மத்திய பாஜக அரசு தொடர்ந்து விவசாயிகளுக்கு துரோகம் இழைப்பதோடு, கார்ப்பரேட்களுக்கு ஆதரவாக ‘நிலம் கையகபடுத்துதல் சட்டம்’ கொண்டு வந்ததன் மூலம் இயற்கை செழுமையுள்ள மதுரை அரிட்டாபட்டி போன்ற இடங்களை தூக்கி கார்ப்பரேட்களுக்கு தந்து வருகிறது. இதனால் மீண்டும் பெரியதொரு போராட்டம் வெடித்துள்ளது;
மத்தியில் மீண்டும் பாஜக தலைமையிலான ஆட்சி 2019ம் ஆண்டு அமைந்ததும், 2020ம் ஆண்டு படுபாதகமான மூன்று புதிய வேளாண் சட்டங்களைக் கொண்டுவந்தது. இது அதானி, அம்பானி போன்றவர்களுக்கு நிலங்களை தாரை வார்த்து விவசாயிகளை நிலமற்ற விவசாயக் கூலிகளாக மாற்றும் சூழ்ச்சி எனக் கூறி விவசாயிகள் பொங்கி எழுந்து சுமார் 13 மாதங்கள் டெல்லி சாலையில் கடுங்குளிர், மழை,வெயில் எதையும் பொருட்படுத்தாமல் போராடினர். இந்த போராட்டக் களத்தில் சுமார் 7,00 விவசாயிகள் தங்கள் இன்னுயிரை ஈந்தனர். பாஜக அரசுக்கு நாடு முழுவதில் இருந்தும் விவசாயிகள் தங்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
இந்த போராட்டத்தை ஒடுக்க மத்திய அரசு செய்த அனைத்து கொடூர நடவடிக்கைகளையும், தங்கள் மன உறுதியால் விவசாயிகள் முறியடித்தனர்.
இறுதியாக, மத்திய அரசு ‘மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்ப பெறுவதாக’ அறிவித்ததோடு, ‘விவசாயிகளின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். ஆகவே, போராட்டத்தை வாபஸ் வாங்குங்கள்’ எனக் கூறியது. பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு விவசாயிகளும் போராட்டத்தை வாபஸ் பெற்றார்கள். ஆனால் கடந்த இரண்டாண்டுகளாக மூன்று வேளாண் சட்டங்களில் உள்ள கூறுகளை வெவ்வேறு வழி முறைகளில் மத்திய அரசு அமல்படுத்தி வருகிறது. அதில் ஒன்று தான் 2023 நிலம் கையகப்படுத்துதல் சட்டமாகும்.
இதில், நிலத்தை கையகப்படுத்த உள்ளாட்சிகளிடமும், விவசாயிகளிடமும் அனுமதி பெறத் தேவையில்லாமல் சம்பந்தப்பட்ட ஊரில் வசிப்பவர்களுக்கே தெரியாமல், அவர்கள் வாழும் நிலத்தை எடுத்து கார்ப்பரேட்களுக்கு தரும் விதமாக சட்டத்தை திருத்திக் கொண்டு வந்துள்ளது மத்திய அரசு.
கடந்த 2020-ம் ஆண்டு வேளாண் சட்டத் திருத்தத்துக்கு எதிராகப் போராட்டத்தின் போதே குறைந்தபட்ச ஆதார விலை கோரிக்கையை முன் வைத்திருந்தனர். ஆனால், மத்திய அரசு அதை இன்று வரை நிறைவேற்றவில்லை என்பதோடு, கார்ப்பரேட்கள் விவசாய சந்தையை ஆக்கிரமித்து அடிமாட்டு விலைக்கு விளை பொருட்களை வாங்கும் சூழலையும் உருவாக்க திட்டமிடுகிறது என்பது தான் விவசாயிகளை கொந்தளிக்க வைத்துள்ளது.
இதன் காரணமாகவே இந்த வருடம் பிப்ரவரி மாதம் டெல்லியில் ஒரு பெரிய போராட்டத்தை அறிவித்தது இரு நூறு விவசாய சங்கங்களை உள்ளடக்கிய கூட்டமைப்பு. ஆனால்,மத்திய பாஜக அரசோ, விவசாயிகளை ஏதோ தீவிரவாதிகள் போலக் கருதி, கடந்த 13-ம் தேதி போராட்டத்தை தடுக்க டெல்லியின் சாலைகளில் முள்வேலிகளை அமைத்தும், பள்ளங்களை வெட்டியும், பெரிய கற்களை கொண்டு போட்டும் தடுத்தது. இதனால் பின்வாங்கிய விவசாயிகள் பிப்ரவரி 18 முதல் பஞ்சாப் மற்றும் ஹரியானா இடையே ஷம்பு மற்றும் கானொரி எல்லைப் பகுதிகளில் விவசாயிகள் முகாமிட்டுள்ளனர்.
இந்நிலையில், கானொரி எல்லையில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கிய பஞ்சாப் விவசாயிகள் சங்கத் தலைவர் ஜக்ஜித் சிங் தல்லேவால் நவம்பர் 26 அன்று அங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு லூதியானாவில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு பின்னர் வெள்ளிக்கிழமை மாலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
உச்ச நீதிமன்றத்தில் விவசாய சங்கம் சார்பில் ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் உஜ்ஜல் புயான் அடங்கிய அமர்வு, மனுவை தள்ளுபடி செய்ததோடு”ஜனநாயக அமைப்பில், நீங்கள் அமைதியான போராட்டங்களில் ஈடுபடலாம். ஆனால் மக்களுக்கு இடையூறு விளைவிக்காதீர்கள். போராட்டம் சரியா தவறா என்பது குறித்து நாங்கள் கருத்து தெரிவிக்கவில்லை. ஆனால், மக்களுக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம்” என்று நீதிபதிகள் தெரிவித்திருப்பது கவனத்திற்கு உரியதாகும்.
தற்போது விவசாயிகள் மீண்டும் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். அதை தடுக்க கடந்த நவம்பர் 12-ம் தேதி இரண்டு மத்திய அமைச்சர்கள் தலைமையில் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில், உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால், ஹரியாணா மற்றும் பஞ்சாப் மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியை நோக்கிப் ‘டெல்லி சலோ’ எனப் பேரணி செல்லத் தொடங்கினர்.
இன்றைக்கு (டிசம்பர் 2ம் தேதி) அது போல் ஹரியானா, உ.பி,பஞ்சாப் பகுதிகளில் இருந்து விவசாயிகள் போராட்டத்திற்கு புறப்பட்ட நிலையில் இவர்களின் நுழைவைத் தடுக்கும் வகையில், முள் வலையங்கள், கான்கிரிட் தடுப்புகள் டெல்லி எல்லைப் பகுதியில் அமைக்கப்பட்டன. விவசாயிகள் அதை தள்ளி முன்னேறினர்.
பாரதிய கிஷான் பரிஷத் சங்கத்தைச் சேர்ந்த சுக்பீர் கலிஃபா தெரிவித்தை போலவே சரியாக இன்று பகல் 12 மணிக்கு விவசாயிகளின் போராட்டம் டெல்லியில் துவங்கியுள்ளது. விவசாயிகளின் போராட்டத்தால் டெல்லி – நொய்டா சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாம்.
முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் 13ம் தேதியில் இருந்து பஞ்சாப் ஹரியானா எல்லையான ஷம்பு மற்றும் கானௌரி பகுதியில் முகாமிட்டுள்ள விவசாயிகளும் டிசம்பர் 6ம் தேதி நடக்கவுள்ள பெரிய போராட்டத்தில் இணையவுள்ளனர். அவர்கள் தினமும் காலை 9 முதல் மாலை 5 மணி வரை பேரணியாக டெல்லி நோக்கி சாலையில் பயணித்து சாலையிலேயே இரவை கழித்து டெல்லியை வந்து சேர்வார்கள் என தெரிய வருகிறது.
6ம் தேதி கிசான் மஸ்தூர் மோர்ச்சா, சம்யுக்த் கிசான் மோர்ச்சா உள்ளிட்ட அமைப்புகள் தங்களின் பேரணியைத் துவக்குகின்றனர். அதே டிசம்பர் 6 ஆம் தேதி கேரளா, உத்தரகண்ட் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களின் விவசாயிகள் சட்டமன்றங்களை நோக்கி பேரணி செல்ல திட்டமிட்டு இருக்கின்றனர் .
# விவசாய விளை பொருட்களுக்கு முறையான குறைந்தபட்ச விலையை நிர்ணயிக்க வேண்டும்.
# 2023 நிலம் கையகப்படுத்துதல் சட்டம் கொண்டு வந்து ஆயிரக்கணக்கான ஏக்கர் நல்ல விளை நிலங்களை விவசாயிகள் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தரும் அணுகுமுறையை உடனே கைவிட வேண்டும். அந்த சட்டத்தையே வாபஸ் வாங்க வேண்டும்.
# அதானியிடம் மின்சார உற்பத்தியை தந்ததால் மின் கட்டணத்தை உயர்த்தக் கூடாது.
# கடந்த காலத்தில் போராடிய விவசாயிகள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும்,
# 2021 லக்கிம்பூர் கேரி காரை ஏற்றி விவசாயிகளைக் கொன்ற குற்றவாளிகளை காப்பாற்றுவதை விடுத்து, தண்டனையை உறுதிபடுத்த வேண்டும்.
# 2020 -2021 விவசாயிகள் போராட்டத்தில் இறந்த விவசாயிகளுக்கு இழப்பீடு தர வேண்டும்.
Also read
# விவசாயிகளை கோர்ட், வழக்கு, வாய்தா, கைது என இழுத்தடித்தால் இந்த நாட்டில் வேளாண்மையே வீழ்ச்சியை எதிர் கொள்ளும். ஆகவே, 2020-21 ஆம் ஆண்டு போராட்டத்தின் போது, விவசாயிகள் மீது போட்ட வழக்குகளை வாபஸ் வாங்க வேண்டும்.
# உலக வர்த்தக நிறுவனத்தின் நிர்பந்தங்களில் இருந்து விலகி இந்த நாட்டின் வளர்ச்சிக்கு சுயாதீனமாக அரசு திட்டமிட வேண்டும்.
# முந்தைய நில கையகப்படுத்தல் சட்டத்தின் கீழ் இழப்பீடாக 10% மனைகள் ஒதுக்க வேண்டும். இழப்பீடு தொகையை 64.7% அதிகரிக்க வேண்டும். ஜனவரி 1, 2024 க்குப் பிறகு கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் 20% மனைகள் வழங்க வேண்டும். நிலம் தந்த விவசாயிகளின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு தர வேண்டும்.
ஒரு மக்கள் நல அரசாங்கம் எந்த தயக்கமும் இன்றி உணவளிக்கும் விவசாயிகளின் இந்த நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி தரும். பாஜக எப்படிப்பட்ட அரசாங்கம் என்பது இந்த போராட்டத்தை மீண்டும்,மீண்டும் ஒடுக்குவதில் நன்றாகவே தெரிகிறது.
சாவித்திரி கண்ணன்
Leave a Reply