ஆட்சியாளர்களும், ‘ஆமாம் சாமி’ நீதிபதிகளும்!

நீதிபதிகள் என்பவர்கள் விருப்பு வெறுப்புகளுக்கு ஆட்படாமல் நெருப்பாக இருக்க வேண்டியவர்கள்! ஆனால், அழுக்கு கறை படிந்த ஆட்சியாளர்கள், நீதிபதிகளை நேர்மையாக இருக்க விடுகிறார்களா? அம்பலப்பட்டு போகும் நீதிபதிகளை ஆட்சியாளர்கள் பாதுகாக்க துடிக்கின்ற சம்பவங்கள் சொல்வதென்ன?

தில்லி உயர்நீதிமன்ற மூத்த நீதிபதியின் – யஷ்வந்த் வர்மா- வீட்டில் பிடித்த “தீ”யை அணைக்க சென்ற போது அங்கு இருந்த ‘கட்டு கட்டான பணம்’ இன்று பலரையும் திடுக்கிட வைக்கும் “தீ”யாக நாட்டை சூழ்ந்துள்ளது.

1992 ல் வழக்கறிஞர் தொழிலுக்கு வந்து 2014ல் நீதிபதியாக அலகாபாத்திலும் பின்னர் 2021ல் தில்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வரும் திரு. யஷ்வந்த் வர்மா வீட்டில் கண்டெடுக்கப்பட்ட பணம் அவர் 100 ஆண்டுகள் பணியில் இருந்தாலும் சம்பாதித்திருக்க முடியாத தொகை என தகவல்கள் கூறுகின்றன.

நீதித்துறையும், நீதிபதிகளும் பொதுமக்கள் பயந்தவண்ணமாக “யோக்கியர் கூடாரமாக” இல்லை என்பதை இந்த நிகழ்ச்சி சுட்டிக் காட்டுகிறது.

சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவர்களாக, நடுநிலையாளர்களாக இருந்து நீதி வழங்க வேண்டிய நீதித்துறையும் அதனை செலுத்தும் நீதிபதிகளும் மற்ற துறையினரை போலவே ஊழலிலும், முறைகேட்டிலும் ஊறித்திளைத்தவர்களாக மாறியுள்ளது இதுவரை ‘ இலை மறை காய் மறையாக’ இருந்து வந்தது. ஆனால். இன்று அது வெட்ட வெளிச்சமாகி உள்ளதை காண்கிறோம்.

இத்தகைய எண்ணங்களுக்கு வலு சேர்க்கும் விதமாக உள்ளது இது குறித்த உச்சநீதிமன்றத்தின் அணுகுமுறையும் அறிவிப்பும்.

சம்பவம் நடந்து ஏழு நாட்களுக்கு பிறகு, பலத்த கண்டனங்களுக்கிடையில் உச்ச நீதிமன்றம் நீதிபதி வர்மாவை அலகாபாத் உயர்நீதி மன்றத்திற்கு மாறுதல் செய்ததாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டது. அலகாபாத் பார் கவுன்சில் ,இதை கண்டித்து “அலகாபாத் உயர்நீதிமன்றம் என்ன குப்பை தொட்டியா? “ என சீறியவுடன் மாறுதல் உத்தரவுக்கும் வர்மா வீட்டில் நடந்ததாக கூறப்படும் வதந்திக்கும் சம்பந்தமில்லை என்று உச்ச நீதி மன்றம் “தெளிவு படுத்தியுள்ளது”.

நீதிபதி வர்மாவின் வீட்டில் நடந்த திகழ்ச்சி பற்றி ‘பொய் செய்திகளும் வதந்திகளும்’ உலவுகின்றதாக உச்சநீதிமன்றம் கூறியுள்ளது நமக்கு வியப்பை தருகிறது.

நீதிபதி வர்மா வீட்டில் கண்டெடுக்கப்பட்ட பணக்குவியல் குறித்து தில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ‘கமுக்கமாக’ ( in house) விசாரணை நடத்துகிறாராம்!

இந்த விசாரணைக்கும் மாறுதல் உத்தரவுக்கும் சம்பந்தமில்லை என விளக்கமளிக்கும் உச்சநீதிமன்றம், நடந்துள்ள ‘ அவலத்தை’ பற்றியோ அல்லது அது சுட்டிகாட்டும் ‘புரையோடிப்போயுள்ள ரணத்தை ‘ பற்றியோ அக்கறை பட்டதாக நமக்கு தெரியவில்லை.

‘தங்களுடைய’ புனிதப்போர்வையை காப்பதிலேயே குறியாக நீதிபதிகள் உள்ளதுதான் இதில்வெளிப்படுகிறது.

சில கால முன்பு அன்றைய தொலை தொடர்பு அமைச்சர் சுக்ராம் வீட்டில் 60 லட்ச ரூபாய் பணம் கட்டுகட்டாக கண்டுபிடிக்கப்பட்டது ஏற்படுத்திய (படங்கள், பத்திரிக்கை தலைப்புகள், டி வி . ஒளி பரப்புகள்) அதிர்வலைகளும், அதற்கு நீதிதுறையின் எதிர்வினையும் கண்டனங்களும் நாம் இன்னும் மறக்கவில்லை.

முன்னாள் மத்திய அமைச்சர் சுக்ராம்

அரசியல்வாதியோ அல்லது அதிகாரியோ அல்லது சாதாரண மனிதனோ தவறிழைத்தால் அதனால் ஏற்படும் விளைவுகளும் கண்டனமும் நீதிபதிகளை மட்டும் அண்டுவதில்லையே ஏன்?

நீதிபதிகளின் குற்றங்களும் அவர்கள் மீதான நியாயமான சந்தேகங்களும் நீதித்துறையின் மீதான களங்கமாக, நீதித்துறை மீதான நம்பகத் தன்மையை குறைக்கும் செயல்களாக

நீதிபதிகள் முன்னிறுத்துவதின் விளைவே , அவர்களை சுற்றி விசாரிக்கப்பட முடியாத பாதுகாப்பு அரணை ஏற்படுத்தும் செயலில் முடிந்துள்ளது.

நீதித்துறையில் புரையோடியுள்ள ஊழலையும் அதிகார முறைகேட்டையும் அலசி ஆய்ந்து களைவதற்கு பதிலாக ‘ நீதித்துறையின் சுதந்திரம் ‘ என்ற பெயரில் குற்றங்களை முறையாக

நியாயமாக, வெளிப்படையான விசாரணை நடத்தாமல், மூடி மறைப்பதும் , கமுக்கமாக விசாரணை நடத்துவதும் இந்தியாவில் மட்டும்தான் நடக்கவியலும்.

எல்லோருக்கும் ஓர்வழி இடும்பனுக்கு மட்டும் தனிவழி என்ற சொல்லாடலுக்கு ஏற்ப நீதித்துறையின் செயல்பாடுகள் கண்காணிப்பின்றி இந்தியாவில் நடைபெறுகிறது.

இந்திய அரசமைப்பு சட்டத்தின் கூறுகளில் ஒன்றாக நீத்துறையின் சுதந்திரத்தை அறிவித்த உச்சநீதி மன்றம் நீதித்துறையின் சுதந்திரத்தை பாதுகாப்பதில் எந்த அளவிற்கு முன்வந்துள்ளது எந்த அளவிற்கு முயற்சிகள் எடுத்துள்ளது எந்த முன்னெடுப்புகளை நடைமுறை படுத்தியுள்ளது என்பது மிகப்பெரிய கேள்விக் குறியாகும்.

2014-ல் மோடி ஆட்சியிலமர்ந்த சில மாதங்களில் தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தை 99வது அரசமைப்பு திருத்த சட்டமாக கொண்டு வந்தது நினைவிருக்கும்.

அந்த சட்டம் நீதிபதிகளின் பணி நியமனம் பற்றியும், அவர்களை தேர்வு செய்யும் முறை குறித்தும் கொலீஜிய நடைமுறைக்கு பதிலான

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி

இரண்டு மூத்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ,

ஒன்றிய சட்டம் மற்றும் நீதி அமைச்சர்

பிரதமர் எதிர்கட்சி தலைவர் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழு தேர்வு செய்யும் இரண்டு நபர்கள் அடங்கிய NJA- தேசீய நீதிபதிகள் நியமன ஆணையம் அமைப்பதை சட்டமாக முன்மொழிந்தது.

இந்த சட்டதிருத்தத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம், நீதிபதிகளின் நியமனத்தில் அதிகாரிகள் தலையிடுவதால், நீதித்துறையின் சுதந்திரம் பறி போகிறது என்றும் நீதிபதிகளுக்கு முதன்மை இடம் கொடுக்கவில்லை என்றும், எனவே அரசமைப்பு சட்டக்கூறை இச்சட்டம் மீறுவதாக கூறி இச்சட்ட திருத்தத்தை நிராகரித்தது.

பழைய கொலீஜிய நடைமுறையில் குறைபாடுகள் உள்ளன என்றும், தேவைப்பட்ட திருத்தங்களுடன் அவற்றை அரசு முன்னெடுக்க வேண்டும் என பரிந்துரைத்தது, அனைவரும் ஏற்றுக் கொள்ளும் திருத்தங்களுடன் புதிய சட்டத்தை அரசு நிறைவேற்றலாம் என நீதிமன்றம் கூறியது.

இடைக்காலத்தில் அரசு மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தேர்வு மற்றும் நியமனங்களில் கொலீஜிய முறையே நடைமுறையில் இருக்கும் . அதை நடைமுறை படுத்த “செயல்முறை குறிப்பாணை” (Memorandum of Procedure) யை ஒன்றிய அரசும் நீதிமன்ற கொலீஜியமும் பின்பற்ற வேண்டும் என குறிப்பிட்டது . எனவே அதுவே நாட்டின் சட்டமாக(law of the land) பாவிக்கப்பட வேண்டும்.

ஆனால், நீதிபதிகளை தேர்வு செய்வதிலும் பணி யமர்த்துவதிலும்’ கொலீஜிய நடைமுறை ‘ வெளிப்படையற்றது, பரந்துபட்ட பிரதிநிதித்துவத்தை மறுத்து உறவுமுறை பிரதிநிதித்துவத்தை ஊக்குவிக்கிறது என்பது பரவலான குற்றச்சாட்டு!

இதை மாற்றியமைக்க நீதித்துறையோ, நீதிபதிகளடங்கிய கொலீஜியமோ இன்றுவரை முன்வரவில்லை. ஆட்சியாளர்களுக்கு இதில் அக்கறை ஏதுமில்லை, அவர்களுக்கு தங்களது

தாசர்களை பதவிகளில் அமர்த்துவதும் , அரசமைப்பு சட்டத்தின் மாட்சிமையை விரும்புபவர்களுக்கு பதவி மறுப்பதுமே முழுநேர வேலையாக இருக்கிறது.

கொலீஜியத்தின் பரிந்துரைகளை அரசு முழுமையாக நிராகரிக்காமல் தள்ளி போடுவதன் மூலமாகவும் , பரிந்துரைகளை திருப்பி அனுப்புவதன் மூலமும் தங்களது எண்ணங்களை ஆட்சியாளர்கள் நிறைவேற்றி கொள்கின்றனர் . கொலீஜியமும் தங்களது பரிந்துரைகள்

நிராகரிக்கப்படாமல்  நீர்த்து போக செய்வதை தடுக்க முன் வரவில்லை, பரந்துபட்ட பிரதிநிதித்துவம் மறுக்கப்படுவதை கேள்வி கேட்பதில்லை, உறவுமுறை பிரதிநிதித்துவமும், உணர்வு முறை பிரதிநித்துவமும் நடைபெறுவதால் நீதித்துறை சுதந்திரத்தை பற்றி நீதிபதிகளுக்கு கவலையில்லை!

செயல்முறை குறிப்பாணை (MoP) 2017 முதல் இன்றுவரை ஒன்றிய அரசும் நீதித்துறையும் ஏற்றுக் கொண்ட நடைமுறையாக வரையறுக்கப்பட வில்லை . கருத்தொற்றுமை ஏற்படாமலேயே காலம் கடந்து செல்கிறது, பணி மாறுதலும் பணி அமர்த்தலும் , பதவிஉயர்வும் இதனூடே நடைபெறுகிறது என்றால் அதை நீதித்துறையின் சுதந்திரம் என்றழைப்பதா அல்லது நீதி பரிபாலனத்தின் மாண்பு என்று போற்றுவதா தெரியவில்லை!

இவற்றுக்கு மத்தியில் நீதிபதிகளின் செயல்பாடுகளும், பேச்சுக்களும் , தீர்ப்புக்களும் அவர்களது இன, மத, பாலின சார்பு நிலையை காட்டுகிறதே ஒழிய இந்திய அரசமைப்பு சட்ட மாண்புகளை வலியுறுத்துவதாக இல்லை என்பது உண்மை.

அரசியல்வாதிகளோ, அதிகாரிகளோ, பாமர மனிதர்களோ இவ்வாறு நடந்துகொண்டால் அவர்கள் மீது பாயும் சட்டங்கள் நீதிபதிகளின் மீது ஏன் பாய மறுக்கிறது?

நீதித்துறை சுதந்திரம் என்பது நீதிபதிகளின் கடமைக்கான சுதந்திரமா அல்லது நீதிபதிகளின் செயல்களுக்கான சுதந்திரமா? பாதுகாப்பா?

எப்பாடு பட்டாவது நீதிபதிகளை காப்பத்துவது என்பது, சட்டத்தின் பிடிக்கு அப்பாற்பட்டவர்களாக அவர்களை சுற்றி அரண் அமைப்பது ஜனநாயக முறை அல்ல, நியாயமும் அல்ல!

இத்தகைய பாரபட்ச அணுகுமுறை எந்த ரூபத்தில் வந்தாலும், அதை எதிர்கொள்ளவில்லையெனில், சமத்துவமும், ஜனநாயகமும் மெல்லச் சாகும்.ஆளுவோரும், நீதிபதிகளும் பரஸ்பரம் தங்களை பாதுகாத்துக்ப்   கொள்வதை நாம் கண்ணுற்று வருகிறோம். சட்ட ஆட்சி ,சுதந்திரம் என்பதெல்லாம் வெற்றுப் பேச்சுக்கள் தானா?

நாடாளுமன்ற மேலாண்மையை தூக்கிப் பிடித்து பேசிவரும் துணை குடியரசு தலைவர் ஜகதீப் தங்கர் சட்டங்களுக்கு அங்கீகாரம் வழங்குவதில் நீதிமன்றங்களை விட, நாடாளுமன்ற தீர்மானங்களே அதிக வலுப்பெற வேண்டும் என வாதிடும் ஜகதீப் தங்கர் தேசீய நீதிபதிகள் நியமன சட்டத்தை செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்பளித்தது விரும்பத்தக்க நிகழ்வல்ல என வாதிடும் திரு. தங்கர் மதவெறியை தூண்டிவிடும் வண்ணம் தொடர்ந்து செயல்பட்டு நீதித் துறைக்கே அவமானமாகத் திகழும் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சேகர் யாதவை பணிநீக்கம் செய்ய 55 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு மனு கொடுத்த பின்னர் இன்று வரை நடவடிக்கை எடுக்கவில்லை என்பது எதை காட்டுகிறது.

நீதிபதிகளின் சுதந்திரத்தைவிட ஆளுவோருக்கு நீதிபதிகளின் பொறுப்புக் கூறல் (accountability) என்பதன் பெயரில் நீதிபதிகளை ஆளுவோர் வசமாக்குவதே தேவையாக இருக்கிறது என்பதற்குஏராளமான எடுத்து காட்டுக்கள் இருக்கின்றன.

2018ல் தலைமை  நீதீபதி தீபக் மிஸ்ராவை எதிர்த்த நடந்த நான்கு உச்சநீதிமன்ற நீதிபதிகளின் பத்திரிக்கையாளர் சந்திப்பு மறக்கக் கூடியதா?

முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீதான பாலியல் புகாரில் இருந்து அவரை காப்பாற்றி ராஜ்யசபா பதவி வழங்கியதற்கு பின்னணி என்ன? அதானிக்கு ஆதரவான நீதிபதி அருண் மிஸ்ராவின் பல தீர்ப்புக்கள் பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பு நீதிபதி லோயா மர்ம மரண வழக்கு தீர்ப்பு, பி எம் எல் ஏ வழக்கு தீர்ப்பு, காஷ்மீர் வழக்கு தீர்ப்பு என நாம் அடுக்கி கொண்டே போகலாம் .

கைமாறு செய்வதற்கும் கையூட்டு பெறுவதற்கும் உள்ள சிறு வேறுபாடு சட்டத்தின் ஆட்சியில் உணரமுடியும். கறை படிவது என்பது பணத்தால் மட்டும் நடைபெறுவதல்ல, பணத்தாலும் நேர்மையற்ற குணத்தாலும், முறையற்ற தோக்கத்தாலும் அது அறியப்படும் . இவற்றிற்கெல்லாம் உரைகல்லாக இருப்பது சட்டவழி ஆட்சிதான்.

நீதித்துறையின் சுதந்திரம் என்று மக்கள் நினைப்பதற்கும், ஆளுவோர் நினைப்பதற்கும், நீதிபதிகள் நினைப்பதற்கும் பயங்கர வேறுபாடுகள் உள்ளன.

இதில் தெளிவு பெறாமல் சட்டத்தின் ஆட்சிக்கும், நீதித்துறையின் சுதந்திரத்திற்கும் நாம் எடுக்கும் நடவடிக்கைகள் உரிய பலனைத்தராது என்பது திண்ணம்.

கட்டுரையாளர்;ச.அருணாசலம்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time