டி.எம்.கிருஷ்ணா உண்மையில் முற்போக்காளரா?

-சாவித்திரி கண்ணன்

டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது வழங்கப்படுவது சர்ச்சையாகி, பொதுத் தளத்தில் கிருஷ்ணாவிற்கு பேராதரவு ஏற்பட்டுள்ளது! பார்ப்பனர்களில் ஒரு தரப்பே கிருஷ்ணாவை ஆதரிப்பதால், அவர் எள்ளளவும் பாதிக்கப்படவில்லை. மாறாக, பெரியார் தாக்கப்படுவது குறித்து தற்போது வரை கிருஷ்ணா கள்ள மெளனம் சாதிப்பது ஏன்?

டி.எம்.கிருஷ்ணா தொடர்ந்து ஊடகங்களில் கடந்த பத்தாண்டுகளாக முற்போக்காளராக அடையாளம் காட்டப்பட்டும், புகழப்பட்டும் வருகிறார்! திராவிட இயக்கத்தாரும், இடதுசாரி சிந்தனையாளர்களும் அவரை புகழ்கின்றனர். மீனவர் குப்பத்திற்கு சென்று அவர் கர்நாடக இசை கச்சேரி நடத்தியது சர்வதேச அளவில் பெரும் பேசு பொருளானது. அதன் விளைவாக,

ராமன் மகசேசே விருது, (2016)

தேசிய ஒருங்கிணைப்புக்கான இந்திரா காந்தி விருது,(2017)

தேசிய ஒருமைப்பாட்டைப் பாதுகாத்தற்கும், கர்நாடக இசையை சாமானியர்களுடன் இணைத்ததற்காகவும் பேராசிரியர் வி. அரவிந்தாக்ஷன் நினைவு விருது (2017)

போன்ற விருதுகள் அவருக்கு தரப்பட்டுள்ளன!

இந்தியாவின் ஆழமான சமூகப் பிளவுகளைக் குணப்படுத்த, சாதி மற்றும் வர்க்கத்தின் தடைகளைத் தகர்த்து, அனைத்து தரப்பிற்கும் இசை வழங்குவதைக் கட்டவிழ்த்துவிட்டவராம்! கலைஞராகவும், கலையின் சக்திக்காகவும் அவர் ஆற்றிய வலிமையான அர்ப்பணிப்புக்காகவும் அவருக்கு ராமன் மகசேசே விருது வழங்கப்பட்டதாம்!

தற்போது மியூசிக் அகாதெமியின் சங்கீத கலாநிதி விருது எதற்கு கொடுக்கப்பட்டது என்றால்,

கர்நாடக இசைத் துறையில் அவர் ஆற்றியுள்ள பணிகள் என்பது ஒருபுறமிருக்க,  கர்நாடக இசையைப் பல்வேறு சமூக அமைப்புகளுக்கு எடுத்துச் செல்வதன் மூலமும், கலையின் கேட்போர் தளத்தை விரிவுபடுத்துவதற்கு அவர் பணியாற்றியமைக்காகவும், சமூக சீர்திருத்தத்திற்கான ஒரு கருவியாக இசையைப் பயன்படுத்துவதற்காகவும் இவ்விருது வழங்கப்படுவதாக மியூசிக் அகாதெமி அறிவித்துள்ளது.

மேற்படி விருதுகள் சில சாம்பிள்களே! இது போல இன்னும் சில விருதுகளும், பாராட்டு பத்திரங்களும் கடந்த பத்தாண்டுகளாக கிருஷ்ணாவிற்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன!

மேற்படி விருதுகள் அவருக்கு தரப்படுவதற்கு சொல்லப்பட்ட காரணங்களுக்கு ஏற்ப அவர் செயல்பட்டுள்ளாரா..?

# அவரது இயங்கு தளம் என்பது எந்த அளவுக்கு சாதியைக் கடந்து, அதிதிறமை வாய்ந்த இசைக் கலைஞர்களை கண்டெடுத்து கர்நாடக இசை மேடைகளுக்கு தந்துள்ளது..?

# எத்தனை சூத்திரர்கள், தலித்துகள் அவரிடம் சங்கீதம் பயின்று இன்று புகழ் பெற்றுள்ளனர்.

# அவரால் உருவாக்காப்படாவிட்டாலும் கூட, இசைத் துறையில் சிறந்த ஆற்றல் இருந்தும் மேலேழுந்து வர முடியாமல் போராடும் எத்தனை பார்ப்பனரல்லாத இசைக் கலைஞர்களுக்கு அவர் முகவரி தந்துள்ளார். அப்படியான முயற்சிகளில் அவர் ஏதேனும் தடைகளையோ, அவமானங்களையோ அனுபவ ரீதியாக பெற்றுள்ளாரா?

# குறைந்த பட்சம் தான் பாடுவதற்கு பக்கவாத்தியக் கருவிகளை வாசிப்பவர்களில் ஒருவரையாவது அவர் தலித் அல்லது சூத்திர சமூகத்தில் இருந்து கண்டெடுத்து இணைந்து பயணப்பட்டுள்ளாரா..?

இது போன்ற எண்ணற்ற கேள்விகளை எழுப்பி பதில் தேடினால் திருப்திகரமான பதில் இல்லை. அதே சமயம் சர்வதேச அளவில் இவர் தொடங்கியுள்ள அறக்கட்டளைக்கு பெரும் நிதிகள் தாழ்த்தப்பட்டவர்களுக்கென தொண்டு செய்வதற்காக குவிகின்றன. அந்த நிதியின் பொருட்டு சிலவற்றை செய்கிறார் என்பதில் மறுப்பில்லை.

ஆனால், புகழ் வெளிக்குத் தெரியாமல் இதில் மேற்படி பணிகளை ஆண்டுக் கணக்கில் நாளும், பொழுதும் செய்யும் பலர் உள்ளனர்!

அவர்களுக்கு எல்லாம் கிடைக்காத பெரு முக்கியத்துவம் கிருஷ்ணாவிற்கு தொடர்ந்து கிடைத்த வண்ணம் உள்ளது. தேவைக்கும் அதிகமான விளம்பர வெளிச்சம் இவர் மீது பாய்ச்சப்பட்டு வருகிறது…!

ஒருவன் புரட்சிகரமான மனநிலை பெறுவதற்கும், செயல்படுவதற்கும் இரண்டு அடிப்படை சூழல்கள் இருக்க வேண்டும்.

# ஆதிக்க சமூகத்தில் இருந்து விலகி நின்று,. எளிய சமூகத்தினரோடு உங்கள் இயங்கு தளத்தை கட்டமைத்து கொள்ளும் மனோபலம் வேண்டும்.

# வாழ்க்கையில் ஏதேனும் ஒரு சந்தர்பத்திலேனும், வலிந்தேனும் வறுமை, பசியில் உழன்று பார்த்த அனுபவம் இருக்க வேண்டும்.

டி.எம்.கிருஷ்ணா யார்? என்று பார்ப்போமானால், அடிப்படையில் அவர் ஆகச் சிறந்த இசைக் கலைஞர். கிருஷ்ணாவின் பெற்றோர் ரங்காச்சாரி, பிரேமா இருவருமே கர்நாடக இசையில் நல்ல புலமை கொண்டிருந்தனர். மிக இளம் வயதிலிருந்தே கிருஷ்ணா கிளாசிக்கல் கலைகளில் பயிற்சி பெற சிறு வயதிலிருந்தே செம்மங்குடி சீனிவாசய்யர், சீதாராம சர்மா,  ஆகியோரிடம் இசைப் பயிற்சிக்கு அனுப்பினர். இந்தியாவின் முதல் நிதி அமைச்சரும், மியூசிக் அகாதெமி நிறுவனர்களில் ஒருவருமான டி.டி.கிருஷ்ணமாச்சாரியின் பேரனான கிருஷ்ணாவிற்கு 12 வயதில்  மியூசிக் அகாடமியின் மேடையில் வாய்ப்பு கிடைத்தது ஆச்சரியம் ஒன்றுமில்லை. அதைத் தொடர்ந்து உலகின் முக்கிய நாடுகளில் அன்று தொடங்கி இன்று வரை அவருக்கு வாய்ப்புகள் கிடைத்த வண்ணம் உள்ளன!

இவையாவுமே அவர் செல்வாக்கான பார்ப்பன குடும்பத்தில் பிறந்ததால் பெற்ற பலன்கள்! தற்போதும் அவருக்கு மேடைகள், அரங்குகள் தந்து ஆதரித்து வளர்ப்பவர்களும் அந்த சமூகத்தினரே! ஆகவே, பிராமண சமூகத்தின் பேராதரவில் பற்பல பலா பலன்களை பெற்று, செல்வாக்குடன் திகழ்பவரே கிருஷ்ணா. ஆகவே, அவர்களுக்கு எதிரான எந்த காத்திரமான செயல்பாடுகளையும் செய்தவரல்ல.

அவருக்கு சில முற்போக்கான பார்வைகள் உள்ளன! ஒருசில பார்ப்பன வழமைகளை கட்டுடைத்து யதார்த்தங்களை பார்க்கும் இயல்பும் அவருக்கு இருக்கிறது! அதை திறம்பட வெளிப்படுத்தும் பேச்சும், எழுத்தும் கூட அவருக்கு கை கூடியுள்ளது.

அவரது தாய் பிரேமாவும், தாய் மாமா ஸ்ரீதர் சுப்பிரமணியமும் பொள்ளாச்சி அருகே ஆனைகட்டியில் பழங்குடி மாணவர்களுக்கு பள்ளி நடத்தி உள்ளனர். ஆகையால் அவர்கள் வழியில் அவருக்கு இயல்பிலேயே சில முற்போக்கு சிந்தனைகள் கிடைத்திருக்கலாம்.

ஆகவே, அவரது சில முற்போக்கான அம்சங்களை பிரதானப்படுத்தி, பிரபலப்படுத்தி அவருக்கு தொடர்ந்து ஒரு கதாநாயக பிம்பத்தை கட்டமைத்து வருகின்றனர். அந்த கதாநாயக பிம்பத்தை கட்டமைக்கும் முயற்சிக்கு பெரியாரையும், அம்பேத்காரையும் சேர்த்துக் கொள்கிறார்கள்! இந்த முயற்சியை இதழியல் துறையில் இருக்கும் பார்ப்பனர்கள் தொடர்ந்து செய்வதை கடந்த பத்தாண்டுகளாக நான் பார்த்து வருகிறேன். இதழியல் துறையில் அவருக்கு என்று மிகப் பெரிய ‘லாபி’ தொடர்ந்து திட்டமிட்டு கட்டமைக்கப்பட்டு வருகிறது.

அதை அவர் ரசித்து, அனுபவித்து சர்வதேச ரீதியாக பல பலாபலன்களை எளிய மக்கள் முன்னேற்றம் எனச் சொல்லி பெற்று வருகிறார். இதன் விளைவாக தமிழ் நாட்டிற்கான தனித்துவ கல்விக் கொள்கை உருவாக்கக் குழுவிலும் கல்வியாளர் அல்லாத அவர் சேர்க்கப்பட்டார். அவருக்கு ஏற்கனவே கட்டமைக்கப்பட்ட பிம்பம் காரணமாக, ”ஆகா, இது சரியான தேர்வு தான்” என பரவலாக பொதுச் சமூகத்தின் பாராட்டையும் பெற்றார்!

அந்தக் குழுவில் அவர் எப்படி செயலாற்றினார் என்பதில் தான் அவரது அசல் அடையாளம் வெளிப்பட்டது. அந்தக் குழுவில் அவர் துளியும் ஆர்வம் கட்டாமல் வெறுமனே ஒரு பார்வையாளராகவே தொடர்ந்து இருந்தார். அதே சமயம் தமிழ்ச் சமூகம் மற்றும் மண் சார்ந்த கல்வி திட்ட உருவாக்கத்தில் தீவிரமாக தன்னை அர்ப்பணித்து செயலாற்றிய கல்வியாளர் ஜவகர் நேசனுக்கு தொடர்ந்து சனாதனத் தன்மை கொண்ட தேசிய கல்விக் கொள்கையை அப்படியே ‘உல்டா’ செய்து, தமிழ் நாட்டிற்கான தனித்துவ கல்விக் கொள்கையாக உருவாக்க அழுத்தம் தந்த ஐவர் கொண்ட பார்ப்பன குழுவில் ஒருவராக அம்பலப்பட்டார்! அவர் உண்மையிலேயே முற்போக்காளர் எனில், இந்த நல்வாய்ப்பில் அவர் எதிர் நிலை எடுத்திருக்க மாட்டார்.

முற்போக்காக அடையாளம் காட்டல் என்பது வேறு. முற்போக்காளராகவே இயங்குதல் என்பது முற்றிலும் வேறு. பார்ப்பனர்களில் பலர் உண்மையில் முற்போக்காளர்களாக அமைதியாக இயங்குவதை நான் பல தளங்களில் பார்த்துள்ளேன். ஆனால், முற்போக்காக தங்கள் பிம்பத்தை கட்டமைத்து, உரிய அங்கீகாரங்கள் பெற்று வாய்ப்பு வரும் போது, தங்கள் ‘அஜந்தாக்களை’ சிறிதும் கூச்ச நாச்சமில்லாமல், அரங்கேற்றி செல்வதை அனேக சந்தர்ப்பங்களில் கண்டு அதிர்த்துள்ளேன். அந்த வகைப்பட்டவரே டி.எம்.கிருஷ்ணா!

அவரை எதிர்ப்பவர்களின் நோக்கம், அவரை பேசுபடு பொருளாக்க வேண்டும் என்பதோடு, பெரியாரை தாக்கும் சந்தர்ப்பமாகவும் இதை பயன்படுத்துவதே!

கிருஷ்ணா விருது சர்ச்சையில் அவர் ஆற்றல், தகுதி குறித்து அவரை எதிர்க்கும் ரஞ்சனி, காயத்திரி சகோதரிகள் கேள்வி எழுப்பவில்லை. மாறாக கிருஷ்ணா பெரியாரை ஆதரிப்பதை தான் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். முதலில் அவர்கள் இப்படிப் பேசினர்;

“பிராமணர்களை இனப் படுகொலை செய்ய வேண்டுமென வெளிப்படையாக பேசிய, இந்த சமூகத்தைச் சேர்ந்த ஒவ்வொரு பெண்ணையும் இழிவுபடுத்திய,  ஈ.வெ.ரா என்ற பெரியாரை டி.எம். கிருஷ்ணா புகழ்ந்து வருவதை கண்டு கொள்ளாமல் இருப்பது அபாயகரமானது”

இசை சகோதரிகளின் இந்தப் பேச்சு கிருஷ்ணாவிற்கு மாபெரும் ஆதரவு நிலையை சமூக வலைதளங்களில் பெற்றுத் தந்தது. ஏகப்பட்டோர் கிருஷ்ணாவிற்கு ஆதரவாக களம் கண்டனர். சகோதரிகளுக்கு கடுமையான எதிர் வினைகளை முற்போக்காளர்களும், திராவிட இயக்கதாரும் சொல்லினர். முதல்வரே தலையிட்டு கிருஷ்ணாவிற்கு ஆதரவாகப் பேசினார்.

தனக்காக இவ்வளவு பெரும் எண்ணிக்கையில் சமூகம் பரிந்து பேசிய நிலையில், கிருஷ்ணாவோ பெரியார் குறித்த அவதூறுகளுக்கு விடை பகராமல் அமைதி காத்தார். கிருஷ்ணாவின் கள்ள  மெளனம் ஆபத்தானது!

மியூசிக் அகாதெமி ஒரு விளக்கம் தந்தது. அதன் பிறகும் அந்த சகோதரிகள் பெரியார் மீது கடுமையைக் காட்டினர்.

”விருது வழங்குவதற்கான உங்களின் உரிமையை நாங்கள் கேள்வி எழுப்பவில்லை. ஆனால், அதே சமயம் இனப் படுகொலையாளர்களையும், இழிவான சொற்பொழிவாளர்களையும் நாங்கள் ஆதரிக்கவில்லை” என்றனர்.

ஆக, கிருஷ்ணாவின் தகுதியும் பிரச்சினை இல்லை. மியூசிக் அகாதெமியின் உரிமையையும் அவர்கள் கேள்விக்கு உட்படுத்தவில்லை. அவர்களின் பிரச்சினை பெரியார் ஒருவரே!

எனில், பெரியாரைப் பற்றி தவறான புரிதல் கொண்ட அவர்களுக்கும், அவர்களை போன்ற தன் பார்ப்பன குலத்தாருக்கும் தகுந்த விளக்கம் தந்திருக்க வேண்டும் கிருஷ்ணா! ஆனால், அவர் தற்போது வரை மவுனம் சாதிக்கிறார்…!

பெரியாரைப் பற்றிய உண்மைகளை சொல்வதற்கு எவ்வளவோ உள்ளனவே!

காந்தி படுகொலை செய்யப்பட்ட போது அவரைக் கொன்ற கோட்சே  உள்ளிட்ட ஆறு பேருமே பார்ப்பனர்கள் என்பதால் இந்தியா முழுமையும் பார்ப்பனர்கள் தாக்கப்பட்ட போது அவர்கள் தாக்கப்படாத இடமாக தமிழகத்தை பாதுகாத்தவர் பெரியார் தான். இதற்காக வானொலி உரை நிகழ்த்தி இந்திய அரசே பெரியாரின் உதவியை பயன்படுத்திக் கொண்டதே! பெரியார் பார்ப்பனரக்ளை இனப்படுகொலை செய்யும் நோக்கம் கொண்டவராக இருந்திருந்தால், இதுவல்லவா அவருக்கு வரலாறு தந்த அற்புத வாய்ப்பு! பார்ப்பனர்கள் தேசத் தந்தையையே கொன்றுவிட்டனர் ஆகவே அவர்கள் இன்ப் படுகொலையாளர்கள் என சித்தரித்து இருக்கலாமே! பெரியாரின் சீடர்களில் ஒருவரேனும் ஒரு பார்ப்பனரையேனும் கொன்றார்கள் என்ற சம்பவம் உண்டா?

பெரியாரும், காந்தியும்

ஆதிக்க சக்தியான பார்ப்பனர்கள் சமூகத்தை அடக்கியாண்ட பொழுதில் அவர்களை எதிர்க்கும் மனத் துணிவை பொதுச் சமூகத்திற்கு ஏற்படுத்தினார். கீழ் சாதி என்றும் பறப்பய என்றும் பள்ளப்பய என்றும் சண்டாளப் பயல் என்றும் சதிராட்டம் ஆடும் நாட்டியக் கலைஞர்களை தேவடியாள் என்றும் இழிவாகப் பேசியவர்களும், மற்றவர்களையும் பேசத் தூண்டியவர்களும் பார்ப்பனரே அன்றி பெரியாரல்ல. அவர் இனப் படுகொலையாளர் எனில், காந்தியும், ராஜாஜியும் பெரியாரை எப்படி மதித்து போற்றி இருக்க முடியும் என கொஞ்சமேனும் சிந்திக்க வேண்டாமா..?

மனித நேயரான பெரியாரை இழிவுபடுத்துவது என்பது பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸின் அஜந்தாவாகும். அந்த அஜந்தாவிற்கு துணை போகிறவர்களே இந்த இசை சகோதரிகளை தூண்டிவிட்டு பின்னணியில் இருந்து செயல்படுகின்றனர்.

மற்றொரு பார்ப்பன குல சகோதரியான பாடகி சின்மயி கூட பெரியார் குறித்த புரிதலை ஏற்படுத்த இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி விளக்கி உள்ளார்.

பெரியார் சிந்திக்கத்தான் சொல்கிறார். அவரை அவர் பின்பற்ற சொல்லவில்லை. எனக்கும் பல இடங்களில் பெரியார் மறுப்பு உண்டு, ஆனால் ஒதுக்கிவிட கூடாத ஒருவர் தான் பெரியார். கற்புதான் பெண்களின் எதிரி என தீவிரமாக யோசித்து இருக்கிறார்.  நமக்கு அது புரிவது கடினம். பெரியாரின் முரட்டுத்தனம் இந்த தேசத்தில் நடக்கும் ஏற்றத்தாழ்வில் உள்ள மனக்கொதிப்பினால் வந்தது. எனக்குமே அந்த அறம் சார்ந்த கோபம் அடிமனதில் உண்டு. இந்தியாவில் தமிழகத்தில் மட்டும்தான் ஜாதி பெயரை சேர்த்து போட முடியாது. அது கேவலமாக பார்க்கப்படுகிறது. இது தான் பெரியாரின் சக்தி’’ என பெரியாரின் முக்கியத்துவத்தை சின்மயி பேசி இருக்கிறார்!

இதோ கடைசியாக ரஞ்சனி, காய்த்திரி சகோதரிகள் வைத்த வேண்டுகோள் பற்றியாவது வாய் திறப்பாரா டி.எம்.கிருஷ்ணா?

”மியூசிக் அகாதெமி நிறுவனத்தை நாங்கள் மதிக்கிறோம். ஒடுக்கப்பட்ட சமூகங்களில் இருந்து இசைக் கலைஞர்கள் உருவாகும் மியூசிக் அகாதெமி கட்டிடத்தில் ஆதிக்கம் செலுத்துவது எங்களுக்கும், லட்சக்கணக்கான மக்களுக்கும் மகிழ்ச்சியான நாளாக இருக்கும். மியூசிக் அகாதெமி ஆடிட்டோரியம் அனைத்து சமூகங்கள் மற்றும் மதச் சிறுபான்மையினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினராலும் நிரம்பி இருக்கும் நாளை பார்க்க விரும்புகிறோம்” என வேண்டுகோள் வைத்துள்ளனர் சகோதரிகள்!

சபாஷ்! பெரியாரும் இதைத் தான் விரும்பினார்! தங்களை அறியாமலே பெரியார் நிலைக்கு ஆதரவாக ரஞ்சனியும், காயத்திரியும் வந்து சேர்வதற்கு நமது சமூகம் அவர்களுக்கு ஆற்றிய எதிர் வினைகளே காரணம்! ஆனால், கிருஷ்ணா இதற்கு எந்த மெனக்கெடலும் செய்யவில்லை.

போகட்டும். பார்ப்பனர்கள் மட்டுமே நிரம்பியுள்ள மியூசிக் அகாதெமியில் மற்றவர்களும் முக்கியத்துவம் பெற கிருஷ்ணா செய்யப் போவது என்ன? இந்த விஷயத்தில் தன் நிலைபாட்டை விளக்கி, இதில் உடன்பாடு எனில் இது நிறைவேற்றப்படும் பட்சத்தில் தான் அல்லது இதை கருத்தியல் ரீதியாக மியூசிக் அகாதெமி ஏற்கும் பட்சத்தில் தான்விருதை பெற்றுக் கொள்வேன் என்று சொல்வாரா..? இதைச் சொல்லும் அறச் சிந்தனை அவருக்கு உண்டா?

கிருஷ்ணா ஒரு சந்தர்ப்பவாதி. தன்னை முன்னிலைப்படுத்தி கொண்டு முக்கியத்துவம் பெறவே முற்போக்கு பேசுகிறார்! முற்போக்குவாதிகள் சனாதனக் கூட்டத்தோடு பின்னிப் பிணைந்து செயல்பட வாய்ப்பே இல்லை!

சாவித்திரி கண்ணன்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time