காஷ்மீர் மாநிலத்தின் 370 எனும் தனித் தகுதியை நீக்கியதை எதிர்த்த வழக்கில் தற்போதைய தீர்ப்பானது இந்திய வரலாற்றில் ‘கரும்புள்ளி’யாகும். மத்திய அரசின் ஏஜெண்டுகளான ஆளுனரோ, ஜனாதிபதியோ ஒரு மாநிலத்தை பிளக்கலாம், யூனியன் பிரதேசமாக்கலாம் என்பதை நியாயப்படுத்தவா.. உச்ச நீதிமன்றம்..?
இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் (Union of States) என்ற அரசியல் சாசன விதியை மறந்த சக்திகள், மாநிலங்களை தங்கள் இஷ்டம் போல் துண்டாடி, ஒற்றை ஆட்சி முறைக்கு (Unitary State) இட்டுச் செல்ல இத் தீர்ப்பு வழிவகை செய்துள்ளதோ..என அச்சம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.
வழக்கு விசாரணையின் போது வீராவேசமாக கேள்விகள் தொடுக்கும் நீதிபதிகள் இறுதி தீர்ப்பின்போது அந்தர் பல்டி அடித்து ஆளுவோரின் அனுகூலத்தை நாடுகின்றனரா? தெரியவில்லை. ஆனால், ஆதிக்க மனோபாவமும் எதேச்சதிகாரமும் தான் இந்தியாவின் அடையாளம் என நீதியரசர்கள் ஏற்கின்றனரா,,? என்பது விடை காண வேண்டியதாக உள்ளது.
இறிதி தீர்ப்பில் எப்படியெல்லாம் வியாக்கியானம் தருகிறார்கள்…! மத்திய அரசு எடுக்கும் முடிவுகளை கேள்விக்கே உள்ளாக்க முடியாதாம்! மத்திய அரசின் முடிவுகள் சட்ட ரீதியான சவால்களுக்கு அப்பாற்பட்டதாம்! மத்திய அரசின் முடிவை எதிர்ப்பது குழப்பத்திற்கே வழி வகுக்குமாம்!ஒரே ஆறுதல் ஐவரில் ஒருவரான சஞ்சீவ் கிஷன் கெளல் இந்த தீர்ப்பை ஏற்கவில்லை. மற்றொரு நீதிபதி சஞ்சய் கண்ணாவோ ஒரு தீர்ப்பிலுமே உடன்படுதாக இரண்டுங்கெட்டான் நிலைபாட்டை சொல்லி உள்ளார்!
பதுங்கி தாக்கியவனுக்கும், பாதிப்படைந்தவனுக்கும் உண்மையில் நடந்தது என்ன என்பது புரியும், தெரியும். ஆனால், இதை விசாரிக்கும் நீதிபதிக்கு உண்மை தெரியாமல் போய்விட்டதா? எந்தத் தீர்ப்பு உண்மையின் உரைகல்லாகவும், சார்பற்றும், நேர்மைத் தெளிவிலும் அமைய வேண்டும். இந்த தீர்ப்போ இதற்கு நேர்மாறாக உள்ளது!
370 என்பதையே கூட வெகுவாக நீர்த்து போன அளவில் வைத்து, காஷ்மீர் மக்களை கழுத்தறுத்து வந்தது போதாது என்று, ஊசாலாடிக் கொண்டிருந்த குறைந்தபட்ச ஜனநாயகத்தையும் குழியில் அல்லவா தள்ளிவிட்டனர்! இனி அங்குள்ள மக்கள் நிலைமை படுமோசமடையும்.
அரசியல் சட்டப் பிரிவு 370 ஐப் பற்றிய தீர்ப்பு உண்மையை காவு கொடுத்த ஒரு கோழைத்தனமான தீர்ப்பாகும்! அரசியல் சட்டப்பிரிவு 370ஐ நீக்க திட்டமிட்டே தான் பங்கேற்றிருந்த மஃப்டி முகமது தலைமையிலான கூட்டணி ஆட்சியில் இருந்து விலகியது பா ஜ க! இவர்கள் நியமித்த கவர்னர் மூலம் , வேறு ஆட்சி ஏற்பட எந்த சந்தர்ப்பமும் கொடுக்காமல் ஜம்மு காஷ்மீர் மாநில சட்டசபையை கலைத்து , கவர்னர் ஆட்சியை ஏற்படுத்தப்படுத்தியது 2018 ஜூன் மாதத்தில்! இதன் பிறகு ஆறாவது மாதத்திலேயே ( டிசம்பரில்) ஜனாதிபதி ஆட்சி அரசியல் பிரிவு 356 ஐ பயன்படுத்தி அமல் செய்யப்பட்டது,
அதை தொடர்ந்து, 2019 ஆகஸ்டு 5ல் ஜனாதிபதி உத்தரவின் மூலம் 1954 வருடத்திய ஆணையை ரத்து செய்து, இந்திய அரசியல் சாசன பிரிவுகள் முழுவதும் ஒருசேர ஜம்மு காஷ்மீருக்குப் பொருந்தும் என பிரகடனப்படுத்தியது! இதற்கு மறுநாள் (ஆகஸ்ட,6ல்) அரசியல் பிரிவு 370ஐ ரத்து செய்து, காஷ்மீர் மாநிலத்திற்கான தனி அந்தஸ்து உரிமையையும் பறித்தது பாஜக அரசு;
இதைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு உத்தரவு மூலம், காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப் பிளந்து இரு யூனியன் பிரதேசங்களாக அறிவித்தது.
அரசியல் பிரிவு 370ஐ ரத்து செய்ய, தனி அந்தஸ்தை விலக்க அரசியல் சாசனத்தில் இதற்கான நடைமுறை ஏற்படுத்தப்பட்டிருந்தது. அதை முறியடிக்க பல தகிடுதத்த வேலைகளை மோடி அரசு செய்தது.
# அரசியல் பிரிவு 367 க்கு புது விளக்கத்தை(வியாக்யானத்தை) கொடுத்தது, அதன்படி
# 1957லேயே காலாவதி ஆகிவிட்ட ஜம்மு காஷ்மீர் அரசியல் நிர்ணய சபை என்றால், அது இப்பொழுதுள்ள ஜம்மு காஷ்மீர் மாநில சட்டசபை என பொருள் கொள்ள வேண்டும்;
#. சட்டசபை கலைக்கப்பட்டுள்ளதால் , கவர்னரே சட்டசபையின் பிரதிநிதி ஆகிறார்
#. அது போலவே கவர்னரே அரசியல் நிரணய சபையின் பிரதிநிதி ஆகிறார்.
ஆக கவர்னரின் சம்மதத்தின் பேரில் குடியரசுத் தலைவர் ஆணை பிறப்பித்து பிரிவு 370ஐ ரத்து செய்தார்! தனி அந்தஸ்தை பறித்துக் கொண்டார்!
ஆளுங்கட்சியால் நியமிக்கப்பட்டவர்களான ஜனாதிபதி, மற்றும் கவர்னரின் ஆலோசனையின் அடிப்படையில் அரசியல் பிரிவு 370ஐ ரத்து செய்ய முடியுமா? சிறப்புத் தகுதியை மாநிலத்திடமிருந்து பறிக்க இயலுமா?
இது ஜனநாயகத்திற்கெதிரான மோசடி அல்லவா? அரசியல் சாசன நடைமுறைக்கு புறம்பான செயல் இல்லையா? என்ற கேள்விகளுக்கு பதிலளித்த இந்த ஐவர் அமர்வு, அரசியல் பிரிவு 367 ஐ பயன்படுத்தி சட்டங்களை மாற்றியது சட்ட புறம்பான செயல் என்றது.
ஆனால், ஜனாதிபதி அரசியல் பிரிவு 370 நீக்கியது, தனி தகுதியை விலக்கியது செல்லும் என்று தீர்ப்பு அளித்துள்ளது. அரசியல், சட்ட முறைகளுக்கு புறம்பாக திருத்தங்கள் செய்யப்பட்டது தவறு என்று ஒத்துக் கொண்டது உச்ச நீதி மன்றம்! ஆனால், தீர்ப்போ அதனடிப்படையில் விளைந்த குடியரசு தலைவர் ஆணை (பிரிவு 370 ரத்து, சிறப்பு தகுதியிழப்பு) செல்லும் என நியாயப்படுத்துகிறது. இது முன்னுக்குப்பின் முரணானதாகும்.
இதன்மூலம் உச்ச நீதிமன்ற அமர்வு, தனது முந்தைய தீர்ப்புகளின் கூறுகளை மறுக்கும் குற்றத்தை இழைத்துள்ளது.
வரலாற்று பின்புலத்தையும், இறையாண்மை உள்ள இரண்டு பகுதிகள் பரிமாறிக் கொண்ட வாக்குறுதிகள் ஒருதலைபட்சமாக காற்றில் பறக்கவிடப்பட்டதை நியாயப்படுத்தி உள்ளது
உண்மையான மக்களின் பிரதிநிதிகளை கலக்காமல் எதேச்சதிகாரமாக எடுக்கப்பட்ட முடிவை – வழிமுறை சட்ட புறம்பாக இருந்தாலும்- உச்ச நீதிமன்றம் ஆமோதித்துள்ளது.
நோக்கம் நேர்மையானதாக இருந்தாலும் அதை அடையும் வழிமுறைகளும் நேர்மையானதாக இருக்க வேண்டும் என்ற கோட்பாட்டை அண்ணல் காந்தியடிகள் மட்டுமன்றி உச்ச நீதிமன்றமும் இதற்கு முன் ஏராளமான தீர்ப்புகளில் கடைபிடித்து உள்ளது.
ஆனால், இந்த தீர்ப்பில் அதை காற்றில் பறக்கவிட்டுள்ளனர் உச்ச நீதிமன்ற நீதிபதிகள்!
மேலும், ஒரு மாநிலம் குடியரசு தலைவர் ஆட்சியில் இருக்கும்பொழுது, குடியரசு தலைவரோ, பாராளுமன்றமோ, அந்த மாநிலத்தில் எத்தகைய மாற்றங்களையும், துண்டாடுதலையும் நிகழ்த்தலாம் அத்தகைய செயல்களை யாரும் கேள்வி கேட்க முடியாது என்ற விளக்கத்தை இந்த தீர்ப்பு அளித்துள்ளது. இது மிக மிக அபாயகரமான, ஆபத்தான தீர்ப்பாகும்.
இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படைக் கூறுகளில் ஒன்றான கூட்டாட்சி முறைமையை இத் தீர்ப்பு தகர்த்தெறிகிறது. இது , இத்தகைய போக்கு வருங்காலங்களில் என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்று எண்ணவே அச்சமாக இருக்கிறது.. !
இந்திய நாட்டின் ஒருமைப்பாடும், ஒற்றுமையும், மாநிலங்களின் உரிமைகளும் இதன் மூலம் பலவீனப்படுத்தப்பட்டுள்ளது என்பதில் ஐயமில்லை!
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை பிளந்து இரண்டு யூனியன் பிரதேசங்களாக அறிவித்த “தான்தோன்றி” தனத்தை அங்கீகரிக்கும் விதமாக தீர்ப்பு கூறியுள்ள இந்த அமர்வு, ஒரு மாநிலத்தை – அம்மாநில மக்களின் ஒப்புதலின்றி- உடைக்க முடியுமா என்ற முக்கியமான கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் ஒளிந்து கொண்டது. இந்த தீர்ப்பு லடாக் பகுதியை தனி யூனியன் பிரதேசமாக அறிவித்தது சரிதான் என்று தீர்ப்பளித்துள்ளது.
இது கூட்டாட்சி முறையை ஏன் ஜனநாயகத்தையுமே கேலிக்கூத்தாக மாற்றுவதற்கு துணை போயுள்ளது இந்த தீர்ப்பு. மக்களாகிய நாம், (we the people) என்ற அடிப்படைக் கோட்பாட்டையே இந்த தீர்ப்பு மறுதலித்துள்ளது என்றே தோன்றுகிறது.
Also read
நாட்டின் ஒற்றுமை என்ற பெயரில் எடுக்கப்படும் எத்தகைய பாதகமான முடிவையும் யாரும் கேள்வி கேட்க முடியாதாம்! நீதிமன்றத்தின் வேலை இதற்கு பதிலளிப்பதல்லவாம்! இவ்வாறெல்லாம் கூறும் இந்த தீர்ப்பானது மக்களை மறந்த, எதேச்சதிகாரத்திற்கு துணை போகின்ற ஒரு தீர்ப்பே என்பதில் சந்தேகமில்லை!
இந்த தீர்ப்பு இந்துத்துவ வெறி பிடித்த கும்பலுக்கு மகிழ்வையும், மமதையையும் கொடுக்கலாம்! ஆனால், இந்தத் தீர்ப்பு மக்களுக்கும், ஜனநாயகத்திற்கும், கூட்டாட்சி தத்துவத்திற்கும் “சாவு மணி” அடித்துள்ளது!
கட்டுரையாளர்.ச.அருணாசலம்
அறம் இணைய இதழ்
காசுமீருக்குத் தேவை 370 அன்று,விடுதலையே! 370 போன்ற இடைக்கால செயல்பாடுகளை எதிர்பார்த்துக் கொண்டிருப்பது, அவர்களின் சுயநிர்ணய உரிமைக்குப் பேசுவதையே மறுக்கிறது.
ஏமாற்றத்தை அவநம்பிக்கையை அளிக்கும் தீர்ப்பு