ஆத்திகமா? நாத்திகமா? எது முதலில் தோன்றியது?

-எம்.ஜே.சையத் இப்ராகிம் பாபு

நாத்திகம் எப்போது உருவானது…? என்ற கேள்வியை ஆத்திகம் எப்போது உருவானது…? என்று மாற்றிக் கேட்பதே சரியாக இருக்கும். ஆதி மனிதன் இயல்பில் கடவுள் குறித்த சிந்தனைகள் தோன்றினவா? சித்தர்களில் பலர் கடவுள் நம்பிக்கையற்றவர்களாக இருந்தது எப்படி? கடவுள் யாரால், ஏன், எப்போது தோற்றுவிக்கப்பட்டார்…?

கடவுளை நம்புபவர் ஆத்திகர் என்றும், கடவுளை நம்பாதவர் நாத்திகர் என்ற கருத்து இவ்வளவு நாள் திணிக்கப்பட்டு வருகிறது. இது கடவுளை முன்னிறுத்தியவர்கள் செய்து வந்த வேலையாகும். கடவுள் மறுப்பை நாத்திகம் என்றால், கடவுள் நம்பிக்கையை அநாத்திகம் என்பதே சரியானதாகும்.

இப்போது நாம் பொதுவாக இறை மறுப்பு, கடவுள் மறுப்பாளர்களை நாத்திகர் என்கிறோம்.

நாத்திகம் எப்போது தோன்றியது என்று சரியான ஆண்டை குறிப்பிட முடியாது. ஆனால், பண்டைய காலம் முதல் கடவுள், மதம் போன்றவற்றை நம்பாதவர்கள் இருந்துள்ளார்கள்.

கி. மு காலத்தில் நாத்திகம் இருந்தது. இராமாயணம் காலத்தில் கூட நாத்திகம் பேசுபவர்கள் இருந்துள்ளார் என்பதற்கு உதாரணம் – ஜபாலி.

மனிதன் முதலில் கடவுள் என்றால், என்னவென்றே தெரியாதவனாக இருந்தான். கடவுள் என்ற கற்பிதம் இருந்தால் தானே மறுப்பதற்கு..?

அதற்குப் பிறகு தான் கடவுளைத் தன் தேவைக்கேற்ப படைத்துக் கொண்டான். உதாரணத்துக்கு கீழடியை எடுத்துக் கொள்ளுங்கள். அதன்படி 3,800 வருடத்துக்கு முன் மனிதர்கள் கடவுள் நம்பிக்கை கொண்டிருந்தார்களா? என்பது சந்தேகமே.

கடவுளை நம்பாதவர்களுக்கென்று ஒரு மதமே அன்றைய இந்தியாவில் இருந்துள்ளது. அதன் பெயர் சார்வகம்!  இவர்கள் கடவுள், ஆன்மா , மறு பிறப்பு போன்ற எதையும் நம்புவது இல்லை.

மொழி தோன்றிய காலத்திலேயே கடவுள் கதைகளும் தோன்றி விட்டன. கூடவே கடவுள் மறுப்புக் கொள்கைகளும் தோன்றியிருத்தல் வேண்டும். ‘உண்டு’ என்றவா்கள் கூட்டத்திலிருந்தே ‘இல்லை’ என்னும் குரலும் எழுந்தது.

இறை நம்பிக்கை, இறை நம்பிக்கையின்மை, நம்பிக்கையின் மீது தீவிரப்பற்றுள்ளவர் தனது நம்பிக்கையைத் தவிர, வேறு எதையும் காணத்தவறுகிறார்; நம்பிக்கையின்மையில் தீவிரப் பற்றுள்ளவரும் தனது நம்பிக்கையின்மையைத் தவிர வேறு எதையும் காணத் தவறுகிறார். இந்த இரண்டுமே நம் கண்களை மறைப்பவை.

கடவுளை மனிதா்கள் தங்கள் நிலத்துக்கும் காலச் சூழலுக்கும் கற்பனைகளுக்கும் ஏற்றவாறு விதம் விதமாகப் படைத்துக் கொண்டனா்.

கடவுளா் குறித்த கதைகள் பெருகி, ஒரு கடவுளின் கதை மற்றொரு கடவுளின் கதையோடு இணைந்து மேலும் கிளைத்தன…!

மனிதா்களின் வீடுகளைப் போலவே கடவுளுக்குக் கோயில் அமைந்தது. கலைகள் யாவும் அங்கு குடி கொண்டன. அப்போது வழிபாடுகள் தோன்றின. கடவுளும் மனிதா்களைப் போலவே உண்ணவும், உடுத்தவும் உறங்கவும் செய்வார் எனக் கருதிய வேளையில், பலவிதமான பூசை முறைகள் தோற்றம் பெற்றன.

எல்லா உயிர்களும் சமமென்று தோன்றிய கடவுள் கோட்பாடு வெற்றுச் சடங்காக மாறி, மனிதா்களுக்குள்ளேயே பேதங்களை விதைத்த போது நாத்திகம் விசுவரூபம் கொண்டெழுந்தது. ஆத்திக வழிபாட்டு முறைகளை மறுத்தும், கண்டித்தும் நாத்திகா்கள் குரலை உயா்த்தினா்.

அறிவியல் ரீதியாக, ஒன்று இருப்பதை ஏதாவது, ஒரு வகையில் நிரூபிக்க வேண்டும். காற்றுக்குக் கூட எடையைக் கண்டு பிடித்தது அறிவியல். ஒலியின் வேகத்தைக் கணக்கிட்டது அறிவியல். அப்படி நிரூபிக்காத ஒன்றை இருக்கிறது என்று சூடம் கொளுத்தி சத்தியம் செய்யும் வேலையை அறிவியல் செய்யாது. இந்த அறிவியலை பின்பற்றுபவர் தான் உண்மையான நாத்திகர். இதை நம்பாதவர் அநாத்திகர்.

 

ஏன் நாத்திகத்தால் ஆத்திகத்தை முழுமையாக வெற்றி கொள்ள முடியவில்லை…?

இதில் வெற்றி-தோல்வி என்பதைப் பற்றிப் பேசுவதை விட, ஆத்திகம் ஒழியவில்லை என்பதன் அடிப்படைக் காரணத்தைப் பற்றி ஆராயவேண்டும்.

அதாவது, மனிதர்கள் எல்லோரும் ஒரே மாதிரி சிந்திப்பதில்லை. சிந்திப்பதற்கு சொம்பேறித்தனம், சிந்திக்க மறுப்பது, பயம், தனது நம்பிக்கையை மாற்ற விழையாதது என்று எத்தனையோ காரணங்களைக் கூறலாம்.

அனைவரையும், கட்டாயப்படுத்தி ஒரே சிந்தனையைத் திணிக்க முடியாது.

நாத்திகம் கூறுவதன் அடிப்படை என்ன? ”எதையும் அறிவுகொண்டு ஆராய்ந்து பார்!,” என்பது தான். இதில் என்ன தவறு இருக்கிறது?

அதனை ஏற்றுக் கொள்ளாதவர்களை வெற்றி பெற்றுவிட்டார்கள் என்று சொல்லி விட முடியாது.

ஆத்திகத் தரப்பிலிருந்து கடவுள்களுக்காக மத துவேஷம், மதக் கலவரம், மதப் போர்கள், மதத் தீவிரவாதம் ஆகியவை நிகழ்கின்றன இங்கு தான் ஆத்திகம் தோற்று நிற்கிறது என்பதை ஏன் உணர்வதில்லை…?

பதிவான 5,000 ஆண்டு மனித வரலாற்றில், சுமார் 15,000 போர்கள் நடந்துள்ளன; ஆண்டிற்கு மூன்று என்ற சராசரிக் கணக்கில் போர்கள் மதத்தையும், வணங்கப்படும் கடவுள், புனித நூல்களையும் அடிப்படையாகக் கொண்டவை.

ஆதலால் மதங்கள், கடவுளின் பெயர்களில் பயங்கரவாதச் செயல்கள் நடைபெற்றன, மற்றும் நடைபெறுகின்றன. இங்கே தான் ஆத்திகத்தின் ஆணி வேரும், அஸ்திவாரமும் கூட அசைக்கப்படுகிறது.

மாமேதை சாக்ரடீஸ்

நமக்குத் தெரிந்த முதல் கடவுள் மறுப்பாளர் 2,600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சாக்ரடீஸ். அடுத்து அவர் காலத்துக்குப் பின் தோன்றிய புத்தர். இவர்கள் வழியில் நிறைய பேர்!

பகுத்தறிவு என்றால், மனிதன் ஒரு காலத்தில் அவனுக்குத் தெரியாத விஷயங்களையெல்லாம் ”கடவுள் செயல்” என்று சொல்ல ஆரம்பித்தான். ”இதை இப்படி கண்மூடித்தனமாக சொல்லாதீங்க. இதை ஏன் என்று கேட்டு அதில் உண்மைத் தன்மையைத் தெரிந்து கொண்டு செயல்படுங்க” என்று சொன்னவர்கள் சாக்ரடீசும் புத்தரும். அவர்கள் காலத்துக்கு முன்பும் நிறைய பேர் இருந்திருக்கலாம். கீழடி நாகரீக காலத்தில் கடவுள் இல்லை என்பதே ஆய்வில் உணர முடிந்த உண்மை.

கேள்விபட்டதைப் பேசுவோன் ஆத்திகன்.

கேள்வி கேட்டுப் பேசுவோன் நாத்திகன்.

புராண சிந்தனைகளைப் பேசுவோன் ஆத்திகன்.

புதிய சிந்தனைகளைப் பேசுவோன் நாத்திகன்.

அவதாரங்களைக் காட்டிப் பேசுவோன் ஆத்திகன்.

ஆதாரங்களைக் காட்டிப் பேசுவோன் நாத்திகன்.

பிறர் சொல்லிப் பேசுவோன் ஆத்திகன்.

பிரித்தாய்ந்து பேசுவோன் நாத்திகன்.

கடவுளை நம்புவோன் ஆத்திகன்.

ஏன் நம்புகிறாய் என்போன் நாத்திகன்.

நீ ஆத்திகனாய் இரு, நாத்திகனாய் இரு கவலையில்லை.

நேயம் கொண்ட மனிதனாய் இரு போதும்.

கடவுள் யாரால், ஏன், எப்போது தோற்றுவிக்கப்பட்டார்…?

கிருத்தவம், இஸ்லாம் மதம் பற்றியும் அதன் பிரிவுகள் பற்றியும் தெளிவான விடை கிடைக்குமா…?

வெளியில் இருந்து வந்த மதங்கள் என்கிறார்களே, உள்ளே உள்ள மதம் ஒழுங்காய், சமத்துவமாய், சகோரத்துவத்துடன் இருந்திருந்தால், வெளி மதங்கள் உள்ளே நுழைய முடியுமா…?

நாத்திகம் என்றால் என்ன…?

நாத்திகம் இதற்கு இரண்டு அர்த்தம் உண்டு நம் நாட்டில்.

ஒன்று இறை மறுப்பு. மற்றொன்று வேத மறுப்பு.

இந்தியாவில் நாத்திகம் ( atheist )என்ற வார்த்தை பெருமளவு வேத மறுப்பை தான் குறிக்க பயன்படுத்தப்பட்டது. உதாரணம் – புத்தம், சமணம்.

வழிபாட்டு தல யாத்திரைகளிலோ அல்லது வழிபாட்டு ஸ்தலங்களிலோ விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நேரும் சமயம். ஆனால், நாத்திகம் தோற்கும் இடமொன்று உண்டு.

கோவில், மசூதி, சர்ச்சுக்களில் செய்யப்பட்ட பிரார்தனைகளை விட மருத்துவமனைகளில் செய்யப்பட்ட பிரார்த்தனைகள் மிக அதிகம்.

அங்கே நாத்திகத்தின் ஆணி வேரும், அஸ்திவாரமும் கூட அசைக்கப்பட்டுவிடும்.

நாத்திகம் என்பது கடவுள் மறுப்புக் கொள்கை அல்ல. இந்த உலகத்தின் தோற்றத்தில் இருந்து, தற்போது ஏற்பட்டுள்ள மாற்றங்கள் வரையில், அறிவியல் ரீதியான புரிதலுக்கானதாகும்.

கட்டுரையளர்; எம்.ஜே.சையத் இப்ராகிம் பாபு

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time