கலைக்கும், அதிகாரத்திற்குமான உரசலில், ஒரு நாட்டுப்புற இசைக் கலைஞனின் போராட்டமே கதை! பஞ்சாபின் அசலான கிராமத்து வாழ்வை அடையாளப்படுத்தும் திரைப்படம். பொற்கோவில் கலவரம், சீக்கிய எழுச்சி, இந்திரா படுகொலை போன்ற சமகால வரலாறு வருகிறது. பஞ்சாப் நாட்டுப்புற இசையில் அசத்துகிறார் ஏ.ஆர். ரஹ்மான்;
நெட்பிளிக்சில் வெளியாகியிருக்கும் வரலாற்று ஆவண திரைப்படம் அமர்சிங் சம்கிலா பரவலான கவனத்தை ஈர்த்திருக்கிறது. இது சமீபகால வரலாறாகும். 1960ல் பஞ்சாபில் பிறந்த சீக்கிய தலித் கலைஞனான சம்கிலாவின் வாழ்வை தழுவி எடுக்கப்பட்டுள்ள இத் திரைப்படத்தை இம்தியாஸ் அலி இயக்கியிருக்கிறார்.
இளம் வயதிலேயே நாட்டார் இசை கலையில் பெரும் புகழை தொட்ட சம்கிலா, தனது 28வது வயதில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இது வரை அவரை கொலை செய்தவர்களை அடையாளம் காண முடியவில்லை. சம்கிலாவின் வாழ்வை திரைப்படமாக்கி இருக்கிறார் இம்தியாஸ் அலி.
1988 ஆம் ஆண்டு பஞ்சாபின் ஒரு கிராமத்திற்கு பாட வரும் சம்கிலாவும் அவரது மனைவி அமர்ஜோத்தும் சுட்டுக் கொலை செய்யப்படுகின்றனர். இந்த காட்சியிலிருந்து படம் துவங்குகிறது. அவரது உடலை அடக்கம் செய்யும் வரை அவரது கதை நான் லீனியராக விவரிக்கப்படுகிறது. யார் இந்த சம்கிலா? வெறும் கொச்சையான ஆபாச நாட்டுப்புற பாடலை பாடிய ஒரு மோசமான கலைஞன் தானே என்ற தொனியுடன் படம் ஒரு விவரணத் தன்மையுடன் முன்னும் பின்னுமாக கதை நகர்கிறது.
1960 –ல் ஏழ்மையான சீக்கிய தலித் குடும்பத்தில் பிறக்கும் அமர்சிங்கிற்கு இளமையிலேயே இசை ஞானம் இருக்கிறது. நாட்டுப்புறத்தில் பாடப்படும் கொச்சையான பாடல் வரிகள் கொண்ட பாடல்களை இசைப்பதும், சொந்தமாக பாடல் இயற்றுவதுமாக வளர்கிறான். நாட்கள் செல்ல செல்ல, அமர்சிங் மேடை இசைக் கலைஞனாக மாறுகிறான். மற்ற கலைஞர்களை விடவும், பெரும் புகழ் கொண்டவனாக மாறுகிறார் அமர்சிங். சம்கிலா என்ற பெயரில் அவரது காதல் மனைவியுடன் பாடும் பாடல்கள் பஞ்சாப் முழுமைக்கும் பரவுகின்றன. நாட்டுப்புற இசைத் துறையில் பெரும் ஹீரோவோகிறார் சம்கிலா. எளிய மனிதர்கள் பாசாங்குத்தனமற்று தங்கள் ஆசாபாசங்களை கலை வடிவில் வெளிப்படுத்துவதை, கலாச்சார காவலர்களாக தங்களைக் கருதிக் கொள்ளும் மேட்டுக் குடியினர் அதிர்ச்சியாகப் பார்த்தது ஆச்சரியமில்லை.
இதனால், அவரது பாடல்கள் கொச்சையாகவும், பெண்களை இழிவுபடுத்துவதாகவும் கூறி, அவருக்கு எதிர்ப்புகளும் வலுக்கின்றன. அவரது புகழினால் பொறாமையடைந்த மற்ற கலைஞர்கள் அவருக்கு எதிராக ஒரு புறம் சதி செய்கிறார்கள். இன்னொரு புறம் போராளிக் குழுக்கள் நெருக்கடி தருகிறார்கள். இன்னொரு முனையில் அரசுத் தரப்பு அவரது பாடல்களை தடை செய்கிறார்கள். ஆனாலும், சம்கிலாவின் புகழ் குறையவில்லை. மத அடிப்படைவாதிகளின் எச்சரிக்கையின் காரணமாக பக்திப் பாடல்கள் பாடுகிறான்.
மக்களோ அவரது கொச்சையான நாட்டுப்புற பாடல்களையே விரும்புகிறார்கள். இதனால், மிகுந்த நெருக்கடிக்குள்ளாகிறார்கள் சம்கிலாவும் அவரது மனைவியும். மக்களின் வேண்டுகோளை மறுக்க முடியாமல், மீண்டும் நாட்டுப் பாடல்களையே பாடுகிறார் சம்கிலா. இறுதியில் அடையாளம் தெரியாத நபர்களால் தன் மனைவியோடு கொல்லப்படுகிறார். கலைக்கும், அதிகாரத்திற்கும் நடக்கும் போட்டியில் கலைஞன் கொல்லப்பட்டலும், சம்கிலா தன் கலையின் மூலம் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
1960 தொடங்கி 1988 வரை வாழ்ந்த அமர்சிங் சம்கிலாவும், அவன் மனைவி அமர்ஜோத் கவுரும் மரணமில்லா பெருவாழ்வை அடைகின்றனர். காலிஸ்தான் தீவிரவாத குழுக்களால் கொல்லப்பட்டதாக சொல்லப்படும் இவர்களின் கொலைக்கு இன்று வரை நீதி கிடைக்காதது பஞ்சாப் மண்ணில் தொடர்ந்து பேசுபடு பொருளாகி உள்ளது.
படத்தின் ஹீரோ சம்கிலாவாக நடித்திருக்கும் தில்ஜிஜ் டோசாங்கும், அவரது மனைவி அமர்ஜோத் கவுராக நடித்திருக்கும் பரி நீதி சோப்ராவும் நடிப்பில் அசத்தியிருக்கிறார்கள். கடும் நெருக்கடிக்குள்ளும் தனது கலையினை விட்டுத் தராத கதாபாத்திரத்தில் பொருந்துகிறார் தில்ஜித். இருவரும் சேர்ந்து ஒரே மைக்கில் பாடும் போது தில்ஜிஜின் உடல் மொழி அபாரம். மற்ற கதாபாத்திரங்களாக வருபவர்களும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
படத்தை இயக்கி இருக்கும் இம்தியாஸ் அலி ஏற்கனவே ஜப் வி மெட் போன்ற புகழ் பெற்ற படங்களை இயக்கியவர் தான். ஆனாலும், இந்த வரலாற்று ஆவணப்பட புனைவை மிக நேர்த்தியாக இயக்கி இருக்கிறார். பொற்கோவில் கலவரம், சீக்கிய எழுச்சி, இந்திரா படுகொலை போன்ற கால கட்டங்களை கடந்து வரும் சம்கிலாவின் வாழ்வு வரலாற்று தடங்களை பதித்திருக்கிறது. வரலாற்றை மீளுருவாக்கம் செய்திருக்கும் பெரும்பாலான காட்சிகளில் அர்ப்பணிப்பான உழைப்பு தெரிகிறது. பஞ்சாபின் அசலான கிராம பண்பாட்டு வாழ்வை மீட்டுக் கொண்டு வந்திருப்பதுடன் கலை இயக்கமும், ஆடைகள் வடிவமைப்பும் காலத்தை நம் கண் முன் நிறுத்துகின்றன.
படத்திற்கு இசை ஏ.ஆர். ரஹ்மான். பஞ்சாபின் நாட்டார் வாழ்வில் பொதிந்திருக்கும் இசையை அதன் மண் மணம் மாறாமால் கொண்டு வந்திருக்கிறார். பெரும்பாலும் சம்கிலாவின் பாடல்களை அதன் இயல்பு மாறாமல் வெளிக் கொண்டு வந்திருக்கிறார். ரஹ்மானின் இசையில் இப் படம் மிக முக்கியமான பங்கை வகிக்கிறது. இசைக் கருவிகளின் தேர்விலும், இசைக் கோர்ப்பிலும் வரலாற்று அனுபவத்தை கொண்டு வந்திருக்கிறார்.
Also read
திரைக்கதை வடிவமும், படத்தொகுப்பும் சுவாரஸ்யமாக இருப்பதோடு, கதை தொய்வடையாமல் விறுவிறுப்பாக போகிறது. படத்தின் மையக் கரு, கலையின் சுதந்திரத்திற்கும், அதிகாரத்தின் ஒழுக்க விதிகளுக்கும் இடையேயான முரணாக நிகழ்கிறது. 1980களில் பஞ்சாபில் நடந்த கொந்தளிப்பான சூழலில் ஒரு இசைக்கலைஞனின் வாழ்வு சீக்கிரமாக அழிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் சம்கிலாவின் பெரும் புகழ் அந்த கலைஞனுக்கு மரணமில்லா பெருவாழ்வை தந்திருக்கிறது என்பதை படம் கலாப்பூர்வமாக உணர்த்துகிறது. சம்கிலா – வரலாற்றை மீட்கும் இசை.
திரை விமர்சனம்; – தயாளன்
தொடர்புக்கு : [email protected]
Leave a Reply