வரலாறு காணாத வங்கி மோசடிகள்!

வங்கியில் போடும் பணம் பாதுகாப்பானது என நம்பும் கோடானு கோடி மக்களையும், வாழ்நாள் சேமிப்பை வங்கியில் போட்டுள்ள முதியோர்களையும் ஏமாற்றும் துணிச்சல் எப்படி வருகிறது இந்த ஆட்சியாளர்களுக்கு? மக்கள் பணத்தை கார்ப்பரேட்களுக்கு தாரை வார்த்த, வாராக் கடன்கள் இத்தனை லட்சம் கோடிகளா..?

வரலாறு காணாத அளவிற்கு மோடி ஆட்சியில்  இந்திய வங்கிகளின் வாராக் கடன் தொகை  NON PERFORMING ASSETS (NPA) மதிப்பு 66.5 லட்சம் கோடி யாகவும் இதில் தள்ளுபடி அல்லது வஜா செய்யப்பட்ட தொகை ரூ. 14.5 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது திடுக்கிடும் செய்தியாக உள்ளது. இவை கொடுக்கப்பட்ட விதமும், வாராக் கடன்கள் என தீர்மானிக்கும் அணுகுமுறையும் நம்ப முடியாத அதிர்ச்சியைத் தருகின்றன!

ஒன்றிய நிதி அமைச்சகம் , டிசம்பர் 13, 2022 அன்று அளித்த தகவலின் படி 2014-15 முதல் 2021-22 வரை உள்ள எட்டு ஆண்டுகளில் வாராக்கடன் அளவு மொத்த கடன் மதிப்பில் 2015ல் 4.1% ல் இருந்து 2018ல் 11.46% சதவிகிதமாக கூடியுள்ளது தெரிய வருகிறது.

கடந்த எட்டு வருடங்களில் ( மார்ச் 2014 முதல் 2022 முடிய) மோடியின் உன்னத ஆட்சியில் இந்திய வங்கிகள் – அரசு மற்றும் தனியார் வங்கிகள் அனைத்தும்- அடைந்த நட்டம்  12,09,606 கோடிரூபாயாகும்! இப்படி அதிகம் கொள்ளையடித்த முதல் பத்து பெரும் நிறுவனங்கள்;

வீடியோகான்
DHFl
ABG Shipyard
ILFS
ANIL AMBANI
Mehul chokski
Nirav Modi
REI Agro
Concast Steel and Power
Frost International

இவற்றைக் குறித்து மெயின் ஸ்டிரீம் மீடியாக்களும், கோடி மீடியா என்றழைக்கப்படும் தேசிய தொலைக்காட்சி சானல்களும் இந்த கொள்ளை பற்றி வாய்மூடி இருப்பதேன்?

சத்தமில்லாமல் நடந்த இந்த மிகப்பெரிய திருட்டு அரசியல் ஆசியின்றி நடக்க முடியுமா? அதுவும் மோடி ஆட்சியில் அவரது கண்ணசைவின்றி எதுவும் நடக்க இயலுமா?

அப்படி தவறு நடந்துவிட்டது தெரிந்தவுடன் வங்கிகளை ஏமாற்றியவர்கள் மீது , திருடியவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது, யார் தண்டிக்கப்பட்டனர் ?

வாராக் கடன்கள் மன்மோகன்சிங்கின் ஆட்சி காலத்தில் “போன் பேங்கிங்” மூலமாக கடனளிக்கப்பட்டதால் நடந்தது என முன்னால் சமாளித்த ” சங்கிகளும் அவர்களது ஆதரவாளர்களும் இன்று இந்தியாவில் மட்டும் தான் வாராக்கடன் (NPA) பிரச்சினை உள்ளதா? உலகெங்கிலும் வங்கி கடன் இருக்குமிடங்களில் எல்லாம் வாராக்கடன் பிரச்சினையும் உள்ளது என  இன்று கதையளக்கின்றனர்.

உண்மையில் உலகின் மிக முன்னேறிய நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி , பிரான்சு போன்ற கண்காணிப்பும் ஒழுங்குமுறை நடவடிக்கைகளும் நிறைந்த நாட்டில் வாராக்கடன்

விகிதம் மொத்த கடன் மதிப்பில் 0.4% – 1.4% வரை உள்ளது.

இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் அந்த அளவு 1 முதல் 1.5% ஆகவும்

சைனா, வியத்நாம் போன்ற நாடுகளில் அந்த அளவு    1.6 முதல் 1.8 % ஆகவும், துருக்கி, தாய்லாந்து ஆகிய நாடுகளில் இதன் அளவு. 2.8 முதல் 3% ஆகவும்  உள்ளது.

ஆனால், இந்தியாவோ வங்கிகளை கொள்ளையடிப்பதில் உலகின்  நாடுகளையெல்லாம்  முறியடித்து முன்னணியில் உள்ளது.

ஆம், 31-3-2014ல் 4.1% ஆக இருந்த வாராக் கடன் மதிப்பு 31-3-2018ல் 11.46% சதவிகிதமாக எகிறியது என இந்திய ஒன்றிய அரசின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகிறார்.

கடந்த ஏழு வருடங்களாக (2016 முதல் 2023 வரை) இதன் அளவு உண்மையில் 12.17% சதவிகிதமாக தொடர்கிறது என ஒன்றிய நிதி இணை அமைச்சர் நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இத்தகைய வாராக்கடன்கள் சாதாரண நடுத்தர வகுப்பு மக்கள் வாங்கும்  வாகன கடன்,வீட்டு கடன் சிறு குறு கடன்களால் ஏற்படுவதில்லை. இவை முழுக்க முழுக்க பெருந்தொழில் துவங்க, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்ய போன்ற பெரிய நிறுவனங்களுக்கு தரப்பட்டவையே!

தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி தள்லுபடி வாராக்கடன்கள் பெற்ற நிறுவனங்கள் மார்ச் 31, 2022 வரை!

கொடுக்கப்படும் கடன்கள் தீவிர பகுப்பாய்விற்குப்பின் தொழில் நுட்ப சாத்தியங்கள் மற்றும் பொருளாதார நம்பகத்தன்மை (Technical feasibility and economic viability) ஆகியவற்றை  சீர்தூக்கிய பின்னரே வழங்கப்பட வேண்டும் .

ஆனால், நிரவ் மோடியும், மெகுல் சோக்சியும், நிஷாந்த் மோடி, அமீத் மோடி, வின்சம் டைமண்ஸ் நிறுவனர் ஜதீன் மேத்தா ,போன்றவர்கள் தீவிர பகுப்பாய்விற்கு பின் வங்கிகளிடமிருந்து கடன் பெற்றார்களா அல்லது பாஜகவுக்கும், மோடிக்கும் நெருக்கமானவர்கள் என அழுத்தம் தந்து கடன் பெற்றனரா?

ஒரு லட்சம் கோடி நிலுவை வைத்துள்ள அனில் அம்பானிக்கு மீண்டும் எவ்வாறு கடன் கொடுக்கப்பட்டது? இவர்களெல்லாம் குஜராத்திகள் என்பதனால் கடன் பெற்றார்களா என்பதை உறுதிபடுத்த முடியவில்லை.

அது மட்டுமல்ல, கடனை திரும்ப செலுத்தாமல் கம்பி நீட்டி வெளிநாடுகளுக்கு தப்பி ஓடியதற்கு இவர்களுக்கு அரசியல் தலைமையிடம் இருக்கும் நெருக்கமும், ஒத்தாசையுமே காரணம் என்பதை யாரால் மறுக்க முடியும்?

அரசியல் செல்வாக்கினால் கடன் பெற்ற டாப் 13 நபர்கள் வாராக் கடன் தொகை மொத்த மதிப்பில் மூன்றில் இரண்டு பங்கை வைத்திருக்கும் கேடிகளாக உள்ளனர். தெரிந்தே வாங்கிய கடன்தொகையை வேறு நோக்கங்களுக்கு மடைமாற்றி வங்களுக்கு டாடா காட்டும் இவர்களை wilful defaulters என்று கூறுவர். வங்கியில் கடன் பெற்றுக் கொண்டு பண மோசடியில் ஈடுபட்டு, நாட்டை விட்டே ஓடிப்போனவர்கள் சிலர்.

வாராக் கடன் தொடர்பாக மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில்,”ஸ்டேட் வங்கியில் 8 ஆண்டுகளில் 1.45 லட்சம் கோடி வராக்கடன். வசூல் ஆனதோ 19000 கோடி தாம்! மீதம் ஸ்வாஹா…! இதில் கட்டத் தவறியவர்களின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்படும் என்கிறது பாஜக அரசு! ஆனால்,. கல்விக் கடன், குறு நிதி கடன்களை வசூலிக்க கழுத்தில் துண்டைப் போடுவார்கள் என தெரிவித்திருந்தார்.

உழைத்து சம்பாதித்து வங்கியில் போட்டு வைத்துள்ள இந்திய மக்களின் பணத்தை விழுங்கி செரித்து வெளிநாட்டிற்கு ஓடிய  தொழிலதிபர்கள் சிலரின் பெயர்கள்!

நீரவ் மோடி, நிஷான் மோடி, லலித் மோடி, மெஹுல்சோக்ஷி, புபேஷ் பெய்டியா, ரித்தீஷ் ஜெயின், ஆஷிஷ், சன்னி கல்லாரா, ஆர்த்தி கல்லாரா, சஞ்ஜய் கல்லாரா,  வர்ஷா கல்லாரா, சுதீர் கல்லாரா, ஜித்தின் மேத்தா, உமேஷ் பாரீக், கமலேஷ் பாரீக், நிலேஷ் பாரீக், வினய் மிட்டல், ஏகலைவா கர்ஹ், சேட்டன் ஜெயந்திலால், நிதின் ஜெயந்திலால், தீப்தி பென் சேட்டன், சாவியா சேய்ட், ராஜீவ் கோயல், அல்கா கோயல், விஜய் மல்லையா, ஹித்தேஷ் நாஹேந்தபாய் படேல், மயூரிபென் படேல், ஆஷிஷ் சுரேஷ் பாய் ஆகியோர்.

இந்த லிஸ்டில் உள்ள விஜய்மல்லாவைத் தவிர மற்றவர்கள் குஜராத்திகள் என சொல்லப்படுகிறது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் இறுதிக் காலத்தில் வங்கிகள்-பொதுத் துறை வங்கிகளில்  மட்டும்- லாபமாக 50,000 கோடி ரூபாய் ஈட்டியது. நான்கு வருடங்கள் கழித்து 2018ல் மோடி ஆட்சியில் இதே வங்கிகள் 2.1 லட்சம் கோடி நட்டத்தில் இயங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காரணம், வங்களின் வரவு செலவு கணக்கில் வாராக் கடனளவு அதிகரிக்கும் பொழுது, அதை சரி செய்வதற்கான நிதியை ஒதுக்க வேண்டியுள்ளதால், வங்கிகள் நட்டக் கணக்கில் வந்துள்ளது. 2014ல் 2.51 லட்சமாக இருந்த இக்கடன் தொகை நான்காண்டுகளுக்கு பின்னர் 9.63 லட்சம் கோடியாக பெருகி உள்ளதே இதற்கான மூல காரணமாகும்.

இது எப்படி இவ்வளவு மோசமான நிலையை எட்டியது, இந்த பணமெல்லாம் கொள்ளையடித்தது யார் என அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளனமும், யூனியன் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் கேள்விக் கணைகள் தொடுத்தாலும், அரசோ அல்லது ஊடகங்களோ ஒன்றுமே நடக்காதது போல் கடந்து செல்வதை நாம் பார்த்து வருகிறோம்.

இதையொட்டி ஒன்றிய அரசு வெந்த புண்ணில் வேலை பாய்ச்சியது போல் பெருந்தொழிலதிபர்கள் பெரும் பணக்கார்ர்கள் (super rich)  மீதான வரியை 3.34 % சதவிகித்த்தில் இருந்து (யு பி ஏ ஆட்சியில்) 2.30% சதவிகிதமாக குறைத்து தங்கள் விசுவாசமும், அனுசரணையும் யார் பக்கம் உள்ளது என்று பாஜக அரசு காட்டியுள்ளது.

திவால் தீர்வு செய்யும் முறை!

நம்மை வெகுவாக உறுத்தும் விஷயம் என்னவென்றால், மொத்த கடனில் வாராக் கடன் எவ்வளவு சதவிகிதம் என்பதல்ல, எவ்வளவு பணம் இந்திய வங்கிகள் கடந்த எட்டு ஆண்டுகள் மோடி ஆட்சியில்  உண்மையில் இழந்துள்ளது (lost) என்பது தான்.

இறுதியாக நமக்கு கிடைத்த புள்ளிவிவரங்களின்படி மொத்த வாராக்கடன் ( Gross amount of NPA) 67.66 லட்சம் கோடியாக உள்ளது , இதில் பொதுத்துறை வங்கிகள் 54.33 லட்சம் கோடி கடன்களையும், மீதி வாராக்கடன் (சுமார் 13 லட்சம் கோடி) தனியார் மற்றும் வெளிநாட்டு வங்கிகள் சுமக்கின்றன.

இத்தகைய கடன்களை வசூல் செய்ய அல்லது ஒரு முடிவுக்கு கொண்டுவர Insolvency resolution process ஒன்றை ரிசர்வ் வங்கி அனுமதித்துள்ளது.

இதன்படி திவாலான கம்பெனிகளின் சொத்தை அடிமாட்டு விலைக்கு விற்று, வங்கிகள் வசூல் செய்து கொள்ள வேண்டும் எனவும், இதற்காக தனியான அமைப்பு ஒன்றையும் அறிவித்துள்ளனர்.

இதன்படி வீடியோகான் நிறுவனம் பெற்ற 46,000 கோடிக்கு அந் நிறுவனத்தின் சொத்துக்கள் அனைத்தையும் வெறும் 2,700 கோடிக்கு (6%) வேதாந்தா நிறுவனத்திற்கு விற்று வங்கிகள் தங்கள் கடனை “வசூல்” செய்துள்ளனர்.

22 வங்கிகளை ஏமாற்றி, 28,000 கோடி ஏப்பம் விட்ட ஏபிஜி ஷிப்யார்டு என்ற நிறுவனத்தின்  சொத்துக்களை வெறும் 5% சதவிகித மதிப்பிற்கு அதானிக்கு தாரை வார்த்து, வங்கிகள் கடனை வசூல் செய்ததாக கணக்கு காட்டுகின்றன. அதாவது, அடைந்த நஷ்டம் போதாது என்று வேண்டபப்வர்களை மகிழ்விக்க இன்னுமொரு அயோக்கியத்தனம்! இவையெல்லாம் ஒரு சில உதாரணங்களே!

இப்படி வசூல் செய்தது போக, மீதி கடன் தொகை இழப்பு கணக்கிற்கு செல்கிறது. இத்தகைய இழப்பு கணக்கு ரைட் ஆப் என்ற வகையில் தள்ளுபடி செய்யப்பட்ட தொகையாகும் . மொத்தமுள்ள 66.5 லட்சம் கோடி வாராக் கடன் மதிப்பில் தள்ளுபடி செய்யப்பட்ட தொகை 14.5 லட்சம் கோடியாகும்

இந்த தொகை ஆறு பெரிய மாநிலங்களின் பட்ஜெட் அளவை விட கூடுதலான தொகை என்பதை எண்ணும் பொழுது தலை சுற்றுகிறது.

இது யாருடைய பணம்? வங்கிகளில் போடப்பட்ட சாமான்ய மக்களின் பணம் அல்லவா ?  அதை இப்படி தாரை வார்க்க இவர்களுக்கு யார் அதிகாரம் தந்தது?

இவ்வாறு இந்திய வங்கிகள் நட்டத்தில் தள்ளப்பட்ட பிறகு, இழப்பை சரிகட்ட மறு முதலீட்டை ஒன்றிய அரசு Recapitalisation என்ற பெயரில் அவ்வப்போது நிதி ஒதுக்கி தூக்கி நிறுத்துகிறது. இவ்வாறு ஒதுக்கப்படும் நிதி எங்கிருந்து வருகிறது? ஆட்சியாளர்கள் வீட்டிலிருந்தா அவை வருகின்றன, மக்களின் வரிப்பணத்தினால் வந்த பணம் ஊதாரி தனமாக கடன் கொடுக்கப்படவும், அதன்பின் நட்டத்தில் விழுந்த வங்கிகளை தூக்கி நிறுத்த நிதி உதவுகிறது. இவற்றை நமது வரிப்பணத்தில் இருந்து தான் ஆட்சியாளர்கள் கொடுக்கின்றனர்.

கடந்த எட்டு வருடங்களில் மொத்த இழப்பீடு-Total loss- 14 லட்சம் கோடிகளை தாண்டிய பின்னும் ஆட்சியாளர்களுக்கு மனம் உறுத்தவில்லை. பல ஓடுகாலிகள் வெளிநாடு ஓடி உல்லாசமாக திரியும் நிலையில் ஆட்சியாளர்கள் என்ன செய்தனர்? யாரை இது வரை தண்டித்ததுள்ளனர்? மக்கள் தான் தண்டிக்கப்பட்டுள்ளனர்.

வீடியோகான் விவகாரத்தில் அது தனியார் வங்கியாக (ICICI) இருந்த காரணத்தால் அதன் தலைவர் சந்தா கொச்சார், யெஸ் வங்கி YES BANK தலைவர் ராணா கபூர் ஆகியோர் மீது வழக்கும் கைதும் நடந்தேறின.

பொதுத் துறை வங்கிகளில் கொள்ளையடித்த மோடிகள் மீது எந்த நடவடிக்கைகளும் இல்லை.

அமலாக்கப் பிரிவினர் அயர்ந்து தூங்கி விட்டார்களா..? காவல்துறை கண்ணயர்ந்து விட்டதா?

மன்மோகன்சிங் ஆட்சியில் நடந்த “சத்யம் கம்பியூட்டர்ஸ்” மோசடியில் ராமலிங்க ராஜு வெளிநாட்டிலிருந்து தருவிக்கப்பட்டு தண்டனைக்கு உட்படுத்தப்பட்டாரே!

இன்று மோடி காலத்தில் அனில் அம்பானியும் , நிராவ் மோடியும் உல்லாச பறவைகளாக உலகம் சுற்றுகின்றனரே! வங்கி தலைமை பொறுப்பில் இருந்தவர்களாவது தண்டிக்கப்பட்டார்களா?

இந்த முறைகேடுக்களுக்கெல்லாம் முத்தாய்ப்பாக அதானி குழுமம் இந்திய வங்கிகளையும் குறிப்பாக ஸ்டேட் பாங்க் மற்றும் எல். ஐ. சி . நிறுவனத்தையும்  சுரண்டி கொழுக்க மோடி அரசு அனுமதிப்பதும்,  எதிர்ப்புகளை மீறி தூக்கிக் கொடுப்பது வேதனையளிக்கிறது.

ஒழுங்குமுறை அமைப்புகளான செபி மற்றும் பங்கு சந்தை ஆணையம் (நிஃப்டி போன்ற அமைப்புகள்) சுதந்திரமாக செயல்படாமல் தங்கள் கடமையிலிருந்து வழுவியதால், பங்குகளை போலியாக மதிப்பு கூட்டி கடன் வாங்கும் அதானி குழுமத்திற்கு, அவர்களின்  அக்கௌண்டிங் பிராடு மற்றும் ஷெல் கம்பெனிகளின் கள்ள உறவையும் அம்பலப்படுத்தி இன்டன்பர்க் நிறுவனம் தோலுரித்த பின்னரும் பாஜக அரசு இந்திய பொது சொத்துக்களை  அதானிக்கு தாரை வார்த்ததும் , வாய்மூடி மௌனமாக இருப்பதும் இந்தியாவில் க்ரோனி காப்பிட்டலிசம் ஆலகால விஷ மரமாக (விருட்சமாக) வளர்ந்து வருவதையே காட்டுகிறது.

யார் அப்பன் வீட்டுப் பணம்? வங்கிப் பணத்தை எடுத்து மோசடிப் பேர்வழிகளுக்கு அள்ளிக் கொடுத்து, வாராக் கடன்கள் என அறிவிக்கும் தைரியம் இவர்களுக்கு எப்படி வந்தது?

நமது பணம் எங்கே, யாருக்கு தாரை வார்க்கப்படுகிறது?  அதன் நோக்கம் என்ன..? ஊழல் கறைபடியாத உத்தம சிகாமணிகள் எனத் தங்களை சொல்லிக் கொள்ளும் இந்த ஆட்சியாளர்களின் யோக்கியதை என்ன..? என்ற தெளிவை பெறாவிட்டால், நடுத் தெருதான் மிஞ்சும் நமக்கு.

(முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியும், திரிணமுள் காங்கிரஸ் எம்.பியுமான திரு.ஜாவர் சிர்கார் அவர்கள் ‘தி வயர்’ இதழில் எழுதியதை தழுவி எழுதப்பட்டது)

கட்டுரையாளர்.ச.அருணாசலம்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time