மாணவி நந்தினிக்கு புதுமை பெண் திட்டம் மறுக்கப்படுவது ஏன்?

-ப.சிவகுமார்

திண்டுக்கல் அண்ணாமலையார் மில்ஸ் பெண்கள் மேனிலைப்பள்ளி மாணவி நந்தினி ப்ளஸ் டூ தேர்வில் முழுமையாக 600 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். முக்கிய ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் கொண்டாடுகிறார்கள். ஆனால், யாரும் அந்த மாணவிக்கு  புதுமைப் பெண் திட்ட உதவியை ஏன் வழங்கக் கூடாது என்ற கேள்வியை எழுப்பவில்லை?

புதுமைப்பெண் என்ற பெயரில் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை படித்த மாணவிகளுக்கு உயர் கல்வி உறுதித்‌ திட்டத்தின் கீழ் மாதம் தோறும் ரூ.1,000 உயர் கல்வி உறுதித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

அரசுப்பள்ளிகளில் பயின்று அரசுக் கல்லூரி, அரசு உதவி பெறும் கல்லூரி, சுயநிதிக் கல்லூரிகளில் தங்களது உயர் கல்வியைத் தொடரும் மாணவ, மாணவிகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க https://penkalvi.tn.gov.in/ என்ற இணையதளத்தையும் தமிழக அரசு தொடங்கியுள்ளது. இதில் பதிவு செய்திருந்த மாணவிகளுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் நேரடியாக அவர்களது வங்கிக்கணக்கில் செலுத்தப்படுகிறது. மாதம் தோறும் ரூ 1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை ஆசிரியர் தினமான கடந்த செப்டம்பர் 5ஆம் தேதியன்று தமிழக அரசு தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது

அந்த வகையில் மாணவி நந்தினி போன்ற அரசு உதவி பெறும் பள்ளியைச் சார்ந்த மாணவ, மாணவிகளுக்கு புதுமைப் பெண் உதவி திட்டம் கிடைக்காது!  இன்று தமிழ்நாடு முதலமைச்சரை மாணவி நந்தினி தனது பெற்றோருடன் சந்தித்துள்ளார். நந்தினியை பொறுத்த அளவில் ”தமிழக அரசே இனி முழு கல்வி செலவையும் ஏற்கும்” என முதல்வர் ஸ்டாலின் கூறிவிட்டதால் பாதிப்பில்லை.

இந்த செய்தியை பார்த்தவுடன்  அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ளது போன்ற இட ஒதுக்கீட்டை   உதவி பெறும் ஏழை, எளிய பள்ளி மாணவர்களுக்கும் விரிவாக்க தமிழ்நாடு அரசாங்க கவனத்துக்கு சில  செய்திகளை கொண்டு செல்ல வேண்டியுள்ளது.

மாணவி நந்தினியின் உயர் கல்வி படிப்புக்கு உதவும் தமிழ்நாடு முதலமைச்சர் ஒரு கொள்கை முடிவு எடுக்க வேண்டும்.

உதவி பெறும் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது போல் குறிப்பிட்ட சதம் உயர் கல்வி படிக்கவும் வேலை வாய்ப்பிலும் இடம் ஒதுக்க வேண்டும். அது அரசு பள்ளி மாணவர்களை பாதிக்காத வண்ணம் கூடுதலாக 2.5 சதவிகிதமாகக் கூட திட்டமிடலாம். அல்லது பேராசிரியர் கல்யாணி குறிப்பிடுவது போல அரசு மற்றும் அரசு உதவி பெறும் மாணவர்களின் மொத்த எண்னிக்கைக்கு ஏற்பவும் திட்டமிடலாம்.

புதுமைப் பெண் திட்டம் அரசு உதவிபெறும் பள்ளி மாணவிகளுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து பலராலும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. அண்ணாமலையார் மில்ஸ் பெண்கள் மேனிலைப் பள்ளி ஓர் அரசு உதவிபெறும் பள்ளி.

தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள  புதுமைப்பெண்  திட்டம் உதவி பெறும் பள்ளிகளுக்கு விரிவாக்கப்படவில்லை .எனவே, இது குறித்து தமிழக அரசு பரிசீலனை செய்து அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் திட்டத்தை விரிவிபடுத்த வேண்டும்.

கட்டுரையாளர்; ப.சிவகுமார்

பேராசிரியர், மற்றும் கல்வி செயற்பாட்டாளர்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time