‘பாமரர்களுக்கு எதற்கு கல்வி? பணம் படைத்தோரின் தேவைக்கே கல்வி’ என்பதே பாஜக அரசின் சித்தாந்தமாகும்! அதை செயல்படுத்தவே தேசிய கல்விக் கொள்கை! நீட், கியூட் போன்ற தேர்வுகள்..! உண்மைகளை தோலுரிக்கிறார் பொதுப் பள்ளிக்கான மாநில மேடை பொதுச் செயலாளர் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு:
மனித நேயம் சார்ந்த மருத்துவக் கல்வியை சந்தைப்படுத்தி, விற்பனைப் பொருளாக்கி, கல்லா கட்டுவதற்காக பாஜக அரசு செய்த சூழ்ச்சி தான் “நீட்” ( neet) தேர்வாகும். அதே பாணியில் ப்ளஸ் டூ பிறகான மற்ற மேற்கல்வி படிக்க க்யூட்( CUET) நுழைவு தேர்வை கொண்டு வருகின்றனர். மேல் படிப்பை ஒரு பெரும் சுமையாகவும் எட்டாக் கனியாகவும் மாற்றி, ஏழை, எளிய பிரிவு மக்களை உயர் கல்விக்குள் நுழையவிடாமல் செய்வதற்கே இந்த கியூட் தேர்வு பயன்படும்!
பள்ளிப் படிப்பை அர்த்தமற்றதாக ஆக்கிவிட்டார்கள். பள்ளிக்கூடத்துக்கு கட்டணம் செலுத்திவிட்டு, கோச்சிங் சென்டருக்கு மாணவ மாணவியர் போகும் நிலைமை பரவலாக நிர்பந்திக்கப்பட்டு உள்ளது.
எனக்கு டியூசன் வேண்டாம் என்று சொல்லி சொந்த முயற்சியில் படித்து அதிக மதிப்பெண்கள் பெற்று உயர் கல்விக்கு சென்று கொண்டிருந்தனர் நமது மாணவர்கள்.இன்றைக்கு கோச்சிங் சென்டருக்கு போனால் தான் அடுத்த கட்டத்துக்கு நகர முடியும் என்ற நிலைமையை உருவாக்கி வைத்துவிட்டனர். இது ஒரு சதித் திட்டம் ஆகும்.
இந்த சூதாட்டத்தில் மாணவர்கள் பகடைக் காய்களாக ஆகின்றனர் பெற்றோர்கள் சிறுகச் சிறுக சேமித்து வைத்திருந்த பணத்தை இழக்கின்றனர்.
தேசிய கல்வி திட்டம் 2020 என்பது அடித்தட்டில் வாழும் மாணவர்களை உயர் கல்விக்கு வரவிடாமல் தடுக்கும் தந்திரமான திட்டம் என்பதை நாட்டு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
பாரபட்சம் காட்டுவது கேந்திர வித்யாலயா பள்ளிகளிலேயே கூட உள்ளது. அவற்றில் சில பள்ளிகளை மட்டும் பி எம் ஸ்ரீ பள்ளிகளாக ஆக்கி, அவை ஆகச் சிறந்த பள்ளிகள் என்று கூறுகிறார்கள். பி எம் ஸ்ரீ பள்ளிகளை ஏற்கச் சொல்லி தமிழக அரசை மிரட்டியுள்ளார்கள்.
வாக்குச் சீட்டு மிகுந்த சக்தி மிக்கது. நெருக்கடி நிலையை அமல்படுத்திய இந்திரா காந்தி அம்மையாரை இந்திய மக்கள் வாக்குச்சீட்டு வாயிலாக தோற்கடித்து வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள். அடுத்த இரண்டு ஆண்டுகளில் அதே வாக்குச் சீட்டு மூலம் பிரதமர் ஆக்கினார்கள். அத்தகைய சக்தி கொண்ட வாக்குச் சீட்டு மூலம் இந்த தேர்தலில் பாஜக தோற்கடிக்கப்பட வேண்டும்.
பாசிசமும், நாசிசமும் நம் மண்ணில் வேர் பிடிக்க அனுமதிக்க கூடாது. அத்தகைய வேர் பிடித்த இத்தாலியும், ஜெர்மனியும் எத்தகைய அழிவை சந்தித்தது என்பதை அறிவோம்.
உலகத்தின் மனசாட்சியை உலுக்கிய ஜாலியன் வாலாபாக் படுகொலை 1919 ஆம் ஆண்டு நடைபெற்றது. அது தான் ஒத்துழையாமை இயக்கம் உருவாக காரணமாகவும் இருந்தது. ஆங்கிலேயருக்கு எதிராக காந்தியடிகள் தலைமையில் ஒட்டு மொத்த இந்தியாவும் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கெடுத்தது.
அது போல, வ உ சி , பகத்சிங், அயோத்திதாசர், மகாத்மா ஜோதிபா பூலே , சிந்தனை சிற்பி சிங்காரவேலர், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் உள்ளிட்ட நம் முன்னோர்களின் தியாகங்களின் விளைவாக நமக்கு கிடைத்த சமத்துவம், சமூகநீதி, கல்வி உள்ளிட்ட வாழ்வாதார உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும்.
” கல்வி உள்ளிட்ட வாழ்வாதார உரிமைகளை காத்து, சமத்துவ சமூகத்தை கட்டமைக்க திட்டமிட்டிருக்கும் கட்சிக்கு வாக்களியுங்கள் ” என்று தான் இது வரை நடந்த தேர்தல்களின்போது நாங்கள் வேண்டுகோள் விடுத்து வந்திருக்கிறோம்.
இந்த முறை தான் “மதவாத பாஜகவுக்கு வாக்களிக்காதீர்கள், கல்வி உள்ளிட்ட அனைத்திலும் அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை வழங்குவோம் என்று உறுதி அளித்துள்ள கட்சிகளுக்கு வாக்களியுங்கள் என்று மக்களிடம் கேட்டுக் கொள்கிறோம்.
பாஜக இந்த முறையும் வெற்றி பெற்று விட்டால், மிச்சம் மீதி இருக்கும் பொது துறைகளையும் தனியாரிடம் கொடுத்து விடுவார்கள். அதன் பிறகு, ரயில் கட்டணம், மின்சாரக் கட்டணம் கல்வி கட்டணம் மருத்துவ கட்டணங்கள் பல மடங்கு உயரும். இட ஒதுக்கீடு என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போகும்.
தனியாருக்கு எந்த அளவு முக்கியத்துவம் என்பதற்கு சைனிக் பள்ளிகளே மிகச் சிறந்த உதாரணம். ஒன்றிய அரசின் பாதுகாப்புத் துறையின் கீழ் உள்ள ராணுவப் பணிகளுக்கு மாணவர்களை உருவாக்கும் நோக்குடன் தொடங்கப்பட்டது சைனிக் பள்ளிகள். இவை கூட அரசு – தனியார் கூட்டு என்ற அடிப்படையில் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.
கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக அரசு செய்த சாதனை, உலகின் மிகப் பெரும் பணக்காரர்களாக இரண்டு இந்திய பெரும் முதலாளிகளை ஆக்கியது தான். அதே வேளையில் வேலை கிடைக்காமல் இரண்டு வேளை உணவிற்கு கூட வழியில்லாமல் தவிக்கும் குடும்பங்கள் பல கோடி!
மக்கள் படும் கஷ்டங்கள் எல்லாம் அவர்களுக்கு ஒரு பொருட்டே கிடையாது. உள்ளத்தில் கருணை இருந்தால் தானே மக்கள் படும் கஷ்டத்தை அவர்கள் உணர்வார்கள்.
Also read
டெல்லியில் நடைபெற்ற விவசாய போராட்டத்தை ஒடுக்குவதற்கு அவர்கள் எடுத்த நடவடிக்கையும், உலக அரங்கில் நாட்டுக்கே பெருமை தேடித்தந்த மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்தை அவர்கள் எப்படி கையாண்டார்கள் என்பதும் ஈவு இரக்கமற்ற அவர்களுடைய செயல்பாடுகளுக்கு சான்றுகள்.
மக்கள் விருப்பத்தை நாங்கள் நிறைவேற்ற மாட்டோம், மக்களுக்கு எது நல்லதோ அதை செய்வோம் என்று சர்வாதிகாரத் தொனியில் பேசுகிறார்கள். இந்தக் கருத்து அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.
கனக சுந்தரம், டாக்டர் ரெக்ஸ் சற்குணம், அருமை நாதன்,மணி, முருகையன், ஜாகீர் உசேன் ஆகியோர் உடனிருந்தனர்.
தொகுப்பு; வி.ராஜதுரை
மூத்த பத்திரிகையாளர்
Leave a Reply