பறக்கும் படையா? பணம் பறிக்கும் படையா..?

-சாவித்திரி கண்ணன்

அதிகாரிகள் கையில் முழு அதிகாரம் தந்தால் என்னமாக ஆட்டம் போடுவார்கள் என்பதற்கு பறக்கும் படை என்ற பெயரில் சாதாரண மக்களிடமும், எளிய வியாபாரிகளிடமும் இவர்கள் நாள்தோறும் காட்டும் அணுகுமுறைகளே சாட்சியமாகும். அரசியல்வாதிகளை சுதந்திரமாக பணம் எடுத்து செல்லவிட்டு மக்களை தான் பிடிக்கிறார்கள்..!

தமிழ்நாட்டில் உள்ள 40 நாடாளுமன்ற  தொகுதிகளுக்கும் 3 குழுக்கள் வீதம் 702 தேர்தல் பறக்கும் படை குழுக்கள் மற்றும் 702 நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்தக் குழுக்கள் எட்டு மணி நேரம் என்ற அடிப்படையில் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்கணிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதில், குறிப்பாக அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுப்பதற்காக சிறப்பு தேர்தல் பறக்கும் படை (Flying Squad Teams), நிலையான கண்காணிப்புக் குழுக்கள் (Static Surveillance Teams) அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்கள் இந்தியத் தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கிய ரூ.50,000-த்தை விட அதிகமாக பணம், நகை அல்லது பொருட்களை ஆவணமின்றி எடுத்துச் சென்றால் தான் அதனை பறிமுதல் செய்ய வேண்டும். ஆனால், அவர்களோ 45,000 அல்லது 47,000 வைத்திருந்தால் கூட பிடித்து பணத்தை பறித்துக் கொள்கிறார்கள்.

தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் நட்சத்திர பேச்சாளர்கள், தங்களது தனிப்பட்ட செலவுக்காக ஒரு லட்சம் ரூபாய் வரை ரொக்கமாக வைத்துக் கொள்ள அனுமதிக்கும் இவர்கள் சந்தையில் ஆடு, மாடுகளை விற்றுவிட்டு கையில் ரொக்கமாக அறுபதாயிரம், எழுவதாயிரம் என எடுத்து வருகின்ற எளிய விவசாயிகளை ஆவணம் கேட்கிறர்கள். இதற்கு ஆவணங்கள் தர இயலாது என்பதை நன்கு அறிந்தும் பணத்தை பறித்து வைத்து நாளை கலெக்டர் ஆபீஸ் வந்து உரிய ஆவணங்களை காட்டி பணம் பெற்றுக் கொள் என்கிறார்கள்!

இதனை கேட்டு அதிர்ந்து போய் கண்ணீர்விட்டுக் கதறி அழும் விவசாயிகளை இவர்கள் பொருட்படுத்துவதே இல்லை. விவசாயிகளுக்கு ஆடுகளும், மாடுகளுமே பெரிய சொத்து. அதையே விற்க வேண்டிய ஒரு துர்பாக்கிய நிலை வந்தால் தான் விற்பார்கள். அப்படிப்பட்ட ஒரு உண்ர்வுபூர்வமான குடும்ப சொத்தை விற்ற நிலையில் வீட்டுக்கு சோகமாக வந்து கொண்டிருப்பவரை நிறுத்தி, உள்ள பணத்தையும் அபகரிப்பார்கள் என்றால்.., இவர்கள் இதயம் என்ன இரும்பால் ஆனதா..?

“ஒரு விவசாயி நெல் கொள்முதல் நிலையத்தில் தனது நெல் மூட்டைகளை விற்று ரொக்கமாக வைத்திருந்து பிடிபட்டால் அவரிடம் நெல் கொள்முதல் நிலையத்தில் கொடுத்ததற்கான ரசீது இருக்கிறதா? எனக் கேட்கிறர்கள்! அதனை அவர் காண்பித்தால் விட்டுவிட வேண்டியது தானே! அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்த பின்பு தொகை மீண்டும் வழங்கப்படுமாம்! ஆகவே, நாளை அலுவலகம் வந்து வாங்கிட்டு போங்க என்கிறார்கள். அடுத்த நாள் சென்றால், அதற்கடுத்த நாள் வரச் சொல்கிறார்கள் என மயிலாடுதுறை விவசாயி ஒருவர் மிகவும் வருத்தப்பட்டார்.

இப்படித்தான் தாயும், மகளுமாக இருவர் தங்கள் இரண்டு ஏக்கர் நிலத்தில் விளைந்த நெல் மூட்டைகளை சந்தையில் விற்று காசாக்கி வீடு திரும்பும் வேளையில் பறக்கும் படை பணத்தை பறித்துக் கொண்டது. இவர்கள் எவ்வளவோ கெஞ்சியும், கதறியும் அவர்கள் மனம் இளகவில்லை. அடுத்த நாள் கலெக்டர் அலுவலகம் சென்ற அந்த படிப்பறிவில்லா பெண்களிடம் ஆவணம் கேட்டுள்ளனர். அவர்களால் தர இயலவில்லை. நிலம் அறுவடையானதை வந்து பார்த்து அக்கம்,பக்கம் விசாரித்து பாருங்கய்யா என கண்ணீர் மல்க கூறியுள்ளனர். ஆயினும் எடுபடவில்லை. இதையடுத்து கொந்தளிப்பின் உச்சத்திற்கு சென்ற அவர்கள் மாவட்ட அதிகாரி அலுவலக வளாகத்தில் நின்று கதறி அழுதபடி மண்ணை வாரி இறைத்து,

’’நீ நாசாமாக போவ உன் குடும்பம் விளங்காமல் போவ.. எங்க வயிற்றெறிச்சல் உங்கள சும்மா விடாது! நாங்க கும்பிடும் அந்த தெய்வம் இருக்கிறது உண்மை என்றால், உன்னை தண்டிக்காமல் விடாது..உன்னை அழிக்காமல் விடாது என ஒரு மணி நேரத்திற்கும் குறையாமல் அழுது, கதறி மண்னை வாரி தூற்றிச் சென்றுள்ளனர். இதை பார்த்த மக்களுக்கும் கண்கள் கலங்கிவிட்டார்கள்! இது போன்ற சம்பவங்கள் மாவட்ட கலெக்டர் அலுவலத்தில் சர்வசாதாரணமாக பார்க்க முடிகிறது என்றார் தஞ்சையைச் சேர்ந்த நம் நண்பர் ஒருவர்.

சென்னையைச் சேர்ந்த ஒருவர் தன் மகள் திருமணத்திற்கு மூன்று பவன் நகை வாங்க பணம் கொண்டு சென்ற போது பிடிபட்டார். அடுத்த நாள் திருமண பத்திரிக்கை கொண்டு சென்றதால் மீட்க முடிந்தது. சாதாரணமாக அவர் வாங்க போயிருந்தால் பணத்தை திரும்ப பெறுவதற்கு ரொம்ப கஷ்டப்பட்டு இருப்பார். இந்தக் கெடுபிடிகளாஇ நகை கடைகளில் சரிபாதிக்கும் கீழாக வியாபாரம் சரிந்துவிட்டது என்கிறார்கள் நகைக் கடை வியாபாரிகள்!

மக்கள் ரூ.50,000-க்கு மேல் கொண்டு செல்லும் போது பிடிபட்டால் அவர்கள் தங்களுடைய வருமான வரி கணக்கினை காண்பித்து பணத்தினை பெற்றுக் கொள்ளலாம் என்கிற போது சிரமமாகிவிடுகிறது.

நாமக்கல்லை சேர்ந்த முட்டை வியாபாரி ஒருவர் கூறியதாவது; இன்றைக்கு வெறும் கோழிக் கழிவுகளை ஒரு லாரி முழுக்க ஏற்றிச் சென்று விவசாயிகளுக்கு கொடுத்து வந்தாலே 50 ஆயிரம் பணமாகிறது! இதுவே ஆட்டுப் புழுக்கை என்றால் ஒரு லட்சம் ஆகிறது. இதுக்கெல்லாம் ரசீது கேட்டுகிட்டு இருந்தால் என்னாவது..? என்கிறார்.

இதனால் தான் வியாபாரிகள் சங்கத் தலைவர்கள் அனைவருமே ஒருமித்த குரலில், இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு ஒரு வேண்டுகோலை வைத்துள்ளனர். வணிகர்கள் பொருட்களை வாங்குவதற்கான கூடுதல் பணத்தை எடுத்துச் செல்ல வழிமுறைகளை வகுக்க வேண்டும். இன்றைக்கு ஒரு லட்ச ரூபாய் என்பது மிகவும் சாதாரண புழக்கத்தில் உள்ளதாகும். ஆகவே ஒரு லட்சம் ரூபாய் வரை ஆவணமின்றி ரொக்கத்தை கையில் எடுத்துச் செல்ல அனுமதி அளிக்க வேண்டும் ”  என்கிறார்கள்.

சேலத்தைச் சேர்ந்த ஒரு வணிகரிடம் பேசும் போது, ”பறக்கும் படையிடம் பேசிப் பயனில்லை என்பதால் முறையான ரசீது இல்லாமல் நாங்க பணியாளர்களை வெளியில் அனுப்புவதில்லை. ரசீதுகளை முறையாக காண்பித்தால், அவர்களுக்கு எங்கிருந்து தான் அந்த கோபம் வருத்துன்னே தெரியலை..! என்னடா எல்லாத்தையும் முறையாக காண்பிச்சுட்டா விட்டுருவோமா..? எங்களுக்கு கேசு வேணாமா? ரசீது என்ன ரசீது..? அதை யார் வேணா வாங்கி எழுதிக்கிடலாமே.., சரி,சரி பணத்தை நாளைக்கு வந்து இந்த ரசீதுகளை ஆபீசில் காட்டி வாங்கிட்டு போ…” என பிடுங்கி வைத்துக்கிட்டாங்க..’’ என்கிறார்.

இன்னும் சில சரக்கு வாகன ஓட்டுநர்களிடம் பேசிய போது, ”பறக்கும் படைக் காரங்களுக்கு என்ன பசி என்றே தெரியலை.பிஸ்கட் பாக்கெட் எடுத்துச் செல்லும் வகனத்தை மடக்கினால், ‘ஆவணம் எல்லாம் சரியாத் தான் இருக்கு. இரண்டு பிஸ்கட் பாக்ஸ் எடுத்து வச்சுட்டு போங்க’ என்கிறாங்க! பழ வகனங்கள் என்றால், அவங்க கேட்கிற பழங்களை கொடுத்துட்டு போகச் சொல்றாங்க..!” என வருத்தப்பட்டனர்.

”ஈரோடு ஜவுளி சந்தையே ஸ்தம்பித்து போய்விட்டது. யாரும் சந்தைக்கு வருவதற்கே பயப்படுகிறார்கள்! இப்படி சிறு,குறு வியாபாரிகளை எதுக்குத் தான் வதைக்கிறார்களோ..! உண்மையான அரசியல்வாதிகளை நிறுத்தி, அவர்களிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்யாமல் வேடிக்கை பார்த்துவிட்டு, சாதாரண ஜனங்ககிட்ட வீரத்தை காட்டறாங்க..”என ஈரோடு வியாபாரிகள் சொல்கிறார்கள்! நேர்மையான அரசு உயர் அதிகாரிகள் மக்கள் வலிகளை புரிந்து கொண்டு, இது விஷயத்தை சற்று பரிவோடு அணுகி, ஆவண செய்ய வேண்டும்.

சாவித்திரி கண்ணன்.

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time