எடுப்பார் கைப்பிள்ளையா? உண்மை என்ன..?

-சாவித்திரி கண்ணன்

சட்டமன்ற தொகுதி வாரியாக செயல்படுத்தப்படும் நிகழ்வுகள்! தொகுதி வாரியாக நிர்வாகிகள் நியமனங்கள், மாணவர்களிடம் பேசிய அரசியல் .. எல்லாம் அரசியல் ஆசைகளை வெளிப்படுத்துகின்றன..!  நண்பன் யார்? எதிரி யார்? என அடையாளம் காண முடியாத ஒரு அரசியல் சாத்தியமே இல்லை! உண்மையைச் சொல்வாரா விஜய்?

சமீபத்தில் நடிகர் விஜய் நன்றாகப் படிக்கும் மாணவ,மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு பரிசுகள் வழங்கி ஊக்கம் தரத்தக்க வகையில் பேசியுள்ளார்! கல்வியின் முக்கியத்துவம் குறித்தும், கல்வி கூடத்திற்கு வெளியே கற்க வேண்டியது குறித்தும் பேசியுள்ளார்.

ஒரு வகையில் இது வரவேற்கத்தக்க நிகழ்வு என்றாலும், நன்றாக படிக்கும், முதல் ரேங்குகளில் வரும் மாணவ, மாணவிகளை மட்டுமே அழைத்து உதவுவது சரி தானா? என்று யோசிக்க வேண்டும். உதாரணத்திற்கு பத்தாம் வகுப்பு தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற நந்தினிக்கு ஏராளமான நிறுவனங்களும், வைரமுத்து போன்ற தனி நபர்களும், அரசும் பல பரிசுகள் உதவிகள் செய்யும் நிலையில் விஜய்யும் தன் பங்கிற்கு வைர நெக்லஸ் தந்துள்ளார்.

இது வரை சமூகத்தில் சாதித்தவர்கள் பட்டியலை எடுத்தால் சுமாராக படித்த மாணவர்கள் தான் பல்வேறு தளங்களில் சாதித்து உள்ளனர். இன்னும் சொல்வதென்றால், பள்ளி, கல்லூரிகளில் படிப்பு வராமல் இடை நின்ற சிலர் கூட பெரிய சாதனையாளர்களாக, தொழில் அதிபர்களாக உயர்ந்துள்ளனர். நடிகர் விஜய் அவர்களே தன்னை சுமாரான மாணவன் என பகிரங்கமாக கூறிய வகையில் அவரே இதற்கு உதாரணமாகிறார்.

ஆகவே, படிப்பதற்கு உதவி தேவைப்படும் லட்சோப லட்சம் மாணவ, மாணவிகள் இருக்கின்றனர். அவர்களை சற்று மெனக்கெட்டு கண்டறிந்து உதவினால், அது அவர்களுக்கு காலத்தே செய்யும் உதவியாகலாம். இதற்கு நடிகர் சூர்யா பின்பற்றும் மாடலை விஜய் கவனத்தில் கொள்ளலாம்.

சரி, விஷயத்திற்கு வருவோம். இந்த நிகழ்ச்சி மீண்டும் ”விஜய் அரசியலுக்கு வருவாரா?” என்ற கேள்வியை, எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது. காரணம், இந்த நிகழ்வுக்கு மாவட்டம் வாரியாகவோ, தாலுகா வாரியாகவோ மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை. 234 சட்டமன்ற தொகுதிகள் வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். விஜய் பிறந்த நாளின் போது அன்னதானம் செய்த போதும் கூட, ஆங்காங்கே இருக்கும் விஜய் மக்கள் இயக்கங்கள் செய்வதாக அமையாமல் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு ஓரிடம் என நடந்துள்ளது. பொதுவாக அரசியல் கட்சிகள் தாம் இது போன்ற அரசியல் ரீதியான கண்ணோட்டத்துடன் செயல்படுவார்கள்.

விஜய்யின் நடவடிக்கைகளை தொடர்ந்து பார்க்கும் போது அவருக்கு அரசியல் ஆசை இருக்கிறது. ஆனால், அதற்கான துணிச்சல் இல்லாத காரணத்தால் தயக்கமும் இருக்கிறது என்பது தெரிய வருகிறது. கிட்டத்தட்ட ரஜினியும் இந்த மாதிரியான ஒரு நிலைபாட்டிலேயே சுமார் முப்பது வருட காலத்தை ஒப்பேற்றிவிட்டு, கடைசியில் பின்வாங்கினார்.

அரசியலில் ஈடுபடுவதற்கு தேவையான அடிப்படை பண்பு ஒன்று உண்டு. அது  நாட்டு நடப்புகளில் ஈடுபாடு காட்டுவது, அநீதிகளை எதிர்ப்பது, மக்களின் துயரங்களில் பங்கெடுப்பது போன்றவை!

சினிமாவில் சுற்றுச் சூழல் இயற்கை வளங்கள் சூறையாடப்படுவது குறித்து கொந்தளித்து வசனம் பேசிவிட்டு, தினசரி தமிழகத்தில் இருந்து ஆயிரக்கணக்கான லாரிகளில் ஆற்று மணல்களும், மலைகளை தரைமட்டமாக்கி என்சாண்ட் எடுக்கப்பட்டு இயற்கை வளம் கொள்ளை போவது குறித்தும் அமைதி காத்து வருவதில் என்ன பலன் இருக்கிறது..?

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச் சூழலை சூறையாடிய நிலையில், அவர்களின் போராட்டத்திற்கு துணை நிற்க முடியாத ஒருவரால் அரசியலில் என்ன சாதிக்க முடியும்?

டாஸ்மாக் சாராய போதைக்கு அடிமையாக்கப்பட்டு எளிய மக்களின் குடும்பங்கள் சொல்லொணாத் துன்பங்களுக்கு ஆளாகிய நிலையில் அது பற்றி பரிவோடு, பேசவோ, செயல்படவோ யோசிக்கவும் முடியாத ஒருவரால் இங்கு எப்படி அரசியல் செய்ய இயலும்?

தேர்தல் நேரத்தில் ஓட்டுக்கு பணப்பட்டுவாடா கனஜோராக நடக்கும் போது, ”பணத்தை வாங்காதீர்கள்…” என களத்தில் இறங்கி சொல்லத் துணியாமல் உள் அரங்கில் பேசுவதில்  என்ன பலன் கிடைக்கப் போகிறது…?

2009 தொடங்கி ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றிய பிறகு, ஒரு மாதத்திற்கு நான்கு நாளேனும் அதற்கு செலவழித்திருப்பீர்களா? வருடத்திற்கு ஒரு படம் தான் நடிக்கிறீர்கள் எனும் போது மக்களுக்கான சேவையில் ஈடுபட நிறைய நேரம் கிடைக்கிறதல்லவா? என்ன செய்கிறீர்கள்?

‘மெர்சல்’ படத்தில் மருத்துவ கொள்ளைகள் குறித்து தோளுரித்து பேசினால் போதுமா? சம்பாதித்த பணத்தில் நான்கு மருத்துவமனைகளைக் கட்டி மருத்துவ சேவை என்றால் என்ன? என்பதை நிருபித்து காட்டி இருக்கலாமே!

‘சர்க்கா’ர் படத்தில் இலவசங்கள் குறித்து கடுமையான விமர்சனங்கள் வைத்த நீங்கள் தமிழகத்தில் இலவசமாக தொலைகாட்சி பெட்டிகள், மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகள் போன்றவற்றை தேர்தல் வாக்குறுதியாக கட்சிகள் அறிவித்த போது, ”இலவசம் முக்கியமல்ல, நேர்மையான நிர்வாகம் தான் மகக்ள் எதிர்பார்ப்பது, உழைக்கத் தயார், வேலை தாருங்க மக்கள் தாங்களாகவே அனைத்தையும் வாங்கிக் கொள்வார்கள்” என சொல்லி இருக்கலாமே!

2002-20011 திமுக ஆட்சி காலத்தில் சன்பிக்சர்ஸ் ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்த காலத்தில் உங்கள் காவலன் படம் பாதிக்கப்பட்டது. அதை எதிர்க்க துணிவின்றி அமைதி காத்து, 2011 தேர்தலில் ஜெயலலிதா கேட்காமலே அதிமுகவிற்கு ஆதரவு தந்தீர்கள்! ஏன் ஜெயலலிதா நேர்மையான ஆட்சி தரக் கூடியவர் என்பதாலா? அதிமுக வெற்றி பெற்ற பின் அந்த வெற்றியில் அணிலாய் உங்கள் பங்களிப்பும் இருந்தது என சொன்னதற்காக ஜெயலலிதாவால் அவமானப்படுத்தப்பட்டீர்களே! உங்கள் தன்மானம் எங்கே போனது?

2011 தேர்தலில் ஜெயலலிதாவிற்கு வலிந்து ஆதரவு தெரிவித்த போது.

தலைவா படத்தில் டைம் டூ லீட் என்ற வாசகத்தை பேஅனரில் வைத்தற்காக படத்தை திரையிட ஜெயலைதா அரசு தடுத்த போது கொட நாடு ஓடிச் சென்று கும்பீடு விழப் போனீரீர்கள். ஜெயலலிதா பார்க்கவே விரும்பாமல் திரும்பி வந்தீர்கள். இது பற்றி பொதுவெளியில் பேசவும் பயந்து, அம்மா அவர்கள் தலைவா படம் வெளியீட்டிற்கு உதவி செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்து, அம்மாவின் கோபத்திற்கு காரணமான ‘டைம் டு லீட்’ என்ற வாசகத்தை அகற்றினீர்களே..!

அரசியலில் ஈடுபடுவதற்கான முதல் தகுதியே துணிச்சல் தானய்யா! அது உங்களிடம் இருக்கிறதா? என சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள்!

சர்க்கார் படத்தில் ஜி.எஸ்.டி பற்றி பேசியதற்காக பாஜகவினரின் கோபத்திற்கு ஆளானீர்கள்! அதை சமாளிக்க மோடியை நேரில் சந்தித்தீர்களே! மோடி உங்களிடம் விதித்த நிபந்தனை என்ன? சொல்லத் தயாரா?

தற்போதும் கூட, ‘சில முன் நிபந்தனைகளுடன் தான் நீங்கள் அரசியலில் இறங்கிக் கொள்ள பாஜக இசைவு தெரிவித்துள்ளது’ எனச் சொல்லபடுகிறதே..? உண்மையை விளக்குவீர்களா..? உங்களை துவேஷமாகப் பார்த்த இந்துத்துவர்களும், தினமலர் போன்ற பத்திரிகைகளும் இன்று நேசமாகப் பார்ப்பதன் பின்னணி என்ன?

உங்களால் சொல்லவே முடியாது. ஏனென்றால், கருப்பு பணத்தில் புரளும் உங்களால் மத துவேஷத்திற்கு எதிராகவோ, ஊழலுக்கு எதிராகவோ ஒரு போதும் குரல் கொடுக்கவோ, செயல்படவோ முடியாது.

இதோ பக்கத்து மாநிலமான கர்நாடகத்தில் பிரகாஷ்ராஜ் எப்படி சுதந்திரமாக அரசியல் கருத்துகளை மனம் திறந்து பேசுகிறார்! பாஜகவை துணிச்சலாக எதிர்க்கிறார். அநீதியை எதிர்க்க முடிந்தவர்களால் மட்டுமே மக்கள் நம்பிக்கையை பெற முடியும்.

எம்.ஜி.ஆர் ஆக ஆசைப்படுகிறீர்கள்! ஆனால், தமிழகத்தில் யாராலும் எதிர்க்க முடியாதவராக கருணாநிதி கருதப்பட்ட காலத்தில் தான் அவரை துணிந்து எதிர்த்தார் எம்.ஜி.ஆர். அதனால், அவரது உலகம் சுற்றும் வாலிபன் படத்தை திரையிட முடியாத சூழலை கருணாநிதி உருவாக்கினார். எத்தனையோ பல தாக்குதல்களை சமாளித்து தான் எம்ஜி.ஆர் தலைவனாக வெற்றி பெற்றார். ஜெயலலிதாவும் ஏராளமான எதிர்ப்புகளை சந்தித்து தான் மேலெழுந்து வந்தார்!

வலிகளை தாங்க முடியாவிட்டால், அரசியலை நினைத்துக் கூட பார்க்க முடியாது! எடுப்பார் கைப்பிள்ளையாக செயல்படும் ஒரு அரசியலை நினைத்து பார்க்கவே கூடாது! ஏனெனில், அது  துன்பத்தையே பரிசளிக்கும்

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time