பள்ளிக் கல்வித்துறையின் ‘அட்ராசிட்டி’க்கு அளவே இல்லை!

- இரா.பெருமாள்சாமி

பள்ளிக் கல்வி சந்திக்கும் சிக்கல்கள் தீர்வை நோக்கி – 2

ஆசிரியர்களை அடிமைகளாக நடத்துவதா..? எதையும் ஆசிரியர்களிடம் கலந்து பேசாமல் தன்னிச்சையாக முடிவெடுத்து திணிக்கிறார்கள். ஆசிரியர்களை பணியாற்ற விடாமல், சிந்திக்க விடாமல் மேலும் மேலும் அழுத்துகிறது பள்ளிக் கல்வித் துறை. இங்கு இன்னும் கற்றல் நிகழவே இல்லை.

11மற்றும் 12 ஆம் வகுப்புகள்  பயிலும் மாணவர்களைக் கையாள்வது எளிதல்ல. பத்தாம் வகுப்பு மாணவர்கள் குறித்தும் என்னால் சொல்ல முடியும்.ஏனெனில்,  அவர்கள் தான் பதினொன்றாம் வகுப்பிற்கு வருகின்றனர். இந்த அரசு,  மொத்த பள்ளிக் கல்வியினுடைய தரம் என்பதை அல்லது கல்வித் துறையின் சிறப்பு என்பதையே பிளஸ் டூ மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை வைத்து தான் முடிவு செய்கிறது அல்லது கணிக்கிறது எனலாம்.

+2  தேர்ச்சி சதவிகிதம் என்ன? 90 சதவீதத்திற்கு மேல்! எந்த அரசாங்கம் வந்தாலும் 90 %, இதற்கு  மேல் தான் இருக்கும். இருக்கும் என்பதிலிருந்து நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஏறக்குறைய 8 லட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் 12 ஆம் வகுப்பில் தேர்வழுதுகின்றனர் . மெட்ரிகுலேஷன், தனியார் பள்ளிகள், அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள்  என்று அனைவரும் கலந்தது தான் இது. இதில் அரசுப் பள்ளி மாணவர்கள் 60 சதவீதத்திற்கு மேல் பயில்கின்றனர். இந்த மாணவர்கள் எங்களிடம் வரும் பொழுது கற்றல் குறைபாடுடன் தான் வருகின்றனர். சமீப காலங்களில் அதுதான் நடக்கிறது. காரணம் பலவாக இருக்கலாம் , அதில் கொரோனாவும் ஒரு காரணம். இந்த கற்றல் குறைபாடுள்ள மாணவர்களைக் கையாளுவதில் மிகப்பெரிய சிக்கல் ஒன்று இருந்து கொண்டே இருக்கின்றது.

பாடம் சார்ந்த ஒரு விளக்கத்தினை மாணவர்களுக்கு நாம் கற்றுத்தர எத்தனித்தால், மாணவனுக்குப் புரியவில்லை என்பதனை அவன் வெளிப்படையாக சொல்ல விரும்பாமல், அதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக ஆசிரியரை மடக்குவது , ஆசிரியரையே கேள்வி கேட்பது அல்லது  வகுப்பெடுப்பதற்கு முடியாதபடி வகுப்பறை சூழ்நிலையை  முற்றிலுமாக சிதைப்பது என்ற நோக்கத்தோடு சில மாணவர்கள் இருக்கின்றார்கள்.

அதனுடைய ஒரு பகுதி தான் ஆசிரியருக்கும், மாணவருக்குமான உறவு  சீர்கெட்டு , தற்போதைய நிலையில் இருக்கிறது. பல இடங்களில் நீங்கள் பார்த்திருக்கலாம், பெண் ஆசிரியர்களை கன்னத்தில் ஓங்கி அடித்த மாணவர்கள் உண்டு.

சமீபத்தில் + 1 மாணவன் தன்னுடன் பயின்ற மாணவியின் மீது சிகரெட்டை ஊதிப் புகை விட்டதனால், அதைத் தட்டிக் கேட்ட ஆசிரியர் பணி நீக்கம் செய்யப்பட்டார். அவருடன் சேர்ந்து நான்கு ஆசிரியர்கள் நியாயத்தைக் கேட்டதினால், நான்கு பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அதே போல ஒரு மாணவன் கிருஷ்ணகிரியில் ஒரு சகோதரியின் பின்னால், பேனாவால் கிறுக்கினான். இதேபோல பல செய்திகள் நமக்கு கிடைத்துக் கொண்டிருக்கின்றன. இவற்றின் வழியாக நாம் நன்றாகப் புரிந்து கொள்ளலாம், ஆசிரியருக்கும் மாணவருக்குமான இடைவெளி எவ்வாறு உள்ளது என்று.

அப்படியே இந்த இடைவெளி எவ்வாறு ஏற்பட்டது என்றும் நாம் கவனமாகப் பார்க்க வேண்டி உள்ளது . இவற்றையெல்லாம் ஒட்டி ஆசிரியர்கள் ஒரு கோரிக்கை வைக்கின்றனர் . எங்களுக்கு பணிப் பாதுகாப்பு வேண்டும், பணி பாதுகாப்புச் சட்டம் உருவாக்க வேண்டும் என்று. ஆனால், சங்க நிர்வாகிகள் பணிப் பாதுகாப்புச் சட்டம் என்பதனை முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை .

இந்த சமூகச் சூழலில் சமூகத்தை மாற்ற வேண்டிய பொறுப்பில் உள்ள ஆசிரியர்கள், மாணவர்களைக் கையாள வேண்டியது எப்படி என்று நாம் தான் புரிந்து கொள்ள வேண்டும், என்ற அடிப்படையில் நாம் பார்க்கிறோம். அதிகமாக நம்மிடம் படிக்கக்கூடிய மாணவர்கள், தங்கள் குடும்பத்தில் பெற்றோர்களிடம் பேசுவதற்கான நேரமில்லை .

நான் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன், எனக்கு இப்போது 58 வயதாகிறது. மாலை வேளையில்  அம்மா உணவு சமைத்த பிறகு அனைவரும் இணைந்து குடும்பத்தினருடன் பேசிக் கொண்டே உணவு உண்போம். அந்த நிலை இன்று இருக்கிறதா? என்றால், ‘இல்லை’ . குடும்பத்தில் உளவியல் ரீதியான உரையாடல் இருக்கிறதா? என்றால், இல்லை, எல்லா குடும்பங்களும் மைக்ரோ லெவல் குடும்பங்களாக மாறிவிட்டன. குடும்ப உறவில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இள வயது மாணவர்கள் நிறைய எதிர்பார்க்கிறார்கள் . அவர்களின் எதிர்பார்ப்பிற்கு தீனி போடுவதற்கு இங்கு ஆட்கள் இல்லை . அதுதான் முக்கியமான சிக்கல். அந்த மாணவன்  வேறு வழி நோக்கி பயணிக்கிறான். அதற்குத் தகுந்தார் போல், சமூகச் சூழலும் மாறி இருக்கிறது அதனை உள்வாங்கிக் கொள்ள வேண்டும்.

மாணவன் போதையில் அலைவதும், டாஸ்மார்க் போவதும் இங்குள்ள அனைவருமே பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். இதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருப்பதற்கு வாய்ப்பில்லை. இப்படிப்பட்ட மாணவர்களைக் கையாளும் எங்களுக்கு மிகப்பெரிய உளவியல் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது இந்த சமூகம். நான் ஏன் சமூகம் என்று சொல்கிறேன் என்றால், மாணவர்களின் இத்தகைய நிலைக்கு ஆசிரியர்கள் மட்டும் காரணம் அல்ல, சமூகமும் காரணம்.

அரசியல்வாதிகளும் காரணம். கார்ப்பரேட்டுகளும் காரணம். அதே மாதிரி மக்களின் மனநிலையை மாற்றி இருக்கக்கூடிய இந்த சமூகமும் காரணம்.

பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கிய குடும்பங்களில் கூட, தன் குழந்தைகளைப் படிக்க வைப்பதற்காக 20,000 மற்றும் 30,000 என்று தங்களது பணத்தை செலவிட்டு,   தனியார் பள்ளிகளை நோக்கி நகரக்கூடிய மனநிலையை  உருவாக்கியது யார்? இந்த மாதிரியான கல்விச் சூழலை உருவாக்கியது யார் என்று நாம் அரசியல் ரீதியாகவும் பார்க்க வேண்டும், அறிவியல் ரீதியாகவும் பார்க்க வேண்டும்.

மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் கல்விக்காக ஒதுக்கப்படக்கூடிய நிதியும் அதிகம் தான் , அரசுப் பள்ளிகள் சரி இல்லை, அரசு பள்ளி ஆசிரியர்கள் சரியில்லை, அங்கு மாணவன் படித்தால் சரியான திறன் பெற மாட்டார்கள் என்ற முடிவுகள் எல்லாம் திட்டமிட்டே விதைக்கப்படுகின்றன. அரசியல் பின்புலத்துடன் ஒரு சில அமைப்புகள் இதனை திட்டமிட்டு மக்களிடம் பரப்புரை செய்கின்றன.

இப்படிப்பட்ட மாணவர்களைக் கையாளக்கூடிய சூழலில், தமிழக அரசு பல்வேறு திட்டங்களையும் கொண்டு வந்து அதற்கு ஆசிரியர்களைப் பணியாற்ற வைத்துக் கொண்டுள்ளது. இல்லம் தேடி கல்வித் திட்டம் , எண்ணும் எழுத்தும் திட்டம், வானவில் திட்டம் என்று புதிய திட்டங்கள் வந்து கொண்டே உள்ளன. ஆணையரை சந்திக்கும் பொழுது நாங்கள் நடைமுறை சிக்கல் குறித்து அவரிடம் பேசினோம்.  எமிஸ் பிரச்சனை பற்றி அதிகம் கூறும் பொழுது காலை ஒரு பீரியட் எங்களுக்கு அதிலேயே போய் விடுகிறது என்றெல்லாம் சொன்னபோது, நீங்கள் இனிமேல் அட்டன்டன்ஸ் போட்டுருங்க அது சாயங்காலம் வரைக்கும் எப்ப வேணாலும் அப்டேட் ஆகும் என்றதுடன் , அதை நாங்கள் ஒரு பிரச்சினையாக மாற்ற மாட்டோம் என்றும் சொன்னார் . அது ஒரு தற்காலிக ரிலீப் ஆக இருக்கிறது.

EMIS ,IFHRMS , பதினான்கு வகையான நலத் திட்டங்கள். இவை அனைத்தும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் தான் செய்ய வேண்டும். ஏனென்றால், 11,12 ஆம் வகுப்பு பயிலும் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேவையான உள்ளீடுகளை இணைய தளத்தில் பதிவு செய்ய வேண்டி உள்ளது. இந்த உள்ளீடுகளை சேகரித்து பராமரிக்க வேண்டிய IT நிறுவனங்கள் எங்களை Data collect செய்யும் நபராகவே பார்க்கின்றன.

அவர்களுக்குத் தேவை டேட்டாக்கள். இந்த டேட்டாவை வைத்து எமிஸ் தளத்திலிருந்து ஒரு பள்ளியில் ஒரு வகுப்பறையில்  இந்த குறிப்பிட்ட ஆசிரியர் இந்த மாணவனுக்கு என்ன மாதிரியான அணுகுமுறையைக் கையாள்கிறார் என்று வருவாய்த் துறையில் பணியாற்றும் தாசில்தார் கேட்கிறார்.ஏனென்றால், எல்லாமே இணைய தளத்தில் இருக்கின்றது.ஒரு மாணவன் தொடர்ந்து பள்ளிக்கு வரவில்லை என்றால், இந்த மாணவனைப் பள்ளிக்கு வரவழைக்க நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?,மாணவனது வீட்டிற்குப் போனீங்களா?, கூப்டீங்களா? வரவைத்தீர்களா ? என்று ஒரு தாசில்தார் கேட்கிறார் ,கலெக்டர் கேட்கிறார், சென்னையிலிருந்து கமிஷனரும் இன்ட்ராக்ட் (intract) பண்றார். 85 சதவீதத்திற்குக் குறைவாக தேர்ச்சியைக் காட்டும் ஆசிரியர்களை அழைத்து  மெமோ தருவதாகக் கூறி மிரட்டுகின்றனர்.

ஒரு மாணவனை கற்றலில் ஈடுபடுத்தி, அவனுடைய பிரச்சனைகளை ஆய்வு செய்து, அதற்கு தக்க நடவடிக்கைகளை எடுப்பதற்கான எந்த நேரமும் கொடுக்கப்படுவதில்லை. அதே போல, ஒரு மாணவனுடைய கற்றல் திறனை ஆசிரியர்கள் மட்டுமே அறிவார்கள். மாணவனுக்கு எதையெல்லாம் சொல்லிக் கொடுக்க வேண்டும். எந்த நிலையில் இருக்கிறான் என்பதை அறிந்து ஒவ்வொரு நாளும் அவனுக்காக நாங்கள் பணியாற்ற வேண்டும் .

நாம் தயாரிப்பு செய்து சென்றால், வகுப்பறைக்குள் போன பிறகு வேறு மாதிரியாக இருப்பான்.வேறு மாதிரிதான் சொல்லிக் கொடுக்க முடியும். எனில் ஆசிரியர் மாணவரைப் பொறுத்து தான் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள் முடிவு செய்யப்படுகின்றன. இது எந்த அதிகாரிகளுக்கும் தெரிவதே இல்லை. அது தான் பிரச்சனையே.

அதற்காகத்தான் திட்டங்களை மாற்றி மாற்றிப் போட்டு நம்மிடையே திணிக்கிறார்கள். இத்தகைய சூழலில் மாணவனைப் கையாள்வதில் பல பிரச்சனைகள் நமக்குண்டு.மாணவன் எப்போதுமே பள்ளிக்குத் தாமதமாகத்தான் வருவான். இதைக் கேட்டால், ”பஸ் லேட்” என்பான். காலை எட்டு மணிக்கு தான் தூங்கி எழுந்திருப்பான். 8 மணிக்கு மேல் பஸ் பிடிச்சு வரணும்…பெற்றோரை அழைத்துக் கேட்கும் பொழுது பெற்றோர் சொல்வது இது தான்,” சார்… அவன் எழுந்திருக்க மாட்டான்”, என்பார்கள்.

வீட்டுப்பாடம் செய்வது கிடையாது வீட்டில் படிப்பது கிடையாது. எழுதுவது கிடையாது.சொல்வது எதுவும் கேட்பதில்லை. இது 70 சதவீத மாணவர்களுக்கு பொருந்தும். பெண் குழந்தைகள் சற்று படிக்கிறார்கள்.

நீங்கள் சமீபகாலமாக மாணவர்களை உற்று நோக்கினால் தெரியும். அருகில் உள்ள பேருந்து நிலையங்களில் கவனியுங்கள்.புதுப் பழக்கம் வந்துள்ளது. பள்ளிக்கு அவன் புத்தகப் பையை எடுத்து வருவதில்லை . பள்ளியில் கொடுத்த இலவசப் புத்தகங்களைக் கூட, அவன் பள்ளிக்கு சரியாக எடுத்து வருவதில்லை. பள்ளிக்கு வெளியில் எங்காவது விட்டு வந்திருந்திருப்பான் . அந்த மாணவரை உளவியல் ரீதியாக மட்டுமே கையாள வேண்டும், வேறு எந்த வகையிலும் கையாளக் கூடாது. அப்படித் தான் கல்வித் துறையும் சொல்கிறது. ஆசிரியர்களும் அதைத் தான் செய்கிறோம்.

இப்படி இருக்கும் மாணவர்கள் ஒரு பேனா கூட அவனிடம் இருக்காது. நான் அவனை வகுப்பறையில் உட்கார வைத்து இயற்பியல் சொல்லிக் கொடுக்க வேண்டும். நான் தயாரித்த மெட்டீரியலை (பாடப் பொருள்களை ) , கைப்பட தயாரித்த பாடப் பொருள்களை அவனுக்கு ஜெராக்ஸ் செய்து கையில் கொடுக்க வேண்டும். அவை சுருக்கப்பட்ட பாடப் பகுதியாக நானே அவர்களுக்காக கைப்பட எழுதியது. அதே மெட்டீரியல் வேறு பள்ளிகளுக்கோ வேறு வகுப்பு மாணவருக்கோ பொருந்தாது. இது தான் இன்றைய நிலை.

ஐந்து வினாக்கள் கொடுத்தால், ”சார் ஒவ்வொன்றாக  ஒப்பிக்கட்டுமா”  என்கிறான். அவனது இயலாமையைச் சொல்வதா? அல்லது அவனது படித்து வந்த முறையைச் சொல்வதா ? எதைச் சொல்வது? யாரைக் குறை கூறுவது? ஆனால், இந்த மாணவர் சமூகம் இங்குள்ள ஒரு சமூகத்திற்குத் தேவைப்படுகிறது. இப்படிப்பட்ட மாணவர் சமூகத்தை உருவாக்க தொடர்ந்து பின்புலத்தில் இருந்து வேலை செய்யும் அமைப்புக்கள் உள்ளன. இதை மேம்போக்காகப் பார்த்து விட்டு, வெறுமனே நகர்ந்து சென்றுவிட முடியாது.ஆசிரியர்களுக்கு அழுத்தம் தருகின்றது, அதிக வேலை தருகிறது, மன உளைச்சலுக்கு உள்ளாக்குகிறது என்றால் … எல்லாமும் கொடுப்பாங்க. நாம் அதிலிருந்து விடுபட்டு தான் செயலாற்ற வேண்டி இருக்கிறது. இந்த மாணவர்கள் கல்லூரிக்குப் போவது எண்ணிக்கையில் வெகுவாகக்  குறைந்துள்ளது.

மாணவர்கள் இடைநின்றாலும், நாங்கள் தான் போய் பார்க்க வேண்டும்.கல்லூரிப் படிப்புக்காகப் போயிருக்கார்களா..? இல்லையா? என்பதையும் நாம் தான் பார்க்க வேண்டும். அதற்கான புள்ளி விவரங்களைக் கண்டறிந்து சேகரிக்க வேண்டும். ஏகப்பட்ட புள்ளி விவரங்களை இந்த அரசாங்கம் கேட்கிறது. இந்த புள்ளி விவரங்கள் தேவைதான்.

ஆனால், மேலை நாடுகளில் ஐரோப்பியக் கண்டத்தில் உள்ள ஆசிரியர்களின் நிலை என்ன? இந்தியாவில் உள்ள ஆசிரியர்களின் நிலை என்ன? என்று ஒப்பிட்டுப் பார்த்தால் தெரியும்.ஆசிரியர் கல்வி எவ்வாறு தரப்படுகிறது என்று பார்த்தால் தெரியும், கல்வியாளராகவும், சமூகத்தை மாற்றும் சிந்தனையாளராக கல்விச் செயல்பாட்டாளராகவும் இயங்கும் ஆசிரியர் கல்வியைத் தருகிறதா? என்றால் இல்லை. இன்று நிறைய ஆசிரியர் பயிற்சி (டயட் )நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டது. பி.எட் கல்லூரி உட்பட பலதும் தனியாருக்குக் கொடுக்கப்பட்டுவிட்டது. அதன் நிலை குறித்து நமக்குத் தெரியும். காசு கொடுத்தால் போதும் கல்லூரிக்கே போக வேண்டாம். இப்படிப்பட்ட ஆசிரியர்களை வெறும் மதிப்பெண் சார்ந்த கற்பித்தலைக் கொடுக்கும் ஆசிரியர்களை உருவாக்கினால் என்ன ஆகும் ?

சமூகக் கல்வியைத் தரவேண்டும் அல்லவா? அது தரப்படுவதில்லையே… அறிவியல் பூர்வமான பார்வையை ஒரு மாணவரிடம் தர வேண்டுமல்லவா ? அது தானே ஆசிரியர்கள் கடமை.அதைத் தருகிறோமா? அவற்றையெல்லாம் செய்வது தானே ஆசிரியரின் கடமை.அந்தக் கடமையை செய்வதற்கு விடாமல் இப்போதுள்ள அரசும் கல்வி துறையும் சில அமைப்புகளும் திட்டமிட்டு மறுக்கின்றன என்பது தான் உண்மை.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஆசிரியர்களை பணியாற்ற விடாமல் , சிந்திக்க விடாமல் மேலும் மேலும் அழுத்துவது ஒரு போக்கு. அந்த சூழலில் இருந்து வெளிவந்து மாணவர்களுடன் உரையாடி மாணவர்களை சிந்திக்க வைத்து விடக்கூடாது என்பது கூட அவனது மறைமுகமான நோக்கமாக இருக்கலாம். சுதந்திர இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் சரி, நமது மாநிலத்திலும் சரி கல்விக்காக ஜிடிபி எவ்வளவு ஒதுக்குகின்றனர்?  கியூபா போன்ற நாடுகளை ஒப்பிடும் பொழுது,  இங்கு எப்படி இருக்கிறது என்று நமக்கு தெரியும்.அவர்கள் கல்விக்கும் சுகாதாரத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் பொழுது, இங்கு எப்படி இருக்கிறது பாருங்கள் நிதியை வைத்துதானே கல்விக்காக செலவிடும் பொழுது தானே மனித வளமுள்ள நாடாக மாற்ற முடியும்?

மலிவான தொழிலாளர்கள் கிடைப்பார்களா என்று தானே இங்கு எல்லோரும் ஓடி வருகின்றனர். சீனாவில் கல்விக்காக 14 சதவிகிதம் ஜிடிபி ஒதுக்குகின்றனர் . இந்தியாவில் மூன்று சதவீதத்திற்கு மேல்  தாண்டியதே கிடையாது.

ஆனால், இங்கு  சொல்வதோ வேடிக்கையாக இருக்கிறது. சமீபத்தில் கூட நீதியரசர் சொல்கிறார் கல்விக்காக ஒதுக்கக்கூடிய நிதியில் 36,000 கோடியில் பெரும்பகுதி ஆசிரியர்களது சம்பளத்திற்காகவே (95 சதவிகிதம்) ஒதுக்குகிறோம் என்று. இது ஒரு விதமான பிரச்சார யுத்தி, ஆனால், இது எடுபடுகிறது. அதுதான் பிரச்சனை, சாதாரண மக்களுக்கு இதைப் பார்க்கும்பொழுது, ஆமாம். சொல்வதெல்லாம் உண்மைதானே ஒரு ஆசிரியர் லட்சக்கணக்கில் சம்பளப் பணம் பெறுகிறார் என்று சொல்வார்கள்.  முன்னாள் முதலமைச்சரும் இதையேதான் கூறினார். இதேபோல பிரச்சாரம் செய்து அவர்களது மனத்தை மாற்றி சுயநிதிக் கல்லூரிகளுக்குக் கொண்டு சேர்ப்பது தான் இவர்களது நோக்கம்.

பேருந்தில் பயணிக்கக்கூடிய மாணவர்கள் விபத்துகளுக்கு  உள்ளாகி  உயிரை மாய்த்துக் கொள்ளக்கூடிய செய்திகளை அடிக்கடி ஊடகங்களில் பார்க்கிறோம். ஒரு பள்ளியில் மாணவர்களைப்  போக்குவரத்து ஊழியர்கள் வந்து சந்தித்து படிக்கட்டுகளில் தொங்கக்கூடாது என்று அறிவுறுத்துவதற்காக ஒரு நிகழ்வை நடத்துகின்றனர்.

பேருந்துகளில் தொற்றிச் செல்லும் மாணவர்கள்

நிகழ்ச்சி முடிந்த பிறகு ஒரு மாணவன் தைரியமாக எழுந்து கூறினான். “சார் பேருந்துகளின் எண்ணிக்கையைக் கூட்டச் சொல்லுங்கள் , பேருந்து உள்ளே இடமிருக்கும் எனில், நாங்கள் ஏன் படியில் தொங்கி வர வேண்டும்? அந்த நேரத்தில் மிகக் குறைவான எண்ணிக்கையில் பேருந்துகள் வந்தால் நாங்கள் என்ன செய்வது? ஆசிரியர்கள் எங்களை சரியான நேரத்திற்கு வரச் சொல்கிறார். பேருந்துகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. நாங்கள் என்ன செய்வது என்று கேட்டான். இது உண்மை. குறிப்பிட்ட நேரத்தில் பள்ளிக்கு வரும் போது பேருந்துகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. அதனால் அவன் ஃபுட்போர்டு அடிக்க வேண்டி உள்ளது.

அந்தக் காவல் ஆய்வாளர் மறுப்பே கூறவில்லை. சென்று விட்டார். ஆகவே, இது போன்று பல விஷயங்களை நாம் சமூகம் மாணவர் இவற்றுடன் தொடர்புபடுத்திக் கூறினாலும், நமக்கு தெரிந்தே தான் இப்படியான பல விஷயங்களும் நடக்கின்றன.

இந்த சிக்கல்கள், ஆசிரியர்கள் மீதான தொடர்ந்து தாக்குதல்கள், அழுத்தங்கள் ஆகியவை குறைக்கப்படுமா ? குறைக்கப்பட வேண்டும். இந்த அரசாங்கம் செய்யுமா என்றால் செய்யாது. அதை நோக்கி நகரவில்லை என்றால், யார் செய்வது நாம் தான் செய்ய வேண்டும். அண்டை மாநிலங்களில் செயல்படுத்துவது போல கற்றல் கற்பித்தல் பணிகளை மட்டும் ஆசிரியர்கள் செய்வது உறுதிப்படுத்தப்படுமானால் சிறப்பாக இருக்கும்.

துப்புரவு பணியாளர்கள் கிடையாது, வாட்ச்மேன் கிடையாது , பியூன் கிடையாது, கழிப்பறை வசதிகள் கிடையாது என எதுவுமே கிடையாது. சில பள்ளிகளில் இரவு நேரங்களில் சென்று பார்த்தால் அங்கு சமூக விரோத செயல்கள் செய்யக்கூடிய கும்பல்கள் வந்து அமர்ந்திருப்பார்கள். மறுநாள் காலையில் நாங்கள் பள்ளிக்குச் சென்று அந்த இடத்தை சுத்தமாக்கி, வகுப்பறையைத் தூய்மையாக்கி நாங்கள் பாடம் எடுத்து பயன்படுத்த வேண்டும். இவையெல்லாம் மாற்ற வேண்டுமென்றால், நாமெல்லாம் ஒன்று சேர வேண்டும் என்பது தான் உண்மை. தொடர்ச்சியான விவாதம் நடக்க வேண்டும் , ஒரே பார்வையில் அதாவது, ஆசிரியர்கள் சரியில்லை என்று சொல்லக்கூடிய கருத்தின் அடிப்படையில் நாம் நோக்காமல் பல கோணங்களில் அணுக வேண்டும்.

சுற்றுச் சுவர் இல்லாததால் சமூக விரோதிகள் பயன்படுத்தக்க நிலையில் அரசு பள்ளி

எல்லாத் திட்டங்களையும் செயல்படுத்தும் அரசு  எதையோ  செய்ய நினைக்கிறார்கள். ஆனால், அதை நடைமுறைப் படுத்துவதில் தான் சிக்கல் ஏற்படுகிறது.

அரசு எதையோ செய்ய நினைக்கிறது. ஆனால், யாரையோ வைத்து செய்கிறது. SMC அருமையான கான்செப்ட். ஆனால் அதில் யார் உள்ளே வருகின்றனர் என்பது தான் பிரச்சனை.ஆசிரியர்கள் பற்றாக்குறையை நிறைவு செய்வதற்காக தொகுப்பு ஊதியத்தில் ஆசிரியர் நியமனம் என்று அரசு கூறியது. அதை யார் தேர்வு செய்ய வேண்டும் என்றால், இந்த எஸ்எம்சி சேர்ந்தவர்கள் தான்.

அதற்குள் என்ன நடந்திருக்கும் என்று நாமே யோசித்துக் கொள்ளலாம். ஸ்பெஷல் டீச்சர்ஸ் என்று அழைக்கப்படக்கூடிய ஆசிரியர்களுக்கு பத்தாண்டுகளுக்கு மேல் பணி அனுபவம் இருந்தாலும், அவர்களுக்கான ஊதியம்   வரையறுக்கப்படவில்லை. உடற்கல்வி கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்கள் இருக்கிறார்களா என்றால் இல்லை.

பள்ளிகளில் என்ன நடந்திருக்கிறது? கற்பித்தல் நடந்திருக்கிறது, கற்றல் இன்னும் நிகழ ஆரம்பிக்கவே இல்லை, கலையைக் கற்றுத் தர  ஆசிரியர்கள் இருக்கிறார்களா? என்றால், இல்லை.

எது தேவையில்லை? எல்லாமும் தேவை தான். கலை திருவிழாவா? வானவில் திட்டமா? அனைத்தும் தேவை. ஆனால், இப்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது. அரையாண்டு தேர்வு மாணவனை இப்போது தான் படிக்க வைக்க ஆரம்பிக்கிறோம். இப்போது கலை திருவிழா. எப்படி அவர்களைப் படிக்க வைப்பது? சமூக சிந்தனையுடன் மாணவர்களுக்கு நல்லது செய்யக்கூடிய ஆசிரியர்கள் பெரும்பாலும் இருக்கின்றனர்.  மாணவர்களுடைய வயது ஒரு மிகப்பெரிய  பிரச்சினையாக இருக்கிறது. முதுகலை ஆசிரியர்கள் வளர்ந்த மாணவர்களுக்கு ஏராளமான சிக்கல்கள் இருக்கின்றன. எனவே தொடர்ந்து நம் கல்வித் துறையின் கவனத்திற்கு எடுத்துச் சென்று வருகிறோம். ஆனால், எந்த விதமான பரிசீலனையும் பதிலும் இதற்கு இல்லை. எல்லாவற்றையும் விட, பள்ளிக் கல்வித்துறையின் அட்ராசிட்டிக்கு அளவே இல்லை.

திட்டமிடப்படுவது மிகப்பெரும் சொதப்பலாக இருக்கிறது. அரசு முன் வைக்கும் பாடத்திட்டம் மாணவர்களுக்கு தேவையா என்றால், ஆம் …கட்டாயமாக தேவை. இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி உலகத்திற்கு அவன் படிக்க வேண்டியது அவசியம். ஆனால், அது படிக்கக்கூடிய சூழல் அவனுக்கு இருக்கிறதா? கற்பித்தல் நடக்கிறதா? என்றால், இல்லை.

இப்போது தான் மாலை வேளையில் மாணவர்களை பள்ளியில் அமர வைத்து சிறப்பு வகுப்புகள் நடத்துவது, ஒவ்வொரு கேள்வியாக படிக்க வைப்பது, நீங்களே படித்து எழுதி வைப்பது என்ற பணிகள் என இருக்கும். இப்போது போய் இந்த திருவிழாக்களை எல்லாம் வைத்துக் கொண்டு மாணவர்களை படிக்க விடாமல் செய்கிறது அரசு.

‘எலைட் ஸ்கூல்’ என்று ஒன்று இருக்கிறது அங்கு ஒரு பாடத்திற்கு மூன்று ஆசிரியர்கள் நியமித்துள்ளது அரசு. திட்டங்களை செயல்படுத்தக்கூடிய அரசு குறிப்பாக ஆசிரியரிடம் அதை விவாதிப்பது இல்லை. அரையாண்டுத் தேர்வு   நேரத்தில் வானவில் நடத்தினால் எப்படி இருக்கும் STEM நிகழ்வு எல்லாம் ஆசிரியர்களுடையது . ஆகவே, நாம் ஒன்றிணைந்து இதற்கான தீர்வுகள் நோக்கி நகர வேண்டும்.

அகில இந்திய கல்வி பாதுகாப்பு கமிட்டி நடத்திய கருத்தரங்கில் தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின்  தலைவர்  இரா.பெருமாள்சாமி பேசியது.

தொகுத்து எழுதியவர்; உமா மகேஸ்வரி

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time