பேசாப் பொருளை பேசத் துணிந்த நூல்

பீட்டர் துரைராஜ்

லதா எழுதிய இந்த நூல் பாலியல் கல்வி தொடர்பான நூல்.பொய்மைகளை, போலித்தனங்களை தவிர்த்து, பெண் குழந்தைகள் தொடர்பான உண்மையான அக்கறை சார்ந்து நேர்பட எழுதப்பட்ட நூல்! இந்த நூலின்  தாக்கம் ஆண்,பெண் பாலியல் உறவில், சமூக உறவில் ஆரோக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தும்

‘காமம் குறித்த உரையாடலை ஒப்பனைகள் இல்லாமல் முகத்தில் அறைந்த மாதிரி பேசிச் செல்லும் புத்தகம்’ என்கிற குங்குமம் தோழி ஆசிரியரான மகேஸ்வரியின் கூற்று சரியானதே!

‘எனக்கான தாக்கங்கள், மற்ற மனிதர்களுடனான என் விவாதங்கள், என் அனுபவங்கள், என்னுடன் மனம் திறந்து பகிர்ந்த சில நண்பர்களின் அனுபவங்கள் இவையே இந்தப் புத்தகத்தின் அடித்தளம்’ என்று முன்னுரையில் நூலாசிரியர் கூறுகிறார். தன் குழந்தை பருவத்தில் தான் சந்தித்த அத்துமீறல்கள் குறித்துமவர் பேசத் தயங்கவில்லை.

நடந்து முடிந்த சென்னை புத்தகக் கண்காட்சியில் அதிகமாக விற்ற புத்தகங்களில் ஒன்று இந்த நூலாகும்! . காமம், உடலுறவு, சுய இன்பம், உச்சகட்ட இன்பம் போன்றவை குறித்து பேசுவதே தவறு என்ற எண்ணம் நிலவி வரும் சூழலில், இப்படி ஒரு நூல் வெளிவந்தமைக்காகப்  பாராட்டலாம்.  இந்த நூல் ஆரோக்கியமான விவாதத்தை எழுப்பி வருகிறது. பரவலான கவனத்தையும் பெற்று வருகிறது.

லதா என்பவர் ஒரு நிறுவனத்தின் நிர்வாகியாக இருந்தவர். இதிலுள்ள கட்டுரைகள்  எதார்த்தமாகவும், சாதாரணமாக ஒருவர் எதிர்கொள்ளும் அனுபவங்களை வைத்தும் எழுதப்பட்டுள்ளன. சின்ன சின்ன வாக்கியங்களில், ஆழமான விஷயங்களை போகிற போக்கில் கூறுகிறார்.

வீட்டுக்குள், உறவினரிடத்தில் , நட்பு வட்டத்தில், பொது இடங்களில், சமுக தளத்தில் பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை நேரும் போது, அவர்கள் அதை வெளியே சொல்ல அஞ்சுகிறார்கள். இது மிகப் பெரிய குற்ற உணர்வை அவர்களுக்குள் உண்டு பண்ணுகிறது என்பவர், இந்தச் சூழலை பெண் குழந்தைகள் எப்படி எதிர் கொள்வது என்பதை சொல்லித் தருகிறார்! பெற்றோர்களும் குழந்தைகளிடம் மனம்விட்டு பேசுவதோடு, குழந்தைகள் சொல்வதை பொறுமையாக காது கொடுத்து கேட்க வேண்டும்’’ என்கிறார்.

பல்லாங்குழி என்ற அமைப்பு இந்த நூல் குறித்த விமர்சனக்  கூட்டத்தை நடத்தியது. “பெண்கள், மாதவிடாய் பற்றி பேசுவதற்கு கூட தயங்குகிறார்கள். உடலுறவு தொடர்பாக தனக்கு ஒன்றும் தெரியாது என்று சொல்லிக் கொள்வதை (தெரிந்தாலும்) பெண்கள் பெருமையாகச் சொல்லிக் கொள்ளும் சூழல் உள்ளது ” என்று அதில் பேசிய எழுத்தாளர் ஜெ.தீபலட்சுமி கூறுகிறார்.

”ஒரு மனிதனுக்கு அடிப்படைத் தேவை உணவு.. உடை.. இருப்பிடம் என்பது போல நான்காவதாக காமமும் அடிப்படைத் தேவையே” என்கிறார். ”காமத்தில் இருந்து வந்த குழந்தை உள்ளிட்ட அனைத்தும் புனிதமாகப் பார்க்கபடும் போது போது காமத்தை மட்டும் ஏன் அருவெறுப்புக்கு உரியதாக எண்ண வேண்டும்”  என கேள்வி கேட்கிறார் உமா!

காதல் மற்றும் காமம் குறித்த கட்டுக்கதைகள், சுய இன்பம், ஈர உரையாடல்கள் (wet chats), திருமணம் தாண்டிய உறவுகள், நல்லுறவிற்கான சில விதிமுறைகள், காமத்தை தவறென கருதுவதால் ஏற்படும் விளைவுகள் என 32 அத்தியாயங்கள் இந்த நூலில் உள்ளன. ஒவ்வொரு அத்தியாயமும், எளிய வார்த்தைகளில் நான்கைந்து பக்கங்களில் பேச வேண்டியதை பேசி விடுகிறது. தான் பேசும் பொருளின் கனபரிமாணத்தை   உணர்ந்து கொண்டதாலோ என்னவோ, இது தொடர்பான பல்வேறு மேற்கோள்களை நூலாசிரியர் பொருத்தமான இடங்களில் காட்டுகிறார். இன்னும் சொல்லப் போனால், அந்த மேற்கோள்களை விளக்குகின்ற விதத்தில் தன்னுடைய கருத்துகளை நூல் நெடுகிலும் கூறுகிறார் என்றும் கூற முடியும்.

ஆண்கள் தன்னுடைய உடலில் இருந்து விந்தணுக்களை வெளியேற்ற உதவும்  கழிப்பறையாக பெண்களைப் பயன்படுத்துகிறார்கள். பெண்களின் கிளர்ச்சி பற்றியோ, அவளை திருப்திபடுத்தும் எண்ணத்திலோ பெரும்பாலான உடலுறவு நடப்பதில்லை என்கிறார் லதா. அதுதான் இந்த நூலுக்கு தலைப்பாக உள்ளது. இவர் ஏற்கனவே ‘toilet seat’ என்ற பெயரில் ஆங்கிலத்தில் இந்த நூலை எழுதியுள்ளார். இந்த துறையில் இது குறித்து வெளியான முதல் தமிழ் நூல் என்று இதனைச் சொல்ல முடியும். ‘ஒரு தேர்ந்த மனநல ஆலோசகரும், ஒரு மகத்தான மனோதத்துவ நிபுணரும் எழுதிய புத்தகமாகவே இதை நான் பார்க்கிறேன் ‘ என்கிறார் விமர்சகரான பவா செல்லதுரை.

ஒருசில கருத்துக்களுடன், நாம் மனரீதியாக  உடன்பட இயலாமல் போகலாம். ஆனாலும் அதுதான் யதார்த்தம் என்று விஷயங்களை  கூறுகிறார். காதலற்ற மணவாழ்க்கை, திருப்தியற்ற தாம்பத்ய உறவு, புதிதாக எதையும் அறியும் ஆர்வம், வெளியோரிடம் ஏற்படும் உண்மையான காதல் அல்லது கவர்ச்சி, மாற்றமில்லா நிலையில் ஏற்படும் சலிப்பு போன்றவை, திருமணம் தாண்டிய உறவுக்கு காரணமாக அமைகின்றன என்கிறார். மாதவிடாய் தள்ளிப்போவதால், கர்ப்பமாக இருக்குமோ என மன உளைச்சலில் இருக்கும் பெண் பற்றி ஆண் கண்டு கொளவதில்லை. இதனால் நல்லுறவு பாதிக்கபடும் என்கிறார்!

காமத்தை தவறெனக் கருதுவதால் அவை வக்கிரமாக வெளிப்படுகின்றன என்கிறார். சிறு வயதில் தன்னை திரையரங்கிற்கு அழைத்துச் சென்ற பக்கத்து வீட்டு தாத்தா, தனது அண்ணனை ஒத்த கல்லூரி மாணவனின் இழிசெயல் போன்ற சிறு சம்பவங்கள் மூலம் வாசகர்களோடு உரையாடலை நடத்துகிறார்.

இந்த நூலின் அட்டைப்பட வடிவமைப்பு மிகச் சிறப்பாக உள்ளது. சந்துரு வடிவமைத்துள்ளார். இது பாலியல் கல்வியை, குறிப்பாக பெண்கள் பார்வையில் முன்வைக்கிறது என்று சொல்லாம். ‘ உடலுறவின் அத்தனை முறைகளிலும், பெண்கள் பெரும்பான்மையான நேரங்களில் உச்சத்தை அடைவது சுய இன்பத்தின் மூலமே’ என்று Sexual Behavior in the Human Female என்ற நூலில், Alfred Charles Kinsey எழுதிய மேற்கோளோடு அந்த அத்தியாயத்தை முடிக்கிறார்.

‘இவரின் கட்டுரைகள் முழுக்கவும் கருத்தியல் தளத்தில் இயங்குபவை, சட்டென புறந்தள்ள முடியாதவை’ என்று இந்த நூலின் அணிந்துரையில்  முனைவர் தமிழ்மணவாளன் கூறுகிறார். ‘மாதவிடாய் நின்று போன பிறகு காம உணர்வு நின்று போய்விடும்’ என்பது ஒரு கட்டுக்கதை என்கிறார்.

‘பாலியல் உறவான கலவி இருபாலருக்கும் ஒரே மாதிரி தேவை. ஆனால், ஆணின் தேவை மட்டும் நிறைவாக முழுமை அடைகிறது. பெண்ணின் மனத்தடையால் அது அவளுக்கு முழுமையும், நிறைவும் தருவதில்லை. இதனால், ஆண் கொடுக்கப்படுபவராகவும், பெண் ஏற்கப்படுபவராகவும் உள்ளார்’ என்று இந்த நூலின் அணிந்துரையில் கூறுகிறார் முனைவர் நா.நளினா தேவி.

நூல் விமர்சனம்; பீட்டர் துரைராஜ்

நோராப் இம்ப்ரிண்ட்ஸ் வெளியீடு,

19/5 நவரத்தினம், ருக்மணி சாலை,

பெசண்ட் நகர், சென்னை – 90/

செ. 9790919982 பக்கங்கள் 224/

விலை; ரூ.225/

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time