ஊழலை ஒளித்து, அம்பலப்பட்ட அமலாக்கத் துறை!

-ச.அருணாசலம்

ஊழல்வாதிகளை கண்டடைவது, ரெய்டு நடத்துவது, ஆவணங்களை சேகரிப்பது, ஆட்சியாளர்கள் பேரம் பேச உதவுவது.. என்ற ரேஞ்சுக்கு தான் அமலாக்கத் துறை செயல்பட்டுள்ளது என அம்பலப்படுத்திவிட்டன ஆங்கில பத்திரிகைகள்! இதோ எத்தனை ஊழல்வாதிகள் பாஜகவால் காப்பாற்றப்பட்டுள்ளனர் பாருங்கள்:

கடந்த மார்ச் 31ந்தேதி “தந்தி டிவி.” க்கு பிரதமர் நரேந்திர மோடி அளித்த பேட்டியில், ‘அமலாக்கத் துறை எதிர்கட்சிகளை பழிவாங்கும் ஆயுதமாக பயன்படுத்தப்படுவது’ பற்றிய கேட்ட கேள்விக்கு,

”இ.டி. யை நான் உருவாக்கவில்லை , பி.எம். எல். ஏ. என்ற சட்டத்தையும் நான் கொண்டு வரவில்லை, அவை நீண்ட காலமாகவே நடைமுறையில் உள்ளது. அமலாக்கத்துறை ஒரு சுதந்திரமான அமைப்பாகும். இ.டி.யை அனுப்புவதும் நாங்களில்லை, நிறுத்தி வைப்பதும் நாங்களில்லை. பாஜக அரசு இந்த அமலாக்கத்துறையை எதிர்கட்சிகளைச்சார்ந்தவர்கள் மீது மட்டும் ஏவி விடப்படுகிறது என்பதெல்லாம் வெறும் கட்டுக்கதை, இ.டி.யின் நடைமுறை எந்த கட்சியாயிருந்தாலும் ஒன்று தான். PMLA சட்டங்கள் முன்பே இருந்தன, காங்கிரஸ் அரசு அதை சரியாகப் பயன்படுத்தவில்லை, மோடி ஊழலை ஒழிக்க அதை பயன்படுத்துகிறார்” என்று பதிலளித்திருக்கிறார் .

கெட்டிக்காரன் புழுகு எத்தனை நாளைக்கு என்பது போல் இன்று “இந்தியன் எகஸ்பிரஸ்” நாளிதழிலும், “தி வயர்” போன்ற இணைய இதழ்களிலும் மோடியின் புழுகை தோலுரித்துக் காட்டியுள்ளனர். அவற்றின் சாராம்சத்தையும் மற்றும் சில தகவல்களையும் இங்கே பார்ப்போம்.

. டி. (அமலாக்கத்துறை) சுதந்திரமாக செயல்படுகிறதா?

2005 முதல் 2023 வரையிலான காலத்தில் அமலாக்கத்துறை அளித்துள்ள புள்ளி விவரங்களின்படி மொத்தம் 5,906 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இதில் 25 வழக்குகள் மட்டுமே இது நாள் வரை முடித்து வைக்கப்பட்டுள்ளனவாம்! இதுவே அமலாக்கத்துறை எவ்வாறு செயல்படுகிறது என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு. இதை 92% வெற்றி என்று மோடி பீற்றுவதை என்ன சொல்வது?

2014க்குப்பிறகு 121 அரசியல்வாதிகள் அமலாக்கத் துறையால் புலன் விசாரணை செய்யப்பட்டு, வழக்கு தொடுக்கப்பட்டனர் இதில் 115 வழக்குகள் (அதாவது 95% வழக்குகள் ) எதிர்கட்சிகள் மீது தொடுக்கப்பட்டவை ஆகும்.

அஜித் பவார், பட்டேல், அதிகாரி, ஹிமந்தா சர்மா, யாதவ், என்று நீளும் இந்த பட்டியல் 2024 தேர்தல் நெருங்க, நெருங்க மணீஷ் சிசோடியா (2023, பிப்ரவரி) , ஹேமந்த் சோரென் (2024, ஜனவரி), அரவிந்த் கெஜ்ரிவால் (2024 மார்ச் ) தெலுங்கானா தலைவர் கவிதா வரை தொடருகிறது.

2004 முதல் 2014 வரையிலான பத்தாண்டு காலத்தில் 112 ரெய்டுகளும் , சோதனைகளும் நடந்தன என்றால், 2014 முதல் 2022 வரையிலான எட்டு ஆண்டுகளில் 2,912 ரெய்டுகளும், சோதனைகளும் – அதாவது 26 மடங்கு அதிகமாக – நடந்துள்ளன.

அது போன்று, 2005 முதல் 2023 வரை மொத்தம் 4,700 வழக்குகள் PMLA சட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இதில் 2,186 வழக்குகள் – அதாவது பாதிக்கு மேல் – 2017-2022 ஆண்டுகளில் மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று Scroll என்ற ஆங்கில இணைய இதழ் கூறுகிறது.

இதை விட வேதனையான விஷயம் என்னவென்றால் , இப்படி 2014க்குப் பின்னர் வழக்கு தொடுக்கப்பட்ட 25 எதிர் கட்சி தலைவர்கள், பாஜக விற்கு தாவி அங்கு சங்கம்மாகிவிட்டனர் என்பது தான்.

இவர்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்குகள், இவர்கள் பாஜக வில் இணைந்த பின்னர் கிடப்பில் போடப்பட்டன.

3 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன!

20 வழக்குகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்த 25 எதிர்கட்சி தலைவர்கள் பல்வேறு கட்சிகளில் இருந்து ( காங்கிரஸ் 10, பவார் காங்.4, சிவ சேனா 4, திரிணாமுல் 3, தெலுகு தேசம் 2, எஸ் பி. 1, ஒய்.எஸ்.ஆர்.சி.பி. 1) வந்தவர்கள் என்றும், இந்த ஆண்டு மட்டும் இதில் ஆறு தலைவர்கள் வழக்கிற்கு பயந்து, பாஜக விற்கு தாவி உள்ளனர் என்றும் தகவல்கள் சந்தி சிரிக்கின்றன! அவர்கள் எதிர்பார்த்தபடியே வழக்குகள் ஒன்று கைவிடப்பட்டன, அல்லது கிடப்பில் போடப்பட்டுள்ளன.

கிட்டத்தட்ட அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்குகளில் 95% வழக்குகள் எதிர் கட்சியினர் மீது தான் என்பது உறுதியாகிறது.

அதில் முக்கியமான 25 தலைவர்கள் ;

பிரதாப் சர்நாயக் (சிவ சேனா)

ஹிமந்தா பிஸ்வா சர்மா( முன்னாள் காங். தலைவர், தற்போதைய பாஜக அஸ்ஸாம் முதல்வர்) ,

ஹசன் முஷரஃப் ( பவார் காங்.),

பாவனா கவாலி (சிவ சேனா),

யாமினி & யஷ்வந்த் ஜாதவ் (சிவ சேனா),

சி. எம். ரமேஷ் (தெலுகு தேசம்),

ரனாந்தர் சிங் (காங்) ,

சஞ்சய் சேத் (எஸ். பி),

சுவேந்து அதிகாரி (திரிணாமுல்) ,

கே. கீதா (ஒய்.ஆர்.சி.பி.),

சோவன் சாட்டர்ஜீ (திரிணாமுல்),

சக்கன் பூஜ்பால் (பவார் காங்.)

கிருபா சங்கர் சிங் (காங்.),

திகம்பர் காமத் (காங்.)

அசோக் சவான் (காங். முன்னாள் மகா. முதல்வர்)

நவீன் ஜின்டால் (காங்.)

தபாஸ் ராய் (திரிணாமுல்) ,

அர்ச்சனா பட்டீல் (காங்.),

கீதா கோடா (காங்.),

பாபா சித்திக் (காங்.),

ஜோதி மிர்தா (காங்.),

சுஜானா சௌத்ரி (தெலுகு தேசம்)

ஆகிய நபர்களின் பட்டியலை வெளியிட்டு ‘இந்தியன் எக்ஸ்பிரஸ் ‘ நாளிதழ் இவர்களுடைய வழக்கு விவரங்களை ( வழக்கு எண், தொடுக்கப்பட்ட தேதி, பாஜக வில் சேர்ந்த பின்னர் வழக்கின் இன்றைய நிலை) என விலாவரியாக புள்ளி விவரங்களுடன் வெளியிட்டு மானத்தை வாங்கியுள்ளது.

அதில் ஒரு உதாரணத்தை பார்த்தாலே மோடியின் புளுகு காரண்டி நமக்கு புரியும்.

ஹேமந்த பிஸ்வா சர்மா மீது சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கில் சி பி ஐ, இ.டி., ஆகிய அமைப்புகள் வழக்கு பதிவு செய்த. இவர் மேல் லூயி பெர்கர் என்ற குடிநீர் குழாய் அமைப்பு ஊழல் வழக்கும் உள்ளது. காங்கிரஸ் பிரமுகர், ஆகஸ்டு 2014 சிபி ஐ ரெய்டு, நவம்பரில் சி.பி ஐ விசாரணை, ஆகஸ்டு 2015ல் பா ஜ க விற்கு தாவுகிறார், வழக்கு கிடப்பில் போடப்பட்டது! இன்று இவர் பாஜ கட்சியின் அஸ்ஸாம் மாநில முதல்வர்.

இதைப் போல் தான் என்.சி.பி யை சார்ந்த அஜீத் பவார் மீது 70,000 கோடி ரூபாய் ஊழல் வழக்கு பதியப்பட்டது. ஆனால், அவர் தன் சொந்தக் கட்சியை பிளந்து பாஜகவுடன் சேர்ந்து ஒரு நாள் கூட தாக்கு பிடிக்க முடியாத ஆட்சியை ஏற்படுத்த உதவிய போது, வழக்குகள் வாபஸ் வாங்கப்பட்டன. இந்த மகா கேவலம் மகாராஷ்டிரா மக்களுக்கு பாஜகவின் மீதான மதிப்பை சுக்கு நூறாக்கிவிட்டது.

பிறகு மகா விகாஸ் அகாடி (MAV) ஆட்சியின் போது துணை முதல்வராக இருந்த நேரத்தில் இவ் வழக்கை இ. டி, சி பி ஐ மீண்டும் முடுக்கி விட்டது, பிரதமர் மோடி மத்திய பிரதேச கூட்டம் ஒன்றில், 70,000 கோடி ஊழல் செய்த அஜீத் பவாரை சிறைக்கு அனுப்புவேன். இது மோடி காரண்டி என்று எக்காளமிட்டார் . ஆனால் அடுத்த இரு வாரங்களுக்குள் அஜீத் பவாருடன் பாஜக கூட்டு சேர்ந்து ஆட்சியில் அவருக்கு துணை முதல்வர் பதவியும் கொடுத்து என் சி பி கட்சியை கபளீகரம் செய்தார் மோடி !

இதனால் தான் பாஜக வை ‘வாஷிங் மெஷின்’ என எதிர்கட்சிகளும், பத்திரிக்கையாளர்களும் எள்ளி நகையாடுகின்றனர்.

இ. டி சுதந்திரமாக செயல்பட இயலாத அமைப்பாக பாஜக மாற்றியுள்ளது என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை.

PMLA பணமோசடி தடுப்புச் சட்டம்

இச் சட்டம் 2002-ல் வாஜ்பாய் ஆட்சி காலத்தில் சர்வதேச போதைப் பொருள் கடத்தலை தடுக்க அனைத்துலக நாடுகளும் ஒரு முனைப்போடு செயல்படும் விதமாக போதை மருந்து கடத்தல் பணத்தை சலவை செய்து நல்ல பணமாக மாற்றி பொருளாதாரத்தில் நுழைப்பதை தடுக்க ஏற்படுத்தப்பட்ட ஒரு சட்டமாகும்.

இச் சட்டத்தில் 2012ல் மன் மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு ஒரு திருத்தம் கொண்டு வந்தது இதனுடைய வீச்சை விரிவு படுத்தியது. கள்ள பணத்தை நல்ல பணமாக சலவை செய்து பொருளாதாரத்தில் நுழைக்கும் மோசடியில் மறைத்தலும் (concealment), பெற்றுக் கொள்ளுதலும் (acquisition) வைத்திருத்தலும் (possession) குற்ற நடவடிக்கைகளாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், பாஜக அரசு 2019-ல் மேலும் ஒரு திருத்தம் கொண்டுவந்தது. இதன் மூலம், இது வரை ஆறு சட்டப் பிரிவுகளில் கூறியுள்ள 40 குற்றங்களை உள்ளடக்கிய இச் சட்டம் இப்பொழுது விரிவாக்கப்பட்டு 30 சட்டப் பிரிவுகளின் கீழ் உள்ள 140 வகையான குற்றங்களையும் இச் சட்ட நீட்சியில் திணித்தது.

இதனால் பி எம் எல் ஏ சட்டம் சாதாரண பொருளாதார குற்றங்களையும் உள்ளடக்கி கோரப் பற்களுடன் காட்சியளிக்க ஆரம்பித்தது.

# இரண்டாவதாக இதனுடைய ஆளுமை திருத்தம் கொணர்ந்த நாள்முதல் என்றில்லாமல் முந்தைய காலத்திலும் இது பொருந்தும் (retrospective effect) எனறு கூறியது.

# அடுத்து அமலாக்கத்துறை ஒரு வழக்கை இச்சட்டத்தின் கீழ் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க பிற துறைகளின் ( போலீஸ், சி.பி.ஐ.) முதல் தகவல் அறிக்கையோ அல்லது குற்றப்பத்திரிக்கையோ அவசியம் என்ற நிலையை இத்திருத்தம் தளர்த்தியது!

# வெறும் சந்தேகத்தின் பெயரால் விசாரிப்பதை, ஆய்வு செய்வதை , சொத்துக்களை கைப்பற்றுவது, ஏன் கைது செய்வதையும் அனுமதிக்கிறது இச்சட்டம்.

# இச்சட்டத்தில் கைது செய்யப்பட்டால், குற்றவாளி தான், தன்னை நிரபராதி என நிரூபித்து வழக்கிலிருந்து விடுபட முடியும், பிணை கிடைக்கும்.

# குற்றம் நிரூபணம் ஆகும்வரை கைது செய்யப்பட்டவர் நிரபராதி என்ற நிலை மாறி , கைது செய்யப்பட்டவர் (சந்தேகத்தின் பேரில்) குற்றவாளி , அவர் தன்னை நிரபராதி என்று நீதிமன்றத்தில் நிரூபித்தே பிணையோ, விடுதலையோ பெற இயலும்.

மணீஸ் சிசோடியா, அரவிந்த் கெஜ்ரிவால், சிபு சோரன்

இத்தகைய கொடுமையான திருத்தங்களை ஒரு காரணத்தோடு தான் 2019-ல் மோடி அரசு கொண்டுவந்தது என்றே கூற வேண்டும். 2014 முதல் 2018 வரை மோடி அரசு எதிர் கட்சி தலைவர்கள் மீதும், எதிர்கட்சி ஆளும் மாநிலங்களிலும் சி.பி.ஐ. மூலமாகவே குறி வைத்து தாக்குதல்கள் தொடுத்தது. (ப.சிதம்பரம் மீதான சி்பிஐ வழக்கும், கைதும்) சிபிஐ ஒரு வழக்கில் மூக்கை நுழைக்க மாநில அரசின் ஒப்புதல் அல்லது அங்கீகாரம் தேவை என்பதால் எதிர்கட்சி ஆளும் மாநில அரசுகள் மோடி அரசின் பழி வாங்கும் போக்கை முடிவுக்கு கொண்டு வர சி பி ஐ க்கு வழங்கிய பொது அங்கீகாரத்தை ரத்து செய்தன.

பாஜக அரசின் கைகள் கட்டப்பட்ட நிலையில், தனது அதிகாரங்களை யாரும் கேள்வி கேட்க முடியாமல் செய்வதற்காக பி.எம்எல்ஏ சட்ட திருத்தங்கள் கொண்டுவந்தது மோடி அரசு.

பண மசோதா என்ற கோதாவில் கொண்டு வரப்பட்ட இத் திருத்தம் கடுமையான கண்டனங்களை எதிர் நோக்கியது. உச்ச நீதி மன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது.

ஆனால், 2022ம் ஆண்டு ஏ.எம் .கான்வில் கார் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு இக் கொடிய சட்ட திருத்தங்கள் செல்லும் என்றும், அமலாக்கத் துறை இதன் மூலம் யாரை வேண்டுமானாலும் விசாரிக்கலாம், எங்கு வேண்டுமானாலும் சோதனை நடத்தலாம், கைப்பற்றலாம், கைது செய்யலாம் என்று தீர்ப்பளித்தது.

இதில் வேடிக்கையும், வேதனையும் யாதெனில் Presumption of innocence till proven guilty குற்றமிழைத்தவர் என ஒருவரை சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்படும் வரை ஒருவர் நிரபராதியே என்ற நீதிக் கோட்பாட்டை, இந்த தீர்ப்பு மறுதலிக்கிறது. இந்திய அரசமைப்பு சட்டம் வழங்கியுள்ள உரிமைகளையும் இத் தீர்ப்பு மறுதலிக்கிறது என்ற விவரத்தை மறு சீராய்வு மனுவில் உச்ச நீதிமன்றத்திடம் சமர்ப்பித்த பின்னரும், நீதி மன்றம் அதை ஏற்றுக் கொண்ட பின்னரும் வழக்கு மறு ஆய்வுக்கு வராமல் இன்னும் நிலுவையிலேயே உள்ளது என்பது தான்.

அமலாக்கத்துறை சோதனைகளும் தேர்தல் நன்கொடை பத்திர விற்பனைகளும்!

எதிர்கட்சியில் ஊழல்னா தொலைச்சுடுவேன். ஊழல் செய்தவங்க எங்ககிட்ட வந்துட்டா ஒளிச்சுடுவேன்!

இ.டி. யின் நடவடிக்கைகள் சுதந்திரமானதாகவோ, நியாயமானதாகவோ இல்லை என்பது சமீபத்தில் உச்சநீதிமன்ற உத்தரவின்படி தேர்தல் ஆணையம் வெளியிட்ட தேர்தல் பத்திரங்கள் வாங்கியவர்கள், வாங்கப்பட்ட நாட்கள், எந்த கட்சிக்கு அத்தகைய பத்திரங்கள் நன்கொடையாக அளிக்கப்பட்டன என்ற விவரங்களில் இருந்து நாம் புரிந்து கொள்ள முடியும் . இதைப் பற்றி அப்பட்டமாக பொய்யுரைக்கும் பிரதமர் மோடியின் செயல் அவரது பக்தர்களின் முகத்தைக் கூட சுளிக்க வைத்துள்ளது.

பாஜகவிற்கு முக்கிய நன்கொடை அளித்துள்ள நிறுவனங்கள், தனி நபர்கள் அனைவரும் இ.டியோ, சி.பி.ஐயோ அல்லது ஐ.டி துறையோ ரெய்டு நடத்திய பின்னரே அந்த நன்கொடையை அளித்துள்ளார்கள் என்பது தெரிய வருகிறது. இது ஒரு வசூல் வேட்டையை சட்டபூர்மாக அனுமதிக்கும் செயலாகும்.

# மற்றொன்று , குற்றமிழைத்தவர்கள் (லாட்டரி மார்ட்டின் மற்றும் நவயுகா கன்ஸ்டிரக்சன் நிறுவனங்கள்) தவறிழைத்து விட்டு சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க பாஜக விற்கு நன்கொடை கொடுத்து தப்பிக்கும் கேவலம்!

# ஒப்பந்தங்கள் வாங்க, அரசிடமிருந்து சலுகைகள் பெற பாஜக விற்கு லஞ்சம் கொடுத்து காரியங்களை சாதிப்பது ( Megha Engineering Co)

# தரமற்ற மருந்துகள் தயாரித்து மக்களின் வாழ்வோடு விளையாடும் மருந்து கம்பெனிகளிடமிருந்து கையூட்டு பெற்று வழக்கை கைவிடுவது போன்ற கீழ்த்தரமான செயல்களின் நாயகனான பாஜக அரசு ஒளிவதற்கு இடமேதும் உண்டா?

மணீஷ் சிசோடியா மற்றும் தில்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் ஆகிய இருவரையும் கைது செய்துள்ள அமலாக்கத்துறை, இதே வழக்கில் கைதாகி பின்னர் பாஜக விற்கு நன்கொடை கொடுத்தவுடன் பிணையும், மேலும் 50 கோடி பத்திர நன்கொடைக்குப் பின் குற்றவாளி நிலையிலிருந்து அப்ரூவர் நிலைக்கு மாறிய அரபிந்தோ பார்மாவின் சரத் சந்திராவும் எதைக் குறிக்கின்றன?

 

கேடு கெட்ட முடைநாற்றமெடுக்கும் கையூட்டு கலாச்சாரத்தை சட்டபூர்வமாக்கிய மோடியின் பித்தலாட்ட அரசியலை தோலுரித்து காட்டுகிறது. மோடியின் பொய்கள் இனியும் எடுபடுமா?

உச்ச நீதிமன்றம் தாமதமாகவேனும் இந்த தீர்ப்பை வழங்கி அனைத்து மூடு மந்திரங்களையும் வெட்ட வெளிச்சத்திற்கு கொண்டுவந்த பின், மோடி அரசு ஸ்டேட்வங்கியை நிர்பபந்தித்து தகவல் வெளியிடுவதை தாமதிக்க முயன்றதையும் முறியடித்து தரவுகள் வெளியான பின், தந்தி டி.வி. பேட்டியில் கொஞ்சங் கூட கூச்ச நாச்சமின்றி ‘ என்னால் தான் இந்த விஷயங்கள் ( யார் யார் எந்த கட்சிக்கு நன்கொடை கொடுத்தார்கள் என ) அறிய முடிகிறது. முன்பு இது நடவாத காரியம் என முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் மோடி, இன்னும் பிரதமராக நீடிப்பது இந்திய மக்களின் சாபக் கேடா அல்லது இயலாமையா?

கட்டுரையாளர்;ச.அருணாசலம்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time