மனிதனின் நோய்களும், இயற்கை தரும் தீர்வுகளும்!

-அண்ணாமலை சுகுமாரன்

தன்னை சுற்றிலுமுள்ள பிரம்மாண்ட இயற்கையின் ஒரு அங்கமே மனிதன்!  யாவற்றையும் தானே ஆள்வதாக மனிதன்  நினைத்தாலும்,  இயற்கையால் தான் அவன் ஆளப்படுகிறான். இயற்கையின் கருணையே மனித வாழ்க்கை. நம் நோய்களுக்கான மருந்துகளை நமக்கு அருகிலேயே உருவாக்கி தரும் இயற்கையின் சூட்சுமங்களை பார்ப்போம்;

பொதுவாக இயற்கையை ஆய்வு செய்வதென்பது அறிவியலின் மிகப்பெரிய ஒரு பகுதியாகும். பெரும்பாலான அறிவியல் கண்டுபிடிப்புகள் , இயற்கையின் ரகசியங்களை உணர்தலே ஆகும்.காலம் காலமாக இருப்பதை அது ஏன் என்று தான் அறிவியல் கேட்டு, பதில் பெறுகிறது . ஆப்பிள் என்றுமே காலம் காலமாக, மரத்தில் இருந்து கீழே தான் விழுகிறது. நியூட்டன் தான் அது ஏன் கீழே விழுகிறது, என்று கேட்டு அந்த விசைக்கு ஒரு பெயர் கொடுக்கிறார். விசை என்னவோ அவர் செய்தது இல்லை, பெயர்தான் அவர் தந்தது!

உயிரினம் மற்றும் உயிரின அறிவு போன்றவையும் இயற்கையில் அடங்கும். இயல்பாகத் தோன்றி மறையும் பொருட்கள், அவற்றின் இயக்கம், அவை இயங்கும் இடம், இயங்கும் காலம் ஆகியவை அனைத்தையும் இணைத்து இயற்கை என்கின்றோம். மனிதனும் தோன்றி மறைவதால் , அவனும் இயற்கையின் ஒரு அங்கம் தான். இயற்கையை வெல்ல, மரணமில்லா பெருவாழ்வு வாழ்வது தான் சித்தர்களின் தேடல். அவைகளைப் பற்றி பிறகு பார்ப்போம் .

மனிதர்களும் இயற்கையின் ஒரு பகுதியே ஆவர். மனிதன் இயற்கையின் கூறுகளான ஐம்பூதங்களில் இருந்து தான் ஆற்றலை பெறுகிறான். பூதம் என்பதை ஆராய்வதே பௌதீகம் எனப்படுகிறது. இயற்கை என்பது,   மரங்கள் செடிகள்  தன்னை சுற்றி இருக்கும் காற்று  வெளிச்சம் நீர், ஆறுகள், கடல், இவை யாவுமே இயற்கை தான்!   இந்த இயற்கையில் ஒரு அம்சம் தான் மனிதன் கூட ! ஆனாலும்,  மனிதன் என்பவன்   மனம் ஒன்று அதிகமாக இருப்பதால், அது  கூறும் வகையில் எல்லாம் நடந்து,  அது நடத்தும் வழி எல்லாம் பயணித்து,  தனக்குத் தானே தீமை விளைவித்துக் கொள்கிறான். இவ்வாறு அவனுக்கு வரும் பல தீமைகளில் ஒன்று நோய்கள்.

முதுமை, மரணம் என்பது வயது முதிர்ச்சியால் இயல்பாக ஏற்படும் விளைவுகள்! அதாவது பூ, காயாகி, பழமாவது போல் அது  இயற்கை. ஆனால், நோயுறுதல் என்பது , இயற்கையை மதிக்காததால், இயற்கை பல  முன் அறிவிப்புகள் தந்தும், மதிக்காத மனிதனுக்கு தரும் பாடம் தான் நோய்கள். அந்த நோய் என்பது  இயற்கையில் இருந்து நாம்  நழுவி போவதையே குறிக்கிறது.

இவ்வாறு  ஏற்படும் இத்தகைய நோய்களுக்கான  தீர்வை  அதே இயற்கை தான் தருகிறது. அதில் தான் நோய்களுக்கான தீர்வும் இருக்கிறது.  எது அந்த  நோயை  ஏற்படுத்துகிறதோ,  அங்கே தான் அதற்கான தீர்வும் இருக்கிறது.  தீர்வுடன் சேர்த்து தான் அந்தச்  செயலும் வருகிறது. நோயுடனே அதற்கு தீர்வும் சேர்ந்தே வருகிறது .

மனிதனுக்கு வரும் நோய்களைப் பற்றி  பல ஆயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து கவனித்து, அது குறித்து தீவிரமாக  சிந்தித்து  தெளிந்த பல உண்மைகளை  சித்தர்கள் என்போர்  வடித்தனர். இதன் வழி  தத்துவங்கள், நெறிமுறைகள், மருத்துவம் முதலியவற்றை நமக்கு தந்து சென்றிருக்கிறார்கள்.

எத்தகைய ஒரு  நெடுங்கால பழமையான தேசிய இனத்திற்கும், தங்கள் உடல் நலம் குறித்த சரியான தெளிதல் நிச்சயம் இருக்கும். தங்களது பண்டைய மொழிகளில் அவைகளை பதிவு செய்தும் வைத்திருப்பார்கள்.

தமிழர்களும் அத்தகைய ஒரு பண்டைய தேசிய இனம் தான்! யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று உலகெங்கும் பரவி வாழ்ந்த ஒரு மதிப்பு வாய்ந்த இனம். அவர்களுக்கு என்றும் அறுபடாத மரபு கொண்ட , பண்டைய செம்மொழி தமிழ் உண்டு. தமிழ் சித்தர்களின் தத்துவங்களுக்கும், பாடல்களுக்கும் தமிழின்  செவ்விலக்கியங்களில் ஒரு  முக்கிய இடம் உண்டு .

இப்போது இந்தத் தொடரில் மனிதர்களின் உடல் நலம் குறித்த சிந்தனைகளையும், பிறகு மன நலம், ஆன்ம ஒருமைப்பாடு இவைகளையும் சிந்திக்க இருக்கிறோம்.

இப்போது உங்களை சுற்றி, நீங்கள் வாழும் இடத்தை, ஊரை, சாலைகளை சுற்றும் முற்றும் பாருங்கள்! மீண்டும் ஒரு முறைப் பாருங்கள் !

நம்மைச் சுற்றி உள்ள அத்தனை  செடிகள், மரங்கள் புல்கள் இவை அனைத்தும் நமக்கு கீரையாகவோ, மூலிகைகளாகவே பயன்பெறும்  அரிய குணம் கொண்டதாக இருப்பது வியப்பாக இல்லையா ?

எப்படி நம்மைச் சுற்றி உள்ள தாவரங்கள் அத்தனையும் உயரிய  மருத்துவ குணம் கொண்டதாக அமைந்திருக்கிறது. இது தற்செயலாக அமைத்துள்ளது என்று கொள்ளலாமா ?

ஆழ்ந்து  சிந்திக்கும் போது நமக்கு சில உண்மைகள் தானே விளங்கும் . தொல் தமிழின் சித்தர்கள் மனிதர்களுக்கு  வரும் நோய்கள் 4,448 என்று மொத்தமாக வகைப்படுத்தி இருக்கின்றனர்.

அவைகளில் தனித்தனியே மனித உறுப்புகளில் தோன்றும் நோய்களை பின்வருமாறு வகைப்படுத்தி இருக்கின்றனர்

1. தலையில் 307
2. வாயில் 18
3. மூக்கில் 27
4. காது 56
5. கண் 96
6. பிடரி 10
7. கன்னம் 32
8. கண்டம் 6
9. உந்தி 108
10. கைகடம் 130
11. குதம் 101
12. தொடை 91
13. முழங்கால் கெண்டை 47
14. இடை 105
15. இதயம் 106
16. முதுகு 52
17. உள்ளங்கால் 31
18. புறங்கால் 25
19. உடல் உறுப்பு எங்கும் பிற நோய்கள் 3,100

ஆக மொத்தமாக,மனிதர்களுக்கு வரும் நோய்களின் மொத்த எண்ணிக்கை  4,448 என்பனவாகும்!

இவ்வாறு மனிதர்களுக்கு வரும் , வரக்கூடிய நோய்கள் அத்தனையும் , பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் சித்தர்களால்  பதிவு செய்யப்பட்டுவிட்டது. இதில் நாம் பெருமை கொள்ளக் கூடாதா ? ஆனால் உரக்க சொல்ல மறந்து விட்டோம்.

ஆனால், அதே சமயம் மனிதர்களுக்கு வரும் நோய்களை வகைப்படுத்திய சித்தர்கள், உலகின் வாழும் உயிரினங்களை 84 லட்சம் யோனி பேதங்களாக வகைப்படுத்தி இருக்கிறது  ஒரு சித்தர்கள் பாடல். யோனி பேதம் என்பது உயிரினங்களை வகைப்படுத்துவது. அதாவது உயிரினங்களின் பிரிவுகள், அத்தகைய பிரிவுகள் 84 லட்சம் என்கிறது சித்தர்கள் பாடல் .

அதாவது,

தாவரம்( அசைவில்லாதது ) – 20 லட்சம்,வகை
நீர் வாழ்வன 10 இலட்சம்வகை ,
ஊர்வன -11 இலட்சம்,வகை
பறப்பன – 10 இலட்சம்வகை ,
நடப்பன – 10 இலட்சம்,வகை
மானுடம் – 9 இலட்சம்வகை ,
தேவர்கள் – 14 இலட்சம் வகை

ஆக, 84 லட்சம் யோனி பேதங்கள் என்கிறது சாத்திரங்கள் .

இதையே  திருஞானசம்பந்தர்

உரை சேரும் எண்பத்து நான்கு நூறாயிரமாம்

யோனி பேதம் நிரைசேரப் படைத்து -அவற்றின்

உயிர்க்கு உயிராய அங்கு அங்கே நின்றான் கோயில்

வரைசேரும் முகில் முழவ மயில்கள் பல நடமாட, வண்டு பாட
விரைசேர் பொன்னிதழி தர மென்காந்தள் கையேற்கு மிழலையாமே.

என்று திருவழிமழலைப் பதிகத்தில் கூறுவதையும் காணலாம்.

ஆன்மாக்கள் நல்வினை, தீவினையென்னும் இரு வினைக்கு ஈடாக அதன் விளைச்சலால், நால்வகைத் தோற்றத்தையும், எழுவகைப் பிறப்பையும், எண்பத்து நான்கு நூறாயிர யோனி பேதத்தையும் உடையவைகளாய் இப் புவியில் பிறந்து வாழ்ந்து இறக்கும் என்கிறது இந்தப்பாடல். இது மாறாத நியதி. அதாவது, உயிர் வாழ்வதில் 84 லட்சம் யோனி பேதங்கள், பிரிவுகள் உள்ளது என்று கூறுகிறது சித்தர்கள் பாடல்! அதாவது இது உயிர்களின் எண்ணிக்கை அல்ல, உயிர்களின் பிரிவுகளின் எண்ணிக்கை. எத்தனை தெளிந்த சிந்தனை பாருங்கள் !

பிறகு அந்த உயிர்களின் தோற்றம் குறித்து பேசுகிறது
அவைகளில் நால்வகைத் தோற்றங்கள்:

அவைகள் தோன்றும் இடங்கள்;
அண்டசம், சுவேதசம், உற்பிச்சம்,சராயுசம் என்பவைகளாம்.
அவைகளுள் அண்டசம் முட்டையிற் தோன்றுவன.
சுவேதசம் வியர்வையில் தோன்றுவன.
உற்பிச்சம் வித்து வேர் கிழங்கு முதலியவைகளை மேற்பிளந்து தோன்றுவன. சுராயுசம் கருப்பையிற் தோன்றுவன என்பதாகும்.

உலகின் அனைத்து தோற்றங்களும் இவ்வாறே அமைவதாக நமது சித்தர்களின் சாத்திரங்கள் அறிவுறுத்துகிறது .இவைகளில் வடமொழி பெயர் குறித்து அதிகம் சிந்திக்க வேண்டாம். பொருள் நம்முடையது,நாம்  வைத்த பெயர் இப்போது கிடைக்கவில்லை. எனவே, யாரோ வைத்த பெயரைக்கொண்டு நமது சொத்தை மீட்டு  கொள்வோம். அடுத்து  இதையே எழுவகைப் பிறப்புகள் என்று பிறப்பின் வகையில் தேவர், மனிதர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் என வகைப்படுத்தப்படுகிறது.

கருப்பையிலே மனிதர்களும், நாற்கால் விலங்குகளும் பிறக்கும். முட்டையிலே பறவைகளும், ஊர்வனவும், நீர் வாழ்வனவும் பிறக்கும்.

வியர்வையிலே கிருமி, பேன் முதலிய சில ஊர்வனவும் விட்டில் முதலிய சில பறவைகளும் பிறக்கும். வித்தினும் வேர், கொம்பு, கொடி கிழங்குகளினும் தாவரங்கள் அதாவது அசைவில்லாதது பிறக்கும். தாவரமல்லாத மற்றை ஆறு வகைகளும் சங்கமங்களாம்.
அதாவது அசைபவைகளாகும். இவ்வாறு, 4,448 நோய்களுக்கும் நிச்சயமாக  தாவரங்களில் அதாவது அசைவில்லாத யோனி பேதங்கள் என்று 20 லட்சம்,வகைகளில் தான் மூலிகைகள் எனப்படும், நோயைத் தீர்க்கும் முறைகள் இருக்கக் கூடும்.

ஆனால், அத்தகைய 20 லட்சம் வகைகளில் நாம் கண்டறிந்த நோய்களான 4,448 க்கு நோய்க்கு ஒன்றாகக் கொண்டால் கூட 4,448 மூலிகைகள்  தான் கண்டறியப்பட்டிருக்கும் .

இவைகள் பல்வேறு தட்ப வெப்ப சூழலில் உலகின் அனைத்துப் பரப்பிலும் பரந்து விளையும் சாத்தியமே உண்டு .

ஆனால் நாம் இனம் கண்ட 4,448 நோய்களோ, நமக்கே பெரும் பாலும் தமிழர்களுக்கு உரிய நமது தட்ப வெப்ப சூழலில் நமக்கு வரும் பெருவாரியான நோய்களாகும் .

அதற்கு உரியதாக நமது சூழலில் கிடைக்கும் அத்தனை தாவர மருந்துகளை நமது சித்தர்கள் வழியே நமது தொல் தமிழர்கள் கண்டறிந்து இருந்திருக்கின்றனர்.


அத்தகைய மூலிகைகளைகளை பெருவாரியான நோய்களுக்கு தேவையான மூலிகைகளத் தேர்ந்தெடுத்து நம்மைச் சுற்றி, நமக்கு எட்டிய தூரத்தில், இப்படி கிடைக்குமாறு திட்டமிட்டு அமைத்து வளரும்படி செய்துள்ளனர் .

அதனாலேயே அவைகள் நம்ம ஊரில் நமக்கு அருகில் கைக்கெட்டிய தூரத்தில் மிக சுலபமாக கிடைக்குமாறு இருக்கிறது.

அதனாலேயே நம்மைச் சுற்றி உள்ள அனைத்து செடிகளும் இப்போது நோய் நீக்கும் மூலிகைகளாக மட்டுமே இருக்கின்றன. அதாவது, பயனில்லாத எந்த தாவரமும் நம்மைச் சுற்றி இராது என்ற நிலையை திட்டமிட்டு பல ஆயிரம் ஆண்டுகள் உழைப்பில் சாதித்து இருக்கிறார்கள் .

இத்தகைய புரிதலுக்கு தேர்வுக்கும் இதன் தொடர் பயன் பாட்டிற்கு தானே நம்மைச் சுற்றி தக்க காலத்தில் தேவைக்கு தக்க வாறு வளரச் செய்ய அத்ததுனை அறிவைப் பெற , எத்தகைய கடினமான, தொடர் ,திட்டமிடல் தேவைப்பட்டிருக்கும்! இவைகள் தானே தொடர்ந்து வளருமாறு செய்ய ஒரு சூழல் உருவாக எத்தனை ஆயிரம் ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கும்  என்பதை  எண்ணிப் பாருங்கள் .

நாம் வரலாற்றில் கணக்கிடும் சில ஆயிரம் ஆண்டுகள் அதற்கு நிச்சயம் போதுமானதாக இராது. சில முக்கிய ஆய்வாளர்கள்  தமிழின் தொன்மையை குறைந்தது 50,000 என்கிறார்கள். நான்  குறிப்பிட்ட  இத்தகைய நம்மைச் சுற்றி எங்கும் நோய் தீர்க்கும் மூலிகை வளர்ப்புக்கு திட்டமிட்டு நிறைவேற்ற அதற்கும் அதிகம் காலம் ஆகியிருக்கும். ஆனால், இவைகளை  நிறுவ, தக்க ஆதாரங்கள் வேண்டும்.  இது வரை கருத்துக்களுடன் காதிருப்பதைத் தவிர, வேறு வழியில்லை. ஆனால், ஒரு நம்பிக்கையை , தேடலை உருவாக்கலாம் .

எனவே, நமது தமிழ் மருத்துவ வரலாறு நாம் நினைப்பதை விட, மிக நீண்ட வரலாறு கொண்டதாக நிச்சயம் இருந்திருக்கவே வாய்ப்புண்டு. அது நிச்சயம் தொடர்ச்சியாக தன்னை மேம்படுத்தி தேவையான மூலிகைகளை நம்மைச் சுற்றி உருவாகி இருக்கும். அது எத்தனை சிரமமான கடின முயற்சி மிகக்கொண்ட செயல் என்பதை சற்றி சிந்தித்தால் மட்டுமே உணர முடியும்
தமிழின் முக்கிய சிறப்பே அதன் தொடர்பு அறுபடாத, நிலையே ஆகும் .

சொல்லப் போனால் குப்பை மேனி என்று குப்பை போன்ற மேனியை சுத்தமாக்கும்,வயிற்றின் உள்ளே வமனத்தை   வரவழைத்து சுத்தம் செய்யக் கூடிய சாதாரண மூலிகைகள் மனிதர்கள் வாழும் இடங்களில் தான் காணக் கிடைக்கும்.

வீதியோரங்களில் காணக் கிடைக்கும் குப்பைமேனி

மனித நடமாட்டம் இல்லாத காடுகளில் குப்பை மேனியைக் காண இயலாது. இவ்வாறு தான் கீழா நெல்லி போன்ற செடிகளும்! இவைகளையும் மனிதர்கள் அதிகம் வாழாத காடுகளில் கிடைக்காது .

வேப்பமரம்   மனித நடமாட்டம் இல்லாத காடுகளில் அதிகம் காணக் கிடைக்காது .

இன்னுமொரு தனித்தன்மை அந்தப்பகுதியில் எத்தகைய நோய் வரப் போகிறது என்பதை முன்னதாகவே அங்கே விளையத் தொடங்கும் மூலிகைகளைக் கொண்டே அந்தக் கால வைத்தியர்கள் உணர்ந்து விடுவார்கள்  என்பதாகும். அதாவது, கால நிலை மாற்றத்தால் வருகின்ற நோய்களுக்கு ஏற்ப, அதைத் தவிர்க்கும் மருந்தும் கூடவே உற்பத்தி ஆகிறது .இயற்கையின் அல்காரிதம் அத்தகைய உயர்வானது.

மாம்பழம் அதிகம் சாபிட்டால், அதன் உள்ளே கொட்டையில் இருக்கும் பருப்புகளே  மருந்து. பலா சுளை அதிகம் சாபிட்டால், அதன் கொட்டையை, சமைத்து சாப்பிட்டால் நிவாரணமாகும்.
வினாவுடன், விடையும் சேர்ந்தே இருக்கும்.


அதுவே, இயற்கையின் சிறப்பு .நோயை தரும் இயற்கை, அதற்கு நிவாரணமும் கூடவே தரும். மழைகாலம் வந்து விட்டதா ?
சளி , இரும்பல் தீர அத்தனை  மூலிகைகளும் அப்போது அதிகம் கிடைக்கும்,  கற்பூரவள்ளி, தூதுவளை, கண்டங்கத்திரி, ஆடாதோடை என்னும் எத்தனையெத்தனையோ செடிகள் அப்போது பூத்து குலுங்கும் .

கோடை வந்தால், அதை தணிக்க, அதிகம் நுங்கு, இளநீர், பதநீர், தர்பூசணி உள்ளிட்ட அத்தனையும் அப்போது தான் அதிகம் விளையும்.

அதாவது, நம்மைச் சுற்றி கிடைக்கும் அத்தனை தாவரங்களும் மருத்துவ குணம் கொண்டதாக மனித இனத்திற்கு  வரும் நோய்களை குணமாக்கும் வல்லமை கொண்டதாக அமைத்திருப்பது இயற்கையின் கொடையாகும். அத்துடன் நமது முன்னோர்களும் திட்டமிட்டு மருத்துவ வல்லமை கொண்ட மகத்தான மூலிகைகளை நம்மைச் சுற்றி வளருமாறு அமைத்திருக்கின்றனர்.

தொல் தமிழர்களின் அனுபவ அறிவும் தொடர் பல ஆயிரம் ஆண்டுகால திட்டமிடல்தான் நம்ம ஊரு மூலிகைகளை நம்மைச் சுற்றி இருப்பதை சாத்தியமாக்கி இருக்கிறது என்பதை உணர்ந்து அவர்களுக்கு நன்றி கூறி அந்த  மூலிகைகள் நமக்கு வழங்கும், நோய்தீர்க்கும் வல்லமைகளைப் பற்றி தொடர்ந்து பார்ப்போம். அதற்கு முக்கியத் தேவை உங்கள் ஈடுபாடு.

கட்டுரையாளர்; அண்ணாமலை சுகுமாரன் M.A, D.E.E

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time