குலக்கல்வித் திட்டத்தின் மறுவடிவமா விஸ்வகர்மா?

-சாவித்திரி கண்ணன்

எளிய கிராமச் சிறு தொழில்கள் செய்வோரை வளர்த்தெடுக்கும் திட்டமா? அழிந்து கொண்டிருக்கும் பாரம்பரியத் திறமைகளுக்கு வாய்ப்பு தரும் நோக்கமா? எளிய தொழில் கலைஞர்களுக்கு ஒரு சமூக அந்தஸ்த்தை உருவாக்கும் முயற்சியா? அல்லது சாதியக் கட்டமைப்பை சிந்தாமல், சிதறாமல் காப்பாற்றும் முயற்சியா..?

விஸ்வகர்மா திட்டத்திற்கு பாஜக அரசு கொடுக்கும் விளக்கம் என்ன?

பாரம்பரிய கைவினைத் திறனில் திறமையான தனி நபர்களை மேம்படுத்த வடிவமைக்கப்பட்ட ஒரு முன்னோடி திட்டமே இது. கைவினைஞர் விஸ்வகர்மாவின் பெயராலான இந்தத் திட்டம் , பல்வேறு கைவினைத் தொழில்களில் ஈடுபட்டுள்ள குடும்பங்களுக்குள் திறன்களைக் கடத்தும் குரு-சிஷ்ய பரம்பரை எனப்படும் ஆசிரியர்- மாணவர் பாரம்பரியத்தை பாதுகாக்கவும், மேம்படுத்தவும் முயல்கிறது என்கிறார்கள்.

அனேகமாகத் தமிழ்நாட்டில் மட்டுமே இந்த திட்டத்திற்கான எதிர்ப்புகள் வெளிப்பட்டுள்ளன! மற்ற மாநிலங்களில் இது தொடர்பான விவாதம் கூட இருப்பதாகத் தெரியவில்லை.

”விஸ்வகர்மா யோஜனா என்ற பெயரில் பரம்பரை பரம்பரையாக செய்துவந்த ஜாதி தொழிலை ஊக்குவிக்கும் குலக்கல்வி திட்டத்தை மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ளது. இதில் 18 வயது நிரம்பியவர்கள் விண்ணப்பிக்கலாம் என்பது, தந்தை தொழிலை மகன் செய்வதற்கான சூழ்ச்சியாகும். மேலும், மாணவர்களின் உயர் கல்வியைத் தடுக்கும்…” என எதிர்ப்பவர்கள் தரப்பில் வாதங்கள் வைக்கப்படுகின்றன.

இந்த திட்டம் குறித்து வி.சி.க தலைவர் திருமாவளவன், ”இது சாதிய கட்டமைப்பை நிலைப்படுத்துவதற்கான முயற்சி.திறன் மேம்பாட்டு பயிற்சி என்பது வேறு. ஆனால் இத் திட்டத்தில் தொழிலில் திறன் பெற்றவர்களை குலத் தொழிலாளியாக்க வேண்டும்என்ற ஆர்எஸ்எஸ் செயல் திட்டத்தை நிறைவேற்றுகின்றனர்” என்கிறார்.

பாஜகவினர் செய்யும் விளம்பரம்

”விஸ்வகர்மா  யோஜனா திட்டத்தில் சாதியை முன்னிறுத்தி கடன் வழங்குவதிலேயே அதன் உள்நோக்கம் புரிகிறது” என்ற வாதம் கவனத்திற்கு உரியது. இந்த திட்டத்தில் சாதியை முன்னிறுத்தி கடன் தரப்படுவது தவிர்க்க வேண்டும். விண்ணப்பதாரரின் குடும்பம் பாரம்பரியமாக அந்தத் தொழிலை செய்து வர வேண்டும் என்ற நிபந்தனை தவிர்த்துப் பார்த்தால், இந்த திட்டத்தில் பல நல்ல அம்சங்கள் தெரிகின்றன. ஏனெனில், இன்றைய கார்ப்பரேட் யுகத்தில் எளிய சிறுதொழில் முனைவோர் காப்பாற்றப்பட வேண்டும். இந்த சிறுதொழில்களே நிறைய பேருக்கு வாழ்வாதாரமாக உள்ளது.

இந்த திட்டம் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் 18 பாரம்பரிய வர்த்தகங்களை உள்ளடக்கியது  என்றும் இந்த வர்த்தகங்கள் தச்சர்கள், படகு தயாரிப்பாளர்கள், கொல்லர்கள், குயவர்கள், சிற்பிகள், செருப்புத் தொழிலாளர்கள், பொற்கொல்லர், குயவர், சிற்பிகள், காலணி தைப்பவர், கொத்தனார், கூடை பாய், துடைப்பம் நெய்பவர், முடி திருத்துபவர்கள், பூமாலைகளை கட்டுபவர்கள், சலவைத் தொழிலாளர், தையல்கலைஞர், மீன்பிடி வலை தயாரிப்பவர், படகு தயாரிப்பவர்கள், கவசம் தயாரிப்பவர்கள், இரும்புக் கொல்லர்கள், சுத்தியல் மற்றும் கருவிகள் செய்பவர்கள், பூட்டுகள் செய்பவர்கள் போன்றவர்கள் இதில் அடங்குவர். 5 ஆண்டுகளில் இத்திட்டம் மூலம் 30 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

விஸ்வகர்மா திட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டம்.

விஸ்வகர்மா யோஜனாவிற்கான பதிவை கிராமங்களில் உள்ள பொதுவான சேவை மையங்களில் செய்யலாம் என்கிறார்கள்.

இத்திட்டத்திற்கு மத்திய அரசு நிதி வழங்கும் அதே வேளையில், மாநில அரசுகளின் ஆதரவும் பெறப்படும்.எனச் சொல்லப்படுவதில் இருந்து மாநில அரசையும் இணைத்தே இந்த திட்டம் நடைமுறைப்படுத்த உள்ளது என்பது தெரிய வருகிறது. அந்த வகையில் இது வரை இந்த திட்டத்தை எதிர்த்து திமுக அரசின் முதல்வர் ஸ்டாலின் எந்தக் கருத்தும் சொல்லவில்லை.

விஸ்வகர்மா யோஜனா திட்டத்திற்கு 2023-2024 முதல் 2027-2028 வரையிலான ஐந்து நிதியாண்டுகளுக்கு 15,000 கோடி வரை பட்ஜெட் ஒதுக்கீடு செய்துள்ளது ஒன்றிய அரசு .

இத்திட்டத்தில் திறன் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு அதில் கலந்து கொள்பவர்களுக்கு நாள் ஒன்றுக்கு உதவித் தொகையாக ரு 500 தரப்படுவதோடு தொழில் தொடர்பான நவீன கருவிகள் வாங்க ரூ15,000 உதவி தொகை வழங்க உள்ளோம் என்கிறார்கள். அத்துடன் எந்த ஒரு அடமானப் பத்திரமும் இன்றி இந்த எளிய கலைஞர்களுக்கு ஒரு லட்சம் முதல் இரண்டு லட்சம் வரை கடன் தரப்படும் என ஒன்றிய அரசு தெரிவித்து உள்ளது.இவ்வளவு பெரும் தொகை எளிய மக்களை சென்றடைவது உண்மையிலேயே மகிழ்ச்சியளிக்கிறது.

செருப்பு தைக்கும் தொழிலாகட்டும், மண்பாண்டங்கள் செய்யும் தொழிலாகட்டும், பூமாலை கட்டும் தொழிலாகட்டும் எல்லாமே உன்னதமானவையே. எதுவும் இழிவில்லை. இந்த தொழிலுக்கு ஒரு சமூக அந்தஸ்த்தை உருவாக்கி, இந்த கலைஞர்கள் பொருளாதாரத்தில் நிறைவு கொள்ளத் தக்க சூழலை உருவாக்குவதைக் காட்டிலும் மகத்தான பணி வேறென்ன இருக்க முடியும். மகாத்மா காந்தியும் கிராமத் தொழில்கள் அழியாமல் வளர்த்தெடுக்கப்பட வேண்டும் என வாழ்நாளெல்லாம் வலியுறுத்தி வந்தார். எனவே, இந்த திட்டத்தில் உள்ள தவறான சில நிபந்தனைகளை தளர்த்திவிட்டு, இந்த திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்.

இன்றைக்கு முடிவெட்டும் தொழில் கூட நவீனமாக லாபகரமாக செய்யக் கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இதில் பாரம்பரியமாக உள்ளவர்களுக்கு நல்ல சொகுசான ஒரு முடிதிருத்தகம் வைக்க வாய்ப்பை உருவாக்கி தருவது மகத்தான சேவை தான்! செருப்பு தைப்பவருக்கு அவர் செய்யும் செருப்பை விற்பதற்கு ஒரு நல்ல ஷோ ரூம் உருவாக்கித் தந்து அவர் மரியாதையும், பொருளாதார வளத்தையும் பெற உதவ முடியுமானால் அதை நாம் கொண்டாடலாம். குலத் தொழில் செய்வதா? வேண்டாமா? என்பதை அந்தந்த இளைஞர்களின் முடிவுக்கு விட வேண்டும். அப்பா செய்த தொழிலை மகன் நவீனமாகச் செய்து நல்ல லாபம் பார்க்க வாய்ப்பிருந்தால், அதை தடுக்க நமக்கு உரிமை இல்லை. அதே சமயம் விருப்பமில்லாதவனை குலத் தொழிலுக்கு கட்டாயப்படுத்துவது கடுமையான கண்டணத்திற்கு உரியதாகும்.

இந்த திட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்துவது தொடர்பாக தமிழக அரசு அந்தந்த தொழில்கள் செய்யும் சங்கத்தினரை அழைத்து பேசி கலந்துரையாடி செயல்படுத்துவது சிறப்பாக இருக்கும்.

அதே சமயம் மத்திய அரசின் மற்றொரு திட்டமான லக்பதி திதி திட்டம் தான் ஆபத்தான திட்டமாகத் தெரிகிறது.

கிராமங்களில் இரண்டு கோடி “லக்பதி திதிகள்”  எனப்படும் வளமான சகோதரிகளை உருவாக்குவதே அரசின் குறிக்கோள் . இந்த திட்டம் வறுமை ஒழிப்பு மற்றும் பொருளாதார வலுவூட்டல் என்ற பரந்த நோக்கத்துடன் இணைந்துள்ளது என விளம்பரப்படுத்தி உள்ளார்கள்!

விவசாய நடவடிக்கைகளுக்காக பெண் சுய உதவிக் குழுக்களுக்கு ஆளில்லா ட்ரோன்கள் வழங்கப்படுமாம்.இந்தத் திட்டம்  விவசாய நிலப்பரப்பை மாற்றுவதற்கான தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாம். இதன்படி சுமார் 15,000 பெண்கள் சுய உதவிக் குழுக்களுக்கு ஆளில்லா விமானங்களை இயக்குவது மற்றும் பழுது பார்ப்பது குறித்த பயிற்சி அளிக்கப்படுமாம்.

ட்ரோன்கள் மூலம் துல்லியமான விவசாயம் பயிர் கண்காணிப்பு மற்றும் பூச்சி கட்டுப்பாடு ஆகியவற்றை செயல்படுத்துவதன் மூலம் விவசாயத்தில் புரட்சியை ஏற்படுத்தப் போகிறார்களாம்!

ஆக, விவசாயத்தில் கார்ப்பரேட் கம்பெனிகளின் பூச்சி மருந்தை தெளித்து, அவர்களுக்கு வியாபார விருத்தி செய்து தர மத்திய பாஜக அரசு பெண்களை கருவியாக்கிக் கொள்கிறது என்றே தோன்றுகிறது. இது தான் – லக்பதி திதி – எதிர்க்க வேண்டிய ஆபத்தான திட்டமாகும். இது குறித்து எல்லா கட்சிகளும் மெளனம் சாதிப்பது தான் கவலையளிக்கிறது.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time