உச்சகட்ட ஊழலில் தமிழக உயர் கல்வித் துறை!

-சாவித்திரி கண்ணன்

அரசு உதவி பெறும் கல்லூரிகளின் பேராசிரியர் பணி இடங்களை கல்லா கட்டும் காமதேனுவாகப் பார்க்கிறார்கள் ஆட்சியாளர்கள்! ‘பச்சையப்பன் அறக்கட்டளை கல்லூரிகளின் பணியிடங்களை நிரப்ப, பணம் தராவிட்டால் அனுமதி இல்லை’ என அலைக்கழிப்பு! காசு,பணம், துட்டு! இல்லையெனில், நடையைக் கட்டு.. அமைச்சரின் அடாவடி!

தமிழ் நாட்டிலேயே மிகப் பெரிய அறக்கட்டளையாக பல்லாயிரம் கோடி பெறுமான சொத்துக்களோடு திகழும் பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகத்தின் கீழ்  பச்சையப்பன் கல்லூரி, கந்தசாமி நாயுடு கல்லூரி, செல்லம்மாள் கல்லூரி உள்ளிட்ட ஆறு கல்வி நிறுவனங்கள் வாயிலாக பல லட்சம் ஏழை மாணவர்கள் உயர் கல்வி பெற்றுள்ளனர். இன்றும் மிகக் குறைந்த கட்டணத்தில் 30 ஆயிரம் மாணவ, மாணவியர் கல்வி பயில்கின்றனர். இங்கே சுமார் 1,000 ஆசிரியர்களும், 500 ஆசிரியர் அல்லாத ஊழியர்களும் பணியாற்றுகிறார்கள்.

இது போன்ற ஏழை, எளிய மாணவர்களுக்காக செயல்படும் கல்வி நிறுவனங்களை தங்கள் சொந்த ஆதாயத்திற்காக சீர்குலைக்க துடிக்கும் அரசியல்வாதிகள், ஆட்சியாளர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பதை தற்போது சில காலங்களாக நடைபெறும் நிகழ்வுகள் காட்டுகின்றன!

மேற்படி கல்வி நிறுவனங்கள் அரசு உதவியோடு இயங்கி வருகின்றன! அதாவது நிறுவனங்களின் பராமரிப்பு செயல்பாடுகள், நிர்வாகச் செயல்பாடுகள் ஆகியவற்றை அறக்கட்டளை பொறுப்பெடுத்து செய்கிறது. பேராசிரியர்களின் சம்பளத்தை அரசு தந்து வருகிறது. அரசு சம்பளம் தருவதால் பேராசிரியர்கள் நியமனத்தில் கோடிக்கணக்கில் கல்லா கட்டும் நோக்கத்தில் தகுதியற்ற ஆசிரியர்களை பணம் வாங்கி நியமனம் செய்வதை தங்களின் பிறப்புரிமை என ஆட்சியாளர்கள் கருதுகின்றனர்! இதனால், கல்வித் தரம் சரிந்து பல்லாயிரம் மாணவர்களின் கல்வி கந்தர் கோலமாவது பற்றியோ, அது அவர்களின் எதிர்காலத்தை மட்டுமின்றி, சமூகத்தின் எதிர்காலத்தையும் சிதைத்துவிடும் என்பது குறித்தோ கிஞ்சித்தும் அக்கறை இல்லை, இன்றைய ஆட்சியாளர்களுக்கு!

2013 -18 அதிமுக ஆட்சி காலத்தில் அன்றைய அறங்காவலர்களாக இருந்த ஐசரி கணேஷ், எஸ்.ஜெயச்சந்திரன், ஆர்.பிரபாகரன், வி.ராமநாதன்,கே.ஹேமநாத், வி.துரைமோகன் மற்றும் முன்னாள் கல்வி அமைச்சர் பழனியப்பன் ஆகியோர் கூட்டணியில் பேராசிரியர் பணிக்கு பல லட்சங்கள் லஞ்சம் வாங்கிக் கொண்டு, 254 பேராசிரியர்களை நியமித்தார்கள். இது மிகப் பெரும் சர்ச்சையாக வெடித்து, நீதிமன்றம் விசாரித்து, ”தேர்வு செய்யப்பட்ட 254 ஆசிரியர்கள் அத்தனை பேரும் தகுதியே இல்லாதவர்கள். எனவே, பணி ஆணை ரத்து செய்யப்படுகிறது’’  எனத் தீர்ப்பளித்தது. ஆனால், அந்த தீர்ப்பை நடைமுறைப்படுத்தி, தகுதியற்ற ஆசிரியர்களை நீக்க முடியாமல் மேல் முறையீட்டு மனு அநியாயமாக நிறுத்தி வைத்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து உயர்நீதிமன்றம் தலையிட்டு நீதிபதி ஒருவரைத் தலைவராகவும், ஒரு நேர்மையாளரை செயலாளராகவும் போட்டு அறக்கட்டளையை சீரமைத்தது. அந்த வகையில் தற்போது அறக்கட்டளையின் தலைவராக நீதிபதி வி.பார்த்தீபனும், செயலாளராக சி. துரைக்கண்ணு அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தலைவர் நீதிபதி வி.பார்தீபன், செயலாளர் துரைக்கண்ணு

ஒவ்வொரு ஆண்டும் சில ஆசிரியர்கள் ஓய்வு பெறுவதையொட்டி, தற்போது 132 ஆசிரியர்களை நியமிக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. இதையடுத்து தற்போது இதற்கான  விண்ணப்ப மனு விளம்பரம் வெளியிட்டதும் ஆட்சியாளர்கள், ”ஆகா, 132 போஸ்ட்டா? ஜாக்பாட் ஆச்சே! சும்மா விட முடியுமா?” என  நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு, மூக்கை நுழைத்து, பணம் பண்ணத் துடிக்கிறார்கள்!

அதே சமயம் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட அறக்கட்டளைத் தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி பார்த்தீபனும், செயலாளர் துரைக்கண்ணுவும் மிக நேர்மையாக இந்த தேர்வு இருக்க வேண்டும். சிறந்த பேராசிரியர்கள் மாணவர்களுக்கு கிடைக்க வேண்டும் எனக் கறார் காட்டி வருகின்றனர். இதனால் இந்த நியமனத்திற்கு அரசு தரப்பில் அனுமதி தருவதில் ஐந்து மாதங்களாக கடும் இழுபறி செய்து வருகின்றனர்.

இது போன்று அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பேராசிரியர் பணி இடங்களுக்கு நியமனம் நடைபெறுவதைக் கண்காணித்து நேர்மையாக நடத்துவதை உத்திரவாதப்படுத்துவதே ஒரு நல்ல அரசாங்கம் செய்ய வேண்டியதாகும். அதற்காகத் தான் இந்த அனுமதியில் உயர் கல்வித் துறையின் மண்டல இணை இயக்குனர் ( Regional joint director) கையெழுத்து போடும் நிர்வாக முறையும் அமல்படுத்தப்படுகிறது.

ஆனால், அந்த ரிஜினல் ஜாய்ண்ட் டைரக்டர் பதவிக்கு ஊழலில் மூழ்கித் திளைத்து, கமிஷனை வசூலித்து கொடுக்கும் நபர்களை சரியாக பார்த்து நியமித்துக் கொள்கின்றனர் கல்வித் துறை அமைச்சர்கள். சென்ற ஆட்சியில் இது போல பேராசிரியர் பதவிகளுக்கு பணம் வசூலித்து அதிமுக அமைச்சர் பழனியப்பனுக்கு கப்பம் கட்டிய ராவணன் என்பவரையே திமுக அமைச்சர் பொன்முடியும் அதே பதவியில் தொடரவிட்டு கமிஷன் அடித்து வந்தார்.

உயர் கல்வித் துறை மண்டல இணை இயக்குனர் ஆர். ராவணன்.

அந்த வகையில் பச்சையப்பன் அறக்கட்டளை சார்பில் இந்த பணி இடங்களை நிரப்ப முயற்சிக்கும் நேரத்தில், அவர்களை தொடர்பு கொண்ட ராவணன், ”நீங்க அமைச்சர் பொன்முடியின் மகன் அசோக் சிகாமணியை  பார்த்து விடுங்கள்’’ எனக் கூறி நிர்பந்தம் தரவே, இவர்கள் தரப்பில் சென்று சந்தித்ததில், ”இங்க பாருங்க, நீங்க நேர்மையாக பணி இடங்களை நிரப்ப நினைக்கிறீங்க. சரி, ஒரு அக்ரிமெண்ட்டுக்கு வருவோம். நீங்க, 99 இடங்களை நல்லபடியாக நிரப்பிக் கொள்ளுங்கள்! 33 பணி இடங்களை மட்டும் விட்டுக் கொடுங்க. அதுல தகுதி, திறமை எதிர்பார்க்காதீங்க…” எனக் கேட்டுள்ளார் பொன்முடியின் மகன் அசோக் சிகாமணி.

”இல்லை சார், அது அந்தந்த குறிப்பிட்ட துறைகளில் உள்ள மாணவர்களை கடுமையாக பாதிக்கும். தகுதியற்ற ஆசிரியர் எந்தப் பாடமும் நடத்தாமல், சமாளித்து சம்பளம் வாங்கிவிடுவார். மாணவர்கள் எதிர்காலம் ரொம்ப பாழாகிவிடும்…’’ என எடுத்துச் சொல்லப்பட்டதும்.

”சரி, இவ்வளவு சின்சியராக இருக்கீங்க. உங்கள் விருப்பப்படியே நேர்மையான முறையில், தகுதியானவர்களை தேர்ந்து எடுத்துக் கொள்ளுங்க. எங்களுக்கு மிகக் குறைந்த அளவில் ஒரு போஸ்ட்டுக்கு 10 லட்சம் மட்டுமாவது தாங்க” எனச் சொல்லி உள்ளார்.

”இந்தப் பணத்தை நாங்க எப்படித் தர முடியும்..? யாரிடமும் பணம் வாங்கி பணி ஆணையைத் தரக் கூடாது என்ற நிலையில் உள்ளோம். பணம் கொடுத்தவர்கள் ஆசிரியர் பணியை நேர்மையாக, விசுவாசமாக செய்யமாட்டார்கள். எனவே, எங்களை உங்களுக்கு பணம் வசூலித்து தரும் ஏஜெண்டுகளாக்கிவிடாதீர்கள். நல்லபடி  இந்த பேராசிரியர் தேர்வு நடக்க ஒத்துழைப்பு தாங்க. உங்களுக்கு புண்ணியமாகும்” எனக் கேட்டதும் அமைச்சர் மகன் கடுப்பாகி, ”சரி நீங்க போகலாம்” எனச் சொல்லி முட்டுக் கட்டை போட்டுவிட்டார்.

அதற்கு பிறகு பொன்முடி ஊழல் குற்றச்சாட்டில் பதவி இழந்த நிலையில் உயர்கல்வித் துறை அமைச்சராக கண்ணப்பன் பதவி ஏற்றது தொடங்கி, பச்சையப்பன் அறக்கட்டளைக்கு ராவணன் வழியாக தொடர் அழுத்தங்களை தந்து கொண்டிருக்கிறார். ” பணம் தரமாட்டாங்களா? பார்த்துவிடுகிறேன், ஒரு கை..”என கோபமாக உள்ளாராம்!

தற்போது 132 பேராசிரியர் பணி இடங்களை நிரப்ப நீதிமன்ற வழிகாட்டுதலில் செயல்படுவதென உறுதிபாட்டோடு பச்சையப்பன் அறக்கட்டளை செயல்படுகிறது. அந்த வகையில் 132 பணி இடங்களுக்கு சுமார் 3,000 விண்ணப்பங்கள் வந்துள்ளன. பிப்ரவரி 16 உடன் விண்ணப்பிக்கும் தேதி முடிவடைந்த நிலையில், விண்ணப்பங்களை சரி பார்த்து தகுதியானவர்களை அறக்கட்டளையினர் தேர்ந்து எடுப்பார்கள். இன்றோடு அந்த தேதி முடிவடையும் நிலையில், கடலூரைச் சேர்ந்த வி.ராமமூர்த்தி என்பவர் ஒரு பொதுநல வழக்கு போட்டு, ”தேர்தல் நடத்தி முறையான அறங்காவலர்கள் தேர்ந்து எடுக்கப்படாத நிலையில், தற்போதுள்ள நிர்வாகம் பேராசிரியர்  பணி இடங்களை நிரப்ப தடை விதிக்க வேண்டும்” எனக் கேட்டுள்ளார்.

இந்த வழக்கை எடுத்து விசாரிக்க நீதிமன்றத்திற்கு அரசு தரப்பில் நிர்பந்தம் தரப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதை விசாரணைக்கு எடுத்துக் கொண்டதும், அரசு தரப்பில் அந்த பொது நல வழக்குக்கு ஆதரவாக வந்து நின்றுள்ளனர். ‘இந்த வழக்கை தொடுத்தவர் ரூபாய் ஒரு லட்சத்தை நீதிமன்றத்திற்கு செலுத்த’ நீதிபதி ஆணையிட்டார். இந்த வழக்கின் விசாரணையை வரும் பிப்ரவரி 23 ஆம் தேதிக்கு நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது!

ஆட்சியாளர்களாக உள்ளவர்கள் நன்மை செய்ய முன்வராவிட்டாலும், ஒரு நன்மை நடப்பதை அங்கீகரிக்கக் கூட மனமின்றி, எத்தனை இடைஞ்சல்களைத் தருகின்றனர். பாருங்கள்! அனைத்து அரசு உதவி பெறும் கல்லூரிகளும் இதே பிரச்சினையைத் தான் சந்திக்கின்றனர்! அந்த காலத்தில் நல்ல உள்ளம் கொண்ட வள்ளல்கள், பெரியோர்கள் கல்வித்துறைக்கு அள்ளிக் கொடுப்பதை அறப் பணியாக செய்தனர்! ‘இன்றைக்கு அதை நேர்மையாக அப்படியே கொண்டு செலுத்துவது நடக்காது’ என்ற நிலையை ஆட்சியாளர்கள் தோற்றுவிக்கின்றனர்.

எல்லா தடைகளையும் கடந்து நேர்மையாக செயல்படுவது என்பது இன்றைக்கு சிம்ம சொப்பனம் தான்! உயிருக்கே கூட ஆபத்தாக முடியலாம். இந்தச் சூழல் தொடர்ந்தால் அரசு உதவி பெறும் கல்லூரிகள் காலப் போக்கில் காணாமலாகிவிடும். இது ஏழை, எளிய மணவர்களுக்கு கல்வியை எட்டாக் கனியாக்கிவிடும். இந்த விவகாரத்தில் நீதிமன்றம் நீதியை நிலை நாட்ட துணை புரிந்து கொண்டிருப்பது மாத்திரமே ஒரு ஆறுதலாகும். இந்த ஆறுதலும் தற்காலிகமானதா? அல்லது நிரந்தரமாகுமா? தெரியவில்லை.

முறைகேடுகள் களையப்பட, நல்லதே நடக்க சமூகத் தளத்தில் உள்ள அனைத்து நேர்மையாளர்களும் வேடிக்கை பார்க்காமல் அழுத்தம் தர வேண்டும்.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time