தர்ம, நியாயங்களை தர்ம சங்கடத்தில் ஆழ்த்துவதே தேர்தல்! இங்கு வாக்கு வங்கியை வைத்திருப்பவன் கைகளில் இருக்கும் ரத்தக் கறைகள் பொருட்படுத்தப் படுவதில்லை. சாக்கடையில் நெளிகின்ற புழுக்களுக்கும் வாக்கு உண்டென்றால், உடனே அதை சந்தனமாக பூசிக் கொள்ள தயங்கமாட்டார்கள்..!
கொங்கு நாடு மக்கள் கட்சியின் வேட்பாளர் சூர்யமூர்த்தி பேசிய காணொளி சமூக வளை தளங்களில் அதிர்வுகளை உருவாக்கி உள்ளது. இதைக் கண்ட பலரும் இப்படிப்பட்ட சாதிய வன்ம பார்வையுள்ளவரை எப்படி சமூக நீதி பேசும் திமுக கூட்டணி வேட்பாளராக்கலாம்? எனக் கேட்கிறார்கள்! இப்படி பேசியதால் தான் அவருக்கு அந்த சாதிக் கட்சி வாய்ப்பளித்துள்ளது..!
முற்போக்கு சிந்தனையாளர்கள், பொது மக்கள் பலரும், ‘வேட்பாளரை மாற்ற வேண்டும்’ என கோரிக்கை வைத்துள்ளனர்! ‘இந்த அறச் சீற்றம் மனித நேயம் சார்ந்தது, நியாயமானது’ என்ற போதிலும், வேட்பாளர் மாற்றினால் எல்லாம் மாறிவிடுமா?
உண்மையில் கொங்கு நாடு மக்கள் கட்சியின் அடிப்படை நோக்கத்தைத் தான் அவர் பேசி இருக்கிறார். அவர் பேசியது ஏதோ தனி அறையில் அல்ல. அந்தக் கட்சியின் நிகழ்ச்சி ஒன்றில்! அவரது தலைவர் ஈஸ்வரன் முன்னிலையில், தலைவரது விருப்பத்தையே பல தொண்டர்களின் கைதட்டல்களுடன் பேசி இருக்கிறார்! அவர் மட்டுமல்ல, அந்தக் கட்சியில் பலரும் இதையே பேசி வருகின்றனர். அவர்கள் வளர்ச்சிக்கும் இது போன்ற பேச்சுக்களே அடித்தளமாக உள்ளது என்பதை அறியாமல் வெறும் வேட்பாளர் மாற்றம் பற்றி நாம் பேசுவதில் என்ன பயன் இருக்கிறது..?
”சாதி மாறி காதலிக்கும் இருவரையுமே கொலை செய்யத் தயாராக இருக்கிறோம். அதற்காக 1,500 பேர் கொண்ட இளைஞர் படை உருவாக்கி வைத்துள்ளோம்”
”மீறி கல்யாணம் செய்தால்..கருவிலேயே வேரறுப்போம்”
”போலீஸ் ஸ்டேசன், சிறைச்சாலை இதற்கெல்லாம் அஞ்சமாட்டோம். ஆமா, தீவிரவாதத்தை வளர்க்கிறோம். சட்டத்தை கையில் எடுக்கிறோம்”
”சாதி மாறி காதலித்தால் நல்லபடியாக அறிவுரை சொல்லிப் பார்ப்பேன். கேட்காவிட்டால் கொன்று போடுவேன்”
இப்படிப்பட்ட பேச்சை பேசியவர் மீது வழக்கு பாயாததும், கைது செய்யப்படாததும் ஆச்சரியமளிக்கிறது!
இது குறித்து அங்குள்ள திராவிட இயக்கம், பொதுவுடமை இயக்கம், காங்கிரஸ் இயக்கம் போன்றவை என்ன மாதிரியான எதிர்வினை ஆற்றியுள்ளனர் என்பதும் தெரியவில்லை.
சமீபத்தில் வள்ளி கும்மி நிகழ்வில் சுமார் ஆயிரம் பெண்களிடம் ‘கவுண்டனை மட்டும் தான் கட்டிக் கொள்வேன்’ என உறுதி மொழி வாங்கியுள்ளனர். ஆக, கிட்டத்தட்ட அந்த சமுதாயத்தில் கணிசமானவர்கள் மத்தியில் தங்களுடைய பெண்கள் சாதி மாறி – குறிப்பாக தாழ்த்தப்பட்ட ஒருவனைக் – காதலித்துவிடக் கூடாது என்ற பதற்றம் இருக்கிறது. ஆகவே, அந்த பதட்டத்தைத் தான் இந்த மாதிரியானவர்கள் அரசியல் சக்தியாக மாற்றி, தங்களை நிலை நிறுத்திக் கொள்கின்றனர்.
காதல் என்ற ஒன்றை எந்த சமுதாயத்திலும் தடுத்ததாக சரித்திரமில்லை! எத்தனை கொலைகள், வன்முறைகளைக் கண்டாலும் அதன் பயணம் நின்றதில்லை. இது ஒரு நிதர்சனம்! ஆகவே, வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுப்பதில் சற்று விவேகத்துடன் செயல்படுவதற்கான பக்குவத்தை தான் நாம் நம் பிள்ளைகளுக்கு தர வேண்டும். இதில் பெற்றோர்களுக்கும், பிள்ளைகளுக்கும் பரஸ்பர புரிதலும், நம்பிக்கையுமே இன்றைய தேவையாகும்.
இதை தவிர்த்து, ”வெட்டுவேன், கொல்வேன், அழிப்பேன்” என்பது காட்டுமிராண்டித்தனம்! சமூகத்தில் பதற்றத்தையும், அமைதியின்மையையும் உருவாக்கும் இத்தகைய சாதிய சக்திகளை புறம் தள்ள வேண்டும். தனிமைபடுத்த வேண்டும்.
ஆக, இப்படிப்பட்ட சாதிக் கட்சியுடன் உடன்பாடு கொண்டதைத் தான் கேள்வி கேட்க வேண்டும்..? அப்படி சேருகின்ற பட்சத்தில் அவர்களை ஜனநாயகப்படுத்தும் விதத்தில், ‘ஜாதி, மதக் கண்ணோட்டமற்ற குறைந்தபட்ச கொள்கை திட்டம் உருவாக்கி, இதில் உடன்பாடு இருந்தால் மட்டுமே கூட்டணிக்கு வரலாம்’ என செக் வைத்திருக்கலாம். ஆனால், 2016 உள்ளாட்சி தேர்தல் தொடங்கி இந்தக் கட்சி திமுகவுடன் பயணிக்கிறது! திமுகவுடனான நட்பால் அந்தக் கட்சியின் சிந்தனை போக்கில் பெரிய மாற்றம் ஏற்பட்டதாக தெரியவில்லை.
மாறாக, திமுகவிற்குள் தான் சாதிய கண்ணோட்டங்கள் சமீப காலமாக தலை தூக்க தொடங்கியுள்ளது. 2019 நாடாளுமன்ற தேர்தலிலும் இந்தக் கட்சிக்கு ஒரு தொகுதி தரப்பட்டது. 2021 சட்டமன்ற தேர்தலில் இந்த கட்சிக்கு மூன்று எம்.எல்.ஏ தொகுதிகள் தரப்பட்டன. அதில் ஒருவரான கே.சி.சி.பாலு என்பவர் தான் வள்ளிக் கும்மியில் பெண்களிடம், ”கவுண்டனை மட்டுமே கட்டிக் கொள்வேன்” என்ற உறுதி மொழி வாங்கியவர்! இதையெல்லாம் திமுக இது வரை கண்டித்ததாகத் தெரியவில்லை.
ஆனால், அப்படி எதுவுமே நடக்கவில்லை. தேர்தல் என வந்துவிட்டால் வெற்றி ஒன்றையே இலக்காக வைத்து, எல்லா தர்ம, நியாயங்களையும் தொலைப்பதே பெரிய அரசியல் கட்சிகளின் வாடிக்கையாக உள்ளது.
இந்த வகையில் பாட்டாளி மக்கள் கட்சியை அங்கீகரித்து வளர்த்து விட்டதும் திமுக, அதிமுக தான்! முதல் அங்கீகாரத்தை வழங்கிவர் கலைஞர் தான்! அதன் பிறகு ராமதாஸ் ஒரு பெரிய முள் மரமாக வளர்ந்தார்! கடந்த 35 ஆண்டு கால பாமக வரலாற்றை பார்த்தால், அந்தக் கட்சியால் அந்த வன்னிய சமூகம் பெற்ற நன்மைகளை விட, தீமைகளே அதிகம். கோர்ட், வழக்கு, சிறை..என சில ஆயிரம் பேர்களின் வாழ்க்கை முற்றிலும் சிதைந்தது. இதை வன்னிய சமூகமே நன்கு உணர்ந்து அந்தக் கட்சியிடம் இருந்து விலகி வரத் தொடங்கி விட்டது! ஒரு வகையில் நமக்கு பாஜக குறித்து ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும், இன்றைக்கு அது பாமகவின் முடிவுரையை எழுதிக் கொண்டிருப்பதானது பொதுச் சமூகத்திற்கு ஒரு வகையில் நன்மையே!
பொதுத் தளத்தில் இயங்கும் கட்சிகள் அதிகார பகிர்வை நடுநிலையாகவும், நேர்மையாகவும் செய்யத் தவறுகின்ற சூழலில், பாதிக்கப்பட்ட மக்கள் சாதி ரீதியாக தங்களை அணி திரட்டி ஒன்று சேர்ந்து தங்கள் உரிமைகளை முன்னெடுக்கிறார்கள்!
காங்கிரஸ் கட்சி பண்ணை முதலாளிகளின் கரங்களிலும், சாதி மேலாதிக்கவாதிகளின் கைகளிலும் இருந்த காலத்தில் தாங்கள் புறக்கணிக்கப்பட்டதாகக் கருதிய வன்னிய சமூகத்தில் இருந்து உருவான மாணிக்கவேல் நாயக்கர் காமன்வீல் கட்சியையும், ராமசாமி படையாட்சியார் உழைப்பாளர் கட்சியையும் தொடங்கிய போது 1952ல் அவர்களை ஆதரிக்க முன் வந்த அண்ணா ”சட்டமன்றத்தில் திராவிட நாடு கோரிக்கைக்கு ஆதரவாக பேச வேண்டும்” என்ற உத்திரவாதம் பெற்றே ஆதரித்தார்.
அதன் பிறகு காமராஜ் தலைமையிலான காங்கிரஸ் கட்சியிலும், ஆட்சியிலும் இவர்கள் இருவருக்கு போதுமான முக்கியத்துவம் தந்ததோடு, வன்னிய சமூகத்தையும் ஜனநாயக நீரோட்டத்தில் இணைத்து அரவணைத்துக் கொண்டார் காமராஜர்.
தஞ்சை தரணியில் தாழ்த்தப்பட்டவர்களை மிக கொடுமையாக நடத்தியவர்கள் என்ற பெயர் மூப்பனார் குடும்பத்திற்கு உண்டு. இது பற்றி ஏராளாமான செவி வழி செய்திகளை அன்றைய தலைமுறையினர் இன்றும் சொல்வதுண்டு. ஆனால், அப்படிப்பட்ட மூப்பனார் தான் 1999 ஆம் ஆண்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியையும், புதிய தமிழகத்தையும் தமிழக அரசியலில் கை தூக்கிவிட்டவர். அவர்களோடு முதன் முதலாக தேர்தல் கூட்டணி வைத்து அவர்களுக்கு ஒரு அரசியல் அங்கீகாரத்தை ஏற்படுத்தியவர்.

பாருங்க அவ்வளவு வீரம் பேசிய சூரிய மூர்த்தி இன்றைக்கு, ”அது நான் பேசியதில்லை. போலி வீடியோ” என பதறுகிறார். ‘ஏன் அந்த தெனாவட்டும், திமிரும் இன்று எங்கு போனது..? தேர்தல் அரசியல் அதை தின்று செரித்துவிட்டது’! தற்போது சேரிகளுக்கு சென்று தாழ்த்தப்பட்டோர்களின் தாழ் வணங்கி, சிரசாசனம் செய்யச் சொன்னால் கூட, தட்டாமல் அவர் செய்யக் கூடும். ஆனால், வெற்றி பெற்ற பிறகு நிலைமை என்னாகும் எனச் சொல்ல முடியாது.
Also read
தாழ்த்தப்பட்டவர்களுக்காக உருவானதாக சொல்லப்பட்ட விசிக, புதிய தமிழகம் ஆகிய கட்சிகளால் தாழ்த்தப்பட்ட மக்கள் சந்திக்க நேர்ந்த துயரங்களும், ஆபத்துகளுமே அதிகம். இந்தக் கட்சிகளில் சிலர் அரசியல் அதிகாரத்தை சுவைக்க முடிந்ததேயன்றி, தங்கள் சாதி மக்களின் கல்வி, பொருளதாரம், சமூக பாதுகாப்பு..என எதிலும் இவர்கள் அக்கறை காட்டவில்லை என்பதே நிதர்சனம். மற்ற சாதியினர் தங்கள் சாதி மக்களை மேன் மேலும் வெறுக்கவும், துன்பத்தில் ஆழ்த்தவும், கொடுமைக்கு உள்ளாக்கவுமே இவர்களின் செயல்பாடுகள் அமைந்தன… என்பது துரதிர்ஷ்டமே! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வெகுஜன அமைப்பாகிய ‘தீண்டாமை ஒழிப்பு முன்னணி’ செய்த ஆகச் சிறந்த பணிகளில் சிறிதளவேனும் விசிகவும், புதிய தமிழகமும் செய்ததில்லை.
ஆகவே, தாழ்த்தப்பட்ட மக்களோ, பிற்படுத்தப்பட்ட மக்களோ சாதியின் கீழ் அணி திரள்வது அவர்களுக்கே நன்மையில்லை. பொது நீரோட்டத்தில் கலந்து தங்களுக்கான இடத்தை அவர்கள் வென்றெடுக்கும் சூழலே நல்லது. இப்போது நமக்கிருக்கும் ஒரே வழி சம்பந்தப்பட்ட நபருக்கு அங்குள்ள நல்லோர் ஓட்டு போடாமல் தவிர்ப்பது தான்.
சாவித்திரி கண்ணன்
சரியான தொகுப்பு
சாதிய ஆதிக்கத்தின் வரலாற்றை மிகச் சரியாகப் படம்பிடித்து காட்டியுள்ளீர்கள்.
ஆதிக்க சாதிகளை ஆதரிக்கும் கட்சிகளையும் நீங்கள் அம்பலப்படுத்த தவறவில்லை. பெரியாரின் கொள்கைகளை உண்மையிலேயே பற்றி நிற்க வேண்டும் என்பதை உங்கள் கட்டுரை சொல்லாமல் சொல்கிறது
சாதி வெறியை சம்மட்டி கொண்டு அடித்து நொறுக்கி துவம்சம் செய்யும் வார்த்தைகள். டெல்டா பகுதிகளில் அதிகார திமிர் பிடித்த வர்க்கத்தை எதிர்த்து சாதி ரீதியாக அல்ல வர்க்க ரீதியாக ஒன்றுபடுத்தியது , விவசாயிகளையும் , விவசாய தொழிலாளர்களையும் ஒன்றுபடுத்தி
போராடியது உரிமைகளை பெற்று தந்தது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. தோழர் சீனிவாச ராவ். இவர்களை எதிர்க்க வேண்டும் என்று சொன்னால் தொழிலாளர்களையும் விவசாயிகளையும் ஜாதி மத வேறுபாடு இன்றி ஒன்றிணைத்து சமுதாயத்தை முன்னேற்றுவது மனித நேயம் உள்ள அனைவருக்கும் உரிய கடமை. இடதுசாரிகளின் வர்க்கக் கடமை.
அருமையான கட்டுரை. தாழ்த்தப்பட்ட மக்களும் , மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களும் பொது நீரோட்டத்தில் கலந்தே தங்களது உரிமைகளை வென்றெடுக்க முடியும். சாதிக் கட்சிகளைப் பற்றி சிறப்பான விமர்சனம்.
மிகத் தெளிவான பார்வை ஆழமான தொகுப்பு. கடந்த தேர்தல்களில் பல முற்போக்கு அமைப்புகள் பாஜக சனாதனத்தை வீழ்த்த வேண்டும் என்பதற்காக நாமக்கல் தொகுதியில் இந்த ஜாதி கட்சிக்காக பரப்புரையும் வாக்கு சேகரிக்கவும் செய்தனர். அப்போது அதற்கு யுத்ததந்திரம் போர் தந்திரம் என்றெல்லாம் சப்பை கட்டு கட்டப்பட்டது. உண்மையில் அந்த வெற்றி தான் இவர்களை இன்னும் வெறியும் ஆணவமும் கொள்ளச் செய்திருக்கிறது. உண்மையில் ஓட்டுக்காக இத்தகைய வெறி கூட்டத்தை கூட்டணியில் சேர்த்துக்கொண்ட திமுகவின் சமூக நீதி உறுதிப்பாடு தான் அய்யத்திற்குரியதாக உள்ளது. இதனை மிகத் தெளிவாக அம்பலப்படுத்தி உள்ளீர்கள்
ஜாதி கட்சி தலைவர்கள் அனைவருமே கட்சி வளர்ந்த பிறகு தங்கள் இனத்தை மறந்து விடுகிறார்கள். அதுதான் தாழ்த்தப்பட்ட ஜாதியின் சாபக்கேடு. இதற்கு தற்போது உள்ள பெரிய கட்சியான விடுதலை சிறுத்தைகளும் விதிவிலக்கல்ல.
“லவ் ஜிஹாத் “இருந்து கிறிஸ்தவ இளைஞிகளை காக்க வேண்டும் என்று கேரளா சர்ச் அபாய சங்கு ஊதியது அரசியல் அதிகாரம் பணம் இருப்பவர்களிடம் மட்டும் தான் கலப்பு திருமணம் சலசலப்பு இன்றி நடக்கிறது சமூக சீர்திருத்தம் பேசும் தலைவர்கள் எத்தனை பேர் ஏழை பாமர தலித் களை சம்பந்தி ஆக்கி கொண்டனர் பேச்சு எல்லாம் வாணவேடிக்கை தான்
ஜாதி மத சார்பு கட்சிகளை கூட்டணியில் சேர்க்க மாட்டோம் என்று சொல்ல எந்த கட்சிக்கு தைரியம் இருக்கிறது சொல்லுங்கள் பார்ப்போம் வேட்பாளர் தேர்வுககே முதல் காரணி ஜாதியும் மதமும் பணமும் மட்டுமே
ஜாதிக் கட்சிகள் வளர்ந்தது 1967க்குப் பிறகு தான் வளர்த்தது திராவிட கட்சிகள் தான்
சாதி சாக்கடையாக ஒரு கட்சி இருந்தால் அங்கு இதுபோன்ற மலங்கள் இருக்கத்தான் செய்யும்.
மிகச் சிறந்த பதிவு.
இது போன்ற சாதி வெறி கொண்டவர்களை
வன் கொடுமை சட்டத்தில் கைது செய்து தண்டிக்க வேண்டும்.