அதிர்ச்சியளிக்கும் ரசாயன உர இறக்குமதி!

- சாவித்திரி கண்ணன்

இத்தனை லட்சம் டன்களா இறக்குமதியாகிறது! இத்தனை லட்சம் டன்களா உற்பத்தியாகிறது..? இதன் விளைவுகள் விபரீதங்கள் என்ன? ஏதேனும் ஆராய்ச்சி உண்டா? மண்ணை மலடாக்க, மக்களை நோயாளியாக்க இன்னும் எத்தனை காலம் சொந்தக் காசில் சூனியம் வைப்பது..?

அடிமை இந்தியாவில்  நமது நாட்டை எத்தனையோ அன்னியர்கள் ஆட்சி செய்துள்ளனர்! அவர்கள் பொன், பொருள்கள், தானியங்கள் ஆகியவற்றை கொள்ளையடித்தனர்! அப்போதும் கூட இந்த நாடு ஒன்றும் பெரிதாக பாதிக்கப்படவில்லை! ‘இனி மீளவே வழியில்லை’ என்ற நிலை முன் எப்போதும் ஏற்படவில்லை.ஆம்,ஏற்பட்டதேயில்லை!

ஆனால், சுதந்திரத்திற்கு பிறகான இந்த 75 ஆண்டுகளில் தான் முன்னெப்போதையும் விட இந்த நாடு அதிகமாக சுரண்டப்பட்டுள்ளது.

‘இனி மீளவே வழியில்லையோ…’ என்று அச்சப்படும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்!

அன்னிய ஆட்சி நடந்த போது கூட நாம் நம் கலாச்சாரத்தையோ, இயற்கை வளத்தையோ இழக்கவில்லை!

சுதந்திரத்திற்கு முன்பு தேவைப்படாத இந்த உரங்கள், சுதந்திரத்திற்கு பிறகு கட்டாயத் தேவையாகிப் போனதன் சூட்சுமம் என்ன?

சுதந்திர இந்தியாவில் உணவு பஞ்சத்திற்கான சமூகக் காரணம் ஏன் மறைக்கப்பட்டது..? இங்கு நிலவிய சமூக அடுக்கு நிலைகளும், ஜமீன்தார் மற்றும் ராயத்துவாரி முறைகளும், அதன் கொடூர அடக்குமுறைகளும்  உழைக்கும் மக்களை நில உரிமையில் இருந்து அப்புறப்படுத்தி வைத்திருந்தது தானே முக்கிய காரணம்! அதற்கான தீர்வை விரைந்து எடுக்கும் துணிச்சலின்மை தானே பசுமை புரட்சி என்ற போர்வைக்குள் ஆட்சியாளர்களை ஒளிந்து கொள்ள வைத்தது?

சுதந்திரத்திற்குப் பிறகான ஆட்சிகளில் தானே இந்தியா வெகு மோசமாக சுரண்டப்பட்டு வருகிறது. இப்படி இந்தியாவை சூறையாட அன்னியர் போட்ட திட்டம் தான் பசுமை புரட்சி! உண்மையில் இது பசுமை சூறையாடலே!

இன்றைய நாளிதழ்களில் வந்துள்ள செய்தி நமக்கு அதிச்ர்ச்சியைத் தருகிறது! ‘கடந்த அக்டோபர் மாதம் இந்தியா 23.4 லட்சம் டன்கள் யூரியா, டி.ஏ.பி உள்ளிட்ட ரசாயன உரங்களை இறக்குமதி செய்துள்ளது’ இதன் மதிப்பு எத்தனை ஆயிரம் கோடிகளோ..?

இதே காலகட்டத்தில் இந்தியாவின் பெரு நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்பட்ட ரசாயன உரங்கள் 36.19 லட்சம் டன்களாம்! அக்டோபர் மாதத்தில் மொத்தம் 71.47 லட்சம் டன்கள் ரசாயன உரம் தேவைப்படும் என நிர்ணயித்தார்களாம்! ஆயினும், அதைவிடக் குறைவாகத் தான் கிடைத்ததாம்! ஆக, இவ்வளவு அதிகமான ரசாயன உரப் பயன்பாடு இந்த நாட்டில் உள்ளது என்பதும், இவை எல்லாமே நம் மண்ணில் கொட்டப்பட்டு, மண் வளத்தை சிதைத்து வருகின்றன என்பதும் அதிர்ச்சியளிக்கிறது! பிறகு ஏன் இந்த நாடு நோயாளிகள் நிறைந்த நாடாக இருக்காது? பிறகு ஏன் மண் மலடாகாது..?

ஆம்! அந்த ‘பசுமை புரட்டு’ தான் இன்றைக்கு இந்தியாவின் ஒட்டு மொத்த நிலங்களில் மூன்றில் ஒரு பாகத்தை தரிசாக்கி , நிலவளத்தை ஒன்றுமில்லாமல் சூறையாடிவிட்டது!

செலவில்லாமல் நடந்து கொண்டிருந்த தற்சார்பு விவசாயத்தை மாற்றி.., விவசாயிகளிடம் விதைகள்,உரங்கள், பூச்சி கொல்லி, களை கொல்லி ஆகியவற்றை திணித்து, இதற்கெல்லாம் ஆண்டுதோறும் பல லட்சம் கோடி கொட்டி அழவேண்டிய படுமோசமான நிலைமையை ஏற்படுத்திவிட்டது.

இந்தியாவின் அன்றாட உணவுத் தேவை என்பது அயல் நாட்டிலிருந்து பல லட்சம் கோடி செலவழித்து வாங்கப்படும் நச்சு உரங்களை நம்பித் தான் உள்ளது என்பது எவ்வளவு கேவலம்..? இதன் மூலம் நமது நிலவளமும், உடல் நலனும் நாளும் சூறையாடப்பட்டு வருவது எவ்வளவு பெரிய கொடுமை!

இந்த நிலைமை இன்னும், இன்னும் தொடருமேயானால்..,ஒட்டுமொத்த இந்திய நில வளமும், மக்கள் உடல் நலனும் மீட்டெடுக்க முடியாத அவலத்திற்கு சென்றுவிடும்!

ஏதோ அடிக்கிற உடுக்கையை அடித்து வைக்கிறோம். விழித்துக் கொள்வதும், அழித்துக் கொள்வதும் அவரவர் விருப்பம்!

சாவித்திரி கண்னன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time