அண்டை நாடு அல்லலுறும் நேரத்தில் நம் கடமை என்ன?

-ம.வி.ராசதுரை

வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி இலங்கை மக்கள் திரளை பசி, பஞ்சம், பற்றாகுறைக்கு தள்ளீயுள்ளது! இந்த கொடூரத்திலும் நடந்த ஒரு நன்மை தமிழக, சிங்கள் மக்களை ஒன்றுபடுத்தி, ராஜபக்சே கூட்டத்தை பொது எதிரியாக்கிவிட்டது. இந்தச் சூழல் இலங்கை மக்களுக்கு தமிழ்நாட்டு மக்களின் பங்களிப்பை கோருகிறது!

நம் நாட்டில் இருந்து வெகு தொலைவில் இந்த அவலநிலை நிகழவில்லை. நமக்கு கைக்கெட்டும் தூரத்திலேயே துயரக்குரலை கேட்றோம்.மக்கள் அனுபவிக்கும் துன்பங்களை பார்க்கிறோம். அண்டை வீட்டார் அல்லல்படும்போது வேடிக்கை பார்த்து கடந்து செல்பவர்களா நாம்!?

இலங்கையில் இருந்து கடல் கடந்து பல தடைகளைக் கடந்து மக்கள் அகதிகளாக வருகை தந்து கொண்டிருப்பது, அங்கு நிலவும் மிக மோசமான வாழ்வியல் சூழலைப் படம் பிடித்துக் காட்டுகிறது.

சாப்பாட்டு அரிசி கிலோ ஒன்றுக்கு  400 ரூபாய்க்கு விற்கிறது. சீனி 200 ரூபாய், ரொட்டி பாக்கெட் 150 ரூபாய், பால் லிட்டர் 500 ரூபாய், பிஸ்கெட் பாக்கெட் 150  என்று விற்கப்படுகிறது.

அத்தியாவசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதால் பொருட்களை வைத்து இருப்பவர்கள் சொல்வதுதான் விலை என்ற நிலைமை அங்கு உள்ளது.

கடும் கட்டுபாடுகளை கடந்து இது வரை 80 க்கும் மேற்பட்டோர் அகதிகளாக வருகை தந்துள்ளனர்.

தங்களுடைய உடைமைகளை விற்று ஆளுக்கு ரூ10,000 முதல் 15,000 வரை கொடுத்து இவர்கள் வந்திருக்கிறார்கள். வழியில் கடலில் மூழ்கி செத்தாலும் பரவாயில்லை, இலங்கையில் இனி வாழ இயலாது என்ற நிலையில் புறப்பட்டு வந்தவர்கள் இவர்கள்.

இலங்கையில் ஒரு நாளைக்கு மூன்று வேளையும் வயிறார சாப்பிட வேண்டுமென்றால் ஒரு குடும்பத்துக்கு 2,500 ரூபா முதல் 3,000 வரை செலவாகிறது . அது ஹோட்டல் என்றால் ஒரு தனி நபருக்கு ஒரு வேளை டிபனுக்கே கிட்டதட்ட ரூபாய் 2,000 தேவைப்படுகிறது! இதோ இங்கே ஒரு ஹோட்டல் பில் தரப்பட்டுள்ளது!

இவ்வளவு பணத்துக்கு எங்கே போவார்கள் சாமானிய மக்கள். வேலை வாய்ப்பு வருமானத்துக்கும் வழி இல்லை. தமிழர், சிங்களர் பாகுபாடுமின்றி அனைவருமே திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

நிலைமை இப்படியே தொடர்ந்தால் பட்டினிச் சாவுகள் பெரிய எண்ணிக்கையில் அங்கு பதிவாகும் என்று தெரிகிறது.

அங்கு உள்ள பெட்ரோல், டீசல் நிலையங்களில் பல கிலோமீட்டர் தொலைவிற்கு நீண்ட வரிசைகளில் வாகனங்கள் நிற்பதைப் பார்த்தால் தலை சுற்றுகிறது. மின்வெட்டு குறைந்தது 8 மணி நேரம் என்ற கால அளவுக்கு நிலவுகிறது.

சுற்றுலா வருமானத்தை பிரதானமாகக் கொண்டு இருந்த அந்த நாட்டுக்கு அந்த வருமானம் தடைபட்டதால் கதிகலங்கி நிற்கிறது. ஏற்கனவே உள்நாட்டு போருக்காக ஏராளமான கடன்களை வாங்கி குவித்து வைத்திருந்தது.

அந்த  நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்ததும், தொடர்ந்து கடன் கொடுத்துக் கொண்டிருந்த பன்னாட்டு நிதி நிறுவனங்களும் உலக நாடுகளும்  இனி கடன் கொடுத்தால் திரும்பி வராது என்று கைகளை மடக்கி கொண்டுள்ளன.

இலங்கையை கைக்குள் போட்டு வைத்துக் கொள்ளலாம் என்று எண்ணி ஏராளமாக கடன் வழங்கிய சீனாவும் தன் முதுகை காட்டி நிற்கிறது.

ஒரு காலத்தில் இலங்கையில் உள்ள ஒவ்வொரு கிராமமும் தன்னிறைவு பெற்று திகழ்ந்தது. உலகமயம், தனியார் மயத்தின் விளைவாக உள்ளூர் தற்சார்பு விவசாயம் நசுக்கப்பட்டு சர்வதேச சந்தையின் எதிர்பார்ப்பை நம்பி இருக்கும் நிலைமைக்கு இலங்கை தள்ளப்பட்டது. தற்சார்பு நிலையை பறி கொடுத்ததன் விளைவை இன்று இலங்கை அனுபவிக்கிறது. உலக நாடுகளுக்கு இது ஒரு எச்சரிக்கைப்பாடம் ஆகும்.

ஜாதி, மொழி, இனத்திற்கு அப்பாற்பட்டு  இலங்கை மக்கள் ஒருங்கிணைந்து போராட்டங்களை நடத்துகிறார்கள். கூடுகின்ற இடங்களில் எல்லாம் அரசாங்கத்தை வசை பாடுகிறார்கள். விமானத்தில் ஏறி அமர்ந்தாலும் கூட அங்கு வைத்தும் கோஷம் போடுகிறார்கள். ஆட்சியாளர்களே வெளியேறுங்கள் பதவிகளை விட்டு’’ என்கிறார்கள்.

நாட்டையே கொள்ளையடித்த ராஜபக்சே சகோதரர்கள் வெளி நாடுகளில் பணத்தை பதுக்கி வைத்து விட்டனர்! மக்கள் இவர்களை வயிறு எரிய சபிக்கிறார்கள்!

உலக வங்கி போன்ற பன்னாட்டு நிதி நிறுவனங்கள் மற்றும் பல் வேறு நாடுகளிடம் உதவி கேட்டுக் கையேந்திக் கொண்டிருக்கிறார்கள். இந்திய அரசும் சுமார் 3,800 கோடி  உதவி  வழங்குவதாக தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக 40 ஆயிரம் டன் உணவுப்பொருட்களையும் 2 லட்சம் டன் எரி பொருட்களையும் அனுப்பி வைத்துள்ளது.

“தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும்” என்ற பழமொழிக்கு ஏற்ப இலங்கையில் வாழும் தமிழ் மக்களை நினைத்து  தமிழகத்தில் வாழும் மக்களும் உலகம் முழுவதும் வசிக்கும் தமிழர்களும்  உதவத் தயாராக உள்ளனர்.

இத் தருணத்தில், இலங்கை வாழ் தமிழ் மக்கள் ஒரு வேண்டுகோளை முன் வைத்துள்ளனர். இன, மொழி ,மதம் பார்க்காமல் இலங்கைக்கு உதவுங்கள் அதுதான் இப்போது உள்ள சூழலில் சரியான செயல்பாடாக இருக்கும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

கடந்த மார்ச் மாதம் டெல்லி சென்ற தமிழக முதல்வர் மு .க. ஸ்டாலின், இலங்கை மக்களுக்கு தமிழக அரசு உதவி செய்ய மத்திய அரசு அனுமதி  வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை பிரதமரிடம் வைத்தார். தமிழகம் திரும்பி 15 நாட்களாகியும் உரிய பதில் கிடைக்காததால் மீண்டும் கடிதம் வாயிலாக நினைவூட்டல் செய்தார்.

இந்த நிலையில் தமிழக சட்டமன்றத்தில் இலங்கைக்கு உதவ வகைசெய்யும் சிறப்பு தீர்மானத்தை கொண்டு வந்து நிறைவேற்றினார்.

ரூபாய் 80 கோடி மதிப்புள்ள 40 ஆயிரம் டன் அரிசியும் 28 கோடி பெறுமானமுள்ள 137 வகையான மருந்து பொருட்களையும் 15 கோடி மதிப்புள்ள குழந்தைகளுக்கான பால்பவுடர் டின்களையும் அனுப்பி வைக்க தமிழக அரசுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று அந்த தீர்மானம் வாயிலாக வலியுறுத்தினார்.

இதையடுத்து, மத்திய அரசு வாயிலாக இலங்கைக்கு உதவலாம் என்ற  அனுமதியை மத்திய உள்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

“பிறருக்கு உதவுவது” தமிழ்க் கலாச்சார பண்பாட்டு  அடையாளங்களில் தலையானது.

இலங்கைக்கு உதவுவது தொடர்பான சிறப்புத் தீர்மானம் சட்டமன்றத்தில் ஏகமனதாக நிறைவேறியுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தம் குடும்ப நிதியாக இலங்கை மக்களுக்கு ரூபாய் 50 லட்சம் தொடங்குவதாக உடனே அறிவித்தார். திமுக சார்பில் ஒரு கோடி அறிவிக்கப்பட்டு உள்ளது. திமுக , அதிமுக, கட்சிகள் இந்த விவகாரத்தில்  ஒரே நேர் கோட்டில்  பயணிக்கின்றன. நிவாரண உதவிகளை தாரளமாக வழங்கும்படி அனைத்து தரப்பினருக்கும் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தம்முடைய ஒருநாள் ஊதியத்தை இலங்கை மக்களுக்கு வழங்குவதாக தெரிவித்து உள்ளார். காவல் துணை ஆணையாளர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் ஆகியோரும் தங்களுடைய ஒருநாள் ஊதியத்தை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

இலங்கையில் வாழும் 2 கோடி மக்களின் துயர்துடைக்க, உலகம் முழுவதும் வாழும் 10 கோடி தமிழர்களும் ஒருகைப்பிடி உணவுப்பொருள் வழங்கினாலே அங்குள்ள வீடுகள் ஒவ்வொன்றுக்கும் போதுமான அளவு கொடுக்க முடியும்.இது ஒரு தற்கால தீர்வை கொடுத்தாலும் அங்கு நிரந்தர தீர்வு கிடைக்க ஒரு தார்மீக பலத்தை அம்மக்களுக்கு கொடுக்கும்.

“தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை என்றால் ஜகத்தினை அழித்திடுவோம்”என்று முழங்கினார் பாரதி.

“இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து

கெடுக உலகியற்றி யான்”(குறள் 1062).

என்கிறார் வள்ளுவப் பெருந்தகை.

பசியால் கையேந்தும் நிலைமை வரவே கூடாது .அப்படி ஒரு நிலைமை வரும்பட்சத்தில் உலகத்தைப் படைத்தவனாக சொல்லப்படுபவன் கெட்டழிந்து திரியட்டும் என்று சபிக்கிறார் அவர்.

“எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க” என்ற

அமுத மொழியை உலகுக்கு வழங்கி விட்டுச் சென்ற வள்ளலார் வாழ்ந்த மண்  இது. பசிப்பிணி  போக்க அவர் ஏற்றி வைத்த அடுப்பு பல்லாயிரம் பேருக்கு தினமும் உணவளித்து வருகிறது .அந்த மனித நேய மகான் தோன்றிய தமிழ் மண்ணுக்கு வெகு அருகிலேயே பசிப்பிணி நிலவுவதை விட்டு வைக்கலாமா? இலங்கை மக்களுக்கு உதவுவது தமிழ்நாட்டில் ஒரு மக்கள் இயக்கமாக மாறட்டும்!

நன்கொடை  தர விரும்புவோர் கீழே குறிப்பிட்டுள்ள ஏதேனும் ஒரு வழியில் வழங்கலாம்.

#   மின்னணு பரிவர்த்தனை மூலம் நன்கொடை வழங்க விரும்புவோர் நாட வேண்டியது: https://ereceipt.tn.gov.in.cmprf/cmprf.html

வங்கி: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, தலைமைச் செயலக கிளை, சென்னை – 600 009 சேமிப்பு வங்கி கணக்கு எண்: 117201000000070, IFSC குறியீடு : IOBA0001172, CMPRF பான் எண் : AAAGC0038F , SWIFT குறியீடு : IOBAINBB001 இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, மத்திய அலுவலகம், சென்னை. (வெளிநாட்டு பங்களிப்புகளுக்கு).

ECS மூலம் ஆன்லைனில் தொகையை அனுப்பும் பங்களிப்பாளர்கள், அவர்கள் வருமான வரி விலக்கு பெறுவதற்கும் அதிகாரபூர்வ ரசீதை அனுப்புவதற்கும் பங்களிப்பாளரின் பெயர், பங்களிப்பு தொகை, வங்கி மற்றும் கிளை, பணம் அனுப்பும் தேதி, பரிவர்த்தனை குறிப்பு எண்,தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி, மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண் / கைபேசி எண் உள்ளிட்ட விவரங்களை வழங்க வேண்டும்.

UPI-VPA id : tncmprf@iob மற்றும் PhonePe, Google Pay, Paytm, Amazon Pay, Mobikwik etc. போன்ற பல்வேறு மொபைல் செயலிகள் மூலம் வழங்கலாம்.

> காசோலை, வரைவு காசோலை மூலம் நன்கொடை வழங்க விரும்புவோர்: The Joint Secretary to Government & Treasurer, Chief Minister’s Public Relief Fund, Finance (CMPRF) Department, Secretariat, Chennai 600 009,Tamil Nadu, India. அரசு இணைச் செயலாளர் & பொருளாளர், முதலமைச்சரின் பொது நிவாரண நிதி,  தலைமை செயலகம், சென்னை 600 009, தமிழ்நாடு, இந்தியா  என்ற முகவரிக்கு காசோலையாகவோ, வரைவு காசோலையாகவோ அனுப்பி வைக்கலாம். சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் இருப்பவர்கள் அனுப்பி வைக்கப்பட வேண்டியவற்றை அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் வழங்கலாம்.

முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்குவோர் 80-G ன் கீழ் வருமான வரி விலக்கு பெறலாம்.

கட்டுரையாளர்; ம.வி.ராசதுரை

மூத்த பத்திரிகையாளர், சமூக ஆர்வலர்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time