ஊதறிய அமெரிக்கா! உதறிலில் உக்ரைன்! என்ன நடக்கும்?

-ச.அருணாசலம்

உக்ரைனை உசுப்பி விட்டு, உக்கிரமான போரை ரஷ்யா மீது மறைமுகமாக நிகழ்த்திக் கொண்டிருந்த அமெரிக்கா, தற்போது உக்ரைனை கைகழுவி, ரஷ்யாவுடன் அமைதிக்கு கை குலுக்குவதன் பின்னுள்ள அரசியல் என்ன? மூன்றாண்டுகள் போரில் உருக்குலைந்து போன உக்ரைனும், பல இழப்புகளை  சந்தித்த ஐரோப்பிய நாடுகளும் பெற்ற பாடம் என்ன?

முன் முயற்சிபிப்ரவரி 24 ,2025 ஐ.நா. பொதுச் சபையில் உக்ரைன்- ரஷ்யா போர் குறித்த இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஒன்று< உக்ரைன் நாடும் ஏனைய ஐரோப்பிய நாடுகளும் இணைந்து முன்மொழியப்பட்ட தீர்மானம்; .

மற்றொன்று, அமெரிக்கா முன்மொழிந்த தீர்மானம் ஆகும். இத் தீர்மானம் சிலபல திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது. இரண்டு தீர்மானங்களின் மீதான வாக்கெடுப்பிலும் இந்தியா கலந்து கொள்ளவில்லை.

 உக்ரைன் மற்றும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகள் தாக்கல் செய்த ‘விரிவான, நியாயமான மற்றும் நீடித்த அமைதியை மேம்படுத்துதல்’ என்ற தீர்மானத்தை 193 உறுப்பினர்களை கொண்டுள்ள ஐ.நா. பொதுச் சபையில் 93 நாடுகள் ஆதரவாகவும், 18 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன. மேலும் இந்தியா உள்ளிட்ட 65 நாடுகள் இதில் வாக்களிக்கவில்லை.

உக்ரைன் போர் துவங்கி (பிப்ரவரி-2022) மூன்றாண்டுகள் முடிந்த நிலையில், இன்று உக்ரைன் பக்கம் அமெரிக்கா இல்லை. ஆண்டுக்கு 120 பில்லியன் டாலர் பெறுமான ராணுவ உதவிகளை உக்ரைனுக்கு அமெரிக்கா அளித்து வந்த நிலையில், அமெரிக்க செனட்டர்கள் இத்தகைய உதவியை அமெரிக்க உயிர்களை பலி வாங்காத அழகிய உதவி என்று வர்ணித்து ப்ராக்சி யுத்தத்திற்கு உதவிய நிலையில், இன்று டிரம்ப் அமெரிக்க அதிபராக ஆகிய பிறகு எல்லாமே தலைகீழாக மாறியுள்ளது.

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை கையாலாகதவர் என்றும் , தேர்தலை சந்திக்காத சர்வாதிகாரி என்றும் தாக்கியுள்ள டிரம்ப் , உக்ரைன் யுத்தத்தை உடனடியாக நிறுத்த ரஷய அதிபர் புட்டீனுடன் பேச தயார் என்று அறிவித்தார். சௌதி அரேபிய தலைநகர் ரியாத்தில் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் லாவ்ரவ்வுடன் அமெரிக்க வெளியுறவு செயலர் மார்க்கோ ரூபியோ சந்தித்து போரை நிறுத்த பேச்சுவார்த்தைகளை துவங்கினர்.

இந்த பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ள ஐரோப்பிய நாடுகளுக்கோ, உக்ரைனுக்கோ அழைப்பில்லை என்பது ஜெலன்ஸ்கிக்கும், ஐரோப்பிய தலைவர்களுக்கும் பெருத்த ஏமாற்றத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தியது. இதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை என்றாலும் , உக்ரைன் முதுகிற்கு பின்னால், ஐரோப்பிய நாடுகளின் முதுகிற்கு பின்னால் ரஷ்யாவுடன் டிரம்ப் ஒப்பந்தம் போட முயலுகிறார் என்ற பத்திரிக்கையாளர்களின் விமர்சனங்கள் நமக்கு ஆச்சரியத்தை தருகின்றன.

இந்த யுத்தம் ஏன் தொடங்கியது? ரஷ்யாதான் உக்ரைன் மீது ஆக்கிரமிப்பை தொடங்கியது

என பலரும் உறுதியாக கூறினாலும் ரஷ்யாவின் நோக்கம் என்ன?

உக்ரைன் நாடு நடுநிலையாக ( maintain neutrality ) இருக்க வேண்டும். மேற்கத்திய ராணுவ கூட்டணியான நேட்டோவில் இணையக்கூடாது. உக்ரைனில் அமெரிக்க அல்லது ஐரோப்பிய நாடுகளின் படை தளங்களோ , ஏவுகணை தளங்களோ இருக்க கூடாது என்பதுதானே.

இதற்கான உத்தரவாத்த்தை தர அமெரிக்காவும் , உக்ரைனும் தர மறுத்ததால் தானே உக்ரைன் போர் மூண்டது என்பதை மறுக்க முடியுமா?

சோவியத் யூனியன் சிதறிய வேளையில் 1991-1992ல் சோவியத் யூனியனுக்கு எதிரான ராணுவ கூட்டணியான நேட்டோ (NATO) தற்காப்புக்காகவே அமைக்கப்பட்டது என்று கூறப்பட்டாலும் , நேட்டோ அமைப்பு கலைக்கப்படவில்லை. மாறாக, அன்றைய சோவியத் அதிபர் கோர்பச்சேவுக்கு எழுத்து மூலமாக – புடாபெஸ்ட் குறிப்பாணை Memorandum of Budapest 1994- அமெரிக்க அதிபர் ரொனால்டு ரீகன் கொடுத்த உத்தரவாதத்தை மீறி அமெரிக்கா (நேட்டோ) அமைப்பில் ஜியார்ஜியா, போலந்து, ருமேனியா, செக் குடியரசு, பல்கேரியா , செர்பியா, குரோஷியா என பல்வேறு முன்னாள் சோவியத் குடியரசுகளை இணைத்து ரஷ்யாவை சுற்றி வளைத்தது.

 உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை உசுப்பிவிட்டு,சீரழித்த ஜோ பைடன்

ரஷ்யாவை வலுவிழக்க செய்து முற்றிலும் முறியடிக்க மேற்கத்திய நாடுகளின் முயற்சியில் உண்மையில் அமெரிக்க நலன்கள் தான் முன்னிலைபடுத்தப்பட்டன. ஐரோப்பிய நாட்டு நலன்கள் பின்னுக்கு தள்ளப்பட்டன, அமெரிக்காவின் நலன்களே தங்களது நலன்களென கலாச்சார ரீதியாக, வெள்ளை இன பாசப்பிணைப்பால் அறிவித்த ஐரோப்பா தனது குண நலன்களை, தங்களது தனித்தன்மையை இழந்தது. இதனால் இவர்களது இருத்தலும் பாதுகாப்பும் அமெரிக்காவை சார்ந்தே இருந்தது. நேட்டோ அமைப்பு இதை உறுதி படுத்தியது.

இல்லையென்றால், ஐரோப்பிய யூனியன் என்ற பெயரில் ஐரோப்பா தலையெடுத்திருக்கும், யூரோ நாணயம் உயர்வடைந்திருக்கும் .

தனித் தன்மையை கைவிட்டதால், இன்று ஐரோப்பாவின் பவர் ஹவுஸ் எனப்படும் ஜெர்மனி, ரஷ்யாவின் விலை குறைந்த  எரிவாயுவை விடுத்து, கொள்ளை விலை விற்கும் அமெரிக்க எல் என் ஜி வாயுவை (LNG )இறக்குமதி செய்து தன் தொழில் துறையை சீரழிய அனுமதிக்குமா?

மற்ற ஐரோப்பிய நாடுகள் பலவும் இவ்வாறு தங்கள் தலைமீது தாங்களே மண்ணை அள்ளி போட்டதை அப்பொழுது உலகம் கண்டது.

தனித் தன்மையை இழந்த ஐரோப்பிய தலைவர்கள் தங்கள் தலைவனான அமெரிக்கா இப்பொழுது, தங்களை கைவிட்டுவிட்டதே என்று புலம்புவது வேடிக்கை தான்.

அன்று உக்ரைன் போர் தொடங்குமுன் ஐரோப்பிய தலைவர்கள் நேர்மையாக இல்லை- மின்ஸ்க் ஒப்பந்தத்தை பிரான்சும், ஜெர்மனியும் மீறின. ஒற்றுமையுடனும் இல்லை.

அது போன்றே இன்றும் ஐரோப்பிய தலைவர்கள் டிரம்பை எதிர்த்து ஒற்றுமையாக இல்லை.

உக்ரைன் நாட்டு மக்கள் இந்த யுத்தத்தில் எந்த பயனையும் அடையவில்லை. பல லட்சக்கணக்கான மக்கள் கையில் அகப்பட்டதை எடுத்துக் கொண்டு அகதிகளாக நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர். நகரங்கள் வீடுகள், தொழிற்கூடங்கள், பள்ளிகள், மருத்துவ மனைகள், துறைமுகங்கள், விமான தளங்கள் விளை நிலங்கள் அனைத்தும் தரைமட்டமாக்கப்பட்டு சின்னபின்னமாக்கப்பட்டுள்ளன.மக்கள் அடைந்த துயரங்களுக்கோர் அளவில்லை.

எந்தவித நோக்கங்களும் இன்றி, வாய்ச்சவடால் மூலம் உக்ரைனை அழிவுப் பாதைக்கு இழுத்துவந்துள்ள உக்ரைன் அதிபர் விளாதிமிர் ஜெலன்ஸ்கி யின் இலட்சியம் தான் என்ன?

நேட்டோவில் இணைவதா? இணைவதால் என்ன பயன் உக்ரைன் மக்களுக்கு என்ற கேள்விக்கு ஜெலன்ஸ்கி.இடமும் பதிலில்லை, ஐரோப்பிய தலைவர்களிடமும் பதிலில்லை.

துருக்கியில் போர் துவங்கிய மூன்று மாதங்களில் போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் நடந்தபோது , உக்ரைன் நாட்டு பிரதிநிதிகள் அமெரிக்காவின் அழுத்தத்திற்கு பணிந்து பாதியில் பேச்சு வார்த்தையை முறித்துக் கொண்டு சென்றதால் அடைந்த பலன் என்ன? பல இலட்சம் உயிர்களின் பலியும், இடிபாடுகளுமே இன்று மிச்சம்.

ஆப்கனில் ரஷ்யாவின் செல்வாக்கை சரிய வைத்தது போன்று உக்ரைனிலும் ரஷ்யாவின் செல்வாக்கிற்கு புதைகுழி தோண்டி விடலாம் என எண்ணிய பைடனும், நேட்டோ நாடுகளும் உக்ரைனை ‘கொம்புசீவி ‘போர் நடத்தின. ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளை போட்டனர் . ரஷயர்களையே நிராகரிக்க உலகிற்கு அறை கூவல் விட்டனர்.

இன்று மூன்றாண்டுகள் கழித்து பைடனுக்கு பதிலாக டிரம்ப் ஆட்சிக்கு வந்த நிலையில்,அமெரிக்கா ரத்தம் மட்டுமல்ல, காசும் கூட செலவழிக்காமல் அமெரிக்கா தன் ஆதாயக் கணக்கை மட்டுமே போடுகிறது.

போரில் எல்லாவற்றையும் இழந்து நிற்கிறது உக்ரைன். இந்தச் சூழலில் இது வரை உக்ரைனுக்கு அமெரிக்கா கொடுத்த(உதவி?) பணத்திற்கு பதிலாக உக்ரைன் தனது கனிம வளங்களை அமெரிக்காவிற்கு தாரை வார்க்க வேண்டும் என டிரம்ப் கூறியுள்ளார். இது தான் பெரு முதலாளித்துவ நாட்டின் இயல்பாகும்.

முதலில் எதிர்த்து எகிறி குதித்த அதிபர் ஜெலன்ஸ்கி, தற்போது கையையும் வாயையும் பொத்திக் கொண்டு அதற்கு சம்மதம் தெரிவித்து உள்ளார்.

டிரம்பை சந்தித்த பிரான்சு அதிபர் மக்ரோன் “அமைதிக்காக முயலும் பொழுது அது உக்ரைன் நாட்டின் சரணாகதியாக மாறக் கூடாது, வாக்குறுதிகள் இல்லாத போர் நிறுத்தமாக அது மாறக்கூடாது” என்று கூறியுள்ளார் .

ஐரோப்பிய நாடுகளின் போதாத காலம், அந்நாட்டு தலைவர்களுக்கு தங்களது தேவை என்ன என்பதிலேயே பெரிய குழப்பம் உள்ளதுதான்.

தங்களது நலன்களுக்கும் வளர்ச்சிக்கும் தேவையான நிலவரங்கள் அமைதியும் நாடுகளுக்கிடையேயான நட்புறவும் வணிகமும் என்ற புரிதல் உள்ளதா என தெரியவில்லை.

அமைதிக்கான சவால்கள் ரஷ்யாவிடமிருந்து எப்பொழுது வந்தது?

ரஷ்யா வை சுற்றி வளைத்ததும், ரஷ்யாவுடனான வர்த்தக உறவுகளை தகர்த்ததும் யார்?

ரஷ்யா சொத்துக்களை ஐரோப்பாவில் முடக்கியது யார்?

2022 முதல் சமாதானத்திற்கு சிறிதளவும் முயற்சி செய்யாமல் உக்ரைனை தூண்டிவிட்டு ப்ராக்சி யுத்தம் நடத்தியது யார்? ரஷ்யாவை  வெறுத்து தடைகள் போட்டது யார்? இன்று அதே ரஷ்யாவுடன் கைகுலுக்கி ஆதாயம் பார்ப்பது யார்?

அமெரிக்காவின் இந்த சுய நலத்தை கேள்வி கேட்கும் அமெரிக்க ஜனநாயக கட்சியினரும், ஐரோப்பிய தலைவர்களும் தங்களது இரட்டை நிலையை இதற்கு பிறகும் கைவிடவில்லையெனில், வரலாறு இனியும் அவர்களை மன்னிக்காது.

டிரம்ப்பின் முயற்சி வரவேற்க தகுந்தது என்றாலும் ஆதாயம் இல்லாத முயற்சி அல்ல. வழக்கம்போல் அமெரிக்கா தனது நலன்களை முன்னிறுத்தி இது நாள்வரை தோற்றம் காட்டிய

“ஜனநாயகம்” மனித உரிமைகள், ரூல் ஆப் லா “ போன்ற போலியான வாதங்களை களைந்துவிட்டு, சுய நலம் ஒன்றையே கருத்தில் கொண்டு , கூட்டாளிகள் பற்றி கவலையில்லாத நிலைக்கு வந்துள்ளது. இது டிரம்ப்பால் ஏற்படுத்தப்பட்ட மாற்றம்.

இதை புரிந்து கொண்ட ரஷ்ய அதிபர் புதின் போர் நிறுத்த பேச்சு வார்த்தைக்கு, அமெரிக்க ரஷ்ய உறவு சீரமைப்பிற்கு பச்சைக் கொடி காட்டி உள்ளார். பலவீனப்பட்டுள்ள உக்ரைன் பணிந்து போவதைத் தவிர வேறு வழியில்லாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் உச்சபட்ச சுய நல நோக்கங்கள் நன்கு வெளிப்பட்ட சூழலில், இனி எட்டப்படும் முடிவுகளை பொறுத்து ஐரோப்பிய அரசியல் களமும் மாறும்!

ச.அருணாசலம்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time