வயிற்றைக் கட்டி, வாயைக் கட்டி மெய் வருத்தம் பாராமல் கடமையே கண்ணாக தீவிரமாக உழைத்துப் படித்து பல எதிர்கால கனவுகளுடன் வாழ்ந்த இளைஞர்களின் எதிர்காலத்தை நாசமாக்கும் டி.என்.பி.சி முறைகேடுகளுக்கு முற்றுப் புள்ளி வைப்பது எப்படி? தீர்வு என்ன..?
இந்த முறை இரண்டு அதிர்ச்சியான குற்றச்சாட்டுகள் தமிழ்நாடு தேர்வு ஆணையத்தின் (TNPSC) மீது வைக்கப்பட்டுள்ளன. 1,338 நில அளவையர்கள், வரைவாளர் பணியிடங்களுக்கான தேர்வில் காரைக்குடியில் செயல்படும் பிரமிடு என்ற பயிற்சி மையத்திலிருந்து மட்டும் 742 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். அதே போல 9,870 காலி பணியிடங்களுக்கான குரூப்-4 தேர்வில் தென்காசி பகுதியில் செயல்படும் மையங்களிலிருந்து 2000 மாணவர்களும் தேர்வு ஆகி உள்ளார்கள் என்பதே ஆகும்.
ஏன் ஒரே பகுதியிலிருந்து, மையத்திலிருந்து தேர்வு அடைய வாய்ப்பு இல்லையா? என்று பார்ப்பதற்கு முன் TNPSC எப்படி செயல்படுகிறது என்பதைப் பார்ப்போம்.
தமிழ்நாடு அரசு நடத்தும் தேர்வில் உயர் பதவி Deputy Collector மற்றும் சிறிய பதவியாக இருப்பது VAO. இதைத் தவிர, இன்னும் பல பணியிடங்களுக்கும் சேர்த்துத் தேர்வு நடத்துவது TNPSC ஆகும். இந்த அமைப்பு பாதி தூக்கத்தில் செயல்படுவது தான் ஆச்சரியமான விஷயமாகும்.
பள்ளிக் கல்வித் துறை நடத்தும் பல லட்சம் மாணவர்களுக்கான 12 மற்றும் 10ஆம் வகுப்பு தேர்வு தேதி, முடிவு வெளியாகும் நாள், சான்றிதழ் வழங்கும் நாள் என்று தெளிவாகத் தேதிகளை வெளியிட்டு அதன் படி செயல்படுகிறது. இதுவரை ஒரு வருடம் கூட ஏப்ரல் மாதம் தேர்வு எழுதும் 12வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவுகள் செப்டெம்பர் மாதமோ, அக்டோபர் மாதமோ வெளியிட்டது இல்லை. மே மாதம் முடிவதற்குள் வெளியிட்டு ஜூன் முதல் மாணவர்கள் கல்லூரி சேர ஆரம்பித்துவிடுவார்கள்.
ஆனால், TNPSC நடத்தும் எந்த தேர்வின் முடிவுகளும் உரியக் காலத்தில் வெளியிடுவதில்லை. தேர்வு எழுதியவர்கள் சோர்ந்து போகும் அளவுக்கு காலம் தாழ்த்தி செயல்படுவதைத் தான் வழக்கமாகக் கொண்டு உள்ளது.
கடந்த 2022 ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற குரூப்-4 தேர்வின் முடிவு இந்த ஆண்டு(2023) மார்ச் மாதம் வெளியீட்டு உள்ளனர். ஏறக்குறைய 9 மாதங்கள் எடுத்துக் கொண்டுள்ளனர்.
இந்த தாமதத்திற்கு சொல்லப்படும் காரணம் 18 லட்சம் மாணவர்கள் எழுதி உள்ளனர் அதனால் தாமதமாகி உள்ளது என்பதாகும். இதை ஏற்க முடியாது.
ஏன் ஏற்றுக் கொள்ள முடியாதது என்றால், 10வது, 12வது வகுப்புத் தேர்வு விடைத்தாள் போல் TNPSC அதன் விடைத் தாளை கையால் திருத்துவதில்லை
TNPSC தேர்வுத் தாள்கள் அனைத்தும் (Main Exam தவிர) கையால் திருத்த வேண்டாம், கம்ப்யூட்டர் திருத்தும்(Coding Sheet) வகையில்தான் உள்ளன. ஆனால், கையால் திருத்தப்படும் பல லட்சம் பள்ளி-கல்லூரி தேர்வுகள் கூட இரண்டு மாதங்களுக்குள் முடிவுகளைச் சொல்லும் போது, இத்தகையை நவீன இயந்திரமயமாக்கல் முறையில் திருத்தப்படும் தேர்வு முடிவுகளை ஒரு சில நாட்களிலேயே சொல்ல முடியுமே!
மத்திய அரசு நடத்தும் IAS தேர்வும், ஏறக்குறைய 10 லட்சம் மாணவர்கள் எழுதுகிறார்கள் இதுவரை ஒரு முறை கூட அதன் முடிவு வெளியிடுவதில் 2 அல்லது 3 மாதங்களுக்கு மேல் சென்றதில்லை. சொல்லிய தேதியில் மிகச் சரியாக IAS தேர்வு நடைபெறுகிறது. அதற்குப் பயிற்சி எடுக்கும் மாணவர்களும் திட்டம் போட்டுப் படிக்க முடிகிறது. ஆனால் ஒரு முறை கூட TNPSC தான் வெளியீடும் அட்டவணை போல் தேர்வு நடத்தியதில்லை தாமதம், தாமதம், தாமதம் என்பதையே வாடிக்கையாக வைத்து உள்ளது.
TNPSCயின் வேலையே தேர்வு வைப்பது-முடிவுகள் வெளியிடுவது-பணி நியமன ஆணை வழங்குவது. ஆனால் இதில் எந்த அளவு மெத்தனப் போக்கு இருக்கமுடியமோ அந்த அளவு இருப்பதையே வழக்கமாகிக் கொண்டு உள்ளது.
இதில் முறைகேடுகளுக்கும் பஞ்சமில்லை. இதுவரை நடந்த முறைகேடுகளைக் கொஞ்சம் பார்ப்போம்.
2021ஆம் ஆண்டு நடைபெற்ற Group 4 தேர்வில் நடந்த முறைகேட்டில் 118 நபர்கள் கைது செய்தனர்.

2012ஆம் ஆண்டு TNPSCயில் அன்றைய சேர்மன் செல்லமுத்து செய்த முறைகேடுகள் குறித்து ஆராய மிக விரிவாகப் பல பகுதிகளில் சோதனை செய்து, பல ஆவணங்களை DVAC கைப்பற்றினார்கள். செல்லமுத்துவும் ஆளுநர் ரோசய்யாவிடன் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளதாக செய்தி வெளிவந்தது
2001 ஆம் நடைபெற்ற Group 1 தேர்வில் முறைகேடு செய்து தேர்வானவர்களை உச்ச நீதிமன்றமே தவறு என்று தீர்ப்புக் கூறியுள்ளது. அதே போல் 2004 ஆண்டு நடைபெற்ற Group 1 தேர்வில் நடந்த முறைகேடுகளும் வெளிச்சத்திற்கு வந்தன,
இப்படி TNPSC ஒவ்வொரு காலத்திலும் முறைகேடுகளுக்குக் குறையில்லாமல் இயங்கிக் கொண்டு இருப்பதை தான் கடந்த கால வரலாறு காட்டுகிறது.
இப்பொழுது பயிற்சி கொடுக்கும் பயிற்சி மையங்கள் எப்படி இயங்குகின்றன என்பதில் தான் தற்போதைய குற்றச்சாட்டுகளுக்கு விடை கிடைக்கும்.
இரண்டுவிதமான பயிற்சி நிலையங்கள் உள்ளன.
ஒருவர் அல்லது நண்பர்கள் இணைந்து சிறிய அளவில் அவர்கள் வசிக்கும் ஊரில் பயிற்சி நிலையத்தைத் தொடங்குவது. இத்தகைய நிலையங்கள் அந்த ஊரில் மட்டுமே இயங்கும். பெரிய அளவில் வெளித் தொடர்புகள் இருக்காது. கற்பித்தல்,பயிற்சி என்பதை கடந்து எந்த சிக்கலும் இந்த நிலையங்களில் எழுவது இல்லை. சில நிலையங்கள் பொருளாதாரச் சிக்கலில் நடத்த முடியாமல் மூடப்படுவதும் உண்டு.
இரண்டாவது வகை பயிற்சி நிலையங்கள் பிரம்மாண்டமானவை! பல ஊர்களில் கிளைகள் கொண்டு இயங்கும். நாளிதழ், வானொலி, தொலைக்காட்சியில் விளம்பரங்கள் தொடர்ந்து வெளியாகும். பல கண்காட்சியிலும் கலந்து கொள்ளும். அரசியல் தொடர்பு, அதிகாரிகள் தொடர்பு இவர்களுக்கு வலுவாக இருக்கும். அதைக் கொண்டு முறைகேடுகள் செய்வதற்கான வாய்ப்புகளை இவர்கள் செய்யத் தயங்குவதில்லை.
இத்தகையைப் பயிற்சி நிலையங்கள் இன்று அதிகமாகிக் கொண்டே வருகிறது. தொடர் விளம்பரங்களால் மாணவர்களை விட்டில் பூச்சியாக இழுக்கத் தொடங்குகிறார்கள்.. ஒரு வியாபார நிறுவனம் போல் இயங்குவார்கள்! சாதாரண அளவிலான பொதுமக்களுக்கே ‘போட்டித் தேர்வுன்னாலே இவங்க தான் போல’ எனத் தெரியும் அளவு விளம்பரங்கள் தூள் கிளப்பும்.
இத்தகைய பயிற்சி நிலையங்கள் சாதாரணமாக தங்களிடம் வந்து விசாரித்துச் சென்ற மாணவர்களைக் கூட ரிசல்ட்டைப் பார்த்துவிட்டு தங்கள் மாணவர்களாக விளம்பரப்படுத்தி விடுவார்கள்!இத்தகைய விளம்பரங்களைப் பார்க்கும் புதிய மாணவர்கள் அந்த பயிற்சி நிலையத்தில் சேர்வார்கள். இதை நீண்ட வருடங்களாக மார்க்கெட்டிங் உத்தியாகப் பெரிய பயிற்சி நிலையங்கள் செய்து வருகிறது.
இதில் வேடிக்கை என்னவென்றால் ஒரே மாணவரை இரண்டு- மூன்று பயிற்சி நிலையங்கள் இவர் எங்களுடைய மாணவர்கள் என்று நாளிதழில் விளம்பரமாக போட்ட நிகழ்வுகள் உள்ளன!
எப்படி ஒரு மாணவர் பல பயிற்சி நிலையத்தின் மாணவராக இருக்க முடியும்?
சமீபத்தில் தென்காசியில் TAF பயிற்சி நிலையம் இப்படித்தான் எங்கள் நிலையத்தைச் சேர்ந்த மாணவர்கள் 2000 பேர் Group 4 தேர்வில் தேர்ச்சி அடைந்து உள்ளனர் என்று விளம்பரம் கொடுத்துள்ளது. கொஞ்சம் கூட குற்ற உணர்வில்லாமல் இப்படி ஒரு விளம்பரத்தை தரும் தைரியத்தை இவர்கள் எங்கிருந்து பெற்றனர். இவர்களுக்கு மேலிடத் தொடர்புகள் என்ன? என்று பார்க்க வேண்டும்.
இதற்கு பதில் அளித்த நிதி அமைச்சர் பி.டி.ஆர். தியாகராஜன் தென்காசியில் எட்டு டிஎன்பிஎஸ்சி பயிற்சி மையங்களே உள்ளன. பத்தாயிரம் காலிப் பணியிடங்களில், இந்த எட்டு பயிற்சி மையங்களிலும் படித்தவர்களில் 397 பேர்தான் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆனால், அந்த பயிற்சி மையத்தைச் சேர்ந்தவர் விளம்பரம் அளிக்கும் போது, தங்கள் மையங்களில் படித்தவர்கள் இரண்டாயிரம் பேர் தேர்ச்சியடைந்ததாகக் கூறியது தான் சிக்கலை ஏற்படுத்திவிட்டது. சம்பந்தப்பட்டவர் வேறு மாவட்டங்களில் பயிற்சி மையங்களை நடத்தி வருவதாகவும் அதில் படித்தவர்களும் பெரும் எண்ணிக்கையில் தேர்ச்சி பெற்றிருப்பதாகவும் கூறியிருக்கிறார் என விளக்களித்துள்ளார். இந்த விளக்கம் போதுமானதல்ல. அவர் ஏதாவது முறைகேட்டில் ஈடுபட்டாரா? எனத் தெரிய வேண்டும்.
இதற்கு முற்றுபுள்ளி வைக்க ஒரு நிறுவனத்திற்கு இரண்டு, மூன்றுக்கு மேற்பட்ட கிளைகள் கூடாது என சட்டம் கொண்டு வந்தாலே போதுமானதாகும். அதே போல் 1,338 நில அளவையர்கள், வரைவாளர் தேர்வில் காரைக்குடியில் செயல்படும் பிரமிடு பயிற்சி மையத்திலிருந்து மட்டும் 742 பேர் தேர்வாகி இருப்பதும் சந்தேகத்தை உருவாக்கி உள்ளது.
முறைகேடு நடந்து உள்ளதா? அல்லது பயிற்சி நிலையத்திற்கு வந்து பயிற்சி குறித்து விசாரித்தவர்களையும் தங்கள் மாணவர்களாக்கி விளம்பரம் கொடுத்து உள்ளார்களா? என்று அரசு உண்மைத் தன்மையை வெளியிட வேண்டும். ஒருவேளை தேர்வு தாள் திருத்திய இடத்திற்கு பொறுப்பானவர்களுடன் முன் கூட்டியே டீலிங் நடந்துள்ளதா என்று பார்க்க வேண்டும். இதில் அரசு வேகமாக நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கடுமையாக தண்டித்தால் தான் பல லட்சம் மாணவர்களுக்கு அரசு தேர்வு மீது நம்பிக்கை உருவாகும்.
எப்படி பத்தாவது, பன்னிரண்டாவதில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவர்கள் பெயரை வெளியிடக் கூடாது என்று அரசு விதிமுறை உருவாக்கி உள்ளதோ அதேபோல் இத்தகையைப் பயிற்சி நிலையங்களும் எந்த மாணவர்களின் புகைப்படம், மார்க் போட்டு விளம்பரம் கொடுக்கக் கூடாது என்று விதி உருவாக்க வேண்டும்.
Also read
பயிற்சி நிலையங்களின் செயல்பாடுகளை அரசு கண்காணிக்க வேண்டும். எந்த வித கட்டுப்பாடுகளும் இல்லை என்பதால் தான் விருப்பம் போல் விளம்பரம் கொடுத்து மாணவர்கள் இந்த பயிற்சி நிலையத்தில் படித்தால்தான் தேர்வு ஆக முடியும் என்ற செயற்கையான முறையை உருவாக்கி உள்ளார்கள். விளம்பரம் என்பது படித்து தேர்வானவர்கள் மூலம் தான் இயல்பாக பரவ வேண்டும்.
கஷ்டப்பட்டு உழைத்து படித்து கனவுகளுடன் முடிவை எதிர்பார்த்து காத்திருக்கும் இளைஞனை ஏமாற்றுவது அவனுக்கு மட்டுமல்ல, இந்த நாட்டுக்கே செய்யும் துரோகமாகும்.
கட்டுரையாளர்; செழியன் ஜானகிராமன்
Leave a Reply