சோதனை எலிகளா..? இந்திய இளம் பெண்கள்..!

Dr. கோ. பிரேமா MD(Hom)

கர்ப்பப்பை வாய் புற்று நோயாம்! மெத்த படித்தவர்களும், மருத்துவர்களுமே சூதாக நடந்து கொண்டால் எளிய மக்களின் நிலை என்னாவது..? தற்போது சிறுமிகள், இளம் பெண்களுக்கு நிர்பந்தப்படுத்தி போடப்படும் ஊசிக்கும் தடுப்பூசியின் உண்மைத் தன்மை என்ன..? இந்தத் தடுப்பூசியானது நோயை தடுக்கவா.. பரப்பவா..?

2024 பிப்ரவரி 1ம் தேதி மக்களவையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த பல திட்டங்களில் ஒன்று HPV தடுப்பூசி- கர்ப்பப்பை வாய் புற்று நோய் தடுப்பூசி, 9-14 வயதுள்ள இந்திய பெண் குழந்தைகளுக்கும் போடப்படும் என்றார்.

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் (Cervical Cancer) தடுத்தல் மற்றும் எச்பிவி தடுப்பூசி (HPV Vaccine) செலுத்திக் கொள்வதன் அவசியம் குறித்தும் நாடு முழுவதும் உள்ள மாணவிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.

முன்னதாக இது குறித்து மத்திய கல்வித்துறை செயலாளர் மற்றும் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ஆகியோர் கூட்டாக எழுதியுள்ள கடிதத்தில் HPV தடுப்பூசி மூலம் கர்ப்பப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கலாம். எனவே, இத்தடுப்பூசி, முதல் கட்டமாக பள்ளிகளில், படிக்கும் 5-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவிகளுக்கு செலுத்த வேண்டும். ஆகவே, பள்ளிகளில், HPV தடுப்பூசி செலுத்துவதற்கான பணிகளை மேற்கொள்ளுங்கள். மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மேலாண்மை நிர்வாகங்களை ஒருங்கிணையுங்கள். பள்ளிகளில் படிக்கும் 9 வயது முதல் 14 வயது உடைய மாணவிகளின் விவரங்களை சேகரித்து அதனை யுவின் (U-WIN) செயலியில் பதிவேற்றம் செய்யுங்கள்’’ என மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு அக்கடிதத்தின் மூலம் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இந்த செய்திகள் மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது! முதலாவதாக இத்தடுப்பூசியை கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுக்கும் தடுப்பூசி எனக் குறிப்பிடுவதே அபத்தமானது. பல படித்த மருத்துவர்களே இப்படி பேசுவது எனக்கு வேடிக்கையாக உள்ளது.

கர்ப்பப்பை வாய் புற்று நோய் இரண்டு வகைகள் உண்டு. அந்த நோய்க்கு பல காரணிகள் உண்டு. அதற்கு முக்கிய காரணம் இந்த HPV எனும் பாலியல் தொற்றாகும்.

கர்ப்பப்பை வாய் புற்று நோய் வரும் வாய்ப்புகள் யாருக்கு அதிகம் ?

இது அடிப்படையில் பாலியல் தொற்று கிருமி. பாலியல் உறவின் மூலம் பரவக் கூடியது. ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களுடன் பாலியல் தொடர்புள்ளவர்களுக்கு இத்தொற்று ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

இதில் பெரும்பான்மையினருக்கு இத்தொற்று எந்தவித நோயையும் ஏற்படுத்தாமல் ஓரிரு ஆண்டுகளில் சரியாகிவிடும்‌. சிலருக்கு பாலியல் உறுப்புகளில் மருக்கள் தோன்றி, அதுவும் சில காலங்களில் சரியாகும் வாய்ப்புகள் தான் அதிகம். வெகு சிலருக்கு மட்டுமே இத்தொற்று பல ஆண்டுகள் நோய்குறிகளின்றி தொடர்ந்து பின் சில வகை புற்றுநோய்களாக மாறுகிறது. இதில், சில பெண்களுக்கு கர்ப்பப்பை வாய்ப் புற்று நோய் ஆகவும் மாறும் வாய்ப்பிருக்கிறது.

அதிலும், பாலியல் தொடர்புகள் மட்டுமே காரணமல்ல, என்பதையும் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். பாலியல் தொடர்புகளோடு புகைப் பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு சற்று கூடுதல் வாய்ப்புகள் உள்ளது. HIV பாலியல் தொற்றினால் நோய் எதிர்ப்பாற்றல் குறைவதன் காரணமாக இந்த புற்று நோய் பற்றிக் கொள்ளும் வாய்ப்பு கூடிவிடுகிறது.

தொடர்ந்து கர்ப்பத்தடை மாத்திரைகள் எடுத்துக் கொள்ளும் பெண்களுக்கு HPV தொற்றே கூட புற்று நோயாக மாறும் வாய்ப்புகள் உள்ளது.

மற்றுமொரு ஆச்சரியமான காரணம், கர்ப்பக் கலைப்பு தடுக்கும் DES எனப்படும் கர்ப்பக் கலைப்பு தடுக்கும் மருந்து. இந்த மாத்திரை உட்கொண்ட பெண்களுக்கு பிறக்கும் பெண்குழந்தைகள் வளர்ந்தபின் அவர்களுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் வரும் அபாயம் உள்ளது. இது கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு பின்னர் கூட தெரியவருகிறது. இப்படி இரண்டாவது தலைமுறை பெண்லளுக்கு வருவதை உறுதிபடுத்தித் தான்  1971 லேயே இந்த மாத்திரையை  உலக அளவில் தடை செய்யப்பட்டது. ஆனபோதிலும், இந்தியாவில் இப்போதும் பெண்களுக்கு வரும் மார்பக புற்று நோய்க்கு இம் மருந்து கொடுக்கப்படுகிறது‌. குறைந்த பட்சம் எப்படிப்பட்ட பெண்கள் இந்த மாத்திரையை தவிர்க்க வேண்டும் என்ற விழிப்புணர்வு கூட இங்கு இல்லை.

எனில், கர்ப்பப்பை வாய் புற்று நோய் காரணிகள் என்னவோ, அதை களைவதற்கு உறுதி பூண்டாலே அதை தடுக்க முடியுமல்லவா? ‘உளை பொங்கி கொதிக்கிறது எனில், அடுப்பில் இருக்கும் கொள்ளிக் கட்டையை உருவினால், அடங்கும்’ என்பதை அரசே மறைத்து, இந்த தேவையற்ற தடுப்பூசியை இளம் பெண்களுக்கு திணித்து வாழ் நாள் முழுக்க அவர்கள் வதைபடக் காரணமாகலாமா?

எனக்கு இப்போது மற்றொரு சுவாரசியமான செய்தி நினைவுக்கு வருகிறது. இந்தத் தடுப்பூசியைத் தடுக்க முதமுதலாக குரல் கொடுத்ததே ஆர்.எஸ்.எஸ் ன் ஸ்வதேசி ஜாகிரன் மான்ச் தான்! இந்த அமைப்பு 2017 டிசம்பர் மாதம் இந்தியாவின் பிரதமர் மோடிக்கு அனுப்பிய அவசரச் செய்தியில் இந்திய பெண்களுக்கு HPV தடுப்பூசி ( கர்ப்பபை வாய் தடுப்பூசி) அனுமதிக்கக் கூடாது என்ற கோரிக்கை வைக்கப்பட்டது.

இதற்கான காரணமாக, உலக சுகாதார நிறுவனத்தின் கூற்றுப்படி தடுப்பூசிகளிலேயே மிக அதிகமான புகார்கள், மோசமான பாதகங்கள் விளைவிக்கும் தடுப்பூசியாக HPV தடுப்பூசி இருக்கிறது.  ஆகவே, இத் தடுப்பூசி ஏற்படுத்தும் விளைவுகளால் மக்களின் மனநிலையில் தற்போது தடுப்பூசி மீது இருக்கும் நம்பிக்கை நிலை குலையும்.

இது நமக்கு அழிவைத் தரும். மேலும், இத்தடுப்பூசி National Technical Advisory Group for immunization அரசு பரிந்துரையில் ஏற்காத தடுப்பூசி. ஆதலால், இதை இந்தியாவில் ஒரு போதும் அனுமதிக்கக்கூடாது என்று சொல்லப்பட்டு இருந்தது. இக் கடிதத்தை தீவிரமாக பரிசீலனை செய்வதாக பிரதமர் அலுவலகம் உறுதி அளித்தது.

ஆனால், தற்போது அந்த அறிவுரையைக் கூட, மத்திய பாஜக அரசு புறந்தள்ளிவிட்டது. எந்த பரிசோதனையும் இல்லாத கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் சட்டவிரோதமாக திணிக்கப்பட்டது. கொரோனா தடுப்பூசியின் தொடர்ச்சியாக திடீர் இளவயது மாரடைப்பு மரணங்களை உலகெங்கும் மருத்துவர்களும், அறிவியலாளர்களும், அரசுகளும் கேள்விக்குட்படுத்தி வருகின்றனர். ஆனால், இந்திய மருத்துவர்கள் இந்தியாவிற்கு மட்டும் ஏதேதோ புதுப்புது கதை புனைந்து,  தடுப்பூசியை திணிக்க துணை போனார்கள்.   இவை அனைத்தையும் எந்த சொரணையும் இல்லாமல் ஏற்றபடி நகரும் மக்களை பார்த்து, எந்த பெருமுதலாளிக்கும் எந்த அரசுக்கும் துணிவு வரத்தானே செய்யும்.

இப்படியாக தடுப்பூசிகளின் கெடு விளைவுகள் குறித்த நெடிய வரலாறும் இந்தியாவில் உள்ளது.

அந்தத் துயரங்களே தொடரும் நிலையில் மற்றுமொரு தடுப்பூசியா? எவ்வளவு கொடுமை!

இத்தனை ஆண்டுகளும் குழந்தைகளுக்கு பரிந்துரையில் போடப்பட்ட அத்தனை தடுப்பூசிகளின் பாதகங்களை அறிவதிலும், இதனை முறையாக பதிவு செய்வதிலும், ஆராய்வதிலும் இந்திய மருத்துவர்களின் அறியாமையும், மெத்தனமும் மொத்தமாக பல்லிளிக்கிறது.

நெகிழி எனப்படும் பாலீதீன் பைகள்,பிளாஷ்டிக் கழிவுகள் புற்று நோய்களை பரப்புகின்றன!

இது போலத் தான் பிறந்த 6 மணிநேரத்தில் அனைத்து குழந்தைகளுக்கும் போடப்படும் மற்றொரு பாலியல் தொற்றான Hep -B virus தடுப்பூசியை  மஞ்சள் காமாலை தடுப்பூசி என பெயர் மாற்றிச் சொல்கிறார்கள்!

இந்த வைரஸ் தொற்றுக்கும், புற்று நோய்க்கும் சம்பந்தமுண்டா என்பது அறிவியலால் உறுதி செய்யப்படவில்லை!

இதுவரை இங்கு பெரும்பாலும் மெர்க் நிறுவனத்தின் கார்டாசில் மற்றும் கிளாஸ்கோ ஸ்மித் நிறுவனத்தின் செர்வாரிக்ஸ் எனும் இரண்டு வெளிநாட்டு மருந்து நிறுவனங்களின் தடுப்பூசிகள் தான் தனியாரில் போடப்பட்டு வருகிறது. தனியாரிடம் மட்டுமே கிடைக்கப்பெறும் இத்தடுப்பூசியின் தற்போதைய விலை ரூபாய் 1400-1600/ வரை உள்ளது.

பல காரணங்களினால், பல ஆண்டுகளாக இத்தடுப்பூசி இந்தியாவின் NTAGI வால் தடுப்பூசி பரிந்துரையில் சேர்க்கப்படாமலேயே இருந்தது. ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே NTAGI இத் தடுப்பூசியை பரிந்துரையில் சேர்த்துக் கொண்டது.

இதற்கு பிறகு  இந்திய தடுப்பூசி நிறுவனமான பூனாவை சார்ந்த சீரம் இன்ஸ்டிடியூட்டின் செர்வாவாக் என்ற பெயரில் அவர்களின் HPV தடுப்பூசியினை சில மாதங்கள் முன்னர் தான் அறிமுகப்படுத்தினர்.

வயல்களில் தெளிக்கப்படும் பூச்சி மருந்துகள், களைக் கொல்லிகள் புற்று நோய்க்கு காரணமாகின்றன!

சீரம் இன்ஸ்டிடியூட்டின் செர்வாவாக் தடுப்பூசி:

இந்தியாவின் தனியார் தடுப்பூசி நிறுவனங்களின் ஏகபோக சர்வாதிகார நிறுவனமே இது! அரசு திட்டங்களுக்காக வாங்கப்படும் அநேக தடுப்பூசிகளின் உற்பத்தியாளரான , கோவேக்ஸின் விற்பனை செய்த அதே சீரம் இன்ஸ்டிடியூட் தான் இப்போது HPV தடுப்பூசியை செர்வாவாக் என்ற பெயரில் பரிசோதனை செய்துள்ளது.

2021 ல் NTAGI பரிந்துரையில் HPV தடுப்பூசி இடம் பெற்றபின் இத் தடுப்பூசியை இந்தியாவில் சீரம் இன்ஸ்டிடியூட் உற்பத்தி செய்து அதை பரிசோதனைக்கு மேற்கொள்கின்றனர். இதன் முடிவுகள் 2023 நவம்பர் மாதம் ‘லான்செட்’ மருத்துவ இதழில் வெளியிடப்பட்டது.

இந்தியாவில் உள்ள 12 வெவ்வேறு மருத்துவமனைகளை தேர்ந்தெடுத்து மொத்தம் 2,341 நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதில் 9-14 வயதுக்குட்பட்ட 369 பெண் குழந்தைகள் , மற்றும் ஆண் குழந்தைகளுக்கு புதிய இந்திய தடுப்பூசியும், மேலும் 369 பெண் குழந்தைகளுக்கு கார்டாஸிலும் போடப்பட்டது. கூடுதலாக 15-26 வயதுள்ள பெண்களும் இந்த மூன்று பிரிவில் பிரித்து சேர்க்கப்பட்டனர்.

இவர்களிடம் நடத்திய இந்த பரிசோதனையில் முடிவாக 220 நாட்களுக்கு பின்னர் இந்திய தடுப்பூசி போட்டவர்களுக்கும் கார்டாசில் போட்டவர்களுக்கும் உள்ள வித்தியாசம் ஆய்வு செய்யப்பட்டு, இந்திய தடுப்பூசி கார்டாசில் போன்றே பலன் தருவுதாகவும் கார்டாஸிலை விட வேறு எந்த புதிய பாதகமும் ஏற்படவில்லை எனவும் முடிவை சமர்பிக்கிறது.

தடுப்பூசி பரிசோதனை பொதுவாக எதற்காக செய்யப்படுகிறது ?

ஒரு தடுப்பூசியின் சாதக பாதகங்களை தெரிந்து கொண்டு பின் அத்தடுப்பூசியின் தேவையை, யாருக்கு? எப்போது? என முடிவெடுக்கும் முன்பு பாதகங்களை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.

ஆனால், இந்த பரிசோதனையில் சில வேடிக்கைகளை நீங்கள் கவனித்தீர்களா ?

# தடுப்பூசி போட்ட குழந்தைகளை தடுப்பூசி போடாத குழந்தைகளோடு ஒப்பிடவில்லை. மாறாக மற்றொரு தடுப்பூசி போட்ட குழுவோடு ஒப்பிடுகிறார்கள். இதில் இத்தடுப்பூசி போடாதவர்களை விட போட்டவர்களுக்கு எம்மாதிரி பலன்கள் என்பதை எவ்வாறு உறுதியளிக்க முடியும்? அது போல பாதகங்களை அறியும் முயற்சியே இல்லை.

# அதாவது, அந்தக் குழுவில் வராத பாதகங்கள் இந்தக் குழுவில் வந்தால் மட்டுமே அவை புதிய தடுப்பூசியின் பாதகமாக ஆய்வில் ஏற்கப்படுமாம்‌.

அதாவது, மற்ற தடுப்பூசியினால் ஏற்கனவே அறியப்படும் பாதகங்கள் எவ்வித கவனிப்புமற்று மறைக்கப்படும்.

# இந்தியா முழுக்க அறிமுகப்படுத்த வேண்டிய ஒரு தடுப்பூசிக்கான பரிசோதனையை வெறும் சில நூறு பேரிடம் மட்டுமே ஆய்வு செய்கின்றனர்.

ஒருவேளை உதாரணமாக,

10,000 பேரில் ஒருவருக்கு மூளை நரம்பியல் பாதிப்பு ஏற்படுத்துமெனில், அது தெரிய வாய்ப்பின்றி போய்விடுமல்லவா?

# 1லட்சம் பேரில் ஒருவருக்கு புற்றுநோய் போன்ற மிகப்பெரிய பாதகங்கள் ஏற்படுவதை எப்படி அறிவது?

இவ்வளவு குறைந்த எண்ணிக்கையில் பரிசோதனை செய்வது சரியான முடிவுக்கு வர உதவாது. ஆக, நாம் எவ்வாறு இதை ஏற்றுக் கொள்வது ?

# பரிசோதனை காலம் வெறும் 220 நாட்கள் தானாம்! அப்படியானால், தடுப்பூசி போட்டு ஒரு வருடம் கழித்தோ, சில வருடங்கள் கழித்தோ சில மோசமான விளைவுகள் ஏற்படுவதை பொருட்படுத்த விருப்பமில்லை என சொல்ல வருகிறீர்கள்! கடந்த காலங்களில் சில தடுப்பூசிகள் காலம் கடந்து மோசமான விளைவுகளை உருவாக்கியுள்ளது. தடுப்பூசி போட்ட 2 ஆண்டுகளில்  தீவிர ஆட்டோ இம்யூன் நோய் வந்திருக்கிறது! 5 ஆண்டுகள் கழித்து கடும் விளைவுகள் தெரிந்துள்ளன! அதனால், தான் சுமார் 10 ஆண்டுகள் வரை கண்காணித்து முடிவெடுத்தனர். ஆனால், இப்போது அதீத அவசரம் காட்டுவது ஏன்? சில தனியார் நிறுவனங்கள் பயனடைய மக்கள் நலனை காவு கொடுப்பதா? என்ற கேள்வி இங்கு தவிர்க்க முடியாமல் எழுகிறது.

இந்தியாவில் கர்ப்பப்பை வாய் புற்று நோயால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை 2020-ம் ஆண்டின் படி அந்த ஆண்டில் மட்டும் தோராயமாக 1, 24,000 பெண்களுக்கு புற்று நோய் இருப்பதும் , 77,000 பாதிப்பட்ட பெண்கள் இறந்து விட்டதும் அனுமானிக்கப்பட்டுள்ளது. இதில் பலர் கீமோதெரபி சிகிச்சையினால் மரணித்திருக்கின்றனர் என்பதை புறந்தள்ள முடியாது.

புற்று நோய்களின் முதன்மை காரணியான நெகிழி எனும் பிளாஸ்டிக், பசுமைப் புரட்சியின் விளைவாக புழக்கத்திற்கு வந்த வயல்களில் தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லி, களைக் கொல்லி ஆகியவற்றின் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என ஏன் யாரும் முன் வருவதில்லை! சம்பந்தப்ப்பட்ட மருந்துகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் நஷ்டம் அடைந்துவிடக் கூடாது என்ற மன நிலையில் சிந்தித்தால் மனித குல நலன்கள் எவ்வாறு பாதுகாக்கப்படும்?

சில மாதங்களுக்கு முன் பெண்கள் மாதவிடாயின் போது பயன்படுத்தும் நாப்கின்கள் வழியே புற்றுநோய் பரவுகிறதுது என்ற உண்மை வெளிவந்த உடனேயே மூடி மறைக்கப்பட்டுவிட்டது.

இதுபோன்ற எண்ணற்ற தெரிந்த தெரியாத காரணிகள் பல இருக்க, ஒரு பாலியல் தொற்று தடுப்புக்கு போட வேண்டிய தடுப்பூசியை மொத்த கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கும் பொதுவாக்குவது எப்படி சரியாகும்?

அதுவும் கூட, இந்தியாவில் இதுவரை கர்ப்பப்பை வாய் புற்றுநோய் வந்தவர்களில் இப் பாலியல் தொற்று எத்தனை பெண்களுக்கு உறுதி செய்யப்பட்டது போன்ற எந்த அடிப்படை விபரங்களும் நம்மிடம் இல்லை.

இந்நிலையில் அறிவியல் படித்த மருத்துவர்களும் இந்த பாலியல் தொற்று தடுப்பூசியை கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசியாக சித்தரிப்பது நகைப்புக்கு உரியதே!

கட்டுரையாளர்; பிரேமா கோபால கிருஷ்ணன்

ஹோமியோபதி மருத்துவர்,

மக்கள் நல மருத்துவத்தில் உறுதிப்பாடுள்ளவர்.

mail id [email protected]

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time