பணபலத்தால் வெற்றியை பறிக்கத் துடிக்கும் பாஜக!

- ஹரிபரந்தாமன்

எப்படியாவது தமிழகத்தில் காலூன்ற பாஜக அள்ளி இறைக்கும் பணம் ஆச்சரியமூட்டுகிறது. கன்னியாகுமரியில் கரன்ஸிகள் புரள்கிறதாம்! கோவையில் நூதன பண விநியோகம் நடக்கிறதாம்! தென் சென்னையோ பண மழையில் திணறுகிறதாம்..! நெல்லைக்கு கொண்டு செல்லப்பட்ட ரூ 4 கோடி பிடிபட்டுள்ளதன் பின்னணி என்ன..?

ஏப்ரல் -6 அன்று இரவு நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் வண்டியில் தாம்பரத்தில் பறக்கும் படையினரால் சுமார் நான்கு கோடி ரூபாய்  ஏ.சி பெட்டியில் பயணம் செய்த மூன்று பேரிடம் இருந்து கைப்பற்றப்பட்டது.

ரகசிய தகவலின்  பேரில் தாம்பரம் போலீசாரும், பறக்கும் படை அதிகாரிகளும்  நடத்திய சோதனையில் ஆறு பைகளில் ஐநூறு ரூபாய் கத்தைகளை எடுத்துச் சென்ற சதீஷ் ,நவீன் ,பெருமாள் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர். அதில் சதீஷிடம், பாஜக உறுப்பினர் அடையாள அட்டை மற்றும் பாஜகவின் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரனின் எம்.எல்.ஏ அடையாள அட்டையின் நகலும்  இருந்தது பரிசோதனையில் தெரிய வந்தது.

பாஜக பிரமுகர் நயினார் நாகேந்திரனுக்கு  சொந்தமான சென்னை புளு டைமண்ட் ஓட்டலில் தாங்கள் பணி புரிவதாக முதல் குற்றவாளி சதீஷ் வாக்குமூலம் அளித்துள்ளார். திருநெல்வேலி தொகுதியின்  வாக்காளர்களுக்கு பணம் தருவதற்கே கொண்டு செல்வதாகவும் சதீஷ் வாக்கு மூலத்தில் கூறி உள்ளார். திருநெல்வேலியில் பாஜகவின் வேட்பாளராக போட்டியிடுபவர்  நயினார் நாகேந்திரன் என்பது  நம் அனைவருக்கும் தெரியும்.

கைது செய்யப்பட்ட மூன்று பேருமே தனக்கு வேண்டப்பட்டவர்கள் தான் என்று  ஒப்புக் கொள்ளும்  நயினார் நாகேந்திரன், அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை  என்பதோடு, வெற்றி பெறும் வாய்ப்பு தனக்கு அதிகமாக இருப்பதால் அதை பொறுத்துக் கொள்ள முடியாமல் திமுக அரசு இது போன்ற நடவடிக்கைகளை செய்து வருகிறது என்று அதிரடியாக குற்றம்  சாட்டுகிறார் நயினார் நாகேந்திரன் .

தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் மாநில அரசின் அனைத்து அதிகாரிகளும் – காவல்துறையும் பறக்கும் படை அதிகாரிகளும் உட்பட- தேர்தல் ஆணையத்தின் நேரடி கட்டுப்பாட்டில் வந்து விடுகிறார்கள் என்பதும், தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் அவர்கள் இருக்க மாட்டார்கள் என்பதும்  நயினார் நாகேந்திரனுக்கு தெரியாததல்ல! ஆயினும், பறக்கும் படையின் பறிமுதல் நடவடிக்கையை திமுகவின் கை வேலை என்று குற்றம் சாட்டியுள்ளது வேடிக்கையாக உள்ளது.

மத்தியில் ஆட்சி செய்யும் பாஜகவிடம் கோடிக்கணக்கில் பணம் கொட்டி கிடக்கிறது. தேர்தல் பத்திரம் மூலம் வந்த பணமும், பி.எம். கேர்ஸ் பணமும் என ஆயிரக்கணக்கான கோடிகளை பாஜக தன் வசம் வைத்துள்ளது. இந்த அளவு பணத்தை எந்த கட்சியும் தேர்தலுக்காக செலவிட இயலாது. மேலும், வருமான வரி துறையின் மூலம் முக்கிய எதிர்கட்சியான காங்கிரஸின் வங்கி கணக்குகளை முடக்கிவிட்டதும், சில கோடி ரூபாய்கள் அந்தத் துறை எடுத்துக் கொண்டதும் சமீபத்தில் நடந்த செய்தி.

இந்தப் பின்னணியில் தான், திருநெல்வேலி தொகுதி வாக்காளர்களுக்கு விநியோகம் செய்யும் நோக்கில் கொண்டு செல்லப்பட்ட பணம் ரூ 4 கோடிகள் பிடிபட்டதை பார்க்க வேண்டும்.

திருப்பூர் பாஜக வேட்பாளர் முருகானந்தம் காரை சோதனை செய்த அதிகாரிகளை அவர் கர்ண கொடூரமாக மிரட்டியதைக் கண்டு தமிழகமே மிரட்சி கொண்டது. தமிழக அமைச்சர்கள் காரைக் கூட பறக்கும் படையினர் சர்வசாதரணமாக சோதனை செய்ய முடியும் போது பாஜக பிரமுகர்களை சோதனை செய்வதே சவாலாகிவிட்டது.

தமிழகத்தில் இவ்வளவு பலவீனமான கட்சியாக இருக்கும் போதே பாஜக இந்த ஆட்டம் ஆடுமென்றால், ஆட்சிக்கு தப்பித் தவறி வருமானால், தமிழகம் தப்பி பிழைபப்து கடினமாகிவிடும் என்றே தோன்றுகிறது.

பிரதமர் மோடி அடிக்கடி தமிழகம் வருகிறார். ரோடு ஷோ நடத்துகிறார். ஒரிரு கீலோ மீட்டர் இந்த ரோடு ஷோவுக்கே சில கோடிகள் அள்ளி இறைப்படுவதாக ஊடகச் செய்திகள் சொல்கின்றன. பள்ளிக் குழந்தைகள் கட்டாயப்படுத்தி அழைத்து வரப்பட்டுள்ளனர். பாதுகாப்புக் பொதுமக்கள் கடும் இயையூறுகளை சந்திக்க நேர்ந்தது.


பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களை நடத்தும் தேர்தல் ஆணையம் சுயேச்சையான  அமைப்பாக செயல்பட வேண்டும் என்றாலும், அது பாஜக அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதாக பொது வெளியில் குற்றம் சாட்டப்படுகிறது. தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் அதிகாரத்தை பாஜக அரசு தன்னிச்சையாகச் செய்வதே அந்த குற்றச்சாட்டிற்கு காரணம்.

எனவே, தேர்தல் ஆணையர்களை ஒன்றிய அரசு நியமிப்பதற்கு பதிலாக, பிரதமர் தலைமையிலான பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவரையும், உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியையும் உள்ளடக்கிய மூன்று நபர்கள்  கொண்ட ஒரு கொலிஜியம்  நியமிக்கும் என்று  நீதிபதி ஜோசப் தலைமையிலான உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அமர்வு சென்ற ஆண்டு மார்ச் மாதத்தில் தீர்ப்பளித்தது.

உடனடியாக அந்தத் தீர்ப்பை துச்சமாகக் கருதி ஒரு சட்டத்தை இயற்றியது பாஜக அரசு. தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் கொலிஜியத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பதிலாக ஒன்றிய  அமைச்சரை பிரதமர் நியமிப்பார் என்பதே அந்த சட்டம். மிகச் சமீபத்தில் (15. 3. 2024) நியமனம் செய்யப்பட்ட இரண்டு தேர்தல் ஆணையர்கள்  இந்த வகையில் வந்தவர்களே! இந்த நியமனத்தை எதிர் கட்சி தலைவர் கடுமையாக ஆட்சேபித்தார்!


அமலாக்கத்துறை ,தேசிய புலனாய்வுத் துறை, சிபிஐ, வருமான வரித்துறை, ரிசர்வ் வங்கி,தேர்தல் ஆணையம் என அனைத்து அமைப்புகளையும் தங்கள் கட்டுப்பாட்டில் பாஜக அரசு வைத்திருப்பதாக  குடிமை சமூகத்தினர் குற்றம் சாட்டுகிறது.  அது மட்டுமன்றி ஊடகங்களையும் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.

தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் பல மாவட்ட  கலெக்டர்களும், காவல்துறை அதிகாரிகளும் தேர்தல் ஆணையத்தால் அனைத்து மாநிலங்களிலும்- குறிப்பாக எதிர்க்கட்சிகள் ஆட்சி புரியும் மாநிலங்களிலும் -மாற்றப்பட்டதை பத்திரிகையில் பார்க்கிறோம்.

எனவே, தாம்பரம் போலீசாரும், பறக்கும் படையினரும் நான்கு கோடி ரூபாயை பறிமுதல் செய்ததற்கு திமுக அரசின் மேல் நயினார் நாகேந்திரன் குற்றம் சுமத்துவதில் அர்த்தமில்லை. காரணம், தமிழ்நாட்டின் அனைத்து அரசு இயந்திரமும் தேர்தல் முடியும் வரை தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தான் இயங்கும்.

இந்த நான்கு கோடி ரூபாய் பறிமுதலைத் தொடர்ந்து நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான விடுதி ,சாலிகிராமத்தில் உள்ள அவரது உறவினர் வீடு மற்றும் திருநெல்வேலியில் உள்ள பாஜக ஆதரவாளர் வீடு ஆகியவற்றில் சோதனை நடத்தி, உரிய ஆவணங்கள் இன்றி இருந்த ரூபாய் 2 லட்சம் ரொக்கம், புத்தம்புது 100 வேட்டிகள், 44 நைட்டிகள், 41 மது பாட்டில்கள் பறிமுதல் செய்துள்ளனர்.

என்ன தான் பணபலம் இருந்தாலும், இறுதியில் மக்கள் சக்தியே வெல்லும் என்பதை சரித்திரம் சுட்டிக் காட்டுகிறது.

இன்றைய நாளிதழ்களில் தலைப்புச் செய்தியாக  4 கோடி ரூபாய் பறிமுதல் வெளியான நிலையில், நாளிதழ்களின் முதற் பக்கத்தில் இந்திய நாட்டின் பெரு முதலாளியான அதானியின் முழு பக்க விளம்பரம் வந்துள்ளது.

நமது பிரதமர் மோடிக்கும், தொழில் அதிபர் அதானிக்கும் உள்ள நெருக்கம் உலகறிந்த ஒன்று. தனது வெளியூர் பயணங்கள் சிலவற்றில் அதானியையும் உடன் அழைத்துச் சென்று அதானியின் வியாபார விருத்திக்கு தொண்டு செய்தவராக மோடியை ஊடகங்களுன், காங்கிரசாரும் கிண்டல் அடித்து வருகின்றனர்.

இந்த நாட்டின் கடல் வழியாக செல்லும் சரக்குகளில் 25% சரக்குகள், அதானியின் 15 துறைமுகங்கள் மூலமும், இலங்கை மற்றும் இஸ்ரேலில் உள்ள அதானியின் துறைமுகங்கள் மூலமும் கையாளப்படுவதாக அந்த விளம்பரம் கூறுகிறது. தனியார் துறைமுகங்களில் முதல் நிலை வகிப்பது அதானியின் துறைமுகங்களே என தம்பட்டமடித்துள்ளனர். அதாவது, இந்திய கடற்கரையின் பெரும் பகுதியை அதானி தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விட்டாராம்!

மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் தான் அதானி உலகப் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் இடம் பெற்றதும், இந்திய பெரும் பணக்காரர்களில் அம்பானிக்கு அடுத்த நிலைக்கு உயர்ந்ததும் நடந்தது. இந்த நாட்டின் ஏழைகள், வறுமை நிலையில் இருக்கையில் கார்ப்பரேட்டுகள் மட்டும் கொழுத்து வளர்கின்றனர்.

உலகளாவிய பசி குறியீட்டு பட்டியலில் 125 நாடுகளில் இந்தியா 111 வது இடத்தில் இருக்கிறது! இந்த வகையில் இலங்கை,பாகிஸ்தான், வங்கதேசம் போன்றவை கூட இந்தியாவைக் காட்டிலும் மேலான நிலையில் உள்ளது என ஆக்ஸ்போர்டு வறுமை மற்றும் மனித மேம்பாட்டு முன்முயற்சி (OPHI) மற்றும் ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டம் ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட உலகளாவிய பல பரிமாண வறுமைக் குறியீடு ( MPI ) சொல்கிறது.

எனவே, வரும் பாராளுமன்றத் தேர்தலில்  மிக அதிக அளவிலான பண பலத்துடனும் , கார்ப்பரேட்டுகளின் ஆதரவுடனும் போட்டியிடும்  பாசிச பாஜகவை தோற்கடிப்பது ஜனநாயகத்தை காப்பதற்கான முக்கிய செயல்பாடாகும்.

கட்டுரையாளர்; து.ஹரிபரந்தாமன்

முன்னாள் நீதிபதி,

சென்னை உயர்நீதிமன்றம்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time