மறைக்கப்பட்ட வர்க்க போராட்ட வரலாறு!

-தயாளன்

சுதந்திரத்திற்கு பிறகு நடைபெற்ற மட்டஞ்சேரி துறைமுக கலவரம் குறித்து எந்த அதிகாரபூர்வ பதிவுகளும் இல்லை!  ‘இடதுசாரி சினிமா’ என்ற பெயரில் சாகசவாத சினிமாக்கள் வரும் இந்தச் சூழலில், வர்க்கப் போராட்டத்தின் தீவிரத்தை- உக்கிரத்தை – ரத்தமும் சதையுமாக காட்சிப்படுத்தி இருக்கும் ‘துறமுகம்’ சினிமா வரலாற்றில் ஒரு மைல்கல்.

இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான ராஜீவ் ரவியின் இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் மலையாள படம் துறமுகம். இது ஒரு வரலாற்றுப் படம். 1930க்கும் 1955க்கும் இடைப்பட்ட காலத்தில் கொச்சிக்கு அருகே இருக்கும் மட்டஞ்சேரியில் தொழிலாளர்கள் மீது நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

இந்த கதையை ஆதாரமாக வைத்து ராஜீவ் ரவியின் இயக்கமும், ஒளிப்பதிவும் நம்மை கட்டிப் போடுகின்றன. ஜோஜு ஜார்ஜின் வலிமையான கதாபாத்திரமும், பூர்ணிமாவின் தாய்மையும் படத்தின் ஆதாரங்களாக அமைகின்றன. ஜோஜு ஜார்ஜ் காணாமல் போன பிறகு பூர்ணிமா வெளிப்படுத்தும் வயோதிக உணர்வுகளும் அதன் மேக்கப்பும் அபாரம்.

1930களில் கொச்சி துறைமுகத்தில் நடைமுறையில் இருந்த சாப்பா (Chappa) என்னும் டோக்கன் அமைப்பை களமாக வைத்து திரைக்கதை செதுக்கப்பட்டுள்ளது. துறைமுகத்தில் வரும் கப்பல்களில் இருந்து சரக்குகளை ஏற்றி இறக்கும் கூலித் தொழிலாளர்களுக்கு ‘சாப்பா’ எனப்படும் ஒரு உலோக டோக்கனை தூக்கி வீசுகிறார் முதலாளி. அதை முண்டியடித்து மண்டை உடைத்து கைப்பற்றி கூலித் தொழிலாளிகள் வேலைக்கு போகிறார்கள்.  இதை வரைமுறைப்படுத்தவோ நேர்மையான முறையில் செய்யவோ அப்போதைய முதலாளிகள் தயாராக இல்லை.


தொழிற்சங்கமும் முதலாளிகளின் சார்பிலேயே நடத்தப்படுகிறது. நியாயமான கூலியோ, டோக்கனோ கிடைக்காமல் இந்த நடைமுறை தொடரும் காலத்தில் தான் மட்டஞ்சேரி மைமூதாக வரும் ஜோஜு ஜார்ஜ் தட்டிக் கேட்டு, தனது கடன் பாக்கியை அடைத்துவிட்டு வேலையை விட்டு வெளியேறுகிறார். எனவே, துறைமுகத்தில் கருப்பு வேலைக்கு செல்ல முடிவெடுத்து படகில் கிளம்பியவர் அதன் பின் திரும்பவேயில்லை.  அவரது மனைவி சாண்டா கோபன் தன் இருமகன் மற்றும் மகளை மிகுந்த சிரமப்பட்டு வளர்க்கிறார்.

மூத்தமகன் மொய்து முதலாளிகளின் பக்கம் சாய்ந்து குண்டர் வேலைகளில் ஈடுபட்டு, குடி, மாது என சீரழிகிறார். இன்னொரு மகன் இடதுசாரியாக வளர்கிறார். கட்டிக் கொடுத்த மகள் திரும்பி வந்து விடுகிறார். இறுதியில் முரண்பாடுகள் முற்றி மூர்க்கத்தனமாக தொழிலாளிகளின் போராட்டம் துப்பாக்கி சூடு நடத்தி ஒடுக்கப்படுகிறது. இளைய மகனை துப்பாக்கி சூட்டில் பலி கொடுத்து நிர்க்கதியாக நிற்கிறார் சாண்டா. மூத்த மகன் துறைமுகத்தின் கருப்பு தொழிலில் மாட்டி இறந்து போகிறான்.


படத்தின் நாயகன் நிவின் பாலி. தொழிலாளி வர்க்கத்தில் பிறந்தும், முதலாளிகளுக்கு அடியாள் வேலை பார்க்க போவதும், குடியும், அடிதடியும், கூத்துமாக கதாபாத்திரத்தின் உணர்வுகளை கச்சிதமாக வெளிக் கொணர்ந்திருக்கிறார்.  தம்பி ஹம்சாவாக வரும் அர்ஜூன் அசோகனிடம் சீறுவதும், பின் அவனுக்காக உருகுவதுமாக நிவின் பாலிக்கு, ‘இது ஒரு வாழ்நாள் பாத்திரம்’ என்றே சொல்லலாம்.

படத்தில் மிக உயிர்ப்பான இன்னொரு கதாபாத்திரம் எனில், அது அர்ஜூன் அசோகனுடையதுதான்.  தான் நேசித்த பெண்னை அண்ணன் விரும்புகிறான் என்று தெரிந்து, உள்ளுக்குள்ளேயே குமுறுவதும், ஒரு Jew பெண்ணிடம் பணம் பெறுவதற்காக குறுகுவதுமாக அசத்தி இருக்கிறார். தனது தங்கையின் மருத்துவ செலவுக்காக வட்டிக்கு பணம் பெறுவது, வட்டி கட்ட முடியாமல் அடிவாங்குவது, போலீஸ் தடியடியில் தோழர்களை காப்பாற்ற அடிகளை தன் மேல் சுமந்து கொள்வது என்று அனாயசமான கேரக்டர்.


உம்மணியாக வரும் நிமிஷா சஜயன் வழக்கம் போல் இயல்பான நடிப்பில் கவர்கிறார். போலிசிடமிருந்து தப்பி நிவின் பாலியிடம் சரணடைவது முதல் இறுதி காட்சி வரை அற்புதமாக நடித்திருக்கிறார்.  இவர்கள் போக தொழிற்சங்க தலைவராக நடித்திருக்கும் இந்திரஜித் உணர்ச்சிகரமான வர்க்கப் போராளியாக தீப்பிடிக்க வைக்கிறார். வில்லன் பஜ்ஜீக்காக வரும் சுதேவ் நாயரின் தேர்வும் துல்லியம். படம் முழுக்க ஏராளமான சிறு சிறு கதாபாத்திரங்கள் கூட முக்கியத்துவத்தை பெறுகின்றன.

ஒரு வரலாற்று நிகழ்வை திரைக் கதையாக்கும் சவாலை மிக லாவகமாக செய்திருக்கிறார் ராஜீவ் ரவி. முதல் அரை மணி நேரம் ஜோஜு ஜார்ஜின் கதையை சொல்லிவிட்டு, பின்பு நிவின் பாலியின் கதையிலிருந்து தொடங்கி உச்சகட்டமாக துப்பாக்கிச் சூட்டில் கதை முடிகிறது.  படத்தின் மேக்கிங், வரலாற்றையும் காலத்தையும் மீளுருவாக்கம் செய்திருக்கிறது.

“சாப்பா” அமைப்பையும், கூலித் தொழிலாளிகளின் வாழ்வியலை நேர்த்தியாகவும், நேர்மையாகவும் பதிவு செய்திருக்கிறது படம்.  தூக்கி வீசப்படும் டோக்கனை பிடிப்பதற்காக தொழிலாளர்கள் தங்களுக்குள் முட்டி மோதி அடித்துக் கொள்ளும் காட்சியிலேயே வர்க்கப் போராட்டத்தின் கொடூரமான முகத்தை நமக்கு அறிமுகப்படுத்துகிறார். கள்ளக் கணக்கு எழுதுவதும், தட்டிக் கேட்பவர்களை அடித்து காலி செய்வதும் என முதலாளிய வர்க்கத்தின் கோர முகத்தை பொட்டில் அறைந்தது போல சொல்கிறார் ராஜீவ் ரவி.


துறைமுக கூலி தொழிலாளர்களை அமைப்பாக்குவதற்காக, யூனியன்களின் வீரஞ்செறிந்த போராட்டங்களையும், தியாகங்களையும் மிகுந்த அழகியலோடு காட்சிப்படுத்தி இருக்கிறது ராஜீவ் ரவியின் கேமரா. படம் முழுக்க செவ்வானத்தின் நிறம் ஒளியாக பாய்ச்சப்படுகிறது. முதல் அரைமணி நேரம் கருப்பு, வெள்ளையில் காட்சிப்படுத்தி விட்டு பின்பு செபியா எனப்படும் இளஞ்சிவப்பு வண்ணத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

படத்தின் இன்னொரு தூண் கலை இயக்கமும், உடைகளும். காலத்தைக் காட்சிப்படுத்துவதற்காக, குடிசைகளின் செட், தெரு விளக்குகள், எழுதும் பேனா, துறைமுகங்களின் வளர்ச்சி, உடைகளின் தேர்வு, நடிகர்களின் முடி வெட்டு எல்லாவற்றிற்காகவும் மிகக் கடுமையாக மெனக்கெட்டிருக்கிறார்கள்.

படத்தின் கிளைமாக்ஸில் துப்பாக்கி சூட்டை காட்சிப்படுத்தியிருக்கும் விதம் நம்மை உலுக்குகிறது. ஒவ்வொருவராக குறி பார்த்து சுட்டு சாய்க்கும் அந்தக் காட்சி உலக சினிமாக்களில் இடம் பெறத்தக்க காவியத்தன்மை கொண்டது. கற்களை எறிந்து கொண்டே முன்னேறும் தொழிலாளிகளான சகாவுக்களை ஈவிரக்கமில்லாமல் சுட்டுத் தள்ளும் அந்த காட்சித் தொடர் நம்மைக் கலங்கடிக்கிறது. துப்பாக்கி சூட்டிற்குப்பிறகு தொழிலாளிகளுடைய பெண்களின் ஓலக்குரல் செவிகளைக் கடந்து நெஞ்சில் இறங்குகிறது. வரலாற்றில் சுவடே இல்லாமல் மறைக்கப்பட்ட மட்டஞ்சேரி துப்பாக்கிச் சூடு கதையை தேர்வு செய்து தரவுகளுக்காக அலைந்து திரிந்து படமெடுத்திருக்கும் ராஜீவ் ரவிக்கு பாராட்டுகள்.

சினிமா விமர்சனம்; தயாளன்

தொடர்புக்கு : [email protected]

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time