறித்த ஒரு  ஆய்வு நூல்.

சிப்கோ இயக்கத்தின் மரங்களை வெட்டுவதற்கு எதிரான தொடர் போராட்டாங்களே,  அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி  மரங்களை வெட்டுவதை 15 ஆண்டுகள் தடை செய்யும் சட்டம் போட வழி வகுத்தது!

அவருடைய வாழ்வின் மிக முக்கியமான போராட்டம் இமயமலைத் தொடர் பகுதியில் கட்டப்பட்ட தெஹரி அணைக்கட்டு கட்டுமானத்திற்கு எதிரான போராட்டம் தான். இதற்காக மிக வலுவான போராட்டங்களை அவர் முன்னெடுத்தார். இந்த அணை கட்டப்படுவது தொடர்பாக ஒரு சுற்றுச் சூழல் கமிட்டி அமைக்க வேண்டும் என நரசிம்மராவ் காலத்தில் 1995 ல் 45 நாட்கள் நீண்ட உண்ணாவிரதம் இருந்தார். இதே அணை தொடர்பாக மீண்டும் 2001 ஆம் ஆண்டு 74 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து கைதானார்!

பொதுவாகவே, அணைக் கட்டுமானங்கள் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான அடையாளமாக நம் சமூகத்தினரால் பார்க்கப் படுவதால், இவரது இந்தப் போராட்டம், பல தரப்புகளிலிருந்தும் கடும் எதிர்ப்புகளையும், அவதூறுகளையும் சம்பாதித்தது. எனவே, இவர் “அபிவிருத்திக்கு எதிரானவர்” என்று முத்திரை குத்தப்பட்டார். இவற்றை எல்லாம் எதிர்கொண்டு அவர் இடையறாது போராடியதால்தான் இந்த உலகம், அவரை வெறும் ஒரு சுற்றுச்சூழல் ஆர்வலராய் சுருக்கிப் பார்க்காமல், பெரும் சூழல் போராளியாக உற்று நோக்கத் தொடங்கியது.

மேற்கு இமயமலை பிராந்தியத்தில், கிராமப்புரங்கள் தோறும், சுழலியல் குறித்த விழிப்புணர்வை உருவாக்க கால் நடையாக அவர் 5,000 கீ.மி (1981-83) பயணித்துள்ளார்! பெண்களே சூழலியைக் காப்பாற்றும் பெரும் போராளிகளாக உறுதிபாட்டுடன் இருக்க முடியும் என்பதை சரியாக உணர்ந்து செயல்படுத்தினார்!

அவரிடத்தில் இத்தகைய ஆளுமையை செதுக்கியது,   யார் என்றால், அவர் வேறு யாருமல்ல, மகாத்மா காந்தியுடன் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக, உடன் பணியாற்றிய அவருடைய சகாவான மீரா பென் (மேடலின் ஸ்லேட்) எனும் ஆங்கிலப் பெண்மணி தான் அவர்.

உண்மையில் அவர்தான் காந்தியினுடைய ஆக்கபூர்வமான செயல்திட்டத்தைக் கொண்டு, சிப்கோ இயக்கத்தினை மேம்படுத்தவும் விரிவுபடுத்தவும் உதவினார். மீரா பென்னுடனான இந்த தொடர்பு மூலம் தான் பகுகு ணாவிற்கு காந்தியின் தத்துவார்த்த செயல்பாடுகள் நன்கு விளங்கியது.

மேலும், மீரா பென்தான் பகுகுணாவை அவர் மலை கிராமங்களுக்குச் சென்று வேலை செய்ய உந்து சக்தியாக இருந்தார். மற்றும் “கிராமங்களின் வாழ்க்கைக்கும்,  இயற்கையின் வாழ்க்கைக்கும் இடையிலான உறவு” பற்றிய புரிதலே சுந்தரலால்  பகுகுணாவின் வாழ்வியல் தத்துவத்திற்கான அடிப்படையாக அமைந்தது எனலாம்.

அவருடைய வாழ்வில், குறிப்பாக அவரது செயல்பாட்டில், இரண்டாவது பெரிய செல்வாக்குக்கு உரியவர், மற்றொரு பிரிட்டிஷ் பெண் சரலா பென் (கேத்தரின் மேரி ஹெய்ல்மேன்) ஆவார். இவர் மலைவாழ் பெண்களின் கல்விக்காக தனது வாழ்க்கையையே அர்ப்பணித்தவர். இவருடைய தாக்கம்  முக்கியமாக பகுகுனாவின் மனைவி,  விமலாவை ஒரு சமூக ஆர்வலராக மற்றும் போராளியாக மாற்றியது.  அவரது ஆசிரம செயல்பாடுகளுக்கு இவை பேருதவியாக இருந்தன. தொலைதூர மலைப் பிரதேசத்தில் ஆசிரமத்தை நிறுவுவதன் மூலமும், அதில் சமூகப் பணி செய்வதன் மூலமும் பகுகுனாவின் வாழ்க்கை முறையை வடிவமைப்பதில் மற்றும் இயக்குவதில் அவர் மனைவி விமலாவும் முக்கிய பங்கு வகித்தார்.

மக்களின் முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்ட இந்த ஆசிரமம், இறுதியில் அதிகார மையமாக உருவெடுத்தது.

பகுகுணாவின் தத்துவம் “பூமி நம் தாயாகவும், மனிதர்கள் அவளுடைய குழந்தைகளாகவும் ஒரு நெருக்கமான உறவோடு இருக்கிறார்கள், எனவே, அவர்கள் அவளைச் சார்ந்திருப்பதை உணர்ந்து அங்கீகரிக்க வேண்டும் ” என்பதுதான். பகுகுணாவின் தத்துவம் மற்றும் செயல்பாடுகள் வெறும் காந்தியின் அகிம்சையுடன் நின்று விடவில்லை. அவரது  தன்னம்பிக்கையை வளர்த்தெடுக்கும் சுதேசியம், அடுத்தவர் வளங்களை துஷ்பிரயோகம் செய்யாதிருத்தல்,  தன்னுடையாதே ஆனாலும்  வளங்களைத் தவறாகப் பயன்படுத்தாது காத்தல் போன்றவற்றையும் தனது வாழ்வியல் நெறிமுறைகளாகக் கொண்டிருந்தார் பகுகுணா. எளிய மக்களின் உரிமைகளை காப்பாற்றவும் சூழலியலைப் பேணவும்

சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார நலன்கள் இடையிலான கருத்தாக்கத்தில் அவர் காடுகளைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்கே முக்கியத்துவம் அளித்தார்.   ஒரு நிலையான பாதுகாப்பிற்கான அணுகுமுறையை அவர் கொண்டிருந்தார். இதுவே நிரந்தர மற்றும் நிலையான பொருளாதாரத்திற்கு வழி வகுக்கும் என்று பகுகுணா உணர்ந்திருந்தார். மலையக மக்களின் உள்ளூர் பொருளாதார நிலைமைகளை நிவர்த்தி செய்வதற்கான வழிமுறையாக பெரும் தொழில்களுக்குப் பதிலாக, அவர்களுடைய உணவு, எரிபொருள் மற்றும் இயற்கை உரங்களுக்கு முக்கியத்துவம் அளித்து விவசாயத்தை வளர்த்தெடுக்கவே அவர் விரும்பினார்.  இந்திய அரசு இவருக்கு அளித்துக் கௌரவித்த பத்மஸ்ரீ விருதை ஆரம்பத்தில் ஏற்றுக்கொண்ட பிறகு அவர் ஏன் அதைத் திருப்பி விட்டார் என்பது குறித்து இன்றளவும் ஒரு புதிர் உள்ளது. இந்த விருது  பகுகுணா மற்றும் சரலா பென் இருவருக்குமானது என்றும், இந்த விருதினை சரலா பென் ஏற்க மறுத்து விட்டதால் அதன் அடிப்படையில் இவர் விருதைத் திருப்பி விட்டார் என்றும் கூறப்படுகிறது. ஆனால், 2009 ஆம் ஆண்டு அவருக்கு வழங்கப்பட்ட பத்ம விபூஷன் பட்டத்தை ஏற்றுக் கொண்டார்!

பகுகுணாவின் போராட்டப் பாதையில் உள்ளிருந்தும் அவருக்கு எதிர்ப்புகளும், அவற்றால் நெருக்கடிகளும் இருக்கத்தான் செய்தன. குறிப்பாக, அவருடைய  காஷ்மீர் முதல் கோஹிமா வரையிலான பாத யாத்திரை மற்றும் தெஹ்ரி அணை போராட்டம் ஆகியவற்றில் எழுந்த எதிர்ப்புகளையெல்லாம் அவர் எதிர்கொண்ட விதம்  பகுகுணாவின் ஆளுமையை மென்மேலும் உயர்த்தியது.

சுந்தர்லால் பகுகுணாவின் ஆளுமையை உருவாக்கியதில்  வினோபாவிற்கும் பங்கு உண்டு. அவருடைய மதுவிற்கு எதிரான போராட்டத்தில் வினோபாவின் தாக்கம் இருந்தது என்பதை மறுக்க முடியாது.

தற்போது தில்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்திற்கும் தனது உறுதியான ஆதரவை தெரிவித்திருந்தார் என்பது அவர் இறுதி காலம் வரை உறுதி மிக்க காந்தியப் போராளியாய் வாழ்ந்தார் என்பதற்கான அடையாளமாகும்! இத்தகைய, இந்தியாவின் இணையற்ற சூழலியல் போராளியான சுந்தரலால் பகுகுணாவின்  ‘சுழலியலே நிரந்தரப் பொருளியல்’ எனும் முழக்கம் இமயத்தில் மட்டுமல்ல, இனி வரும் நாட்களிலும் இப்புவி முழுவதும் ஒலித்துக் கொண்டே இருக்கும்.

கட்டுரையாளர்; ஏ.பாஸ்கர் , காந்திய ஆர்வலர் மற்றும் தொழிற்சங்கவாதி.