பாலியல் அத்துமீறல்களுக்கு பவரும், பதவியும் அங்கீகாரமா?

-ச.அருணாசலம்

இந்திய மல்யுத்த வீரர்கள் அமைப்பின் தலைவரும், பாஜக எம்.பியுமான பிரிஜ் பூஷன் ஷரன் சிங் விளையாட்டுத் துறையில் ஒரு வில்லாதி வில்லனாக நீண்ட காலம் வலம் வந்தது தற்போது அம்பலமாகியுள்ளது! ”அவரது பதவிக்கும், பவருக்கும் அஞ்சமாட்டோம்..’’ என பொங்கி எழுந்துள்ளனர் பெண் வீராங்கனைகள்!

உலகப் புகழ் ஒலிம்பிக் போட்டிகளிலும், சர்வதேச போட்டிகளிலும் பங்கு பெற்று வெற்றி வாகை சூடி, பதக்கங்களை வென்ற  இந்திய மல்யுத்த வீராங்கனைகள் வினீத் போகாட், பஜ்ரங் பூனியா, அன்ஷூ மாலிக் மற்றும் மல்யுத்த வீர்ர் ரவி தாகியா ஆகியோர் கடந்த ஒரு மாத காலமாக புது தில்லி ஜந்தர் மந்தர் முன்பு போராடி வருகின்றனர்.

இந்திய திருநாட்டிற்கு புகழ் சேர்த்த இவ்விளையாட்டு வீர்ர்கள் இளம் வீர்ர்களுடன் சேரந்து ஏன் தெருவில் இறங்கி (ஜந்தர் மத்தர் முன்பு) போராடுகின்றனர்?

இந்திய மல்யுத்த வீர்ர்கள் கூட்டமைப்பின் Wrestling Federation of India  தலைவராக உள்ள பிரிஜ் பூஷன் ஷரன் சிங் என்பவரின் அட்டகாசங்களையும், அதிகார அத்துமீறல்களையும், பாலியல் கொடுமைகளையும், அநாகரீகமான நடைமுறையையும் எதிர்த்து, இவ் வீர்ர்கள் போராடி வருகின்றனர்.

இந்த போராட்டத்தையும், இவ்விளம் வீர்ர்களின் கூக்குரலையும் கோரிக்கையையும் ஏன் ஒன்றிய அரசு கண்டு கொள்ளவில்லை? தேசிய மனித உரிமைகள் ஆணையம் என்ன செய்கிறது? தேசிய மகளிர் ஆணையம் என்ன செய்கிறது? இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவரான பி.டி.உஷா ஏன் எல்லாம் தெரிந்திருந்தும் ஏன் மெளனம் சாதிக்கிறார்?

கடந்த எட்டு வருடங்களில் இந்திய விளையாட்டு துறையையே மாற்றி அமைத்துவிட்டதாக பீற்றிய பிரதமர் எங்கே போனார் ? இது தான் அவர் ஏற்படுத்திய மாற்றமா?

”பேட்டி பச்சோ” என்று பறைசாற்றுவதன் உள்ளார்ந்த அர்த்தம் இதுதானா?

இந்திய மல்யுத்த வீர்ர்கள் கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண்சிங் என்பராவார். இவர் மூன்றாவது முறையாக இக் கூட்டமைப்பின் தலைவராக 2019ம் ஆண்டு போட்டியின்றி “தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்”. இவரை எதிர்த்து போட்டியிடக் கூட யாரும் முன்வர முடியாத அளவுக்கு இவரது அதிகாரம் கொடி கட்டிப் பறக்கிறது.

இவர் பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் . உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த இந்த நபர் ஆறாவது முறையாக பாஜக எம்.பி. யாக தொடர்கிறார் . எனில், அவருடைய  ” செல்வாக்கு” எப்படி இருக்கும் என நீங்கள் யூகிப்பதில் தவறில்லை.

இவர் எங்கு சென்றாலும் 20 க்கும் மேற்பட்ட வாகனங்களில் இவரது (அடி)ஆட்கள் புடைசூழ பின் தொடர்வர் என்கின்றனர்.

 மல்யுத்த போட்டிகளில் வீர்ர்களைவிட ‘தனக்கே’ அதிக முக்கியத்துவம் தர வேண்டுமென்றே உத்தரவிட்டுள்ளாராம். போட்டிகள் தொடங்கிய பின்னர் சம்பந்தமில்லாமல் போட்டியை நிறுத்துவதும் , சாமியார்களின் ஆசி பெறுவதற்காக போட்டி நேரத்தை தள்ளி வைப்பதும், போட்டியை கலைத்து முதலில் இருந்து தொடங்கச் சொல்வதும் இவரது பாணியாகும்.

போட்டியாளர்களை ஏன் பயிற்சியாளர்களையும் அடிப்பதும் இவரது வாடிக்கையாம். இவர் மீது ஏகப்பட்ட வழக்குகள் – கொலை முயற்சி, கொள்ளை, ரகளை , தாக்குதல் குற்றங்களுக்காக – நிலுவையில் உள்ளன.

இவையெல்லாம் ஒரு பாரதீய ஜனதா கட்சி எம்.பி. யின் “இலக்கணங்கள்” தானே என்று சிலர் நினைக்கலாம் . ஆனால் விளையாட்டு உலகிற்கு?

ஜனவரி 18 அன்று இந்திய மல்யுத்த வீர்ர்களான வினீஷ் போகாட், சாக்‌ஷி மாலிக்,அன்ஷு மாலிக் , பஜ்ரங் பூனியா ஆகியோர் மற்ற வீர்ர்களுடன் இணைந்து பிரிஜ் பூஷன் சரண்சிங் மீது பாலியல் வன்முறை , கொடுமை மற்றும் அத்து மீறல் குற்றங்களை முன்வைத்தனர்.

இவரை யாரும் கேள்வி கேட்கவே முடியாதாம்! அப்படி கேட்பவர்களை உடனே அனைவர் முன்னிலையிலும் அடித்து விடுவாராம்!

இளம் வீரரை மேடையில் வைத்து தாக்கும் பிரிஜ் பூஷன் சிங்!

கூட்டமைப்பில், ”இது போன்ற கொடுமைகளும் பாலியல் தொந்தரவுகளும், அத்துமீறல்களும் பல வருடங்களாக தொடர்வதாக கூறிய வீராங்கனைகள், இவ் வமைப்பை முற்றிலும் மாற்ற வேண்டும் என்றும், இதனிடத்தில் அனைத்து வீர்ர்களின் நம்பிக்கையை பெற்ற ஒரு புது அமைப்பு ஏற்படுத்த வேண்டும் என்றும், இப்போதுள்ள தலைவரை நீக்காமல் இப் போராட்டம் ஓயாது’’ என்றும் அறிவித்துள்ளனர்.

அரசு தரப்போ விளையாட்டு துறை அமைச்சர் மூலமாக ரகசிய (இரவு நேரத்தில்) பேச்சு வார்த்தைகள் நடத்தி, போராட்டத்தை கைவிட வற்புறுத்துகின்றனர். ஆனால், வீர்ர்களின் கோரிக்கையான சரண்சிங்கை நீக்குதல் என்ற கோரிக்கை பற்றி வாய் திறக்கவில்லை.

முன்னாள் மல்யுத்த வீர்ரும் தற்போதைய பாரதிய ஜனதா கட்சியாளருமான ப்பிதா போகட் போராட்ட வீர்ர்களை சந்தித்து” மேலிடத்தின் அறிவுரை” யை போராடும் வீர்ர்களிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால், ப்பிதா போகாட் எந்த திருப்திகரமான தகவலையும் கூறவில்லை என்று போராடும் வினீஷ் போகாட் கூறியுள்ளார்.

இதற்கிடையில் போராட்டம் வலுப்பெறுவதை உணர்த்தும் வகையில் பெயஜிங் ஒலிம்பிக்ஸ் போட்டியில் இந்தியாவிற்கு தங்கம் பெற்று தந்த விஜேந்திர சிங் போராட்ட களத்திற்கு வந்து தனது ஆதரவை போராடுவோருக்கு தெரியப்படுத்தினார் .

மற்ற விளையாட்டு துறையை சேர்ந்தவர்களும் தங்களது ஆதரவை வெளிப்படையாக தெரிவிக்க தயங்குவது, போராடுபவர்களுக்கு மட்டும் கவலை தரும் விஷயமல்ல, ஜனநாயகம் சுதந்திரம் மனித உரிமை பற்றி சிந்திக்கும் அனைவரும் கவலை பட வேண்டிய விஷயமாகும். காவிகளின் பாதுகாப்பில் வலம் வரும் பிரிஜ் பூஷன் சிங்கை பற்றிய உண்மையைச் சொன்னால், நாம் காவு வாங்கப்படலாம் என பலர் பயப்படுகின்றனர்!

உள்ளத்திலோ காம எண்ணங்கள்! உடையிலோ காவி வேஷங்கள்!

ஏனெனில், உரிமைகள் மறுக்கப்படும் பொழுது, பறிக்கப்படும் பொழுது, தட்டிக்கேட்க வேண்டியவர்களே தவறிழைக்கும் பொழுது நமக்கென்ன என்று ஒதுங்கியிருத்தல் நமது  ஜனநாயகத்திற்கே விடப்படும் சவாலாகும்.

விளையாட்டு அமைப்புகளின் தலைவர்கள் , தாங்கள் ஏதோ குறுநில மன்னர்கள் போன்று  கேளிக்கை களியாட்டங்களில் திளைப்பதும், அதற்கு இளம் வீராங்கனைகளை பலிகடா ஆக்குவதும் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது. தவறிழைத்தவர்களை தண்டித்து, பதவியை பறித்தாலே நியாயம் கிடைக்கும் .

பல்வேறு சவால்களையும் தடைகளையும் தகர்த்து எறிந்து சீரிய பயிற்சிகள் பெற்று ஏனைய நாட்டு வீர்ர்களோடு போராடி போட்டிகளில் வெல்லவேண்டிய வீர்ர்கள் இன்று சொந்த கூட்டமைப்பின்-அதன் தலைவரின்-  பாலியல்  கொடுமைகளையும்  அத்துமீறலையும் எதிர்த்து போராட வேண்டிய கேடுகெட்ட நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அதிகார அத்துமீறல்கள், பணச்சுருட்டல்கள் போன்ற குற்றசாட்டுகள் ஒரு புறமிருக்க, பாலியல் தொந்திரவு, அத்துமீறல், உடல் தாக்குதல் போன்ற மோசமான குற்றச்சாட்டுகள் கூட்டமைப்பு தலைவரின் மீது சுமத்தப்படும்பொழுது, அதுவும் ஒருவரல்ல, இருவரல்ல ஆறு வீராங்கனைகள் இக்குற்றச்சாட்டை எழுப்பி இருப்பது இந்தியர்கள் அனைவரின் மனசாட்சியையும் உலுக்கி உள்ளது என்பதை யார் மறுக்க முடியும்? பேட்டை ரவுடியைப் போலவும், வேட்டையாடும் விலங்கு போலவும் செயல்படும் ஒருவர் எப்படி விளையாட்டு சங்கத் தலைவராக இருக்க அனுமதிக்க முடியும்?

பேட்டை ரவுடியோ, தாதாவோ எங்களுக்கு தலைவராக இருக்க முடியாது என போராடும் இளம் வீரர்கள்!

ஆனால், இவ்விவகாரம் பற்றி பாஜக தலைமையோ பிரதமரோ அல்லது “அனைத்தும் அறிந்த”  அமீத் ஷாவோ வாயை திறக்கவில்லை என்பது கவனத்திற்கு உரியது.

குற்றஞ்சாட்டப்பட்ட பிரிஜ் பூஷன் சரண்சிங் எம்.பி.யோ, ”நான் எந்த தவறும் செய்யவில்லை, தவறை நிரூபித்தால் தானே தன்னை தூக்கில் போடுவேன் ” என்று திருவாய் மலர்ந்துள்ளார்.

சிறிது நேரங்கழித்து அவர், ”இக் குற்றச்சாட்டுகள் போராட்டங்கள் எல்லாம் காங்கிரஸ் கட்சி  நடத்தும் அரசியல் சூழ்ச்சி , இதற்கு “நான்” ஒருபோதும் பலியாக மாட்டேன்” என்றும் பேட்டியளித்துள்ளார்.

தவறு செய்தவர்களை தண்டிக்காமல் இருப்பதும், அரசியல் காரணங்களுக்காக அவர்களை ஊக்குவிப்பதும் ஆளுவோர்க்கு அழகல்ல. நல்லாட்சிக்கு உதாரணமும் அல்ல.

வீட்டில் ஒழுக்கத்தை பேணாத ஒருவன் குருவாக முடியுமா? பின் ‘விஸ்வ குரு’ என்று பிதற்றுவதன் பொருள் என்ன?

அதிகாரத்திற்கு பயந்து அநீதிக்கெதிராக குரல் கொடுக்க அஞ்சிடும் பிரபல்யங்களை கண்டு சிரிப்பதா அல்லது அழுவதா என்று தெரியவில்லை.

ஆனால், இவ்விளம் வீராங்கனைகளின் அல்லலும், கண்ணீரும் வீண் போகா. தவறிழைத்தவன் தண்டிக்கப் படவேண்டும் . இப்போராட்டம் வென்றிடும் நாள் வெகு தூரத்தில் இல்லை. அதிகாரத்தை கண்டு அஞ்சி தயங்கி நிற்போரும் துணிந்து குரல் கொடுத்தால், தாமதம் தவிர்க்கப்படலாம்.

கட்டுரையாளர்; ச.அருணாசலம்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time