யாருடைய வளத்திற்காக இயற்கை அழிக்கப்படுகிறது..?

சி.ஆ.புவன அபிராமி

“ஒவ்வொரு மனிதனின் தேவையையும் பூர்த்தி செய்வதற்கு போதுமான வளம் பூமியிடம் இருக்கிறது. ஆனால், பேராசையை பூர்த்தி செய்ய அல்ல” என்றார் மகாத்மா காந்தி.  சூழலியலுக்கும், நம் வாழ்க்கைக்கும் உள்ள பிணைப்பு என்ன?  நாம் உண்ணும் உணவுக்கான உற்பத்தியில் பல்லுயிர்கள் அளிக்கும் பங்களிப்புகள் என்ன..? 

இயற்கை வளங்களே உயிரினங்களின்  வாழ்வாதாரத்திற்கான பெருங் கருணையாகும்! விரிந்த கடல், பரந்த ஆகாயம், உயர்ந்த மலைகள், ஒளி தரும் நெருப்பு , சூறாவளியும் தென்றலும் போன்ற காற்று என அனைத்தும் நம்மை வியப்படையச் செய்கின்றன!

சுற்றுச் சூழலில் நம்மைச் சுற்றி இருக்கும் இயற்கையின் ஒவ்வொரு கூறுகளும் கூட நமக்கு முன் மாதிரியான ஆசான் தான் !  இவைகளிலிருந்து ஒவ்வொரு நாளும் நாம் பாடம் கற்றுக் கொண்டுதான் இருக்கிறோம். இயற்கை நமக்கு கற்றுக் கொடுக்கும் பாடம் ஒவ்வொன்றிலும் ஒரு மகத்துவம்  இருக்கும்.

“மணிநீரும் மண்ணும் மலையும் அணி நிழற்

காடும் உடையது அரண்”

தெளிந்த நீரும், பரந்த நிலமும், உயர்ந்த மலையும் மற்றும் அடர்ந்த காடும் இயற்கை அரண்கள் என்று இரண்டு வரிகளில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பதிவு செய்திருக்கிறார் நம் வள்ளுவப் பெருந்தகை.

நீர்நிலைகள், காடுகள், மலைகள் எல்லாம் நமக்கு இயல்பாகவே கிடைக்கப் பெற்ற அரிய மூலதனங்கள்.

பூமி பந்து யாருக்கானது?

உயிர் வாழ்வதற்கான தகவமைப்புகளோடு கோடான கோடி உயிரினங்களை தன் மடியில் அரவணைத்துக் கொள்ளஎழில் நிறைந்தது தான்  பூமி பந்து! எந்தெந்த உயிரினங்கள் எங்கே வாழ்தல் நலம் என்பதையும் பூமிப்பந்தின் கட்டமைப்பு தானாகவே வரையறுத்திருக்கிறது என்றால், பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பல் என்பதற்கேற்ப “பூமி மனிதனுக்கு மட்டுமல்ல, பறவைகள், விலங்குகள், பூச்சிகள் என பல்லுயிர்களுக்குமானது” என்பதே பொருளாகும்.

இயற்கையின் படைப்பில் ஒவ்வொன்றும் அழகானது மட்டுமல்ல! ஒவ்வொரு விதத்தில் தனித்துவம் வாய்ந்தது தான்! சுற்றுச் சூழலை பாதுகாத்து சமநிலைபடுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பவை தான்.எந்த உயிரினமும் தேவையின்றி படைக்கப்படவில்லை. ஒவ்வொன்றிற்கும் அதற்கான வேலைகள், பங்களிப்புகள் உள்ளன. பூமி நமக்கானது மட்டுமல்ல!

பூமி பந்தும் சூழல் அமைப்பும்

ஆறு, ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள், நிலப்பரப்புகள் மற்றும் வளிமண்டலம் அதற்கான பருவநிலைகள் மற்றும் அதனை சார்ந்து வாழ்கின்ற உயிரினங்கள், அவற்றைப் பாதுகாக்கும் முறைகள், சுற்றுப்புறம் மாசடைதல் தொடர்பான விழிப்புணர்வு என உயிரினங்களைச் சுற்றி உள்ள இயற்கையின் மொத்த சாராம்சங்களுமே சூழலியல் தான் நண்பர்களே! அந்த வகையில் மனிதர்கள், விலங்குகள். தாவரங்கள், பறவைகள், பூஞ்சைகள், நுண்ணுயிரிகள் மற்றும் பூச்சியினங்களை உள்ளடக்கியஅமைப்பின் செழுமையான தொகுதிதான் ஆரோக்கியமான சூழலியல்.

சிறந்த சூழல் கட்டமைப்பு கொண்ட உயிரினங்கள் வாழும் உறைவிடம் மற்றும் உணவுச் சங்கிலியின் தொகுதி தான் சூழலியல்

சூழல் அமைப்பில் என்ன இருக்கிறது?

உலகத்தில் உள்ள அத்தனை இயக்கத்திற்கும் அடிப்படை நிலம், நீர்,காற்று, வளி,நெருப்பு இவையே. இவற்றில் ஒன்று இல்லா விட்டாலும், இந்த பூமிபந்தும்சுழலாது. உயிரினங்களின் வாழ்வும் சாத்தியப்படாது.

ஐம்பூதங்களின் சேர்க்கை தான் உலகம் என்பதை

“நிலம், தீ, நீர், வளி, விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகமே”

என்கிறது தொல்காப்பியம்.

சுற்றுச்சூழலில் மனிதர்கள், பூச்சியினங்கள், மிதவை உயிரிகள், மீன்கள், தவளைகள், பறவைகள், தேனீக்கள்,  குளவிகள், தட்டான் பூச்சிகள், பட்டாம்பூச்சிகள், வண்டுகள் மற்றும் பல்லாயிரக்கணக்கானஉயிரினங்கள் ஒன்றுக் கொன்று பின்னிப் பிணைந்துள்ளன. அதில் ஒவ்வொரு உயிரினமும் ஒன்றை ஒன்று சார்ந்து வாழ்வது அறிவியல் முறைப்படி சங்கிலித் தொடர் என்ற பூமியின் உயிர் சூழலுக்கு இன்றியமையாததாகிறது.

இயற்கை என்பது இயல்பாகவே உருவானது.கோடான கோடி உயிரினங்களின் உணவு,உறைவிடமே சிறந்த சிதைவடையாத  சூழல் அமைப்பில் தான் பொதிந்துள்ளது.

இந்த பூமியில் வசிக்கும் உயிரினங்கள் அனைத்துமே ஒன்றை ஒன்று சார்ந்து தான் வாழக் கூடியவை.சிறு புற்கள் உள்ளிட்ட தாவரங்கள் சூரிய ஒளியையும், மேகத்திலிருந்து வரும் நீரையும் எதிர்பார்க்கின்றன.

இதைத் தான் நம் வள்ளுவப் பெருந்தகையும்

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே

பசும்புல் தலைகாண்பு அரிது

என்று கூறி உள்ளார்.

உணவு உற்பத்தியும், பல்லுயிர் பெருக்கமும்

மனிதர்களுடன்,  பறவைகள், விலங்குகள் என  பிற  உயிரினங்களும் தாவரங்களையும், விளையும்காய்களையும்,பழங்களையும்உணவாக உட்கொள்கின்றன.உயிரினங்கள் இடும் எச்சங்களும், சிதைந்த உயிரினக் கழிவுகளும் உரமாக பயன்பட்டு    மரங்களைச் செழிக்க வைக்கின்றன . பறவைகளின், விலங்குகளின் எச்சங்களால் நிறைய வனங்கள் உருவாகின்றன. பறவைகளின் எச்சத்தில் உள்ள சுண்ணாம்புச்  சத்து பயிர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது. பசு, ஆடு உள்ளிட்ட கால்நடைகள்,   கோழி,  வாத்து,காக்கை, குருவி, என பல்வேறு உயிரினங்களின்  கழிவுகள் இயற்கை உரமாகின்றன!

தாவரங்களின் இனப் பெருக்கத்திற்கு பறவைகள், பூச்சி இனங்கள் உதவுகின்றன.பூச்சியினங்கள் உணவுப் பயிர்களின் மகரந்தச் சேர்க்கைக்கு உதவுவதோடு, கழிவுகளை சிதைப்பது, மண்ணை துளைத்து விதைகளை புதைப்பது என பயிர்கள், மரங்கள் மற்றும்காடுகளின் நலனை பாதுகாக்க  உதவுகின்றன. பெரும்பாலான தாவரங்கள் தங்கள் இனப் பெருக்கத்திற்கு தேனீக்கள், குளவிகள் மற்றும் பட்டாம் பூச்சிகளையே சார்ந்துள்ளன. சிலந்திகள், தவளைகள், பல்லிகளின் உணவாகவும் பட்டாம்பூச்சிகள் பயன்படுகின்றன!

பூச்சியினங்களின் இறக்கைகள், கால்கள், கொம்புகள், மீசைகளில் தான் உயிரினங்களின் உணவு பாதுகாப்பு உள்ளது என்பதையும் சுற்றுப்புறத்தில் வீசும் காற்றோடு நிலத்தில் விழக்கூடிய விதைகளை பல இடங்களுக்கு கொண்டு சேர்ப்பதில் இந்த உயிரினங்கள் எல்லாம்  பேருதவியாக இருக்கின்றன என்பதையும் நாம் தெரிந்து கொண்ட பிறகு இவை மிகவும் பிரமிப்பாக இருக்கும்.

வனங்களில், யானைகள்,புலிகளின் எச்சங்கள் தான் பூஞ்சை காளான்களை உருவாக்கி, தாவர உண்ணிகளின்  எண்ணிக்கையை கட்டுப்படுத்தி, பல்லுயிர் பெருக்கத்தை சமநிலைப்படுத்த உதவுகின்றன. உயிர்களின் உணவுச் சங்கிலித் தொகுதியில் புலிகள் மற்றும் யானைகள் எல்லாம் முக்கியமான அங்கமாக திகழ்கின்றன!

இயற்கை வளங்களின் பாதுகாப்பு

தாவரங்களிலுள்ள பூச்சி, புழுக்களையும் மற்றும் வயல் வெளிகளை பாழாக்கும் எலி. பாம்பு போன்றவற்றையும் ஆந்தை, பருந்து உள்ளிட்ட பறவைகள் கட்டுப்படுத்துகின்றன. விவசாய நிலங்களில் பயிர்களுக்கு தீங்கு செய்யும் பூச்சிகளை, பறவைகள் இரையாக்கிக் கொள்கின்றன.விவசாயிகளின் சிறந்த நண்பனாக மண்புழு இருக்கிறது. மற்றும் காடுகளின் காப்பாளர்களாக விலங்கினங்கள் இருக்கின்றன!

ஒரு சூழல் செழிப்பாக  வளம் குன்றாத வளர்ச்சியை தரும் தன்மையுடன் இருக்கிறதா அல்லது சீர்கெட்டிருக்கிறதா என்பதை அறியபூச்சிகள் விலங்குகள்  மற்றும் பறவைகள் தான் சிறந்த அடையாளம் என்கின்றன ஆய்வுகள்.

பருவநிலை மாறுபாட்டின் போது, விலங்குகளும், பூச்சிகளும், பறவைகளும் தங்களுக்கு ஏதுவான வாழிடங்களுக்கு பல ஆயிரம் மைல்களைக் கடந்து வலசை க்காக இடம் பெயர்கின்றன. பறவைகள் ( செங்கால் நாரை, பூநாரை, கொக்கு, நீர்க்காகம்…) வலசை செல்வதை பழந்தமிழ் நூல்களும் எடுத்துரைக்கின்றன. பழந்தமிழ் நூல்களில் பறவைகள் வலசை போவதை “புலம்பெயர் புள்” என்று அழைத்துள்ளனர்.

கடுமையான தட்பவெட்ப நிலை, உறைவிடச்சிக்கல், உணவு பற்றாக்குறையை தவிர்ப்பதற்காக  வாழும் சூழல் நிறைந்த இடங்களுக்கு பிராணிகள்இடம் பெயர்வதை வைத்தே சூழலின் உயிர்ப்பு தன்மையை அறிந்து கொள்ள முடியும்.

இயல்பாகவே இந்த  செயல்பாடுகளெல்லாம் சுழற்சி  முறையில் கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்பதும், இயற்கையின் சீற்றங்களை முன்கூட்டியே அறிவதில்  விலங்கினங்களும், பறவைகளும் முன்னோடியாக திகழ்கின்றன என்பதும் எவ்வளவு ஆச்சரியம்!

பூமி பந்தின் சிதைவும் அபயக் குரலும்

இயற்கை வளங்கள் சீர்கேடு அடைந்து அழியும் போது அதன் அங்கமாக உள்ள பல்லாயிரக்கணக்கான உயிரினங்களும் அழிவது இயற்கை அமைப்பின் பாதுகாப்பு சங்கிலித் தொடரில் துண்டிப்பை ஏற்படுத்துகிறது.  இயற்கை  இயல்பாகவே அமைத்துள்ள உயிரினச் சங்கிலி தொடரில் இருந்து ஒரு கண்ணி துண்டிக்கப்பட்டாலும் ஒட்டுமொத்த சுற்றுச்சூழலின் ஆரோக்கியத்தில் பாதிப்பு என்பது உலகத்தையே நடுநடுங்க வைக்கும் எச்சரிக்கை!

சிறந்தசூழல் தொகுப்பு தான் உயிரினங்கள் வாழ்வதற்கு முக்கியக் காரணி. சூழல் அமைப்பின் ஆரோக்கியம் நம் கையிலிருந்து நழுவாமல் இருக்கும் வரை தான் நமக்கு பாதுகாப்பு. காடுகள் அழிந்து, நிலங்கள் வறண்டு,  நதிகள் வறண்டு, கடல் மட்டம் உயர்ந்து,  ஓசோன் படலம் தேய்ந்து… என எல்லாவற்றையும் இழந்து மனிதர்களாகிய நாம் எதனோடு வாழப் போகிறோம்?

சிதைவிற்கான  காரணம், செயற்கையை நோக்கிய பயணமே

நம் முன்னோர்கள் வாழ்ந்த காலத்தில்,இயற்கையைச் சார்ந்து வாழ்ந்த மனிதர்கள், நவநாகரீக காலச்சுழற்சியின் மாற்றத்தில் போதும் என்ற மனம் இல்லாததால் இயற்கை வளங்களை அழித்து, செயற்கையை உருவாக்கத் தொடங்கியதன் விளைவு ஆயிரக்கணக்கான அரிய வகை உயிரினங்களும் அழிவின் விளிம்பில் நிற்கின்றன!

செயற்கை அறிந்த கடைத்தும் உலகத்து

இயற்கை அறிந்து செயல்

என்ற குறட்பாவின் மூலம் இயற்கையை பாதிக்காத சுற்றுச்சூழல் பாதுகாப்பு வேண்டும் என்று வள்ளுவர் கூறியுள்ளார்.

ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளுக்கு மாறாக,  அதி தீவிரமான அறிவியல் வளர்ச்சியின் நுகர்வு எப்படி சிறந்த சூழலியலை உருவாக்க முடியும்?

சுற்றுச் சூழலில் ஏற்படும் சிதைவு, உயிரினங்களை அழிவின் விளிம்பிற்கு தள்ளி பல உயிரினங்களும் இன்றைக்கு அருகிப் போய் காட்சியகத்தில் கண்காட்சி பொருளாக மாறிக் கொண்டிருக்கின்றன என்பதை  நாம் உணர்ந்திருக்கிறோமா?

நிலம், நீர், காற்று தூய்மைக்கேடு

நகரமயமாக்கல், தொழில்பெருக்கம் மற்றும் மக்கள் தொகை பெருக்கம்,  காற்று மாசு, காடுகள்அழிப்பு, தண்ணீர் பஞ்சம் போன்ற விளைவுகளால் பூமி அதன் வளங்களை வெகுவாக இழந்து வருகிறது. ஒட்டு மொத்த காட்டையும் அழித்து விட்டு ஒன்று இரண்டு மரக்கன்றுகளை நடுவதால் சுற்றுச்சூழல் வெப்பமடைவதையோ, மழையை அதிகரிக்கவோ முடியுமா?

நம் முன்னோர்கள் வகுத்த ஒவ்வொரு நிலத்திற்கும் உரிய மரங்கள்,  பறவைகள் எல்லாம் எங்கே போய்விட்டன என்று தெரியவில்லை. காடு, மலை, வயல் சார்ந்த இடமெல்லாம் மிகவும் அருகி விட்டன.   புன்னை, பனை, அரச மரங்கள் மண் அரிப்பை தடுப்பவை!  நீண்ட காலம் வாழக்கூடியவை. இவையெல்லாம் மிகவும் அரிதாகி விட்டன.

கதிர் வீச்சுகளின்  தாக்கம் பறவையினங்களை எல்லாம் மறைய வைத்து கொண்டிருக்கின்றன என்று தான் சொல்லவேண்டும்.

நெகிழி போன்ற குப்பைகள் மற்றும் வேதிப்பொருட்கள் கலந்த ரசாயன  நச்சு  கழிவுகள்  நீர் மற்றும் நிலத்தை மாசடையச் செய்கின்றன. கரிம வாயுக்கள் குறிப்பாக கந்தகம் மற்றும் நைட்ரஜன் கரிம சேர்ம வாயுக்கள்,  மக்காத கழிவுகள் –  ரசாயனங்களை வெளியேற்றுகின்றன!

இன்றைய சூழ்நிலையில் நீர் நிலைகளுக்கு இயற்கையாகவே நீர் நிரம்பும் வேகத்தைக் காட்டிலும், பன்மடங்கு அதிக வேகத்தில் மனித இனத்தின் செயல்பாடுகள் நீர் நிலைகளை உறிஞ்சி எடுத்து பூமியின் அக ஈரத்தை துடைத்து கொண்டிருக்கின்றன. ஆகாயத் தாமரைகள் அனைத்தும் உயிரினங்களின் வாழ்விடத்தை அபகரித்துக் கொண்டு, தண்டுகளில் காற்றை நிரப்பிக் கொண்டு ஒய்யாரமாக காட்சி தருகின்றன.

நிலத்தை துளையிட்டு நீரை உறிஞ்சிக் கொண்டே இருக்கிறோம்.

அதிக வெப்பமான சூழ்நிலையில் வளிமண்டலத்திற்கு மீத்தேன் மற்றும் ஈதலின் வாயுக்கள் வெளியேற்றப்படுவதாக ஆய்வறிக்கைள் கூறுகின்றன.

தற்போதைய சூழலில் உயிரினங்கள் எல்லாம் மாசுபட்ட நிலப்பரப்பில் வாழ போராடுகின்றன. ஒலி மாசும் சுற்றுப்புறத்தில் சீர்கேடுகளை உண்டாக்குகிறது.

மாசடைந்து கொண்டிருக்கும் சூழல் மனிதர்களை எல்லாம் நோயாளிகளாக மாற்றிக் கொண்டிருக்கிறது . பூமி நமக்கானது அல்ல, நாம் தான் பூமிக்கானவர்கள்.

கழிவுகளை மறுசுழற்சி செய்வதன் மூலம் சுற்றுச்சூழலை மாசு படுத்தாமல் இருப்பதோடு, நமக்கான எரிபொருளையும் நாமே தயாரித்துக் கொள்ள முடியும்.  மக்கும் மற்றும் மக்கா குப்பைகளையும் உரிய வகையில் பயன்படுத்தி மறுசுழற்சி செய்து பயனடைய வழி என்ன என்பதை அறிய  ஆராய்ச்சியில் ஈடுபட   வேண்டும்.

நெகிழிக்கு மாற்றாக பனையோலை பொருட்கள், மண்பாண்டங்கள் பயன்படுத்தலாம். இயற்கை விவசாய  முறைகள் மூலம் மாடித் தோட்டம் அமைக்கலாம். இரசாயன  மருந்துகளை தவிர்க்க வேண்டும். பூச்சிக் கொல்லிகளுக்கு மாறாக இயற்கை பூச்சி விரட்டிகளை பயன்படுத்தலாம்.மரபணு மாற்றம் செய்யப்படாத   பாரம்பரிய விதைகளை பயன்படுத்த வேண்டும்.

காய்கறி தோட்டம், மூலிகை தோட்டம் மற்றும் மாடித் தோட்டம் போன்ற பசுமை பணிகளுக்கான விதைப்பைகளை  விழாக்களில் வழங்கி செடி கொடிகளை வளர்க்கலாம்.

பூமியையும் அதன் வளங்களையும் பாதுகாக்கும் பொறுப்பு தனிமனிதனுக்கு மட்டுமல்ல! ஒட்டுமொத்த சமூகத்திற்கும் உள்ளது. சுற்றுச் சூழலை பாதுகாக்க விழிப்புணர்வு தினநிகழ்வுகள் எல்லாம்   ஒரு நாள் மட்டும்  போதாது. ஒவ்வொரு நொடியும் தேவை சிக்கனமும் பராமரிப்பும் நம் செயல்பாட்டில் தான்!!

இயற்கையோடு இயைந்த வாழ்க்கை முறையை கடந்து செயற்கையை  நுகரத் தொடங்கிய வாழ்வு இன்றைய தலைமுறையை ஆரோக்கியமான சூழலுக்காக எதிராகப் போராடி வாழச் செய்து கொண்டு இருக்கிறது .சிறந்த நோயற்ற வாழ்க்கை முறைக்கு பணத்தை விட மிக முக்கியமானது பரிசுத்தமான ஆரோக்கியமான பூமியும், அதன் வளங்களும் தான்.

நம் முன்னோர்கள் இயற்கையையும், பஞ்சபூதங்களையும் அரவணைத்து வாழ்ந்தார்கள் ஆனால், இன்றைய நவ நாகரீக விஞ்ஞான வளர்ச்சி இயற்கை சூழலை மாற்றியமைக்க முனைந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இவற்றில்  ஏற்படும் மாறுதல்கள் வாழ்க்கைச் சூழ்நிலை சவாலானதாக மாற்றிவிடும்.

அதிகமான பொருளீட்டுவது தான் வளர்ச்சி என்ற புரிதலைமாற்றி, சக மனிதர்களுடனும்,  பிற உயிர்களுடனும் இயற்கையை நேசித்து பாதுகாத்து வாழ்வது  தான் நல்வாழ்வு என்ற புரிதலை வளர் இளம்பருவத்திலிருந்தே ஒவ்வொருவருடைய மனதிலும் விதைத்து அதை செயல்படுத்த வேண்டும்.

வீட்டையும் சுற்றுப்புறத்தையும் பேணிக்காப்போம்!.

இயன்றவரை இயற்கையை சுரண்டாமல் இருப்போம் !.

இயற்கை மீது பேரன்பு கொள்வோம் பாதுகாப்போம்.!

காக்கைக் கூடு _ செங்கால் நாரை விருது _கட்டுரைப் போட்டியில் பரிசு பெற்ற கட்டுரை!

கட்டுரையாளர்; சி.ஆ.புவனஅபிராமி

ஸ்ரீமதி சுந்தரவல்லி நினைவுப்பள்ளி

செங்கல்பட்டு மாவட்டம்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time