பேரழிவின் தொடக்கமே சி.ஏ.ஏ மற்றும் என்.ஆர்.சி!

-ச.அருணாசலம்

சொந்த நாட்டு மக்களை மத அடிப்படையில் பிரித்து, அதில் ஒரு சாரரை அகதிகளாக, உரிமையற்றவர்களாக மாற்றுவது, மக்களை எப்போதும் அச்சத்திலேயே வைத்திருப்பது… என்பது தான் மோடி, அமித்ஷாவின் நோக்கங்கள்! இனி நாடு முழுக்க திறந்த வெளிச் சிறைச்சாலைகளாக அகதி முகாம்கள் தோன்றவுள்ளன..!

குடியுரிமை திருத்த சட்டம் 2019ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. ஆனால், இந்த சட்ட திருத்தம் ஜனநாயக மாண்பிற்கும் ,மதச் சார்பின்மைக்கும் எதிரானது என்று  என உச்ச நீதி மன்றத்தில் 240 வழக்குகள் நிலுவையில் உள்ளன. 2019 முதலே நாடு முழுவதும் இந்த பாரபட்சமான சட்ட திருத்தத்தை எதிர்த்து மக்கள் போராடி வருகின்றனர்.

மார்ச் 11, 2024ல் மோடி அரசு இந்த சட்டத்திற்கான நடைமுறை விதிகளை வெளியிட்டு  தற்போது அமலுக்கு கொண்டு வந்துள்ளது.

தேர்தலுக்கு சில நாட்களே இருக்கும் பொழுது, இதை அமலுக்கு கொண்டு வருவதற்கு மக்களை திசை திருப்பும் சில அரசியல் காரணங்கள் உள்ளன!

பாரபட்சமான அணுகு முறையையே அடிநாதமாகக் கொண்ட இந்த சட்டம் அன்றும் இன்றும் சர்ச்சைகளை கிளப்பி வருகிறது.

இந்த சட்டத்தால் இந்திய குடிமகன்களின் உரிமை பறிக்கப்படவில்லை, அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களா தேஷ் போன்ற நாடுகளில் மத அடக்குமுறைகளுக்குள்ளான ‘சிறு பான்மை’ இந்துக்கள், கிறித்துவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், பவுத்தர்கள் இந்தியக் குடியுரிமை பெறுவதை எளிதாக்கி உள்ளோம் . இதை ஏன் எதிர்க்க வேண்டும் என்று சிலர் வாதிடுகின்றனர்.

இஸ்லாமியர் பெரும்பான்மையாக உள்ள பாக். ஆப்கன் மற்றும் வங்க தேச நாடுகளில் இருந்து மத ஒடுக்குமுறைக்காளாகி வெளியேறும் இஸ்லாமியரல்லாத சிறு பான்மை மக்கள்

இந்தியாவை 31/12/2014 க்குள் வந்தடைந்திருந்தால் , அத்தகையோர் ஐந்தாண்டுகள் கழித்து இயல்பாக இந்தியக் குடியுரிமைக்கு தகுதியானவர்கள் என இச்சட்டம் கூறுகிறது.

மேம்போக்காக நோக்கினால், இதில் என்ன குறை உள்ளது என கேட்கத் தோன்றும், ஆனால் சிறிது கூர்ந்து நோக்கினால், இதில் பொதிந்து கிடக்கும் பாரபட்சமும், குதர்க்க எண்ணமும் வெளிப்படும்.

இந்த மூன்று நாடுகளிலும் உள்ள முஸ்லீம் அல்லாத சிறுபான்மையோர் அனைவரும் ஆட்சியாளர்களால் அடக்கி ஒடுக்கப்படுகின்றனர் என்று இந்திய அரசு நம்மை நம்ப சொல்கிறது. இப்படி ஒட்டுமொத்த சிறுபான்மை சமூகத்தினர் அனைவரும் மதக் கொடுமைகளுக்கு ஆளானார்கள் என்றால், ஏன் ஒவ்வொருவரும் தனித்தனியாக தாங்கள் மதக் கொடுமைக்காளானோம் என நீரூபிக்க வேண்டும்?

இரண்டாவது, முஸ்லீம் மதப் பிரிவுகளில் ஒன்றான ஹசாரா பிரிவினர் ஆப்கனிலும், அஹ்மதியர்கள் பாகிஸ்தானிலும் அடக்கி ஒடுக்கப்படவில்லையா? அம் மனிதர்கள் தஞ்சமடைந்தால் விரட்டப்பட வேண்டியவர்களா?

இந்திய ஆட்சியாளர்கள் தங்களை மனிதாபிமானிகள் என பறைசாற்ற மூன்று முஸ்லீம் அண்டை நாடுகள் மட்டும் தான் கிடைத்ததா? மற்ற அண்டை நாடுகளான இலங்கையில் தமிழர்களும (அவர்களும் இந்துக்கள் தானே), மியான்மரில் ரோகிங்யா மக்களும், சிக்கிம் மற்றும் நேபாளத்தில் கிறிஸ்துவர்களும் அடக்கி ஒடுக்கப்படுகின்றனரே அவர்கள் தங்கள் கொடிவழி தேடி இந்திய நாட்டை அணுகுகிறார்களே..,  அவர்களை மறுப்பது எந்த ஊர் நியாயம்?

இந்திய அரசியல் சாசனம் தூக்கிப் பிடிக்கும் நெறிகளான ஜனநாயக மாண்பையும் மதச்சார்பற்ற அணுகுமுறையையும் இத் திருத்தம் புறக்கணிக்கிறது.

இந்தியக் குடியுரிமை என்பது சாதி மதம் சார்ந்ததன்று, அது அனைவருக்கும் பொதுவானது, பாகுபாடின்றி அனைவரும் விழையும் உரிமை அது!

குடியுரிமை திருத்த சட்ட விதிமுறைகள் (Citizenship Amendment Rules 2024) தான் குடியுரிமை சட்டத் திருத்தத்தை(CAA) நடைமுறைப்படுத்தும் கருவி எனலாம். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு நிற்பதற்கு ‘சொந்த கால்கள்’ கிடையாது.

அவை (CAA) நிற்பதற்கான இரண்டு கால்கள் தான், தேசீய மக்கள் தொகை பதிவேடு (NPR National Population Register) மற்றும் தேசீய குடியுரிமை பதிவேடும் (National Register of Citizens NRC) ஆகும் .

முதலில் தேசீய அளவில் மக்கள் தொகை பதிவேட்டை (NPR) உருவாக்குவது.  இதில் ஆவணங்கள் ஏதுமின்றி, குடியுரிமை பெறாதவர்கள் அடையாளம் காணப்படுவது, அப்படி அடையாளம் காணப்பட்டவர்களை சந்தேகத்திற்கிடமானவர்கள் என முத்திரை குத்துவது. இதற்கு பிறகு சந்தேகத்திற்கிடமானவர்கள் (Doubtful citizens) தாங்கள் இந்தியக் குடிமகன்களே என்று நிரூபிக்கும் பொறுப்பை சுமக்க நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.

தகுந்த ஆவணங்கள் இருந்தால் மட்டுமே அவர்களது பெயர் தேசீய குடியுரிமை பதிவேட்டில் இடம் பெறும் . அவ்வாறு இடம் பெறாதவர்கள் “சிறைக் கொட்டடிகளில்” (Detention Centers) அடைக்கப்படுவர். இதன்படி இண்டியா முழுமையும் நூற்றுக்கணக்கில் அகதிகள் முகாம் உருவாக்கப்பட்டு அதில் லட்சோப லட்சம் மக்கள் தங்க நிர்பந்திக்கப்படுவர். இதில் அரசுக்கு தேவையில்லாமல் ஒரு லட்சம் கோடிக்கு மேல் பொருளாதாரச் சுமை ஏற்படும்.

சுதந்திர நாடாக இந்தியா தலையெடுத்த காலத்தில் , ஜனவரி,26,1950ல் இந்திய அரசியல் சட்டம் அமலுக்கு வந்த நாளில் யார் யார் இந்தியாவின் குடிமகன்களாக கருதப்பட்டனர்?

பிரிவினைக்குப் பிறகு உருவான இந்திய நாட்டில் வசிக்கும் அனைவரும் இந்தியக் குடிகளாக அறியப்பட்டனர்.

பாகிஸ்தானிலிருந்து 19/07/1948 முன்னால் இந்தியா வந்து சேர்ந்தவர்களுக்கும் இந்தியக் குடியுரிமை வழங்கப்பட்டது.

19/07/1948க்கு பின்னால் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு புலம் பெயர்ந்தவர்களுக்கு ஒரு நிபந்தனையின் பேரில்- புலம் பெயர்ந்தவர்களின் பெற்றோரில் ஒருவரோ அல்லது அவர்களது தாத்தா பாட்டிகள் யாரேனும் பிரிவுபடாத இந்தியாவில் பிறந்திருக்க வேண்டும் -வழங்கப்பட்டது.

இங்கு எந்தவிதமான மத வித்தியாசங்கள் கடைப்பிடிக்கப்படவில்லை, மத அடிப்படையில் குடியுரிமை வழங்கப்படவில்லை!

தேசப் பிரிவினையின் போது அகதிகளாக வந்தவர்களை அரவணைத்தோம்.

1955ல் அமலுக்கு வந்த’ இந்தியக் குடியுரிமை சட்டம் 1955 ‘ இந்தியக் குடியுரிமை பெற ஆறு(6) வழிகளைக் கூறுகிறது.

  1. இந்தியாவில் பிறந்தவராக இருக்க வேண்டும்
  2. இந்தியாவிற்கு வெளியில் பிறந்தவராயிருந்தால் அவரது தந்தை , 10/12/1992 ல் செய்யப்பட்ட மாற்றத்திற்குப் பின் பெற்றோர் ஒருவர் இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும்.
  3. வெளிநாட்டில் வாழும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும் இந்தியக் குடியுரிமை பெறலாம்,
  4. இந்தியக் குடியுரிமை பெற்றவர்களை மணந்தவர்களும் சில ஆண்டு வசிப்பிற்குப் பின் இந்தியக் குடியுரிமை பெறத் தகுதியானவர்களே.
  5. இயல்பான இந்தியக் குடியுரிமையை இந்தியாவில் தொடர்ந்து பதினோரு வருடங்கள் வாழ்ந்த எவரும் பெற உரிமையுண்டு,
  6. சுதந்திர இந்தியா பின்னாளில் தன்னுடன் இணைத்துக் கொண்ட பகுதிகளில் (கோவா, சிக்கிம் பகுதிகள்) வாழும் அனைவரும் இந்தியக் குடியுரிமைக்கு தகுதியானவர்களே!

இங்கு எந்த மத அடிப்படையிலும் பாகுபாடு இல்லை!

அஸ்ஸாம் போராட்டத்தின் போது 1987ல் இந்தியக் குடியுரிமை சட்டத்தில் சில திருத்தங்கள் செய்யப்பட்டன.

இதிலும் எந்தவிதமான மதப்பாகுபாடோ, பேதமோ, வித்தியாசமோ இல்லாமலே உருவாக்கப்பட்டது.

2003ல் மீண்டுமொருமுறை இந்தியக் குடியுரிமை சட்டம் திருத்தப்பட்டது.

1998 முதல் 2004 வரை ஆட்சியில் இருந்த வாஜ்பாய் தலைமையிலான பா ஜ க அரசு கொண்டுவந்த திருத்தத்தில் டிசம்பர்30,2024 க்கு பின் பிறந்த ஒருவர் இந்தியக் குடியுரிமை பெறவேண்டுமென்றால் அவரது பெற்றோரில் ஒருவர் இந்தியக் குடிமகனாக இருந்தால் மட்டும் போதாது.

மற்றொருவரும் தான் சட்டபுறம்பாக இந்தியாவில் குடியேறியவர் அல்ல என்று நிரூபிக்க வேண்டும். அத்தகையோர் எத்தனை காலம் இந்தியாவில் வாழ்ந்தாலும் இந்தியக் குடியுரிமை பெற இயலாது என இச்சட்டம் கூறுகிறது.

இத்தகைய குடியேறிகளை கண்டு பிடித்து அவர்கள் மீது வழக்கு தொடுத்து தண்டனைக்குள்ளாக்க வேண்டும் அல்லது நாட்டை விட்டு அவர்களை அப்புறப்படுத்த வேண்டும் .இவர்களை அடையாளம் காண தேசீய மக்கள் தொகை பதிவேட்டை ஏற்படுத்த வேண்டும் . அதன் மூலம் உண்மையான குடிமகன்களை கொண்ட தேசீய குடியுரிமை பதிவேட்டை உருவாக்கி குடிமக்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் என்று குடியுரிமை சட்ட விதிகள் 2003 (Registration of Citizens and Issues of National Identity Cards) கூறுகிறது.

இங்கு NPRக்கும், NRCக்கும் உள்ள தொடர்பு பிரிக்க முடியாதவாறு பிணைக்கப்பட்டுள்ளது தெரிகிறது.

அந்த காலகட்டத்தில் சட்ட விரோதமாக இந்தியாவில் குடியேறுபவர்களை காங்கிரஸ் பாதுகாக்கிறது என்றும், அவர்களை ஓட்டு வங்கியாக பாவித்து அரசியல் ஆதாயம் அடையும் நோக்கில் இந்திய இறையாண்மையையும், பாதுகாப்பையும் காங்கிரஸ் உதாசீனப்படுத்துகிறது என பா ஜ கட்சி பிரச்சாரம் செய்தது.

இந்த நேரத்தில் (2003ல்) மற்றொரு சட்டமும் கொண்டுவரப்பட்டது. இதன்படி பாக். குடியுரிமை பெற்றிருந்த இந்துக்கள் இந்தியாவில் நுழையும் பொழுது அவர்களை சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்று கருதக் கூடாது, அவர்களை வெளிநாட்டினர் சட்டம் மூலம் சிறையிலடைப்பதோ வெளியேற்றுவதோ நடைபெறக்கூடாது என அறிவிக்கப்பட்டது.

இங்கு தான் முதன்முதலில் மத அடிப்படையிலான பாகுபாட்டை சட்டபூர்வமாக்கினர் பாரதீய ஜனதா கட்சியை சார்ந்த ஆட்சியாளர்கள்.

2004-ல் ஆட்சிக்கு வந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 2003 சட்டத்தில் இருந்த குளறுபடிகளை நிவர்த்தி செய்ய முயற்சிக்கவில்லை.

தேசீய மக்கள் தொகை பதிவேட்டை ஏற்படுத்துவதிலும் , சட்ட விரோதமாக குடியேறியவர்களாக ஒரு பிரிவினரை ஒதுக்கி அல்லது சந்தேகத்தின் பேரால் பிரித்து அவர்களை வாழ்வாதாரங்களை முடக்கி சிறையில் அடைப்பது அல்லது நாடு கடத்துவது என்ற வெறுப்பை காட்டும் என் பி ஆர் மற்றும் என் ஆர் சி நடைமுறைகளில் உள்ள பாகுபாடுகளையும் குளறுபடிகளையும் சீர் படுத்தாமல் கடந்து சென்றது.

2010ம் ஆண்டு ஆதார் அடையாள அட்டை மூலம் தேசீய மக்கள் தொகை பதிவேட்டை ஏற்படுத்த முயன்றது. ஆனால், ஆதார் கட்டாயமில்லை என்ற முரணான வாதத்தையும் முன் வைத்தது. மொத்தத்தில் மன் மோகன் சிங் அரசு குடியுரிமை விவகாரத்தில் குருட்டு பூனை போல் அங்குமிங்கும் பாய்ந்தது. உண்மையில் இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சிக்கும் தெளிவோ, தீர்க்கமான பார்வையோ இன்று வரை இல்லை.

மீண்டும் பாஜக அரசு, மோடி தலைமையில் ஆட்சியில் அமர்ந்த பின்னர், விசா விதிகளை மீறி அதிக நாட்கள் இந்தியாவில் தங்கும் மூன்று நாடுகளில் இருந்து வந்த முஸ்லீம் அல்லாத ஆறு மதப் பிரிவினருக்கு அபராதக் கட்டணம் குறைவாகவும், முஸ்லீம்களாக இருந்தால் அபராதத் தொகை பல மடங்கு அதிகமாகவும் வசூலிக்க விதி மாற்றங்கள் பாஸ்போர்ட் சட்டத்தில் கொண்டு வந்தது.

இந்துக்கள் ,சீக்கியர்கள் etc ஆகியோருக்கு ரூ 100 முதல் 500 வரை

முஸ்லீம்களுக்கு. ரூ 16000/ முதல் 40000/- வரை அபராதம் விதிக்கப்படுகிறது.

இறுதியில் குடியுரிமை திருத்தச் சட்டம் டிசம்பர் 12, 2019ல் பலத்த எதிர்ப்புகளுக்கிடையில் சட்டமாக்கப்பட்டது.

இந்தியாவின் மதச்சார்பற்ற அரசியல் கோட்பாடு மத அடிப்படையில் வளைத்து கோணலாக்கப்பட்டது. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற Equality நிலையை மறுத்து இந்தியக் குடியுரிமையை மதஞ்சார்ந்த ஒன்றாக இச்சட்டம் சிறுமைப்படுத்தியது. இந்தியாவில் இந்துக்களுக்கே முதலுரிமை என்ற கோணல் புத்தியை சட்டபூர்வமாகுகிறது இந்த சட்டம்.

மேலும், முஸ்லீம் வெறுப்பை விதைத்து, நாட்டு மக்களை பிளவு படுத்தும் பிளவுவாத சக்தியாக இச்சட்டம் உருவெடுத்துள்ளது.

அஸ்ஸாம் மாநிலத்தில் தயாரிக்கப்பட்ட தேசீய குடியுரிமை பதிவேடு கிட்டத்தட்ட 20 லட்சம் மக்களை சந்தேகத்திற்கிடமானோர் (Doubtful Citizens) என அறிவித்தது. அஸ்ஸாமை சார்ந்த முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயால் முடக்கி விடப்பட்ட தேசீய குடியுரிமை பதிவேட்டு வேலை 20 லட்சம் மக்களை சட்ட விரோதமாக குடியேறியவர்கள் என புறந்தள்ளியது. அதுவரை எகிறி குதித்துக் கொண்டிருந்த பா ஜ கவினர் 20 லட்சம் பேரில் 14 லட்சம் மக்கள் இந்துக்கள் என தெரிய வந்ததும், தங்கள் பாட்டை மாற்ற ஆரம்பித்து உள்ளனர் . அங்கு என் ஆர் சி யை மீண்டும் திருத்த வேண்டும் என்று கூறும் பாஜ க வினர் மேற்கு வங்கத்தில் என் ஆர் சி யின் புனிதமும், அவசியமும் பற்றி முன்னுக்குப் பின் முரணாக பேசி வருகின்றனர்.

ஒரே நாடு ஒரே தேர்தல் ஒரே பதிவேடு என்றெல்லாம் பிதற்றுபவர்கள் வாக்கு அரசியலுக்காக அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள ஒவ் வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு வேடம் போடுகின்றனர். இத்தகைய எடுத்தேன் கவிழ்த்தேன் போக்கு மாநில மக்களிடையே, பல்வேறு மதங்களை பின்பற்றும் மக்கள் கூட்டத்திடையே வெறுப்புணர்வை விதைக்கிறது.

இதன் விளைவு இன்று மணிப்பூரில் நாடு கண்டு கொண்டிருக்கிறது.

சொந்த நாட்டு மக்களை பிரித்து, அவர்களை அகதிகளாக, நாடற்றவர்களாக உரிமையற்றவர்களாக மாற்றுவது வளர்ச்சியும், முன்னேற்றமும் ஆகாது என்பதை நாம் உரக்க ஒலிக்க வேண்டும். இத்தகைய முழக்கம் உச்ச நீதி மன்ற கதவுகளை எட்டும் வரை தொடரும் தொடர வேண்டும்!

கட்டுரையாளர்; ச.அருணாசலம்

 

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time