முடக்கப்பட்ட பி.பி.சி ஆவணப் படத்தின் முக்கிய உண்மைகள்!

- ஆசிஷ் ரே

குஜராத் கலவரச் சதியில் இருந்து தப்பித்துக் கொண்ட நரேந்திர மோடியை மீண்டும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றும் பிபிசியின்  இரு ஆவணப்படங்கள் அதிகார அழுத்தால் நீக்கப்பட்டுவிட்டன! ஆயினும், அவற்றில் சொல்லப்பட்டவற்றின் சாராம்சத்தை பிரண்ட் லைனில் ஆசிஷ் ரே எழுதியுள்ளார்! இதோ அதன் தமிழாக்கம்!

”மோடி உள்ளிட்ட இந்துத்துவவாதிகளுக்கு இந்த கலவரத்தில் உள்ள நேரடி தொடர்புகளை பிபிசி ஆவணப்படம் தோலுரித்து காட்டுவதால், பதறிய மத்திய பாஜக அரசு அவரசரகால சட்டங்களை வைத்து இதை முடக்கியுள்ளது. இது ஜனநாயக விரோதம் மட்டுமல்ல, சட்ட விரோதமும் கூட” என இந்தியாவின் அனைத்து எதிர்கட்சிகளும் கண்டித்துள்ளன!

இந்த கலவரம் குறித்து, இங்கிலாந்தில் 2001 முதல் 2006-ஆம் ஆண்டு வரை இருந்த வெளியுறவுத் துறை முன்னாள் செயலர் ஜேக் ஸ்ட்ரா வெளிப்படுத்திய கருத்துக்கள், குஜராத் கலவர புகைப்படங்கள் மற்றும் அறிக்கைகள், கலவரத்துக்கு அப்போது குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடிதான் காரணம் என்பதைச் சுட்டிக்காட்டி பேசுவோரின் வீடியோக்கள் மட்டுமின்றி மோடியின் பேட்டியையும் உள்ளடக்கிய  இந்த ஆவணப்படத்தை இனி பார்க்க முடியாது. எனவே, அந்த ஆவணப்படத்தில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்ற சாரம்சத்தை இங்கே நாம் பார்ப்போம்!

மோடியை மீண்டும் கூண்டில் ஏற்றும் பிபிசியின் புதிய ஆவணப்படம்!

“இந்தியா: மோடி ஒரு கேள்விக்குறி  எனும் பொருள் தரும் தலைப்பில், இரண்டு பகுதிகளைக் கொண்ட ஓர் ஆவணப்படத்தின் முதற்பகுதி, பிரிட்டனில் ஜனவரி 17 அன்றும்  இரண்டாம் பகுதி ஜனவரி 23 அன்றும் ஒளிபரப்பாயிற்று. 2002 – ஆம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற கலவரத்தில் அன்றைய முதல்வர் மோடி குற்றமிழைத்துள்ளார் என பிரித்தானிய அரசு கூறியுள்ளது கலவரம் முடிந்தவுடன், 2002 – ல் பிரித்தானிய வெளிநாட்டு அலுவலகம் ஒரு புலனாய்வு விசாரணையை மேற்கொண்டது.

அவ்விசாரணை அறிக்கைக்கு பின்வருமாறு தலைப்பிடப் பட்டது: “குஜராத் இனக்கலவரம்”.  “வன்முறையின் நீட்சி, அறிவிக்கப்பட்டதைக் காட்டிலும் மிகவும் மோசமானதாக இருந்தது.  குறைந்தது 2,000 பேர் கொல்லப்பட்டனர். பரவலாக, இசுலாமியப் பெண்கள் திட்டமிட்டுக் கற்பழிக்கப்பட்டனர். 1, 38, 000 பேர் உள்நாட்டு அகதிகளாயினர். இந்துக்கள் வாழும், இந்து – இசுலாமியர்கள் கலந்து வாழும் பகுதிகளில் இருந்த இசுலாமியர்களின் வியாபாரங்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டன”.

மேலும் அது கூறுகிறது: “அரசியல் உள்நோக்கத்துடன் பல மாதங்கள் முன்பாகவே இவ்வன்முறை திட்டமிடப்பட்டது. இந்துக்கள் வாழும் இடங்களில் இருந்து, இசுலாமியர்களைத் துடைத்தெறிவதே இலக்கு. இந்து தீவிரவாத அமைப்பான வி ஹெய்ச் பியின் தலைமையில் நடைபெற்ற வன்முறையை, மாநில அரசு ஆதரித்தது. மோடி முதலமைச்சராக நீடிக்கும் வரை மறுசீரமைப்பு என்பது இயலாத ஒன்று”.

“இந்துக்களால் திட்டமிட்டு நடத்தப்பட்ட இவ் வன்முறையில், ஓர் இனத்தை அழித்தொழிக்கும் எல்லா அம்சங்களும் இருந்தன. மாநில அரசு, இக்கொடிய சூழலை உருவாக்கியிருக்காவிட்டால்,  வி ஹெய்ச் பியால் இந்த அளவு பேரழிவை உண்டாக்கியிருக்க முடியாது”.

இறுதியாக இவ்வறிக்கை கூறுகிறது: “இந்த அழிவிற்கு நரேந்திர மோடியே நேரடியாகப் பொறுப்பானவர்”.

இதற்கு இணையான ஓர் ஆய்வை, ஐரோப்பிய ஒன்றியமும் நடத்திற்று. குஜராத் மாநில அரசின் அமைச்சர்கள் இவ்வன்முறையில் தீவிரமாகச் செயல்பட்டதாகவும், காவல்துறையின் மூத்த அதிகாரிகள் இவ் வன்முறையைத் தடுப்பதில் ஈடுபடவேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும் இவ்வாய்வு குறிப்பிடுகிறது. மேலும், 2002 – ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27 – ஆம் நாள், காவல் துறையின் மூத்த அதிகாரிகளை மோடி சந்தித்ததாகவும், கலவரத்தைத் தடுக்க வேண்டாம் என்று அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாகவும், நம்பத்தக்க மனிதர்கள் இத்தகவல்களை தங்களிடம் கூறியதாகவும் இவ்வறிக்கை குறிப்பிடுகிறது.

ஆனால், இக்கூட்டம் நடந்ததையே காவல்துறை மறுக்கிறது என்றும் இவ்வறிக்கை பதிவு செய்துள்ளது.

நேர்மையான அதிகாரிகள் சஞ்சய் பட் மற்றும் ஸ்ரீகுமார்

மோடியின் ஆதரவாளர்கள், இவற்றை மறுப்பதையும் இவ்வாவணப்படம் பதிவு செய்துள்ளது. குஜராத் மாநில உளவுத்துறையின் அப்போதைய தலைவராக இருந்த நேர்மைக்கு பேர் போன ஆர் பி ஸ்ரீகுமாரும், மற்றுமொரு நேர்மையான காவல்துறை அதிகாரியாக இருந்த சஞ்சீவ் பட்டும் மோடி மேற்கூறியவாறு உத்தரவிட்டதாகக் கூறினர்.  ஆனால், முதலமைச்சரின் தரப்பினர் ஸ்ரீகுமாரோ அல்லது பட்டோ இக்கூட்டத்தில் கலந்து கொள்ளவே இல்லை என அதிரடியாக மறுத்தனர். கடந்த 2022 – ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் செய்திகளை திரித்துக் கூறினர் என்று அபாண்டமாக குற்றம் சாட்டப்பட்டனர். ஆனால், வேறு ஒரு வழக்கின் காரணமாக, பட்டுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, அவர் சிறையில் அடைக்கப்பட்டார். கலவரத்தின்போது, காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான இஷான் ஜாஃப்ரியின் வீடு இந்து மத வெறியர்களால் சூழப்பட்டதையும், அப்போது அவர் மோடியைத் தொலைபேசியில் அழைத்ததையும், மோடி அவரது அழைப்பை ஏற்கவில்லை என்பதையும், பிறகு ஜாஃப்ரி கொல்லப்பட்டதையும் இதில் நேரடியாகத் தொடர்புடைய நபர் கூறியுள்ளார்.

இக்காலகட்டத்தில், குஜராத் அரசில் அமைச்சராக இருந்த ஹாரன் பாண்டியா மோடி மேற் கூறியவாறு உத்தரவிட்டதாக இவ்வாவணப்படத்தில் பதிவு செய்திருந்தார். ஆனால், அவர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டார் என்பது மறுக்கப்படுகிறது. பாஜகவின் மாநிலங்களவை உறுப்பினரான சுப்ரமண்ய ஸ்வாமி, ஹாரன் பாண்டியாவின் இறப்பு பற்றிக் கூறுகையில், “அது கொடூரமானதும், மர்மமானதும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

சிதைக்கப்பட்ட சிறுபான்மையினர் குடியிருப்புகள்!

குஜராத் கலவரம் பற்றிய இப்படத்தை பிபிசி இப்போது ஏன் வெளியிடுகிறது?

தற்சமயம் பிரிட்டன் அரசு இந்திய அரசுடன் ஒரு வணிக ஒப்பந்தத்தை கையெழுத்திட இருக்கிறது. பிரிட்டனில் உள்ள தொலைகாட்சி பார்க்கும் ஒவ்வொருவரும் செலுத்தும் அனுமதித் தொகையின் மூலம் “ராயல் சார்ட்டர்” எனும் அமைப்பின் கீழ் இயங்கிவரும் ஒரு பொது ஒளிபரப்பு நிறுவனமாக உள்ளது பிபிசி.

பிரிட்டனின் பிரதமராக இருந்த டோனி பிளேயரின் அமைச்சரவையில் வெளிநாட்டு செயலராக இருந்த ஜாக் ஸ்ட்ரா என்பவர்தான் இந்தப் புலனாய்வுக்கு உத்தரவிட்டார். அதற்கு முன்பாக உள்நாட்டுச் செயலராக இருந்த அவர், 2000 – ஆவது ஆண்டு சுதந்திரமான தகவல் சட்டத்தை நிறுவினார். 2015 – ஆம் ஆண்டு, அச்சட்டத்தை மறுஆய்வு செய்யும் அமைப்பின் ஓர் உறுப்பினராக அவர் செயல்பட்டார். பிரிட்டனின் தகவல் ஆணையத்துடன் ஸ்ட்ராவுக்கு இருந்த நெருக்கமே, இத்தகைய மறைமுகமான புலனாய்வு அறிக்கையை வெளிக் கொண்டு வருவதில் முக்கியப் பங்கு வகித்திருக்கக் கூடும்.

மற்ற ஊடகங்களுடன் ஒப்பிடுகையில், பிரிட்டன் நிர்வாகத்தில் அதிகச் செல்வாக்கு உடையதாக பிபிசி விளங்குகிறது. வேறு எந்த ஊடகம் கோரியிருந்தாலும், இந்தியாவி மோடி உச்சபட்ச அதிகாரத்தில் இருக்கும் தற்சமயம், இரு நாடுகளுக்கு இடையே அரசாங்க உறவில் இது மோசமான அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்கிற காரணத்தால், இத் தகவல்கள் வெளிவராமல் தடுக்கப்பட்டிருக்கும்.

குஜராத் கலவரத்தில் படுகாயமடைந்த குழந்தைகள்!

இதைப்பற்றி ஸ்ட்ரா கூறுகையில்,  “இது அதிர்ச்சியளிக்கிறது. முதல்வராக இருந்த மோடி, காவல்துறை தனது கடமையை செய்ய விடாது தடுத்தார் என்பதும், இந்து தீவிரவாதிகளை கலவரம் செய்ய அவர் ஊக்குவித்தார் என்பதும், தீவிரமான குற்றச்சாட்டுகள். இந்து – இசுலாமிய மதங்களைச் சார்ந்த இருதரப்பு மக்களையும் பாதுகாக்க வேண்டிய காவல் துறையை, அரசியல் காரணங்களுக்காக, செயல் படவிடாமல் செய்தது என்பது அசாதாரணமான எடுத்துக்காட்டு. வெளிப்படையாக மோடியின் செல்வாக்கின் மீது விழுந்த களங்கங்கள் இவை” என்கிறார்.

இந்த ஆவணப் படத்தில் இடம் பெற்றுள்ள பதிவுகளும், நேர்காணல்களும் ஆவணக் காப்பகத்திலிருந்து எடுக்கப்பட்டவை என்றாலும், அவை மோடியை  ஓர் இனவாதியாவே சித்தரிக்கின்றன. “இக்கலவரங்களின் மூலமாக குஜராத் இந்துக்களின் ஆதரவைப்பெறும் நோக்கில், 2002 – இல் தேர்தலை அறிவித்த மோடியின் மனநிலை மிகுந்த அச்சுறுத்தலைத் தருவதாக இருந்தது” என்று பிபிசியின் பெண் நெறியாளர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த பெண் நிருபர் மோடியுடன் நடத்திய உரையாடல்;

பி.பி.சி. நிருபர்; “தங்களது உறவினர்களைக் கொன்ற மனிதர்கள் நீதியின் முன் நிறுத்தப்படாத நிலையில், தங்களது வீடுகளுக்குத் திரும்பச் செல்லப் பயப்படும், இன்னும் அதிர்ச்சியில் உறைந்து கிடக்கும், மக்களுக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?”

மோடி;  “உங்களுடைய ஆய்வை என்னால் ஏற்கமுடியாது. நீங்கள் தரும் தகவல்களையும் என்னால் ஏற்க முடியாது. இது தவறாக வழி நடத்தும் தகவல்.  இவற்றை எங்கிருந்து நீங்கள் எடுத்தீர்கள் என்று எனக்குத் தெரியாது”.

பி.பி.சி நிருபர்; “இவையெல்லாம் தனிநபர்கள் கொடுத்து, வெளியான ஆய்வறிக்கைகள்…”

இடைமறித்து ஆவேசப்படுகிறார் மோடி.

மோடி; “எந்த அரசாங்கத்தின் உள்விவகாரத்திலும் தலையிட அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை. நான் மனதளவில் மிக மிகத் தெளிவாக இருக்கிறேன். அவர்கள் செய்துள்ளது மிகவும் தவறானது”.

பி.பி.சி. நிருபர்; “வேறு ஏதாவது வித்தியாசமாக நீங்கள் செய்திருக்க வேண்டும் என நினைக்கிறீர்களா….?”

மோடி ; “ஆம், ஊடகங்களைக் கையாள்வதில் நான் மிகவும் பலவீனமாக இருந்திருக்கிறேன்….”

இந்த ஒட்டுமொத்த உரையாடலின் போதும், பேட்டி எடுத்த பெண்மணியை நோக்கி, தனது இடது ஆட்காட்டி விரலை மிகுந்த கோபத்துடன் ஆட்டிக் கொண்டே மோடி பேசினார்.

இந்து அடிப்படைவாதக் குழுக்களின் அழைப்பை ஏற்று, 2003 – இல் மோடி பிரிட்டனுக்கு வந்தார். ஆனால், அவரது வருகையை பிரிட்டன் அரசு எதிர்த்தது. அரசு அலுவலகம் தெரிவித்தது:  “அவர் பிரிட்டனுக்கு வருவதை நாங்கள் அறிந்திருந்தோம். மேன்மைக் குரிய அரசியின் அழைப்பிலோ அல்லது அரசின் பேரிலோ அவர் இங்கு வரவில்லை. எனவே அவருடன் எந்தத் தொடர்பையும் நாங்கள் வைத்திருக்கவில்லை”.

சொந்த மண்ணிலே அகதிகளாக்கப்பட்ட இஸ்லாமியர்கள்!

2019 – ஆம் ஆண்டு, ஒரு விபத்தில் இறந்து போன சத்யப்ரதா பால், அப்போது இந்தியத் தூதரகத்தின் துணை அதிகாரியாக இருந்தார். “அப்போது வெளியுறவு அமைச்சராக இருந்த யஸ்வந்த் சின்ஹா, அப்போதைய பிரதமராக இருந்த வாஜ்பாயைச் சந்தித்து, மோடியின் வருகை விரும்பத்தகாத ஒன்று என்றும், அது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய ஒன்று” என்றும் அவர் எழுதியிருந்தார். ஆனால், சங்கப் பரிவார் கொடுத்த நெருக்கடியின் காரணமாக, அவரது வருகை நிகழ்ந்தது. மோடி பிரிட்டனில் இருந்த போது, இலண்டன் நீதிமன்றத்தில், அவரைக் கைது செய்ய ஒரு விண்ணப்பம் கொடுக்கப்பட்டது. ஆனால், அது மயிரிழையில் தவறிப் போனது.

இதில் தொடர்புடைய இம்ரான் கான் என்னும் பிரித்தானிய வழக்கறிஞர் கூறினார்: “நாம் இப்போது எதை அறிகிறோமோ, எத்தகைய தகவல்கள் நம்மிடம் இருக்கின்றனவோ, அவை அப்போது நம்மிடம் இருந்திருந்தால், மோடி கைது செய்யப்படுவதற்கான அரசாணை, அப்போது பிறப்பிக்கப்பட்டிருக்கும்”.

2005 – ஆம் ஆண்டு வாக்கில், மோடி பிரிட்டனுக்கு வருவதை, பிரிட்டன் அரசு தடை செய்திருந்தது. அரசாங்க ரீதியாக, அது தனது எதிர்ப்பைக் காட்டியது. அதே சமயத்தில் தான், அமெரிக்க அரசும் அவருக்கு விசா வழங்க மறுத்திருந்தது.

இந்தியாவிலுள்ள முப்பதுக்கும் மேற்பட்டவர்கள், தங்களுடைய பாதுகாப்புக் கருதியும், அச்சத்தாலும் இந்த ஆவணப்படத்தில் பங்கு பெறுவதற்கு மறுத்து விட்டனர். இப் படத்தில் உள்ள குற்றச்சாட்டுகள் பற்றி, கருத்து தெரிவிக்க இந்திய அரசு மறுத்து விட்டது.

“வரலாறு திருப்பி எழுதப் படுகிறது” என்கிற வரியுடன் இந்த ஆவணப்படம் நிறைவடைகிறது. இதன் இரண்டாவது பகுதி, ஜனவரி 24 அன்று ஒளிபரப்பப்பட உள்ளது. 2019 – ஆம் ஆண்டு, மோடி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டபின் நடந்தவை பற்றி இது பேசும்.

வெளியுறவுத்துறையின் செய்தித் தொடர்பாளர் அரித்தம் பக்க்ஷி இந்த பிபிசி ஆவணப்படம் பற்றிக் குறிப்பிடுகையில், ”முக்கியத்துவம் இல்லாத ஒரு சொல்லாடலைப் பரப்பவே, இது வடிவமைக்கப் பட்டுள்ளது” எனக் கூறி, இதனைக் கடுமையாகக் கண்டித்துள்ளார்.

கட்டுரையாளர்; ஆசிஷ் ரே

இலண்டன் பிபிசி மற்றும் சி என் என் ஆகிய நிறுவனங்களின் ஆசிரியர்.

நன்றி; Frontline 

ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம்; முனைவர் தயாநிதி.

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time