குற்றவாளிகளை விடுவிப்பது தான் காவல்துறை நோக்கமா?

- சாவித்திரி கண்ணன்

ஸ்ரீமதி மரணித்து 42 நாட்களாகிய நிலையில், இது வரை எந்த சிறிய முன்னேற்றமும் காவல்துறை விசாரணையில் இல்லை. மாணவி மரணத்திற்கான சிபிசிஐடியின் விசாரணை விபரங்கள் நீதிமன்றத்திற்கே தெரிவிக்கவில்லை. காவல் துறையின் கைகள் கண்ணுக்கு தெரியாத ஒரு அதிகார மையத்தால் கட்டப்பட்டு உள்ளதோ…?

முதலமைச்சர் ஸ்டாலினின் நேரடி அதிகாரத்தில் தான் தமிழக காவல் துறை உள்ளது. சைலேந்திரபாபு தமிழக டிஜிபியாக உள்ளார். முதலில் பள்ளிக் கூடத்திற்கு ஆதரவாக வெளிப்படையாகவே கருத்துச் சொன்ன டிஜிபி. சைலேந்திரபாபு மக்களின் பெருங் கோபத்தை அடுத்தும், அடுத்தடுத்து வெளி வரும் தகவல்களையடுத்தும் சைலண்ட் மூடுக்கு போய்விட்டார்!

இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு 38 நாட்கள் ஆகிய நிலையில் கைதானவர்கள் தரப்பில் இன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ”தங்கள் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு எந்தவிதமான அடிப்படை ஆதாரங்களும் இல்லை. பள்ளியில் நடந்த சம்பவம் குறித்த கண்காணிப்புக் கேமிராவில் பதிவான காட்சிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இன்னும் தங்களை நீதிமன்ற காவலில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.எனவே தங்களுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்” என்று கூறியுள்ளதானது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பள்ளியின் தாளாளர் மற்றும் ஆசிரியர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள்,” மாணவியின் உடல் இரண்டு முறை பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஆனால், தங்கள் மீது என்ன வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றே தெரியவில்லை. மாணவியின் மரணத்திற்கும் தங்களுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை” என்று வாதிடப்பட்டது.

அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ”இதுதொடர்பாக விளக்கம் பெற்று தெரிவிக்க கால அவகாசம் வழங்க வேண்டும்” என தெரிவித்தார்.( வழக்கு குறித்த அடிப்படை தகவல் கூடத் தெரியாத ஒரு வழக்கறிஞரா…?)

அப்போது நீதிபதி, ”இந்த மனுதாரர்கள் என்ன குற்றம் செய்தார்கள்? பள்ளியின் தாளாளர் மற்றும் ஆசிரியர்களாக இருப்பதற்காக கைது செய்யப்பட்டனரா? உள்ளிட்ட விவரங்களை அறிந்து வந்திருக்க வேண்டும்” என்று காவல்துறை தரப்பு வழக்கறிஞருக்கு அறிவுறுத்தினார்.

ஆக, இத்தனை நாட்களான நிலையில், ‘கைது செய்யப்பட்டவர்கள் மீதான குற்றங்களை நிருபிக்க காவல்துறை எந்த முயற்சியும் இல்லாதிருப்பது’ இதன் மூலம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

மாணவியின் மரணம் தொடர்பான உண்மைகளை அறிய மக்கள் தவியாய் தவிக்கின்றனர். உண்மை அறியும் குழுக்கள் மனிதம், பி.யூ.சி.எல் போன்ற சிலவும்,  புலனாய்வு ஊடகங்கள் பலவும் களத்தில் இறங்கி பல்வேறு உண்மைகளை வெளிக் கொண்டு வந்துள்ளனர். அவற்றை வைத்து பார்த்தால் ‘இந்த மர்ம மரணம் தற்கொலையல்ல, பாலியல் துன்புறுத்தல் செய்து கொலை செய்யப்பட்டதே’ என்ற முடிவுக்கு தான் அனைவரும் வர முடிகிறது. சமூக ஊடகங்களில் – குறிப்பாக – காட்சி ஊடகங்களில் இது குறித்த பதிவுகள் நாள் தோறும் வந்த வண்ணம் உள்ளன.

ஆனால், நமது காவல்துறையோ, ‘கைது செய்யப்பட்டவர்களின் குற்றச் செயல்கள் குறித்து நீதிமன்றத்திற்கு கூட சரியான தகவல்களை தரவில்லை’ என தெரிய வந்துள்ளது!

மேலும், இந்த வழக்கில் இன்றைக்கு நீதிபதி காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞரிடம் கடிந்து கொள்ள வேண்டிய நிலை உருவானது.

”மனுதாரர்கள் எதற்காக கைது செய்யப்பட்டனர் என்பது குறித்த காரணத்தை தெரிவிக்காவிட்டால், விசாரணை அதிகாரிகள் ஆஜராக உத்தரவிட நேரிடும்” என எச்சரிக்கை விடுத்த நீதிபதி, விசாரணையை வரும் வெள்ளிக்கிழமைக்கு ஆகஸ்ட் 26 ந்தேதி ஒத்தி வைத்தார்.

ஆகஸ்ட் 28 ஆம் தேதியன்றும் காவல்துறை வழக்கறிஞரால் கைது செய்யப்பட்டதற்கான உரிய ஆதாரங்கள் தாக்கல் செய்யபப்ட வில்லை என்றால், குற்றவாளிகள் விடுதலையாவது உறுதியாகிவிடும். அவர்கள் விடுதலையாகும் பட்சத்தில் மிகச் சுலபமாக சாட்சிகளை கலைத்து வழக்கை ஒன்றும் இல்லாமல் செய்துவிடுவார்கள்!

இது வரையிலான விசாரணையின் போக்கை வைத்து பார்க்கும் போது, ‘தமிழக காவல்துறையின் கைகள் கண்ணுக்கு தெரியாத ஒரு அதிகார சக்தியால் கட்டப்பட்டு உள்ளதோ…’ என்ற சந்தேகத்தை தவிர்க்க முடியவில்லை.

இந்த சம்பவம் தொடர்பாக இரண்டுவிதமான விசாரணைக்கு ஆணையிட்டது தமிழக அரசு. அதில் சிறப்பு காவல்துறையானது பள்ளிக் கூட வன்முறை தொடர்பாக விசாரிக்கவும் ,சி.பி.சி.ஐடியானது மாணவியின் மர்ம மரணம் தொடர்பாகவும் நியமிக்கப்பட்டனர். இதில் பள்ளிக் கூட கலவரம் தீ வைப்பு சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளும்,கைதுகளும் தான் ஜரூராக வேகமாக நடக்கின்றன. இது வரை சுமார் 350க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்களில் கணிசமாமனவர்கள் சம்பவத்தில் தொடர்பில்லாத அப்பாவிகள் என்ற செய்திகளும் தொடர்ந்து வெளியாயின!

இது போல சிறப்பு காவல் படையினர் பள்ளிக் கலவரம் தொடர்பாக அப்பாவிகளைக் கூட கைது செய்யும் போது, உண்மை குற்றவாளிகள் மீதான விசாரணை அறிக்கையை உறுதி செய்யாமல் தமிழக காவல்துறை அதீத தாமதம் செய்வதானது மக்களுக்கு பெரும் சந்தேகத்தை உருவாக்கி உள்ளது.

இந்தச் சூழலில் காவல்துறையின் அணுகுமுறை காரணமாக அதிருப்தியுற்ற ஸ்ரீமதியின் தாயார் செல்வி, ‘தன் மகளின் மரணத்திற்கு நீதி வேண்டி பாத யாத்திரையாக புறப்பட்டு சென்னை வரப் போவதாக’ அறிவித்தார். அப்படி அவர் புறப்பட்டு வருவார் எனில், அவருக்கு ஆதரவாக பெருந்திரள் மக்கள் தொடர வாய்ப்பு உள்ளது என உளவுத் துறை தமிழக அரசுக்கு தகவல் தெரிவித்ததின் அடிப்படையில், பதறிப்போன தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆகஸ்ட் 27 ஆம் தேதி ஸ்ரீமதியின் தாயார் தன்னை சந்திக்க நேரம் ஒதுக்கியுள்ளார். இதைத் தொடர்ந்து அவரது நடை பயணத்தை தவிர்க்கும்படி அவர் கட்டாயப்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிய வருகிறது.

தமிழ் நாட்டின் மிகப் பெரிய துரதிர்ஷ்டம் ஆளும் கட்சி தான் கள்ளக் குறிச்சி விவகாரத்தில் செயலற்று உள்ளது என்றால், தட்டிக் கேட்க வேண்டிய எதிர்கட்சியான அதிமுகவோ, குற்றவாளி ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவினர் என்பதால் தானும் மெளனம் சாதிக்கிறது!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time