கெஜ்ரிவாலின் எழுச்சி! பாஜகவில் பிரதமர் ரேசில் மூவர்!

-சாவித்திரி கண்ணன்

உள்ளே போவதற்கு முன்பிருந்த கெஜ்ரிவாலை விட, வெளியே வந்துள்ள கெஜ்ரிவாலின் விஸ்வரூபம் பாஜகவை பயமுறுத்துகிறது! வட இந்தியா முழுமையும் பாஜக அதிருப்தி அலை வீசுகிறது. ‘நிச்சயமாக மோடி அடுத்த பிரதமரல்ல’ என்பதையும், அடுத்த பிரதமர் ரேசில் முந்தத் துடிக்கும் மூவர் குறித்தும் இங்கே பார்ப்போம்;

எவ்வளவு முயற்சித்தும், எத்தனை இன்னல்கள் தந்தும், டெல்லியை ஆம் ஆத்மியிடம் இருந்து அபகரிக்க முடியாமல் தோற்றுப் போன பாஜக அரசு, அழித்தொழிப்பு ஒன்றே ஆகச் சிறந்த வழியென்று, அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட ஆம் ஆத்மியின் மிக முக்கிய முன்னணி தலைவர்கள் நால்வரை சிறையில் தள்ளியது.

‘எப்படியாவது ஆம் ஆத்மியை அழித்து விட வேண்டும்’ என பாஜக செய்யும் ஒவ்வொரு நகர்வும், ஆம் ஆத்மியை வளர்ப்பதாகவே முடிகிறது. அது போல, ‘தேர்தல் நேரத்தில் தலைமை பொறுப்பில் உள்ளவர்களை சிறையில் தள்ளினால், ஆம் ஆத்மி அஸ்தமித்து விடும்’ என பாஜக கணக்கு போட்டு காய் நகர்த்தி அரவிந்த் கெஜ்ரிவாலை சிறைக்குள் அடைத்தது!

நாட்டின் தலைவிதியைத் தீர்மானிக்கும் மிக முக்கிய தேர்தல் நேரத்தில் – களத்தில் நின்று களமாட வேண்டிய தருணத்தில்-  மிகக் கோழைத்தனமாக சிறைக்குள் முடக்கியது பாஜக அரசு. கேட்டால், ஊழலுக்கு தண்டிக்கிறார்களாம்! நாட்டின் வளங்களை எல்லாம் சுரண்டி, – பொதுத் துறை நிறுவனங்களை வலுவிழக்கச் செய்து – அதானி, அம்பானி குடும்பத்திற்கு தாரை வார்க்கும் உலக மகா உத்தமர்கள், ‘ஊழல்’ என்ற வார்த்தையை உச்சரிக்கலாமா? ஊழலை ஒளித்து விடுவதல்ல, ஒழிப்பது தான் முக்கியம்!

ஐம்பது நாட்கள் சிறையில் இருந்துள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால்! அவர் வெளியில் இல்லாத நாளெல்லாம் அவரைக் குறித்தே நாடும், மக்களும் பேசினார்கள்! சிறையில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் எழுதிய கடிதங்கள் மக்கள் உணர்வுகளை கிளர்ந்தெழச் செய்தன. கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா செய்த பிரச்சாரத்திற்கு மக்கள் அனுதாபத்துடன் ஆதரவு  நல்கினர். ஆம் ஆத்மி பிரச்சார மேடைகளில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்காக காலியான நாற்காலி போடப்பட்டது! அந்த காலியான நாற்காலி மக்களைக் கலக்கத்தில் ஆழ்த்தி, கண்ணீர் சிந்த வைத்தது.

நாட்டு மக்கள் அனைவரும் கோர்ட்டில் நடக்கும் வாதங்களை கூர்ந்து கவனித்தார்கள்! அராஜகமான அமலாக்கத் துறையை அறிவார்ந்த கேள்விகளால் நீதிபதிகள் திணறடித்தனர். அரவிந்த் கெஜ்ரிவால் மீதான ஆதாரமில்லாத குற்றச்சாட்டையும், அநீதியான கைதையும் அழகாக அம்பலப்படுத்தினர். அரசு வழக்கறிஞரிடம் ஆத்திரம் தான் வெளிப்பட்டது. அரசின் ஆணவம் தான் பளிச்சிட்டது. இறுதியில் நீதி வென்றது! ஆனால், இது முழுமையான வெற்றியல்ல. ஆயினும், தேர்தல் தீர்ப்புகள் இந்த வெற்றியை முழுமைப்படுத்திவிடும்.

இது ஒருபுறமிருக்க, சிறைக் கதவைத் திறந்து வெளியேறிய சிங்கம் போல அரவிந்த் கெஜ்ரிவால் வந்து தந்துள்ள பத்திரிகையாளர் சந்திப்பு அபாரம்;

”சர்வாதிகாரத்துக்கு எதிராக எனது முழு பலத்துடன் போராடுகிறேன். ஆனால் சர்வாதிகாரத்தில் இருந்து நாட்டை காப்பாற்ற நாட்டின் 140 கோடி மக்களும் ஒன்று சேர வேண்டும். அதற்காக என் உடல், உழைப்பு, ஆத்மா..என அனைத்தையும் அர்ப்பணிப்பேன். கடந்த 75 ஆண்டுகளில் ஆம் ஆத்மி போல் எந்தக் கட்சிக்கும் தொல்லை கொடுக்கப்பட்டது இல்லை. ஜுன் 4ஆம் தேதியுடன் பிரதமர் மோடி ஓய்வு பெற்றுவிடுவார். மோடிக்கு செப்டம்பர் 17ஆம் தேதி 75 வயதாகிறது. பாஜவில் உள்ள தலைவர்கள் 75 ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வு பெறுவார்கள் என்று விதியை மோடி தான் வகுத்தார்.  அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சுமித்ரா மகாஜன், யஷ்வந்த் சின்ஹா ஆகியோரை அவர் தான்  ஓய்வு பெற வைத்தார். இதனால் தற்போது செப்டம்பர் 17 அன்று  மோடியும் ஓய்வு பெறப் போகிறார்’’ என அரவிந்த் கெஜ்ரிவால் பேசி இருப்பது வெற்று பேச்சல்ல. நூறு சதவிகித உண்மை.

‘இன்னும் மோடியை சுமந்தால், மக்கள் பாஜகவை தூக்கி எறிந்து விடுவார்கள். ஆகவே, அதிருப்தி எப்போது தலை தூக்கி விட்டதோ.., அப்போதே ஆளை மாற்றுவது’ என்ற சிந்தனைக்கு ஆர்.எஸ்.எஸ் வந்து விட்டது. அதற்கு தோதாகவே மோடி தேர்தல் பிரச்சார கூட்டங்களில் ’பேக்பயர்’ ஏற்படும் விதத்தில் உளறிக் கொட்டி, அதிருப்திகளை அள்ளுகிறார் மோடி.

டெல்லியில் உள்ள ஏழு பாராளுமன்றத் தொகுதிகளையும் கடந்த இரு தேர்தல்களில் பாஜக தான் மூழுமையாக அள்ளியது. இப்போது அதில் இரண்டு கிடைப்பதற்கே போராடக் கூடிய நிலையில் உள்ளது. பஞ்சாப் முழுக்க பாஜகவை பஞ்சர் செய்துவிட்டார் கெஜ்ரிவால். ஒற்றை தொகுதி கூட கிடைக்காது. ஹரியானாவிலும் ஆம் ஆத்மி- காங்கிரஸ் கூட்டணி மரண அடி தருகிறது பாஜகவிற்கு!

உத்திரபிரதேசத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் சென்ற முறை 62 தொகுதிகளை பெற்ற பாஜக தற்போது நாற்பதை தூக்கவே தடுமாறுகிறதாம். குஜராத்தில் தேர்தலுக்கு முன்பே செய்யும் கோல்மால்களே அவர்களின் படுதோல்வியை ஒப்புக் கொள்கிறது. மகாராஷ்டிராவில் சிவசேனாவிற்கும், தேசியவாத காங்கிரசுக்கும் பாஜக செய்த துரோகத்திற்கு நல்ல பலனை தரவுள்ளனர் மக்கள்!

அடுத்ததாக தென் இந்தியாவை எடுத்துக் கொண்டால், தமிழ் நாட்டில் காங்கிரஸுக்கு எட்டு தொகுதிகளுக்கு குறையாது. கேரளாவில் 20 தொகுதிகளை அள்ளுகிறது. தெலுங்கானாவில் 13 முதல் 15 தொகுதிகள் வெல்லும். கர்நாடகாவில் 20 வரலாம். ஆந்திராவில் இரண்டு வரலாம். ஆக, சுமார் 65 தொகுதிகள் காங்கிரசுக்கு தென் இந்தியாவிலேயே கிடைக்கும். ஆந்திராவில் மட்டும் சந்திரபாபு நாயுடு தயவில் ஒரிரண்டு தொகுதிகள் பாஜக வரலாம். கர்நாடகாவில் பாஜக நான்கைந்து வரலாம். தமிழகம், கேரளம் முற்றாக பாஜகவை நிராகரிக்கிறது. ஆக, தென் இந்தியா, பாஜகவை பெருமளவு நிராகரிக்கிறது.

பிரதமருக்கான அடுத்த ரேசில் யோகி ஆதித்யாநாத், நிதின்கட்காரி, அமீத்ஷா ஆகியோர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அமித்ஷாவின் பின்னணியில் உள்ள ‘கிரிமினல் ரெக்கார்டுகள்’ கொஞ்சம் யோசிக்க வைக்கிறது. ‘கண்ட்ரோலை மீறி போய்விடுவாரோ..’என்ற அச்சமும் ஆர்.எஸ்.எஸ்சுக்கு இருப்பதாகத் தெரிகிறது. மோடியும் அமித்ஷாவை விரும்புவதால், ‘மோடி பின்புறம் இருந்து அமித்ஷாவை இயக்குவாரோ..’ என்ற பதற்றமும் உள்ளது.

அடுத்ததாக யோகி அதித்யநாத். இந்தி ஏரியாவிற்கு மட்டுமே தெரிந்த யோகியை, அகில இந்தியாவையும் ஏற்கச் செய்வதில் சில சிரமங்கள் உள்ளன. சர்வதேச ரீதியில் இந்த சாமியார் சக்ஸஸ் ஆவாரா? அல்லது சறுக்கி விடுவாரா..? என்ற தயக்கமும் உள்ளது. அதே சமயம் உத்திரபிரதேசத்தில் நூற்றுக்கணக்கான ரவுடிகளை என்கவுண்டரில் போட்டுத் தள்ளி, அதிகாரிகளுக்கு முழு சுதந்திரம் தந்து, யோகி நடத்திய இந்து ராஜ்ஜிய ஆட்சியை ஆர்.எஸ்.எஸ் மெச்சுகிறது.

அடுத்ததாக நிதின்கட்காரி. நாட்டின் மையப் பகுதியான மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர். தொழில்,வணிக நகரமான மும்பைகாரர். எல்லா தரப்பிலும் நல்ல அபிப்ராயங்களை பெற்றவர். எதிர்கட்சிகளிலும் நண்பர்களை பெற்றவர். ஆனால், யோகி, அமித்ஷாவிடம் உள்ள துணிச்சல், தைரியம் இவருக்கு கிடையாது! பிராமணர் என்பது ஆர்.எஸ்.எஸ்சை பொறுத்த வரை ‘ப்ளஸ் பாயிண்டாக’வும் உள்ளது. அதே சமயம் நாட்டில் உள்ள பெருவாரியான பி.சி, ஒ.பி.சி வாக்கு வங்கிக்கு வேட்டு வைக்கும் ‘மைனஸ் பாயிண்டாக’வும் உள்ளது என கருத்தும் ஓடுகிறது.

ஆக மொத்தத்தில் மோடி மாற்றப்படுவது உறுதி. மாற்றப்பட்ட பிறகு, மரியாதைக்குரியவராக நடத்தப்படுவாரா? அல்லது மறக்கப்பட்டு விடுவாரா..? என்பது தான் இன்றைய கேள்வியாகும்.

எனைப் பகை உற்றரும் உய்வர் வினைப்பகை

வீயாது பின்சென்று அடும்.

எவ்வளவு  கொடிய பகை உடையவரும் தப்பி வாழ முடியும். ஆனால், தீயவை செய்தால் வரும் தீவினையாகிய பகை நீங்காமல் பின்சென்று வருத்தும்.

சாவித்திரி கண்ணன்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time