டாஸ்மாக்கின் மெகா ஊழலும், சினிமா தயாரிப்புகளும்!

டாஸ்மாக் என்பது ஒன்றிய அரசின் கம்பெனி சட்டங்களின்படி நிர்வகிக்கப்படும் பொதுத் துறை நிறுவனமாகும். அதில் வரைமுறையின்றி முறைகேடுகளை அரங்கேற்றலாம், லஞ்ச ஒழிப்புதுறை மாநில அரசின் கட்டுபாட்டில் இருப்பதால், புகார்களையெல்லாம் பொசுக்கிவிடலாம் என தமிழக ஆட்சியாளர்கள் மனப்பால் குடித்தனர்;

‘அதிமுக ஆட்சியாளர்கள் செய்த ஊழல் முறைகேடுகளை பாஜக தலைமை கண்டும், தண்டிக்காமல் விட்டது போல, நம்மையும் தண்டிக்காமல் இருப்பதற்கு அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து விசுவாசம் காட்டுவோம்..’ என்ற ஸ்டாலினின் ராஜதந்திரம் தோற்றுப் போனது.

உண்மை தான்! கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாக டாஸ்மாக் தொடர்பான இடங்களில் எல்லாம் சோதனை நடத்தி, அது சம்பந்தப்பட்ட நபர்களை எல்லாம் விசாரித்தும், அந்தத் துறையின் அமைச்சர் செந்தில் பாலாஜியையே கைது செய்த போதும் கூட, டாஸ்மாக் தொடர்பாக எந்த வழக்கும் பதியாமல், சின்ன எப்.ஐ.ஆர் கூட போடாமல், வெளியில் அது தொடர்பாக எதையும் பேசாமல் பாசம் காட்டியது பாஜக.

முதலில் டாஸ்மாக்கில் நடக்கும் முறைகேடுகள் சுமார் 30,000 கோடிகள் அளவுக்கானது என்பதை வெளியில் அம்பலப்படுத்தியதே திமுகவின் அன்றைய நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தான். இதில் அவர் அதிகாரமற்றவர் ஆக்கப்பட்டது வரலாறு.

சில மாதங்களுக்கு முன்பு தமிழ் நாடு டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத் துறை ரெய்டு செய்த போது, ஆயிரம் கோடி ஊழல்கள் நடந்துள்ளதை அம்பலப்படுத்தியது அமலாக்கத்துறை. ஆனால், அது பாட்டில் மற்றும் லேபிள் தயாரிக்கும் கம்பெனி சம்பந்தப்பட்டது. அது டாஸ்மாக் சம்பந்தப்பட்டதில்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

உண்மை என்னவென்றால், பாட்டில் மற்றும் லேபிள் கணக்கு தான் மிக அடிப்படையானது. இது தான் சரக்குகளின் எண்ணிக்கையை உறுதிபடுத்தக் கூடியது. இதற்காகவே இவற்றை சரிபார்க்க அரசின் உயர் அதிகாரி ஒருவர் ஒவ்வொரு சாராய உற்பத்தி ஆலைகளிலும் நியமிக்கப்படுவார். அவரது ஒத்துழைப்பு இல்லாமல் ஆட்சியாளர்கள் சரக்கை கணக்கு காட்டாமல் பார்களுக்கு சப்ளை செய்ய முடியாது. ஆனால், இவ்வளவு அம்பலப்பட்டும் கூட, ஏதோ தாங்கள் நியாயமானவர்கள் போல  இந்தப் பிரச்சினையை நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்று வாதாடியது தமிழக அரசு.

ஆனால், இவர்கள் நியாயவாதிகள் அல்ல. தமிழ்நாட்டரசுக்கு மிகப் பெரும் வருவாயை ஈட்டித் தரும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு கண்ணியமான சம்பளமும் இல்லை. வேலை நேரம், விடுமுறை உள்ளிட்ட எதிலும் சட்டபூர்வ நடைமுறைகளை பின்பற்றுவதில்லை.  டாஸ்மாக் நிறுவனம் தன் வாடிக்கையாளர்களை மனிதர்களாகக் கூட மதிப்பதில்லை. டாஸ்மாக் பார்களோ பன்றி தொழுவத்தை போல பாழடைந்து கிடக்கும். அதன் ஊழியர்களோ கொத்தடிமைகளாக நடத்தப்பட்டனர்.

ஒவ்வொரு சரக்கிற்கும் பத்து முதல் இருபது ரூபாய் கூடுதல் பணம் வாங்கி தங்களுக்கு தரும்படி ஆளும்கட்சி லோக்கல் பிரமுகர்கள் டாஸ்மாக் ஊழியர்களை நிர்பந்தித்து கல்லா கட்டியது இந்த ஆட்சியில் நடந்தது. இதன் மூலம் மட்டுமே  ஆண்டுக்கு சுமார் 5,000 கோடிகள் முறைகேடு நடந்துள்ளது.

இது கீழ் மட்டக் குற்றங்கள் என்றால், உற்பத்தி சரக்கில் போலியை கலந்து தந்தும், அதை அரசு கணக்கில் வராமல் பார்களில் இறக்கி இரவு,பகல் பாராமல் விற்று லாபம் பார்த்த வகையில் பல ஆயிரம் கோடிகளை ஆட்சியாளர்கள் விழுங்கியுள்ளனர். ( டாஸ்மாக்கின் போலிச்சரக்கால் ஏழெட்டு பேர் உயிர் இழந்தது தனிக்கதை)

இப்படி கொள்ளையடித்த பெரும் பணத்தை எவ்வளவு தான் வெளி நாடுகளில் முதலீடு செய்வது…?  நம்பகமானவர்களிடம் தந்து அதை பல்வேறு தொழில்களில் முதலீடு செய்யலாம் என்ற வகையில் தான், சினிமா தயாரிப்பிற்கு தந்துள்ளனர். சன் பிக்சர்ஸ், ரெட் ஜெய்ண்ட்டில் அந்த பணத்தை போட்டு எடுத்தால், பேசு பொருளாகிவிடும் என்று தான் நெருங்கிய உறவு வட்டத்திற்குள் சமீபத்தில் வந்த  ஆகாஷ் பாஸ்கருக்கு தருகிறார்கள்.

ஆகாஷ் பாஸ்கர் என்பவர் சமீபத்தில் தாரணி என்ற பெண்ணை மணந்தார். இவர் பிரபல தொழில் அதிபர் சி.கே.ரங்கநாதனின் மகள் மட்டுமல்ல, மு.க முத்துவின் மகள் தேன்மொழியின் மகளும் கூட! அந்த வகையில் ஸ்டாலினுக்கு பேத்தியவார். அதனால் தான் ஸ்டாலினும், உதயநிதியும் குடும்பத்துடன் அந்த திருமண நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இதன் பிறகு தான் ஆகாஷ் பாஸ்கரன் பிரபலமான பெரிய நடிகர்களின் கால்சீட்டை சர்வசாதரணமாக பெற்று பல படங்களை தயாரிக்கிறார். அவரது டான் என்ற சினிமா கம்பெனி இந்தி மொழி பிரச்சினையை அடிப்படையாக வைத்து நடந்த கடந்தகால வரலாற்றை பராசக்தி என்ற பெயரில் சிவகார்த்திகேயனை வைத்து படம் எடுக்கிறது. இது விஜய்யின் ஜனநாயகனுக்கு போட்டியான படம் என்ற பேச்சும் அடிபடுகிறது.

கிருத்திகா உதயநிதி, ஆகாஷ் பாஸ்கரன்

தனுஷின் இட்லி கடை, சிவகார்த்திகேயனின் பராசக்தி, அதர்வா முரளியின் இதயம் முரளி போன்ற படங்களை தயாரிக்கிறார். மேலும் அஜித்திடமும் ஒரு படத்திற்கு கால்சிட் பெற்றதாக பேட்டி தந்துள்ளார். இவ்வளவு பெரிய, பிசியான பெரிய நடிகர்களின் கால்சீட் உடனே ஒரு தயாரிப்பாளருக்கு கிடைக்கிறது என்றால், அதுவும் புதிய தயாரிப்பாளருக்கு உடனுக்குடன் கிடைக்கிறது என்றால், அங்கு தான் அவரது அதிகார மையத் தொடர்பின் பலம் வெளிப்படுகிறது. ஒரே நேரத்தில் அஜித், சிவகார்த்திகேயன், சிம்பு, தனுஷ் போன்ற பெரிய ஸ்டார்களை வைத்து படமெடுக்கும் துணிச்சலும், ஆற்றலும்  சினிமா துறையில் ஏ.வி.எம், வாகினி, ஜெமினி போன்ற மாபெரும் நிறுவனங்களே கூட நினைத்து பார்க்காத முடியாத சாதனையாகும்.

எனவே, அந்த சாதனை எப்படி சாத்தியப்பட்டுள்ளது என்ற சந்தேக வளையத்திற்குள் இயல்பாக வந்துவிடுகிறார் ஆகாஷ் பாஸ்கரன்.

டாஸ்மாக் மேலாண் இயக்குனர் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக கம்பீரமாக நேர்மையாக இருந்திருந்தால் அமைச்சர்களோ, கட்சிக்காரர்களோ அவரை நிர்பந்திக்க முடியாது. ஜெயலிதா ஆட்சி காலத்தில் சவுடையா என்ற நேர்மையான ஐ.ஏ.எஸ் அதிகாரி டாஸ்மாக்கில் இருந்தார். அவரால் தன்னளவில் நேர்மையாக இருக்க முடிந்தது.

அமலாக்கத்துறை விசாரணை வளையத்தில் விசாகன்

ஆனால், விசாகன் என்பவரோ, மதுரை கார்ப்பரேஷன் கமிஷனராக இருக்கும் போதே கரப்ஷனுக்கு பேர் போனவர். அதற்கு முன் தமிழ் நாடு தொழிற் வளர்ச்சி கழகத்தில் பொறுப்பில் இருந்த போதும் அவர் மீது புகார்கள் இருந்தது. ஆகவே தங்கள் கரப்ஷனுக்கு தோதான அதிகாரிகளையே டாஸ்மாக்கின் தலைமை பொறுப்பில் வைத்துள்ளனர் இன்றைய ஆட்சியாளர்கள். அதற்கேற்ப அவரும்  கணக்கு காட்டாத சரக்கை  – வரைமுறையில்லாமல் – விற்று ஆட்சியாளர்கள் லாபம் பார்க்க அனுமதித்ததோடு, அதற்கு ஒத்துழைப்பும் தந்துள்ளார்.

அவர் உதயநிதியின் நண்பர்களான ரிதீஸ் போன்றோருக்கு போலிச் சரக்குகளை பார்களுக்கு சப்ளை செய்வதில் அரசு அதிகாரிகளையே பயன்படுத்தி உள்ளார்.. போன்ற தகவல்கள் அவரது வாட்ஸ் அப் ஸ்கிரீன் சாட்டில் தெரிய வந்துள்ளது. ஆகவே, அவர் அப்ரூபராக மாறுவதைத் தவிர வேறு வழியில்லை.

ஊழலின் உச்சத்தை தொட்ட ஆட்சி என்றாலும், உதார் விடுவதில் சற்றும் சளைக்காத போலி கொள்கைவாதிகளின் கூடாரம் தான் திமுக. எதிர்ப்பது போல பாசாங்கு செய்து கொண்டு எல்லா வகையிலும் பாஜகவின் பாத விதாரங்களில் மறைமுகமாக பயபக்தியோடு விழுந்து  பணிவிடை செய்து வந்தது திமுக தலைமை! இந்த காரணத்தாலேயே – தாங்கள் செய்யும் ஊழல் முறைகேடுகளுக்கு பாஜக கண்டும் காணாமல் போகும் என்று நம்பியதோடு இல்லாமல் – பணம் இருந்தால் யாரையும் சரிகட்டிவிடலாம் என்றும் கணக்கு போட்டது.

ஆனால், அரசியல் என்பது  எதிரிகளின் பலவீனத்தை சமயம் பார்த்து பயன்படுத்தி விழ்த்துவது. இதைச் செய்வதற்கு நட்பு சக்திகளையே பலிகடாவாக்கவும் தயங்காது பாஜக. அப்படி இருக்க திமுகவை எப்படி விட்டு வைப்பார்கள்.

வினை விதைத்தவன் வினை அறுப்பான். ஒருவரது எண்ணங்களும், செயல்பாடுகளும் தான் அவரது எதிர்காலத்தை தீர்மானிக்கும்.

சாவித்திரி கண்ணன்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time