குடிநீர் தட்டுபாடாம்..! கர்நாடகாவின் கபட நாடகம்!

-அ.வீரப்பன்

காவேரி, கபினி, கிருஷ்ணா, துங்கபத்திரா.. என பத்து பெரிய நதிகள் பாயும் கர்நாடகாவின் பெங்களுரில் தண்ணீர் பஞ்சம் தலை விரித்தாடுகிறதாம்..! ஒற்றை ஜீவநதியான காவேரியை நம்பி இருக்கும் நாமோ, ஆபத்தை அறியாமல் அமைதி காக்கிறோம். உண்மையில் கள நிலவரம் என்ன..? விளக்குகிறார் பொறிஞர் அ.வீரப்பன்;

கடந்த மூன்று மாதங்களாகவே (சனவரி,பிப்ரவரி & மார்ச் 2024) செய்தி இதழ்களிலும் தொலை காட்சிகளிலும் பெங்களூரு மாநகரில் – கர்நாடகாவில் இந்த ஆண்டு (2024) பருவ மழை மிகக் குறைவாகப் பெய்தமையால் – மக்களுக்குக் குடிநீர் வழங்குவதில் கடும் தட்டுப்பாடு நிலவுவதாகத் தெரிவிக்கின்றன.

ஐயோ.. தண்ணீர் பஞ்சம்! வறட்சியை நோக்கி நகர்கிறது பெங்களுரு..! என பற்பலவாறு செய்திகள் போட்டு தமிழ்நாட்டுச் செய்தி ஊடகங்களுமே கூட கர்நாடக அரசுக்கு துணை போகின்றன!

கர்நாடகா காவிரிப் பாசனப் பகுதியில் உண்மை நிலை என்ன ?

கர்நாடகா அரசின் துணை முதலமைச்சரும், பொதுப் பணித் துறை அமைச்சருமான டி.கே.சிவகுமார், ”கர்நாடகாவில் இந்த ஆண்டு மிகக் குறைவாகவே மழை பெய்தது. பெங்களூருவில் வசிக்கும் மக்களுக்குக் குடிநீரும் தேவைக்கேற்ப வழங்கமுடியவில்லை. எனவே, காவிரி நதியில் தமிழகத்திற்குரிய தண்ணீரை கரிவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தினாலுமே கூட,  தண்ணீரை வழங்க முடியாது” என்று தெரிவிப்பதோடு, ”காவிரியின் குறுக்கே மேக்கே தாட்டில் 67.16 டிஎம்சி கொண்ட நீர்த் தேக்கத்தைக் கட்டியே தீருவோம்” என்றும் முழங்குகிறார்.

இத்தனையும் பார்த்துக் கொண்டு தமிழ்நாடு அரசு மிக அமைதியாக இருக்கிறது. எனினும், காவிரி டெல்டா பகுதி உழவர் சங்கங்களும், காவிரி உரிமை மீட்புக் குழுவும் தொடர்ந்து போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்றன.

தமிழ்நாட்டின் நலனில்  பற்றுள்ள சில சமுதாய அக்கறையாளர்கள் தமிழ்நாட்டு அரசுக்கு அவ்வப்போது அறிவுறுத்திக் கொண்டுள்ளனர். இருப்பினும், தமிழ்நாட்டின் உயர் அலுவலர்களும், நீர்வளத்துறை தலைமைப் பொறியாளர்களும் – இன்னும் குறிப்பாக இந்நிலை பற்றி உரத்துப் பேச வேண்டிய காவிரி தொழில் நுட்பக் குழுமமும் – இருக்கின்ற உண்மை நிலை பற்றிப் பேசாமல் இருப்பது நம்மைப் போன்றோர்க்குப் பெரும் கவலையளிக்கிறது. என்ன செய்யலாம்..? என்று சிறிது சிந்திக்கலாமா ?

கர்நாடகா – காவிரிப் பாசனப் பகுதி வாழ் மக்கள் என்ன சொல்கிறார்கள்? – ஊடகங்களில் பெரிதுபடுத்தப்படும் குடிநீர்த் தட்டுப்பாடு பற்றி;

இயந்திரப் பொறியாளராகப் பணியாற்றிய எம் கல்லூரித் தோழர் 20 ஆண்டுகளுக்கு மேலாக பெங்களூரு, இராஜராஜேஸ்வரி நகரில் குடியிருப்பவர். அவரிடம் கேட்டதற்கு, ”எங்கள் பகுதியில் மட்டுமின்றி, பெங்களூரு முழுமையுமே குறைபாடின்றி குடிநீர் வழங்கப்படுகிறது. அரசியல் ஆதாரத்திற்காக பெரிய மேடைநாடகத்தை சிவகுமார் விடாது நடத்திக் கொண்டிருக்கிறார்” என்றார்!

தநா பொதுப்பணித்துறையில் மேற்பார்வைப் பொறியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பின் பெங்களூரு – சரஜாபூர் முதன்மைச் சாலைப் பகுதியில் 10 ஆண்களாக வசித்து வரும் மற்றொரு என் நண்பரோ, ”பெங்களூரு மாநகரிலோ, புற நகர்களிலோ குடிநீர் கிடைப்பதில் எந்தத் தட்டுப்பாடும் இல்லை  இது  அரசியல் காரணங்களுக்கான பொய்” எனத் திட்ட வட்டமாகத் தெரிவிக்கிறார்.

கட்டடக் கலைஞராகக் கடந்த 8 ஆண்டுகளாகப் பெங்களூருவில் குடும்பத்தோடு வாழும் எம் உறவினருமே கூட மேலே தெரிவிக்கப்பட்டதையே உறுதிப்படுத்துகிறார்.

எச்.சி.எல் நிறுவனத்தில் முதுநிலை மேலாளராகக் கடந்த 25 ஆண்டுகளாகப் பணிபுரியும் என் மருமகனும், அவரது தோழர்களும், நண்பர் குடும்பங்களும் பெங்களூரு மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் குடியிருக்கின்றனர். இவர்களுமே கூட, ”இங்கே குடிநீர் தட்டுப்பாடு இல்லை” என்று அடித்துச் சொல்கிறார்கள்.

உண்மையிலேயே குடிநீர்த் தட்டுப்பாடு உண்டா ?

Bengaluru Water Supply &Sewerage Board (BWSSB) இன் தரவுகளின்படி – காவிரியிலிருந்து பெங்களூரு மாநகரத்திற்கு நாள் ஒன்றுக்கு 1,450 எம்எல்டி அளவுக்குக் குடிநீர் வழங்கி வருகின்றனர். கூடுதலாக காவிரி – அய்ந்தாம் நிலை திட்டத்திலிருந்து 750 எம்எல்டி குடிநீர் வழங்கிடப் பணிகள் நடந்து வருகின்றன. 2023 இல் பெங்களூரு மாநகர் மக்கள் தொகை -1 கோடியே 29 லட்சம். இதன்படி ஓர் ஆளுக்கு நாள் ஒன்றிற்கு, 108 லிட்டர் குடிநீர் வழங்கப்படுகிறது.

சென்னை மாநகர் (2023) மக்கள் தொகை – 117.76 லட்சம். இங்கு வழங்கப்படும் குடிநீர் அளவு 1000 எம்எல்டி. இது ஓர் ஆளுக்கு நாள் ஒன்றிற்கு – 85 லிட்டர் மட்டுமேயாகும். ஆனால், சென்னை மாநகரில் குடிநீர்த் தட்டுப்பாடு இருப்பதாக  சென்னைக் குடிநீர் வாரியமோ, செய்தி ஏடுகளோ, தமிழகத் தொலைகாட்சிகளோ பரப்புரை செய்யவில்லை. ஆனால், சென்னை மக்களை விடக் கூடுதலாக 25 சதவிகிதம் குடிநீர் பெறும் பெங்களூரு மாநகரில் கடுமையான குடிநீர்த் தட்டுப்பாடு இருப்பதாக – நாள்தோறும் பரப்புரை செய்வதை தமிழ்நாடு அரசு ஏனோ மறுத்துப் பேசவில்லை!

மேலும், கர்நாடகாவில் காவிரிப் பாசனப் பகுதிகளிலுள்ள நீர்த்தேக்கங்களில் (கபினி, ஹாரங்கி, ஹேமாவதி   கிருஷ்ணராஜசாகரில் 60 டிஎம்சிக்கு மேலே நீர் சேர்த்து வைக்கப்பட்டுள்ளது.

நம் சென்னைக் குடிநீர் வழங்கு வாரியம் 15-03-2024 இல் – வெறும் 10.11டிஎம்சி அளவுக்குத் தண்ணீர் இருப்பை வைத்துக் கொண்டு, ”தண்ணீர்த் தட்டுப்பாடு இல்லாமல் வரும் 9 மாதங்களுக்கு வழங்குவோம்” என்று தெரிவிக்கின்றனர்! ஆனால், கர்நாடகா அரசோ காவிரி அணைகளில் 60 டிஎம்சிக்கு மேல் தண்ணீரை வைத்துக் கொண்டு, ”பெங்களூரில் கடுமையான குடிநீர்த் தட்டுப்பாடு நிலவுகிறது” என்று நாடகமாடுகிறது. நம் தமிழக அரசு ஏன் இதை மறுத்து அறிக்கை விடவில்லை என்பது எங்களுக்குப் புதிராக உள்ளது.

உண்மை நிலைமை இப்படியிருக்கும் போது செய்தி இதழ்களும், நம்மூர் தொலைகாட்சிகளும் பெங்களூருவில் கடுமையான குடிநீர்த் தட்டுப்பாடு நிலவுவதாகத் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டு ஊடகங்களும் இப் பொய்ப்பரப்புரைக்கு துணை செய்து, கர்நாடகா அரசியல்வாதிகளுக்கு உடந்தையாக இருப்பது மிகவும் வேதனையானது.

கர்நாடகா காவிரிப் பாசனப் பகுதியில் 2023 இல் எவ்வளவு மழைப் பொழிவு ?
எவ்வளவு பாசனப் பரப்பு ? எவ்வளவு குறைவு ?

இணையதளத்தில் தேடினால் கர்நாடகாவில் கடந்த 5 ஆண்டுகளில் (2019 – 2023) பெய்த மழையளவு கிடைக்கிறது. நம்மைப் பொறுத்த வரை – கர்நாடகா மாநில முழுமையும் SIK, NIK, Malanad & Coastal என நான்கு பகுதிகளையும் சேர்த்துக் கருதாமல் காவிரி ஆறு பாயும் South Interior Karnataka (SIK) பகுதியிலுள்ள மழைப் பொழிவை மட்டும் பார்க்கலாம்.

சராசரி ஆண்டு மழைப் பொழிவு -714 மி.மீ.

2019, 2020, 2021 & 2022 ஆண்டுகளில் ஆண்டு சராசரியை விடக் (+75 % வரை) கூடுதலாகவே மழை பெய்துள்ளது.

ஆனால், 2023 இல் பெய்த மழை அளவு -572 மிமீ. இது சராசரி மழைப் பொழிவை விட, 20 சதவிகிதம் குறைவு.

எனவே, காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு (05-02-2007) மற்றும் உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி (16-02-2018)- மழை குறைவாகப் பெய்யும் காலங்களில் Deficit Rains – Distress Formula- குறைவுச் சமன்பாட்டின் படி தமிழ் நாட்டுக்குத் தண்ணீர் திறந்து விட வேண்டும். அதன்படி தமிழ்நாட்டின் உரிமையான 177.25 டிஎம்சியில் 20 % குறைத்து 177.25 டி.எம்.சியில் 141.80 டிஎம்சி திறந்து விட்டிருக்க வேண்டும். ஆனால், கர்நாடகா தமிழ்நாட்டுக்கு – அதுவும் காவிரி மேலாண்மை ஆணையம் திரும்பத் திரும்ப அறிவுறுத்திய பின்னும், வழங்கிய தண்ணீரின் அளவு 01-06-2023 முதல் 29-02-2024 வரை சுமார்  78 டிஎம்சி மட்டுமே, ஆனால், 137.80 டிஎம்சிக்கு தந்திருக்க வேண்டும்.

2022 இல் 1,246 மிமீ மழை பொழிந்த போதும், அதாவது கூடுதலாக மழைப் பொழிவை பெற்ற போதும் கர்நாடகா அரசு, தமிழ்நாட்டிற்குத் திறந்து விடவேண்டிய நீரை முறையே அந்தந்த மாதங்களில் சரியாக வழங்காமல் குறைத்தே தந்தது  என்பதும் கவனிக்கத் தக்கது.

உண்மையான களநிலைமை இப்படி இருக்கும் கர்நாடகா அரசு குடி தண்ணீர் பஞ்சமென தொடர்ந்து பொய் பேசுவது நாடக அரசியல் அன்றி வேறென்ன.? மேக்கேதாட்டில் அணை கட்டுவதற்கு அவர்கள் முன்னெடுப்புகளை நியாயப்படுத்தவே இவ்விதம் நடந்து கொல்கின்றனர்.

மேலும், 2022 மற்றும் 2023 ஆண்டுகளில் – காவிரிப் பாசனப் பகுதிகளில் பாசனம் செய்யப்பட்ட நிலப் பரப்பில் எந்தக் குறிப்பிடத்தக்க குறைவளவும் இல்லை என்றும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

  • 2021 – 23.35 Lakh ha (57.70 Lakh acres)
  • 2022 – 21.49 Lakh ha (53.10 Lakh acres)
  • 2023 – 23.30 Lakh ha (57.57 Lakh acres)

(Source: Weekly / Monthly Reports from Director of Agriculture,State of Karnataka

அதே சமயம் இந்தியாவிலேயே அதிக தண்ணீரை வீணடிக்கும் நகரமாக மும்பைக்கு அடுத்தபடியாக பெங்களுரு உள்ளது. மத்திய அரசு நிறுவனமான Institute for Social and Econamic Change ( ISEC)  தரும் தகவல்களின்படி நாளொன்றுக்கு பெங்களுர் மாநகரில் 600 மில்லியன் லிட்டர் தண்ணீர் யாருக்கும் பயனின்றி தவறான நீர் மேலாண்மை காரணமாக வீணாக்குகிறது. அதாவது மொத்த தண்ணீர் விநியோகத்தில் 48% வீணாகப் போவதை அவர்களுக்கு தடுத்து, தங்கள் மக்களுக்கு பயன்படுத்தும் அக்கறை அவர்களுக்கு இல்லை.

செயற்கையாக ஏற்படுத்தப்படும் தண்ணீர் பற்றாகுறை தொடர்பான இத்தகைய அரசியல் நாடக மேடை நிகழ்வுகள் நமக்கு காவிரியில் தண்ணீர் தராமலிருக்கவும், மேகேதாட்டு அணையினைக் கட்டவுமான சூழ்ச்சியாகவே அரங்கேற்றி வருகிறது.

இத்தகைய பித்தலாட்டங்களை அம்பலப்படுத்த வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு இருக்கிறது. காலதாமதமின்றி உடனே செயற்படவேண்டும் என வேண்டுகிறோம். அப்பொழுது தான் நம் தமிழகத்தின் உரிமைகளைக் காத்திட முடியும்.

எனவே, இந்திய அரசியல் சட்டப் பிரிவு 365 இன்படி குடியரசுத் தலைவருக்குக் கடுமையான அழுத்தம் தர வேண்டும்.

தமிழக அரசியல் கட்சிகளும், விவசாய சங்கங்களும் – காவிரி உரிமை மீட்புக் குழுவும் தங்களுக்குள்ள அரசியல் பக்திப் பரவசங்களை ஒதுக்கி விட்டு – கர்நாடகாவின் பொய்ப் பரப்புரைகளை மேற்குறிப்பிட்ட தகவல்கள் மற்றும் புள்ளி விவரங்களின் அடிப்படையில் மறுத்து தொடர் எழுச்சிப் போராட்டங்களை நடத்திட வேண்டும்.

தமிழகத் தன்னார்வுத் தொண்டு நிறுவனங்களும் இணைந்து செயல்பட வேண்டுகிறோம். தனி மரங்கள் தோப்பாக மாட்டா.

தமிழக ஊடகச் செய்தியமைப்புகளும் – தொலைகாட்சிகள் மற்றும் செய்தி ஏடுகள் – செய்திகளின் பரப்புரைகளின் உண்மைத் தன்மை (களநிலவரம்) அறிந்து வெளியிடவேண்டும் என்று அன்புடன் வேண்டுகிறோம்.

கட்டுரையாளர்; அ.வீரப்பன்

பொறிஞர், முனைவர்.
மேனாள், சிறப்புத் தலைமைப் பொறியாளர்,
த நா பொதுப் பணித்துறை
மின்னஞ்சல் : ‘[email protected]

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time