கிரிமினல்மயமான அரசியல்! கிடுகிடுக்கும் மே.வங்கம்!

-சாவித்திரி கண்ணன்

சினிமாக்களை மிஞ்சும் கொடூரங்களால் மேற்கு வங்கத்தின் சந்தேஷ்காளி இன்று சர்வதேச புகழ் பெற்று விட்டது! பாலியல் சித்திரவதைக்குள்ளான பல நூறு பெண்கள்! முடங்கிய அரசு நிர்வாகம்! பல்லாயிரம் ஏக்கர் நில அபகரிப்புகள்! ஒரு தனி மனிதனின் கண் அசைவுக்கு சேவையாற்றிய அரசு அதிகாரிகள்! இந்த நூற்றாண்டிலும் கூட இப்படி நடக்குமா..?

அதிகபட்சம் சுமார் மூன்றரை லட்சம் மக்களைக் கொண்ட ஒரு சிறிய தீவு போன்ற சிற்றூர் தான் சந்தேஷ்காளி! இங்கு சர்வ வல்லமை பெற்ற வில்லனாக வலம் வந்தவரான ஷேக் ஷாஜகான் நடத்தியுள்ள கற்பனைக்கு எட்டாத சர்வாதிகார சாம்ராஜயத்தைப் பற்றிய தகவல்களே இன்று அகில இந்தியாவை மட்டுமல்ல, அனைத்துலகத்தையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.! தேசிய, சர்வதேசிய  ஊடகங்கள் கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து சந்தேஷ்காளி குறித்த செய்திகளை பரவலாக்குகின்றனர். இந்த வில்லத்தனத்தை நிகழ்த்தியவர் இஸ்லாமியர் என்பதால், இதை இந்துக்களின் ஓட்டு அறுவடைக்கான ஜாக்பாட்டாக மாற்றும் முயற்சிகளை தினமணி, தினமலர் உள்ளிட்ட ஊடகங்கள் செய்து கொண்டுள்ளன!

நாம் உள்ளது உள்ளபடியே இந்த விவகாரத்தை அணுகினால் மட்டுமே, இதில் நடந்துள்ள அரசியல் சமூக அவலங்களை அறிய முடியும்.

வன்முறைக்கு வரலாறு சொல்லும் மேற்குவங்கம்!

இந்தியாவிலேயே அரசியல் வன்முறைகளுக்கு பெயர் போன மாநிலம் தான் மேற்குவங்கம். கம்யூனிசம் கால் ஊன்றிய மாநிலத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஓங்கி குரல் எழுப்பிய நக்சலைட்டுகள் உருவானதும் இங்கே தான்! அவர்கள் நசுக்கி அழிக்கப்பட்டதும் இங்கே தான்! சுமார் 28 ஆண்டுகள் இடது முன்னணி ஆட்சியில் நிலப்பகிர்வு போன்ற முக்கிய சீர்திருத்தங்கள் நடந்துள்ளன என்றாலும், ஒரே கட்சியின் ஆட்சியால் அரசியல் அராஜகங்கள் மேலோங்கின! இதன் விளைவால், அந்த அரசியல் அராஜகங்களை முடிவுக்கு கொண்டு வரும் தேவையில் ‘திரிணமுள் காங்கிரஸ்’ உதயமானது!  2006-7 காலகட்டத்தில் சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்காக பல ஆயிரம் விளை நிலங்களை விவசாயிகளிடம் இருந்து மார்க்சிஸ்ட் ஆட்சி வலுக்கட்டாயமாக பிடுங்கிய போது விவசாயிகளுக்கு ஆதரவாக சிங்கூரிலும், நந்திகிராமிலும் களம் இறங்கி மக்களின் பாதுகாவலராக தோற்றம் காட்டி ஆட்சிக்கு வந்தார் மம்தா பானர்ஜி.

ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு, இடது முன்னணியை விஞ்சக் கூடிய விதத்தில் திரிணமுள் அரசியல் அராஜகங்களில் ஈடுபட்டு வருவதின் தொடர்ச்சி தான் சந்தேஷ்காளி! மம்தாவை பொறுத்த வரை அவர் பிரதானமாக எதிர்பார்ப்பது விசுவாசத்தை தான்! தனக்கு விசுவாசமான ஒருவர் என்ன செய்தாலும் கண்ணை மூடிக் கொண்டு நியாய, அநியாயங்களை பொருட்படுத்தாமல் சம்பந்தப்பட்டவரைக் காப்பாற்றுவார்! தன்னுடைய விசுவாசி அதிகாரத்தின் கட்டமைப்பை பயன்படுத்தி அரசு வளங்களை சுரண்டுவதையோ, அதற்கு தன் பிம்பத்தை ஒரு பிராண்டாக்குவது குறித்தோ, உள்ளூர் மக்கள் ஒடுக்கப்படுவது குறித்தோ மம்தா தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகிறார். அதன் விளைவே இந்த சம்பவமும்!

சர்வாதிகார சாம்ராஜ்யம்;

அந்த வகையில் ஒரு சாதாரண மீன் பிடி படகைக் கொண்டு வாழ்க்கை நடத்தி வந்த ஷேக், மம்தா பானர்ஜி ஆட்சியில் அபரிதமான பணம் கொழிக்கும் செல்வந்தரானார். அரசு காண்டிராக்ட்டை எல்லாம் அவரை மீறி, யாரும் எடுக்க முடியாது என்ற அளவுக்கு வளர்ந்தார். ரேஷன் அரிசியை பக்கத்து நாடான வங்கதேசத்திற்கு கடத்தினார்! கடத்தப்பட்ட ரேஷன் அரிசியின் மதிப்பு 550 கோடி ரூபாய் என்கிறார்கள்! இவ்வளவு பெரிய அளவுக்கு ஒரு கடத்தல் நடக்க அரசு இயந்திரங்களின் ஒத்துழைப்பு அவருக்கு எந்த பிசகுமின்றி கிடைத்தது என்பது தான் கவனத்திற்கு உரியது.

உண்மையில் சந்தேஷ்காளியை பொறுத்த அளவில், ஷேக் ஷாஜகான் தான் அரசாங்கமே! விவசாயப் பழங்குடிகள் காலங்காலமாக விவசாயம் செய்த அந்த ஊரில் பெரிய இறால் பண்ணைகளை நிறுவும் ஆசை அவருக்கு வருகிறது! முதலில் ஒரு இறால் பண்ணை நிறுவ 150 ஏக்கர் நிலத்தை பார்வையிட்டார்! அடுத்த நாளே அந்த நிலத்தின் விவசாயிகள் நிலத்தை ஒப்படைக்கும்படி கோரப்பட்டனர். ‘ஷேக் சொல்லிவிட்டாரென்றால் அதற்கு மறுபேச்சே கூடாது’ என்பது ‘எழுதப்படாத சட்டமாக’ அங்கு இருக்கிறது என்பதால், இன்னும் ஒரு மாதத்தில் அறுவடை முடிந்து எடுத்துக் கொள்ளும்படி பணிந்து வேண்டுகோள் வைத்தனர்!

ஆனால், அந்த வேண்டுகோளுக்கு மதிப்பில்லை என்பது அடுத்த நாள் அவர்கள் நிலங்களில் புல்டோசர் இறங்கி பயிர்களை அழித்த போது தான் அறிந்து கொண்டனர். கண்ணீர் விடவும் கதறவுமே முடிந்தது. நிலத்திற்கான உரிய இழப்பீடுகளாவது கிடைக்க வேண்டுமே! அது தான் இல்லை. வாய் திறந்து சந்தை மதிப்பை கணக்கில் வைத்து தரக் கேட்டவர்களுக்கு, ”ஏதோ அவர் கொடுக்கிறதே புண்ணியம். கொடுத்ததை வாங்கிட்டு ஓடிடு” என்றனர் அவரது அடியாட்கள்!

தூள் பறக்கும் அதிகாரம்! ஷேக் ஷாஜகான்

அந்தப்படியே அடுத்தடுத்து என சுமார் 2,000 ஏக்கர் நிலங்கள் அபகரிப்புக்கு ஆளானத்தில் ஒருபோக சாகுபடி நடந்த நிலங்களெல்லாம் தற்போது இறால் பண்ணைகளால் தரிசு நிலங்களாகி விட்டன! இந்த வகையில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் தங்கள் சொந்த மண்ணில் இருந்து சொல்லொண்ணா துன்பத்தை சுமந்து வெளியேறி உள்ளனர்.

கற்பனைக்கு எட்டாத காமக் கொடூரங்கள்!

இவ்வளவு அட்டூழியங்களையும் விட உச்சமாக நடந்தவை ஷேக்கின் பார்வையிலும் அவரது அடியாட்கள் பார்வையிலும் யாராவது அழகான பெண்கள் பட்டுவிட்டால் தப்ப முடியாது. இரவோடிரவாக தூக்கிக் கொண்டு கட்சி ஆபீசுக்கே எடுத்துப் போய்விடுவார்கள்! காவல்துறையிடம் புகார்கள் தந்ததில் பின்னர் இதே காரியத்தை உள்ளூர் காவல்துறை அதிகாரிகளும் செய்தனர். ஆக, எந்த வகையிலும் பாதுகாப்பற்ற நிலை!

தெருவில் இறங்கி போராடத் துணிந்த பெண்கள்!

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் ‘தி வயர்’ ஊடகத்திற்கு தந்த பேட்டியில், ”என்னை தூக்கிச் சென்றவர்கள் கட்சி அலுவலத்திலேயே ஒன்றரை நாட்கள் வைத்து ஒருவர் மாற்றி ஒருவர் அனுபவித்தனர். ‘என் புருஷன் கிட்ட விடுங்க’ என கதறிய போது, ‘அவன் எப்படி இங்க வருவான் நாங்க வேணா அவன் தலையை கொய்து எடுத்து வந்து உன் உள்ளங்கையில் வைக்கட்டுமா..?’ எனக் கேட்டு சிரித்தனர்” நூற்றுக்கும் மேலான பெண்கள் இது போல பாலியல் சித்திரவைதைக்கு ஆளாகியுள்ளனர். இதில் சில உயிர் இழந்த பெண்களும் உள்ளனர். உயிர் பிழைத்தவர்கள் சொந்தக் குடும்பத்தாரால் கைவிடப்பட்டதும் நடந்துள்ளன!

இது தொடர்பாக இந்த ஊரில் உள்ள பெண்கள் முதல்வரான மம்தா பானர்ஜிக்கு 2021 ஆம் ஆண்டு எழுதிய கடிதங்கள் எல்லாமே திருப்பி அந்த காவல் நிலையத்திற்கே அனுப்பப்பட்டுள்ளன..! அதை வைத்து போலீசார் ”உங்களுக்கு இவ்வளவு தைரியம் வந்துவிட்டதா..?” என மேலும் துன்புறுத்தி உள்ளனர்!

இந்த விவகாரத்தை பொறுத்த அளவில் இது பல வருடங்களாகவே நடந்துள்ள அட்டூழியங்களாகும். இது தேசிய அளவிலான பெரிய கவனம் பெற்ற பிறகாவது மம்தா சுதாரித்துக் கொண்டு நடவடிக்கை எடுத்திருக்கலாம். சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை தண்டித்து இருக்கலாம். ஆனால், தன் விசுவாசிகளை எந்த எல்லை வரையிலும் சென்றாவது காப்பாற்றத் துடிக்கும் அவரது இயல்பால் மீண்டும், மீண்டும் வெளிப்படும் தகவல்களை எல்லாம், ”வதந்தி” என்றார். ”தன் ஆட்சிக்கு கெட்ட பெயரை உருவாக்க நினைப்பவர்களின் சதி” என்றார். ”ஆர்.எஸ்.எஸ்சின் சூழ்ச்சி” என்றார்! ஆனால், யதார்த்தங்களை உள்வாங்க மறுத்தார்.

உயர்நீதிமன்றம் உத்திரவில் அங்கு சென்ற உண்மை அறியும் குழுவின் ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் அனைவரையும் மம்தா அரசு கைது செய்து எடுத்து வந்து கொல்கத்தாவில் விட்டது. உண்மையை மறைக்க மம்தா செய்த அத்துமீறல்களால் உச்ச நீதிமன்றமும் விழித்துக் கொண்டது.

ஒரு கட்டத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் எல்லாம் ஒன்றிணைந்து தெருவில் இறங்கி ஷேக் ஷாஜகானின் இறால் பண்ணைகளுக்கு தீ வைத்தனர்.  சாலை மறியல் செய்தனர். அப்போதும் கூட காவல்துறை டிஐஜி ஒரு ரவுடி தொனியில், ”யேய், பொம்பளைங்களா கலைந்து போயிடுங்க. இல்லையென்றால் நீங்க இங்க இருந்து போகும் போது உங்க வீடுகள் இருக்காது. தீக்கிரையாகிடும். உங்க புருஷங்க எல்லாத்தையும் சிறைக்கு தூக்கீட்டு போய் நொறுக்கிடுவோம்..”என மிரட்டியது விஷுவல் மீடியாவில் பரவியது.

இதன் பிறகே கொல்கத்தா உயர் நீதிமன்றம் தானாக வலிந்து வழக்கை எடுத்தது. சம்பந்தப்பட்ட டி.ஐ.ஜி பணி இடை நீக்கம் செய்யப்பட்டார். குற்றவாளிகளை கைது செய்ய நீதிமன்றம் அரசுக்கு நிர்பந்தம் தந்தது. இந்த காலகட்டமான சுமார் 55 நாட்கள் ஷேக் ஷாஜகானை தலைமறைவாக வைத்து கட்சித் தலைமை காப்பாற்றியது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.

நீதிமன்ற தலையீட்டுக்கு பிறகு மக்கள் துணிந்து புகார் தரும்படி கேட்டுக் கொள்ளப்பட்டதில் மக்கள் தந்த புகார்களின் எண்ணிக்கை 1650 என்றால், பாருங்கள்..! எல்லாம் நிலத்தையும், கற்பையும் இழந்தவர்களின் குமுறல்கள்!

இது திரிணமுள் காங்கிரஸ் ஆட்சிக்கு ஒரு சின்ன சாம்பிள் தான்! இப்படித்தான் மேற்குவங்கத்தில் ஆட்சி நடந்து கொண்டுள்ளது.

சிறுபான்மை ஓட்டு வங்கிக்காக குற்றவாளியை தண்டிக்கவில்லையா?

இங்கே ஒரு முக்கியமான குற்றச்சாட்டுக்கான பதிலை நாம் நேர்மையுடன் ஆராய வேண்டும். குற்றச்சாட்டு என்னவெனில், ஷேக் ஷாஜகானை கைது செய்தால் மேற்குவங்கத்தில் உள்ள கணிசமான இஸ்லாமியர்களின் வாக்கு வங்கியை இழக்க நேரிடும் என மம்தா பயந்தார் என ஊடகங்களில் பரவலாக குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. ‘பாதிக்கப்பட்டவர்கள் ஹிந்து ஆதிவாசிப் பெண்கள் என்பதால், பாஜக இதை கையில் எடுக்கும் வாய்ப்பை வலிந்து மம்தா தந்துவிட்டார்…’ என்று தினமணி தலையங்கத்தில் வைத்தியநாதன் எழுதியுள்ளார்.

ஷேக் ஷாஜகானின் முக்கிய தளபதிகள் அடியாட்கள் அனைவருமே இந்துக்கள் தாம்! இதில் ஷேக் மட்டும் கைதாகவில்லை. அவரைவிட அதிக புகார்களின் பேரில் கைதாகியுள்ள உத்தம சர்தார், சிவபிரசாத் ஹஸ்ரா, பார்த்தா சாட்டர்ஜி, ஜோதிப்பிரியா மாலிக் ஆகிய முக்கிய தளபதிகள் அனைவரும் இந்துக்களே! இது, ஒரே ஒரு இஸ்லாமியர் மட்டுமே செய்த அட்டூழியமல்ல!

அடுத்ததாக பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவருமே இந்துக்கள் அல்ல! ‘’காம கொடூர்களுக்கு மதமாவது, சாதியாவது எந்த பேதமுமின்றி எல்லாரையும் தான் தூக்கீடு போனாங்க..’’ என அந்தப் பெண்கள் ஊடகங்களில் கொடுத்த நேர்காணல்களே இதற்கு சாட்சி. மேலும் ஆதிவாசிகள் தங்களை இந்துவாக கருதுவதில்லை.

இதற்கெல்லாம் மேலாக முகத்தில் அறையும் உண்மை என்னவென்றால், ஷேக் ஷாஜகானின் நெருங்கிய கூட்டாளிகளான பாஜகவின் உள்ளூர் தலைவர் பிகாஷ் சின்ஹாவும், சி.பி.எம்மின் முன்னாள் எம்.எல்.ஏ நிரபதா சர்தாரும் இந்த வழக்கில் கைதாகி சிறையில் உள்ளனர்! இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஷேக் ஷாஜகான் முன்பு சி.பி.எம்மில் இருந்தவர் தான். ஆட்சி மாற்றத்திற்கு பின் திரிணமுள் காங்கிசுக்கு மாறி, மம்தாவின் விசுவாசியானார். சகல கட்சி கிரிமினல்களையும் சேர்த்துக் கொண்டே இத்தனை அட்டூழியங்களை சாத்தியப்படுத்தி உள்ளார்.

ஆக, இது கட்சிகள், மதங்களைக் கடந்த அதிகார வர்க்க கிரிமினலாக பார்க்கப்பட வேண்டியது. அரசியல் அதிகாரம் என்பது சகலமட்டத்திலும் எளிய மக்களுக்கு எதிராகவே கைகோர்த்துக் கொண்டு ஆனவரை ஆட்டம் போடுகிறது! எளிய மக்களுக்கான மனிதாபிமான அரசியலே இன்றைய தேவையாகிறது!

சாவித்திரி கண்ணன்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time