வெளி வந்தது ஒன்று! மறைக்கப்பட்டவை ஏராளம்!

-சாவித்திரி கண்ணன்

”இதை போல நூற்றுக்கணக்கான சம்பவங்கள் மணிப்பூரில் நடந்து கொண்டிருக்கின்றன! அதனால் தான் இணைய சேவையை முடக்க வேண்டும்” என்கிறார் மணிப்பூர் முதல்வர்! இந்த வீடியோ வெளியானதே ‘ஒரு சதிச் செயல்’ என்கிறார் மத்திய அமைச்சர்! அதிகார மையங்களின் அனுசரணையோடே அநீதிகள் அரங்கேறியுள்ளன..!

பழங்குடிகளை ஒடுக்குவதற்கு அதிகார மையங்களே அனுசரணை காட்டியுள்ளன.. என்பது தற்போது அம்பலமாகியுள்ளது!  இஸ்லாமியர்களை ஒடுக்கிய குஜராத் பாணியிலான குக்கி இன அழித்தொழிப்பா?

”இரண்டு மாதங்கள் கடந்த நிலையில் இரு பெண்கள் மீதான பாலியல் வன்முறை சம்பவம் ஜுலை மாதம் நாடாளுமன்றம் துவங்கும் முன்பு டிவிட்டரில் பரப்புரை செய்யப்பட்டது ஒரு சதிச் செயல்” என  முன்னாள் மத்திய சட்ட அமைச்சரும், பாஜகவின் முக்கிய தலைவருமான ரவிசங்கர் பிரசாத் ஆத்திரப்பட்டுள்ளார்!

ரவிசங்கர் பிரசாத் இந்த சம்பவம் பற்றி இத்தனை நாள் வாய் திறக்காமல் மெளனம் காத்தது ஏன்? இந்தக் கொடூரச் சம்பவம் மணிப்பூர் தலைநகர் இம்பாலில் இருந்து சுமார் 35 கிமீ தொலைவில் உள்ள காங்போக்பி மாவட்டத்தில் மே 4 ஆம் தேதி நடந்தது. ‘இந்த சம்பவத்தின் போது அங்கு மணிப்பூர் போலீசார் நான்கு பேர் காரில் உட்கார்ந்து இந்த சம்பவத்தை வேடிக்கை பார்த்ததாக’ அதில் பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் ‘தி வயர்’ இணைய தளத்திடம் தெரிவித்துள்ளார். மேலும், அந்தப் பெண் கூறும் போது, ”இந்த சம்பவத்தை தடுக்க முயன்ற என் தந்தையும், சகோதரரையும் அந்தக் கூட்டத்தினர் அங்கேயே அடித்துக் கொன்றனர். இவை எல்லாம் காவல்துறை முன்னிலையிலேயே நடந்தது” எனச் சொல்லி உள்ளார்.

மே-4 ஆம் தேதி நடந்த இந்த சம்பவத்திற்கு குக்கி மக்கள் தந்த புகாரின் பேரில் மே 17 ஆம் தேதி ‘ஜீரோ எப்.ஐ.ஆர்’ காங்போபி மாவட்டத்தின் சைகுல் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு, அது நான்பேக் சேக்மை காவல் நிலையத்திற்கு ‘பார்வர்டு’ செய்யப்பட்டுள்ளது. ‘ஜீரோ எப்.ஐ.ஆர்’ என்பது, சம்பவம் எந்த இடத்தில் நடந்திருந்தாலும், அதை எப்.ஐ.ஆர் ஆக பதிவு செய்யலாம் என்பதற்கானதாகும். அதன் பிறகு இந்த சம்பவத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காவல்துறை கல்லூளி மங்கனாக அமைதி காத்தது என்பதற்கு யார் பொறுப்பேற்க வேண்டும்? மணிப்பூரில் மாநில அரசின் உளவுத் துறை, மத்திய அரசின் உளவுத் துறை, இண்டலிஜன்ஸ் போலீசார்..எல்லாருமே மத்திய, மாநில அரசுகளுக்கு தகவல் தெரிவிக்கத் தானே சம்பளம் கொடுத்து வைத்துள்ளனர்! அந்த வகையில் மணிப்பூர் முதல்வர் பைரோன் சிங்கிற்கும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கும் இந்த சம்பவம் முன்கூட்டியே நன்கு தெரிந்திருக்கவே வாய்ப்புள்ளது.

உண்மை என்னவென்றால், மத்திய, மாநில அரசுகள் மெய்தி இன மக்களுக்கு ஆதரவான நிலையில் இருந்து வருகின்றனர். அதனால் தான் இராணுவ குடோனுக்குள் நுழைந்த மெய்தி வன்முறையாளர்கள் அங்கிருந்த நவீன ஆயுதங்களை எடுத்துச் சென்றதை தடுக்காமல் வேடிக்கை பார்த்தனர். அவற்றைத் திரும்பப் பெறவும் இன்று வரை நடவடிக்கை இல்லை. அதிகார மையத்தின் ஆதரவு தங்களுக்கு இருந்ததை நன்கு உணர்ந்ததாலேயே மெய்தி பிரிவு வன்முறையாளர்கள் உற்சாகமும், ஊக்கமும் பெற்று மனிதாபிமானமற்ற வன்முறைகளை செய்துள்ளனர். சம்பவ இடத்தில் நான்கு போலீசார் வேனில் இருந்தவாறு அனைத்தையும் வேடிக்கை பார்த்ததாக பாதிக்கப்பட்ட பெண் கூறியதை நாம் இதனோடு பொருத்திப் பார்க்க வேண்டும்.

அதன் வீடியோ ஜூலை 19, அன்று சமூக வலைதளங்களில் வைரலானது. அதன் பிறகு தான் மணிப்பூர் போலீசார் இந்த விவகாரத்தில் மெளனம் கலைந்து டிவிட்டரில், ‘அந்த அடையாளம் தெரியாத விஷமிகளைத் தேடி வருகிறோம்’ என பதிவிட்டனர். மெய்தி இளைஞர் அமைப்பு, மெய்தி லீபன் அமைப்பு, மெய்திய்களை பழங்குடிகளாக அங்கீகரிக்க ஏர்படுத்தப்பட்ட குழு..போன்ற பல குழுக்கள் இதில் சம்பந்தட்டது என மணிப்பூர் மக்கள் அனைவருக்கும் தெரிந்த செய்தியாகும்.

இதனையடுத்து இது வரை 77 நாட்களாகப் பற்றி எரிந்து கொண்டிருந்த மணிப்பூர் குறித்து எதுவும் பேசாத பிரதமர் மோடி மவுனம் கலைத்தார். அவர் பேசிய வார்த்தைகள் தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்களால் உருக்கமாக கட்டப்பட்டிருந்தன. “என் இதயம் கோபம் மற்றும் வலியால் நிறைந்திருக்கிறது. மணிப்பூர் சம்பவம் எந்தவொரு நாகரிக சமுதாயத்திற்கும் வெட்கக்கேடானது. மணிப்பூரில் நடந்துள்ள சம்பவம் மனித நாகரிக சமூகத்துக்குக் கிடைத்துள்ள அவமானம். இதற்காக நாடே வெட்கப்படுகிறது. இந்த சம்பவம் 140 கோடி இந்தியர்களை அவமானப்படுத்தியுள்ளது. எந்த குற்றவாளியும் தப்ப மாட்டார்கள்” என்றார். அவர் மைக் முன்பு பேசியதைப் பார்த்த அனைவருக்கும் தோன்றிய எண்ணம் எதுவெனில், பாவம், விருப்பமில்லாத ஒருவரை மைக் முன்பு பேசி நடிக்க நிர்பந்தப்படுத்திவிட்டனர் போலும்!

பிரதமர் இந்த லட்சணம் என்றால், மாநில முதல்வர் பைரோன்சிங்கோ, ஏதோ இத்தனை நாள் அவர் அமெரிக்காவில் இருந்துவிட்டு மணிப்பூர் வந்தவர் போல நடைபெற்ற சம்பவத்திற்கு ஓவர் ரியாக்‌ஷன் தந்துள்ளார். நாடிபெற்ற சம்பவம் தொடர்பாக மணிப்பூர் முதல்வருக்கு அறிவுரையோ, எச்சரிக்கையோ தருவதற்கு திரானியில்லாத மோடி பொத்தாம் பொதுவாக “மாநிலச் சட்டம், ஒழுங்கு, குறிப்பாக பெண்கள் பாதுகாப்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி மாநில முதல்வர்களுக்கு வலியுறுத்துகிறேன்,” எனக் கூறியது இவர்கள் எல்லோருமே பேசி வைத்து தான் எல்லாம் செய்கின்றனர். ஏற்கனவே குஜராத்தில் டிரைலர் 20 வருடத்திற்கு முன்பே பார்த்த கோஷ்டி தானே இது!

இந்த வீடியோ வெளியாகாவிட்டால் இந்த உண்மையை ஆயிரம் அடி பள்ளம் தோண்டி மறைந்திருப்பார்கள் என்பதே உண்மை! நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடப்பதற்கு முந்திய நாள் இந்த வீடியோ வெளியானதால் பிரதமர் வாய் திறக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். இல்லாவிட்டால், மேற்படி சம்பவம் ஏதோ எத்தியோப்பியாவில் நடந்ததாக பாவனை காட்டி கமுக்கமாக இருந்திருப்பார்.

உச்ச நீதிமன்றத்தின் அறச் சீற்றத்தையடுத்து கைதான முக்கிய குற்றவாளி

மேலும், இந்த சம்பவம் குறித்து உச்ச நீதிமன்றத்தின் ரியாக்‌ஷனும் குறிப்பிடத்தக்கது.”வீடியோவை பார்த்து நாங்கள் மிகவும் வருத்தமடைந்துள்ளோம். நடவடிக்கை எடுக்க அரசுக்கு கால அவகாசம் வழங்குகிறோம். அங்கு எதுவும் நடக்கவில்லை என்றால், நாங்கள் நடவடிக்கை எடுப்போம்” என எச்சரிக்கும் நிலைக்கு நீதிபதிகள் உணர்ச்சிவசப்பட்டனர்.

இதையடுத்து தான் கடத்தல், கூட்டுப் பலாத்காரம் மற்றும் கொலை வழக்குப் பதிவு செய்து குற்றவாளி ஹிரதாஷ்சிங் உள்ளிட்ட  நால்வரை மணிப்பூர் போலீஸார் கைது செய்துள்ளனர். மீதமுள்ளவர்களை தேடும் பணி நடந்து வருகிறதாம். ”குற்றம்சாட்டப்பட்ட அனைவருக்கும் மரண தண்டனை கிடைக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்’’ என்று மணிப்பூர் முதல்வர் என் பைரோன் சிங் தெரிவித்துள்ளார். இந்த கலவர காலத்தில் மட்டுமே 45 பாலியல் வன்புணர்வு சம்பவத்திற்கு எப்.ஐ.ஆர் பதிவாகியுள்ளது. அதற்கும் வீடியோ வெளியானால் தான் நடவடிக்கை எடுப்பாரா முதல்வர்?

ஏனெனில், இது வரையிலான சம்பவங்களில் 140 பேர் அதிகாரபூர்வமாக இறந்துள்ளனர். அதில் குக்கி பிரிவினர் மட்டுமே 114 என குக்கி பழங்குடியின் பாஜக சட்டமன்ற உறுப்பினர்களே அம்பலப்படுத்தி உள்ளனர்! 50,000 குக்கி இன மக்கள் மணிப்பூரில் அகதிகளாக்கப்பட்டுவிட்டனர்! மெய்தி பிரிவினரிடம் நவீன ஆயுதங்கள் புழக்கத்தில் உள்ளன. காவல்துறையும், இராணுவமும்  அவர்களின் வெறியாட்டங்களை வேடிக்கை பார்க்கின்றன! இவை எல்லாம் கிறிஸ்துவ மதத்தை பின்பற்றும் பழங்குடிகளை பாஜக அரசு பாரபட்சமாக பார்ப்பதன் அடையாளமாகவே தெரிகிறது!

இரண்டு பெண்களை நிர்வாணமாக  ரோட்டில் கொண்டு செல்கிற கும்பலை பார்க்கும் போது  அவர்கள் பாமர்களாகத் தெரியவில்லை. படித்தவர்களாக நாகரீக உடை அணிந்தவர்களாக உள்ளனர். அந்தக் கூட்டத்தில் ஒருவர் உள்ளத்திலுமே இந்தக் கொடூரம் உறுத்தவில்லையா..? அனைவர் உள்ளத்திலும் அந்த அளவுக்கு வெறுப்பும்,வன்மமும் நிறைந்திருக்கிறது என்றால், இவர்கள் மனிதர்கள் என்ற நிலையில் இருந்தே தரம் தாழ்ந்துவிட்டனர். இவர்களை விலங்குகள் என்று அழைத்தால், அது விலங்கினங்களை இழிவுபடுத்தியதாகிவிடும். பொதுவாக மக்களையே பாசிஸ்டுகளாக மாற்றிவிடுவது தான் சர்வாதிகாரிகளின் செயல்திட்டமாகும். இரண்டாம் உலகப் போரில் ஜெர்மானிய இனத்தையே கொலைகாரர்களாக மாற்றியதன் மூலம் தான் ஹிட்லரால் கோடிக்கணக்கானோரைக் கொல்ல முடிந்தது.

முன்னதாக இந்த சம்பவம் பற்றி நிருபர்கள் மணிப்பூர் முதல்வரிடம் கேள்வி கேட்ட போது, இதைப் போல நூற்றுக்கணக்கான சம்பவங்கள் நடக்கின்றன. ஆகவே தான் இணைய தள சேவையை முற்றிலும் முடக்க வேண்டும் என்கிறேன்’’ என மனதில் உள்ளதை வெளிப்படுத்திவிட்டார்! ஆக, நடைபெற்று வரும் சம்பவங்கள் குறித்து அவருக்கு வருத்தமோ, அறச் சீற்றமோ சிறிதும் இல்லை. அவை வெளியே தெரிந்துவிடக் கூடாது என்பது தான் பைரோன் சிங்கின் ஒரே பிரச்சினையாகும்.

மணிப்பூரின் உள்ளூர் பழங்குடியின அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வீடியோ வெளியானதன் நோக்கம் மத்திய, மாநில அரசுகளை பேச வைபப்து தான். தேசிய மகளிர் அணையம் தலையிட வேண்டும் என்பதும் கூட! பாதிக்கப்பட்ட பெண்களுக்கான நீதியை வேண்டுவதே பிரதான நோக்கம்’ எனக் கூறியுள்ளனர்.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time