ஏழைகளிடம் பறித்து, ஏய்த்து வாழ்வதா ஜனநாயகம்?

-பவா சமத்துவன்

எனது ஊர் ஏகனாபுரம்..! 06

எங்கள் கழனிகளை நீங்கள் களவாடலாம் – ஆனால்

இந்த காடு கழனிகளில், கால்வாய் வரப்புகளில்

நிறைந்திருக்கும்

எங்கள் ஆன்மாக்களை என்ன செய்வீர்கள்..?”

தேர்தல் வாண வேடிக்கைகள் எல்லாம் முடிந்து விட்டது. செவிப்பறையைக் கிழிக்கும் பரப்புரைகள் எல்லாம் ஓய்ந்து விட்டது. கடந்த 75 ஆண்டுகளாக நாம் பார்க்கிற காட்சிகள் தான்.

நூற்றுக்கணக்காய் வாகனங்கள் அணிவகுத்து வந்தன. வண்ண வண்ணமாய் சுவரொட்டிகளும் கண்ணில் படுகின்றன. ஒலிபெருக்கிகள் ஓயாது அலறின!.

ஆனால் – பொது மக்களின் கோரிக்கைகளில் மாற்றமில்லை.

”பள்ளிக்கூடம் கட்டித் தரணும்.”

”சாலை வசதி இல்ல, போட்டுத் தரணும்”

”மின்சார வசதியே இல்லை பம்பு செட்டு ஓடாம கிடக்குது”

”சாக்கடை வசதி இல்லை, செஞ்சி தரணும்”

”போக்குவரத்து வசதி இல்ல. நாங்க போக வர நல்ல பஸ் வசதி வேணும்”

”ஹாஸ்பிடல் இல்ல ஒரு அவசரம்னா 10 -15 கிலோமீட்டர் போக வேண்டி இருக்கு ..”

என வேட்பாளர்களை பார்த்து பொதுமக்கள் வைக்கும் கோரிக்கைகள் மட்டும் மாற்றமின்றி தொடர்கின்றன!

பல தொகுதிகளில்  வேட்பாளர்களை பார்த்து பொதுமக்கள் கேள்வி மேல் கேள்வி கேட்கும் பழக்கம் இப்போது புதிதாக ஆரம்பித்திருக்கிறது.

நல்ல முன்னேற்றம் தான். பல இடங்களில் பொது மக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் வேட்பாளர்கள் திணறிப் போகிறார்கள். மேற்கொண்டு வாக்கு கேட்க முடியாமல் திரும்பி போகிறார்கள்.

இந்தியாவில் மக்களாட்சி குழந்தை பருவத்தில் இருந்து வளர் இளம் பருவத்திற்கு நகர ஆரம்பிப்தற்கான ஆரம்ப அறிகுறி இது.

இந்தியா விடுதலை அடைந்தபோது உருவான ஆசிய நாடுகள் எல்லாம் சமூக பொருளாதார நிலைகளில் இப்போது உச்சங்கள் தொட்டிருக்கிறது.

சாக்கடை வேண்டும், மின்சாரம்  வேண்டும், ஆஸ்பத்திரி  வேண்டும், பள்ளிக்கூடம் வேணும்… போன்ற கோரிக்கைகளை எல்லாம் நீங்கள் சிங்கப்பூரிலோ, ஜப்பானிலோ தேர்தல் நேரங்களில் கேட்க முடியாது .

அப்படி ஒரு பிரச்சாரம் அங்கு நடப்பதாக நினைத்துப் பாருங்கள் அது பெரும் நகைச்சுவையாக இருக்கும்.

ஆனால், இந்தியாவின் எதார்த்தம் என்ன..?

ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவை ஆண்டு கொண்டிருக்கும் பாஜக அரசு சொல்வது என்ன ..?

”அயோத்தியில் இராமர் கோவில் கட்டி விட்டோம். 500 ஆண்டுகளாக நிறைவேறாமல் இருந்த இந்தியர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றி விட்டோம்”

அதே பாஜக மக்களவைத் தேர்தலில் வென்று மீண்டும் ஆட்சி அமைத்தல் அடுத்த ஐந்து ஆண்டுகளில் என்ன செய்வோம் எனவும் கூறி வருகிறது.

ஒரே தேசம், ஒரே தேர்தல் நடைமுறைக்கு கொண்டு வருவோம்.

பொது அரசியல் சட்டம் அமலாக்கப்படும்.

இவை எல்லாம்  ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால், இன்றைய இந்தியா எப்படி இருக்கிறது? இன்றைய இந்தியாவில் சமூக பொருளாதார சூழல் என்ன..?

கேள்விகளுக்கான விடைகளில் வேதனை தான் மிஞ்சுகிறது.

இந்தியாவின் மொத்த கடன் 1947 லிருந்து 2014 வரை  ரூபாய் 55 லட்சம் கோடியாக இருந்தது.

இன்று 2014 -2024 வரையான 10 ஆண்டுகளில் அது – 183 இலட்சம்  கோடியாக உயர்ந்து இருக்கிறது .

இதைத் தான் வளர்ச்சி என்கிறீர்களா?

2014-க்கு முன்பு வரை ஒவ்வொரு இந்தியனின் தலையிலும் கட்டப்பட்டிருந்த கடன் சுமை ரூபாய் 4, 500. இன்று அவனே  12,5000/  ரூபாய் கடனுக்கான பொறுப்பாளி.

இன் ரைஸ் பவுண்டேஷன் வழங்கிய உலக வறுமை குறியீட்டு அறிக்கையின்படி – உலகின் வறுமையையான 125 நாடுகளில் இந்தியா 111 வது இடத்தை பெற்றிருக்கிறது.

இந்தியாவில் 2023 அக்டோபர் நிலவரப்படி 40 கோடியே 20 லட்சம் பேர் வேலை இல்லாமல் இருக்கிறார்கள்.

(இந்திய பொருளாதாரக் கண்காணிப்பு மையம் )

இந்தியாவில் 10 சதவீதத்தினர் இந்தியாவின் மொத்த சொத்து மதிப்பில் 77 சதவீத  சொத்தை  தங்களிடம் குவித்து வைத்துள்ளனர்.

பரந்தோர் புதிய விமான நிலையம் என்ற பெயரால் அரசு கையகப்படுத்த இருக்கும் 5000 – 6000 ஏக்கரும் இனி, அதானி கைகளுக்குப் போகும்.

இப்படி பத்து மாநிலங்களில் அதானிக்கு  சொத்துக்கள் சேர்த்தால் இந்தியாவின்  87-  90 சதவீத சொத்துக்கள் அவர்களின் கைகளில் தான் இருக்கும்! எப்படி தடுக்கப் போகிறோம்?

இந்த முறை காஞ்சியிலிருந்து பரந்தூர் வழியாக ஏகனாபுரம் சென்றோம்.

பரந்தூர்  சுகாதார நிலையத்துக்கு சற்று தொலைவில் உள்ள பேருந்து நிறுத்தத்தை கடந்து ஏரிக்கரை ஓரமாக இருக்கும் சிறு சிற்றுண்டிச் சாலையில் நுழைந்தோம்.

“..ஏம்பா சீனி ஏன் கம்மியா போட்டு இருக்கே..?

என தேநீரை உறிஞ்சியபடியே கேட்டார் ஒரு விவசாயி .

‘….ஆமா  மண்ணு போகுமா… மாடு போகுமா?

குழந்தை குட்டி மக்களோடு நாம எங்க போவோமனு ஜனங்க கவலையா இருக்கு ..

எதுவும் இல்லாம அகதியா  அலையறதை விட அரளி விதையை குளிச்சிட்டு சாவோன்னு ஜனங்க கடக்குது கவலையாக கவலைய கிடக்குது…. உனக்கு சக்கரை தூக்கலா கேக்குதப்பா..!”

என நக்கலாக கேட்டார் தலையில் தலைப்பாகை கட்டிய பெரியவர்.

இந்த பகுதி முழுக்க எல்லா நேரங்களிலும் எல்லோர் பேச்சிலும் பரந்தூர் விமான நிலையம் பற்றிய கவலையும் பயமுமே தெரிகிறது.

பயணத்தை மீண்டும் துவக்கினோம். ஏரிக்கரை ஓரமாகவே செல்லும் சாலையில்  இளம் காலை வெயிலில் நெல்மணிகள் பொன்னிறமாய் ஒளிர்கிறது. அறுவடை செய்த நெல்மணிகள் தார் சாலையில் பல அடிகள் தூரம் குவித்து காய வைக்கப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் வேறு எங்கும் காணாத வகையில் ஆற்று பாசனமோ கிணற்றுப் பாசனமோ ஆழ்துளை பாசனமோ இல்லாமல், ஏரி குளங்களைக்  கொண்டே விவசாயம் செய்கிற பகுதி இந்த பரந்தூர் ஏகனாபுரம் நிலப் பகுதி

அடுத்து – ஏகனாபுரம் செல்லும் சாலையின் வலது பக்கத்தில் இருக்கிற தண்டலம் கிராமத்தில் நுழைந்தோம். நமக்கு முன் எதிர்பட்டார் வழக்கறிஞர் பட்டாபிராமன். இவர் நூறாண்டு கடந்த ஏகனாபுரம் நடுநிலைப் பள்ளியில் தான் படித்தவர் . கடந்த ஆட்சிய காலத்தில் அரசு வழக்கறிஞராகவும் பணியாற்றியவர்.

“தமிழக அரசு எந்த உண்மையையும் மக்கள் கிட்ட சொல்றதில்ல. ஒரு நிலத்தையோ வீட்டையோ கையகப்படுத்தனும் அரசு நினைச்சா, உரிய சட்ட நெறிமுறைகளை அரசு கடைபிடிக்கணும். மனசளவுல  மக்களை தயார் படுத்தனும். அந்த மாதிரி எந்த முயற்சியும் இங்கே இல்லை. எல்லாத்தையும் பேப்பர் அளவுல  உருவாக்குகிறாங்க.

அவங்க வரைபடத்தில் இருக்கிற ஊரையும் நிலங்களையும் ஆளுங்கட்சி சார்பாக இருக்கிறவங்களையும் ஆளுங்கட்சி சார்பா, ஊராட்சி தலைவர்களா இருக்கிறவங்களையும்  பேச வைக்கிறாங்க.

இது எப்படி சரியா இருக்கும்.? யாரும் எதையும் கேட்க முடியல .

எந்த இடத்தில இருந்து எந்த மாதிரி தொந்தரவு வரும்னு அப்பாவி விவசாயிங்க பயப்படறாங்க.எல்லா ஊரும் ஒத்துமையா நின்னு போராடினால் இந்த அபாயத்தை உடைக்கலாம். ஆனால், அப்படி எதுவும் நடக்கலையே..!?”

தனது அங்கலாய்ப்பை நம்மிடம் கொட்டியபடிய நபர்களால் முன்னாள் அரசு வழக்கறிஞர்.

ஏகனாபுரத்தை போன்று தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவித்திருக்கிறது நாகப்பட்டு கிராமம் தண்டலத்திற்கு எதிர் திசையில் ஏகனாபுரத்திற்கு சொந்தமான கடப்பேரியின் மேற்கில் உள்ளது நாகப்பட்டு.

ஊர் உள்ள பகுதி கடந்து பசுமையான வயல் வெளிகளினூடே செல்லும் சாலையில் காலணி பகுதிக்குச் சென்றால், அங்கு 20 – 30 குடும்பங்கள் இருக்கின்றன

அதில் ஒன்று சுருளியம்மாளின் வீடு.

அதை வீடு என்று சொல்வதா அல்லது குடிசை என்று சொல்வதா..? நமக்குத் தெரியவில்லை.

பன்றி தொழுவம் போல் ஆள் நுழைவதற்கும் வழி இல்லாமல் குனிந்து போகும் அளவில் தான் இருக்கிறது அந்த அபலையின் “இல்லம்”.

அரசின் எந்த நல்ல திட்டங்களும் அவரைச் சென்று சேர்ந்ததாக தெரியவில்லை.

“கட்டிக் கொடுத்த வீட்டுக்காரர் சரியில்லன்னா ..அதனால அவனுக்கு பெத்து போட்ட குழந்தைகளோட அம்மா வீட்டுக்கு வந்துட்டேன் .

அப்பாவும் இல்ல. அம்மாவுக்கு வயசு ஆயிடுச்சு. தினம் தினம் நூறு நோவ சொல்லிக்கினு படுத்த படுக்கையா கிடக்குது.

அத ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போவனா..

இல்ல பசங்களை பள்ளிக்கூடம் அனுப்புற வழிய பார்ப்பேனா..

இதுங்க எல்லாத்தையும் காப்பாத்த வேலைக்கு போவேனா ..? எதுவுமே தெரியலேண்ணா…, ரொம்ப கஷ்டப்படுறேன்..?

இந்த நிலையில உங்க ஊடு போவுது .. ஊரு போவது என்று ஏதேதோ சொல்றாங்க..! எனக்கு எதுவுமே புரியல..! வயசான அம்மா .. இந்த குழந்தை குட்டிங்க. நான் வளர்க்கற ஆடு,  மாடு எல்லாத்தையும் இழுத்துக்குணு நான் எங்க போவேன்.. எனக்கு என்ன தெரியும்…? நீங்களே சொல்லுங்க அண்ணா..!”

மனதில் இருக்கும் வெம்மை எல்லாம் குரலில் தகித்து வழிகிறது.

சுருளியம்மா

இது எதுவும் தெரியாமல்  இவரது சிறு குழந்தை நாம் வந்த வாகனத்தை ஆச்சரியத்தோடு பார்த்து தொட்டு தொட்டு விளையாடிக்கொண்டிருக்கிறது.

ஏகனாபுரம் அம்பேத்கர் சிலை அருகே யாரையோ எதிர்பார்த்தபடி நின்று கொண்டிருக்கிறார் பழனியப்பன்.

சேலம் எட்டு வழி சாலை திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர். ‌இவர்கள் அமைப்பு தான் மக்களை ஒன்றுபடுத்தி அவர்களுக்கு விழிப்புணர்ச்சி ஊட்டி அந்த திட்டத்திற்கு எதிராக வலுவான மக்கள் எதிர்ப்பை கட்டி அமைத்தது.

அதனால் தான் அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது என்பது பலருக்கும் தெரியும்.

பரந்தூர் விமான நிலைய திட்டப் பகுதியில் குறிப்பாக ஏகனாபுரத்திற்கு சிலர் வரவே கூடாது என ஒரு பட்டியலை தயாரித்து பலருக்கும் அளித்திருக்கிறது காவல்துறை.

இதில் முதல் அணியில் இருப்பவர் பழனியப்பன். கடந்த இரண்டு ஆண்டுகளாக இவரால் பலமுறை முயற்சித்தும் ஏகனாபுரம் பகுதிக்கு வரவே முடியவில்லை.

விவசாயி பழனியப்பன்

காவல்துறையில் இவர் வருகைக்கு எதிராக அந்த அளவிற்கு கடுமை காட்டி வருகிறது. மக்களவைத் தேர்தல் என்று அறிவித்தவுடன், தொகுதியின் வேட்பாளராக வந்து களம் இறங்கினார்  பழனியப்பன். இப்போது காவல்துறையால் எதுவும் செய்ய முடியவில்லை.

ஏகனாபுரம் தான் அவரது தேர்தல் அலுவலகமாக பயன்படுகிறது.

“என்ன ஜனநாயகம்யா இது..? எங்க போனாலும் எந்த ஊரிலும் யாரையும் பார்க்க விட மாட்டேங்கறாங்க.. என்னை பார்க்க வர்றவங்க எல்லோரையும் உளவுத்துறை பயமுறுத்துகிறது.‌ இந்த தேர்தல் நேரத்தில் கூட மக்களை சந்திக்கிறது  அவ்வளவு கஷ்டமா இருக்கு .

பரந்தூர் விமான நிலைய திட்டத்துக்கு எதிரா, இந்த ஊரும், அந்த ஊரும் இப்படி எந்த ஊரு ஒன்னு சேர்ந்திடாதபடி காவல்துறை கவனமாய் இருக்கு. இந்தத் தொகுதியின்  வேட்பாளர் நான். எனது தேர்தல் அலுவலகத்திற்கு ஏகனாபுரத்தில் வீடு கொடுத்தவர்களை  கூட காவல்துறை மிரட்டியது .

இது என்ன ஜனநாயகம்? இது என்ன மக்களுக்கான தேர்தல்?

விவசாயிகளை, விவசாய சங்க பிரதிநிதிகளை ஏதோ தீவிரவாதிகள் மாதிரி தான் தமிழ்நாடு அரசு நடத்துகிறது. இது வெட்கக்கேடு இல்லையா..?”

உளவு பார்க்கும் காவல்துறைக்கு எதிராக தொகுதியின் வேட்பாளர் என்ற முறையில் மாவட்ட ஆட்சியரிடம்  அளிக்க இருக்கும் மனு அவர் கையில் இருக்கிறது.

மாலை சூரியன் மறையும் வேளையில், ஏகனாபுரத்திலிருந்து அக்காமாபரம் செல்லும் வயல் வெளிச்சாலையில் நடந்து கொண்டிருந்தோம். கொஞ்ச நேரத்தில் இருள் கவிழ்ந்து  விடும் .

இந்த நேரம் வயல்வெளி நோக்கி தன் மனைவியுடன் இராணியுடன் வேகமாக நடந்த போய்க் கொண்டிருந்தார் கூத்தாடி ராமமூர்த்தி. அவரிடம் பேச்சு கொடுத்ததும் மனிதர் குமுறி தீர்த்துவிட்டார்.

கூத்தாடி ராமமூர்த்தி

 

” அயோக்கிய பயலுக .. அவனுங்க வயித்துக்கு சோத்த தான் தின்றானுங்களா‌…. அவனவன் அரசியல்  பதவியில் ஐநூறு கோடி ஆயிரம் கோடி சேர்த்தது  பத்தாதுன்னு, இன்னும் கொள்ளை அடிக்க வந்துட்டானுங்க.

உங்க வயிற்றுக்கு சோறு போடுற எங்க வாழ்க்கையே அழிக்கிறீங்க..?

திட்டம் போடுற எவனாவது கொளுத்துற வெயில்ல வெட்ட வெளியில் ஏர்பூட்டி உழுது இருப்பானா..? காத்து மழையில நடவு நட்டு, களை பறிச்சு இருப்பானா..?

இதோ – மடை மாற்றிவிட்ட கழனியில  தண்ணி பாஞ்சுதோ இல்லையோன்னு, இப்படின்னு ராத்திரி வர  நேரத்துல பொண்டாட்டியோட ஓடியிருப்பானா..? சொல்லுங்க..? ஏன்யா.. கிடைக்கிற கூழோ கஞ்சியோ குடிச்சிட்டு எங்க குழந்தை குட்டிகளோட இந்த கிராமத்துல கிடக்கிறோம் .

எங்க வயித்துல ஏன் அடிக்கிறீங்க..? ஜனங்க வாழ்க்கையை ஏன் அழிக்கிறீங்க..?”

அரசியல் -பொருளாதாரம் – உலகமயமாக்கல் என எதுவும் தெரியாத இந்த அப்பாவி  விவசாயியின் குமுறல்களுக்கு நம்மிடம் பதில் இல்லை.

” ஒரு குடும்பத்தை அழிச்சாவே அவங்க நல்லா இருக்க மாட்டாங்க. ஆயிரம் குடும்பங்களை அழிக்கிறவங்க நல்லா இருப்பாங்களா சார்..!”

கணவர் கூறியதையெல்லாம் ஆமோதித்து ஒரு “முடிவாக ‘நம்மிடம் கூறுகிறார் கூத்தாடி ராமமூர்த்தியின் மனைவி திருமதி ராணி.

ராணி

2024 மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கிவிட்டது.

எதிர்பார்ப்புகளும், தேர்தல் கணிப்புகளும் வகை வகையாக நாள்தோறும் அலையடிக்கின்றன .

நானூறு இடங்களைப் கைப்பற்றியே தீருவோம் என ஊருக்கு ஊர் மாநிலத்துக்கு மாநிலம் என உறுதிப்படக் கூறி வருகிறார் பிரதமர் மோடி.

மோடி கூறுவது உண்மையானால் ஒவ்வொரு மாநிலமும் மணிப்பூராக மாறிவிடும் அபாயம் இருக்கிறது .. என நாட்டின் நடுநிலையாளர்கள் கூறுகிறார்கள்.

ஒரே நாடு ஒரே ரேஷன்

ஒரே நாடு ஒரே தேர்தல்

ஒரே நாடு ஒரே மொழி

ஒரே நாடு ஒரே மதம்

ஒரே நாடு ஒரே சட்டம்

என்று ஆர் எஸ் எஸ் பல ஆண்டுகளாக கூறிவரும் குறிக்கோள்களை எட்ட அடுத்த ஐந்து ஆண்டுகளும் பயன்படுத்தப்படலாம் .

அப்போது- ஒவ்வொரு மாநிலமும் மணிப்பூராக மாறிவிடும் என்பதில் உண்மையும் இருக்கிறது.

மணிப்பூருக்கு தொடர்பில்லாத வெளி சக்திகள் ஆட்சி அதிகாரத்தை கையில் போட்டுக் கொண்டு , தங்கள் மாநிலத்தின் இயற்கை வளங்களை கொள்ளை அடிப்பதை பற்றி ஒரு மணிப்பூர்  பெண் கவிஞர் எழுதுகிறார்.

“எங்களது

புற உடலை அப்புறப்படுத்த முடியும்.

இம் மலைகளைச் சூழ்ந்து கொண்டிருக்கும்

எங்கள் ஆன்மாவை

உங்களால்  என்ன செய்ய முடியும் ..?”

~ ராபின் எஸ் நான்கோமின்

இதை மணிப்பூரின் குரலாக மட்டுமல்லாமல் ஏகனாபுரத்தில் குரலாகவும் உணரத் தோன்றுகிறது.

(முற்றும்)

கட்டுரையாளர்; பவா சமத்துவன்

மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர்.

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time