மக்களின் சந்தேகங்களும், அச்சங்களும் தொடர்கின்றன..!

-சாவித்திரி கண்ணன்

இன்றைய சூழலில் நாம் பாஜகவைக் கூட வெற்றி கொள்ளலாம், ஆனால், கோல்மால் EWM  மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்திடம் தோல்வி நிச்சயம். இந்த அச்சம் எதிர் கட்சிகள் உள்ளிட்ட பொது மக்களின் உணர்வாகும். ஆனால், இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் யார் பக்கம் நிற்கின்றன;

EVM  மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம், கண்ட்ரோல் யூனிட், விவிபாட் இயந்திரம் ஆகிய மூன்றிலும் நிறைய சந்தேகங்களை எழுப்பி பல பொதுநல மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

”அனைத்து வாக்குப் பதிவு இயந்திரங்களுடன் விவிபாட் இயந்திரங்களை இணைக்க வேண்டும். அப்படி இணைக்கப்பட்ட விவிபாட் இயந்திரங்களின் ஒப்புகை சீட்டுகளை 100 சதவீதம் எண்ணி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளுடன் ஒப்பிட வேண்டும்’’ என்று கோரி, ஜனநாயக சீர்திருத்த சங்கம் மற்றும் அபய் பக்சந்த், அருண் குமார் அகர்வால் ஆகியோர் மனுக்களை தாக்கல் செய்து இருந்தனர்.

ஏனெனில், தற்போது தேர்தல்களில் ‘விவிபாட்’ எனப்படும் – நாம் எந்தச் சின்னத்திர்கு வாக்களித்தோம் என்பதற்கான – ஒப்புகை சீட்டு எந்திரங்களில் பதிவான  வெகுசில மட்டுமே, சாம்பிளுக்கு எண்ணப்படுகின்றன. அனைத்து ஒப்புகை சீட்டுகளையும் எண்ணுவதற்கு மெனக்கிடுவதில்லை. ஆகவே, அதை செய்யும் பட்சத்தில் தான் மக்களின் பயம், சந்தேகம் விலகும் என வாதம் வைக்கப்பட்டது.

இந்த வழக்கை நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபாங்கர் தத்தா அமர்வு தொடர்ந்து விசாரித்து வந்தது. மக்கள் தரப்பில் வைக்கப்பட்ட சில சந்தேகங்களை நீதிபதிகள் தேர்தல் ஆணையத்திடம் வைத்தனர். விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்றன. தேர்தல் ஆணைய அதிகாரிகள், தொழில் நுட்பம் சார்ந்த பல்வேறு விவகாரங்கள் குறித்து நீதிபதிகளிடம் விளக்கம் அளித்தனர். இதையடுத்து வழங்கப்பட்ட இந்த வழக்கின் தீர்ப்பு இன்று (ஏப்.26)  அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிவிட்டது.

”மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் விவிபாட் தொழில்நுட்பம், வழிமுறைகள் குறித்து விரிவான விசாரணை மற்றும் ஆலோசனை நடத்தினோம். மின்னணு வாக்குப்பதிவு மற்றும் விவிபாட் இயந்திரங்களின் நம்பகத் தன்மையை பல்வேறு கட்டங்களில் உறுதி செய்தோம். தேர்தல் நடைமுறையை சந்தேகிப்பது தேவையற்ற குழப்பங்களுக்கு வழிவகுக்கும்.தேர்தல் ஆணையம் என்பது ஒரு தன்னாட்சி பெற்ற சுயாதீன அமைப்பு. அந்த அமைப்பின் மீது கண்மூடித்தனமாக அவநம்பிக்கை கொள்வது அடிப்படையற்ற சந்தேகங்களுக்கு இட்டுச் செல்லும்” என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.

தேர்தல் ஆணையம் என்ற சுயாதீன அமைப்பை தேர்தல் ஆணையர்களை தேர்ந்தெடுக்கும் வழிமுறைகளை அராஜகமாக மாற்றி அமைத்து, அதில் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி இடம் பெற்று இருந்ததையே காலி செய்துவிட்டதன் மூலம் இன்றைய பாஜக அரசு சீர்குலைத்து விட்டது என்பதை நீதிபதி எப்படி மறந்தார். ‘ஆமாம் சாமி’ போடுபவர்களாக தற்போது மும்மூர்த்திகள் அங்கு உட்கார்ந்து ஓரவஞ்சனையுடன் இயங்குவதை நாடே பார்த்து அதிர்கையில், உச்ச நீதிமன்றம் கண்ணை மூடிக் கொண்டு கருத்து சொன்னால் எப்படி? அதுவும், தேர்தல் ஆணையத்தின் மீது கண்மூடித்தனமாக அவநம்பிக்கை கொள்வதாக நீதிபதி தெரிவித்துள்ளதானது நிதானமற்ற பேச்சாகும்.

அதாவது, தேர்தல் ஆணையர்கள் எவ்விதம் நியமிக்கப்பட்டாலும், அவர்கள் எவ்வளவு ஓரவஞ்சனையுடன் செயல்பட்டாலும் மக்கள் நம்பியே ஆக வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறுவது சட்டபூர்வமான பேச்சாக தெரியவில்லை. கட்டபஞ்சாயத்து செய்வதாகவே உணர முடிகிறது. மக்களின் கடைசி நம்பிக்கையான நீதிமன்றங்களும் நீதியை நிலை நாட்டுவதில் உறுதிப்பாடு காட்டாவிட்டால், நாட்டில் மக்கள் நம்பிக்கை இழந்து வன்முறை வழிமுறைகளில் ஈடுபடக் கூடிய அபாயகரமான சமூக சூழல்கள் கூட உருவாகலாம்.

முன்னாள் தேர்தல் ஆணையர் எஸ். ஒய். குரேஷி இது குறித்து பிபிசி-க்கு அளித்த பேட்டியில், தேர்தலில் பொது மக்களின் நம்பிக்கையை நிலைநிறுத்த அனைத்து வாக்குச்சாவடிகளிலும் விவிபேட் வசதி செய்து ஒப்புகைச் சீட்டுகளை எண்ணுதல் ஏற்கப்பட வேண்டும் எனக் கூறியுள்ளது கவனிக்கதக்கது.

ஆனால், நமது பிரதமர் மோடியோ, இன்றைய தினம் தனது தேர்தல் பிரச்சாரத்தில் இந்த தீர்ப்பைக் கேட்டு ஆனந்தக் கூத்தாடி உள்ளார்; ”இன்று நமது ஜனநாயகத்திற்கு மங்களகரமான நாள்! EVM மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அழுது கொண்டிருந்த எதிர்கட்சிகளின் முகத்தில் உச்சநீதிமன்றம் ஓங்கி அறைந்துவிட்டது. நமது ஜனநாயகம் மற்றும் தேர்தல் நடைமுறைகளை உலகமே போற்றும் போது, எதிர்கட்சிகள் தங்கள் சுய நலத்திற்காக இதனை அவதூறாக பேசின. அதற்காக அவர்கள் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” என பிரதமர் மோடி பேசி இருக்கிறார். பிரதமரின் பேச்சே அவரை காட்டிக் கொடுத்துவிட்டது!

முதலாவதாக ஏழுகட்டமாக தேர்தலை இழுத்தடித்து நடத்துவதே ஒரு ஏமாற்று வேலையாகும். எதற்கு ஏழு கட்டம்…? பிரதமரின் பிரச்சாரத்திற்கு தோதாகவா..? என்ற கேள்வியை மக்கள் கேட்கின்றனர். ஏப்ரல் 19 தொடங்கி ஜுன்-1 வரையுமா தேர்தலை நடத்துவீர்கள்?

ஏப்ரல் 19-ல் ஓட்டுபோட்ட பிறகு அந்த வாக்குப்பதிவு இயந்திரங்களை நீண்ட காலத்திற்கு பேட்டரியுடன் இயங்கு நிலையிலேயே வைப்பதிலும் ஒரு சூழ்ச்சி இருக்கிறது என இத் துறையில் சுமார் 35 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள மென் பொருள் பொறியாளர் பாலசுப்பிரமணியன் கிருஷ்ணன் கூறுகிறார். இதோ அவரது கூற்று;

இந்திய தேர்தல் ஆணையம் தேர்தலில் உபயோகப் படுத்தும் மின்னணு வாக்கு  இயந்திரங்கள் அனைத்தும் ஓரே மாதிரியானவை தானா ?

ஒரு இயந்திரத்திற்கும் மற்றொரு வாக்கு இயந்திரத்திற்கும் சிறு வித்தியாசம்  கூட இருக்காதா?

இரண்டு வாக்கு இயந்திரங்கள் பார்ப்பதற்கு ஒரே போல காட்சி அளிக்கலாம். அவற்றின் நிறம், நீள அகல உயரம், எடை, பொத்தான்களின் எண்ணிக்கை, பொத்தான்களின் அளவு இவையனைத்தும் ஒன்றாக இருக்கலாம்.

அவை, நம் கண்ணெதிரே வேலை செய்யும் முறை கூட ஒன்றாக இருப்பது போலத் தோன்றலாம்.  அதாவது, ஒரு பொத்தானை அழுத்தினால், அந்தப் பொத்தானுக்கான சின்னத்தில் விளக்கு எரியலாம் VVPAT இயந்திரத்தில் அந்த சின்னம் தோன்றலாம்.

ஆனாலும், அந்த இரண்டு இயந்திரங்களும் ஒரே மாதிரியானவை தானா என்பதற்கு உத்திரவாதம்  தர இயலாது.

நம்மிடம் இரண்டு கை பேசிகள் உள்ளன. இரண்டுமே ஒரே மாடல் ஆக இருக்கலாம். இரண்டையும் நாம் ஒரே மாதிரியாக பயன்படுத்துவோம். ஆனாலும்ஒரு கை பேசியில் உள்ள மென் பொருள் (software program) மற்றதிலிருந்து வேறு பட்டால், அந்த இரண்டு கை பேசிகளுக்கும் இடையே ஏராளமான வித்தியாசங்கள்உள்ளன என்று பொருள்.

இதே போல இரண்டு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேறு வேறு மென் பொருள் (micro controller firmware) இருந்தால் அவற்றிற்கிடையில் பெரிய வேறுபாடுகள் உள்ளன என்று பொருள். இது தான் உண்மை.

குறிப்பாக இரண்டு இயந்திரங்களுக்கு இடையே மென்பொருளில் வித்தியாசம் உள்ளதா என்பதை இந்த அதிகாரிகளுக்கு ஒப்பிட்டுப் பார்க்க தெரியுமா என்பது கூட சந்தேகமே.

மென்பொருள் தான் எந்த ஒரு மின்னணு உபகரணத்திற்கும் உயிர் நாடி. மென்பொருள் மூலம் இயந்திரத்தினை முழுமையாகக் கட்டுப் படுத்த முடியும். நமது வீட்டில் உள்ள ஏர் கண்டிஷனர் கூட மென்பொருள் கட்டுப் பாட்டில் தான் இயங்குகிறது.  ஏர் கண்டிஷனரில் முதலில் வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸாக இருக்கும். ஒரு மணி நேரத்திற்குப் பிறகு தானாகவே வெப்ப நிலை 24 டிகிரி செல்சியஸாக உயரும். அடுத்த ஒரு மணி நேரத்திற்குப் பிறகு தானாகவே வெப்ப நிலை இப்படியே படிப்படியாக உயர்ந்து கொண்டே செல்லும். இதற்காக நாம் எதுவும் செய்யத் தேவையில்லை. ஏர்கண்டிஷனரில் உள்ள மென் பொருள் இதைத் தானாகவே செய்யும்.

இதே போன்ற ஒரு நிகழ்வு வாக்குப் பதிவு எந்திரத்திலும் சாத்தியம். வாக்குப் பதிவு முடிந்து இயந்திரங்கள் சீல் வைக்கப் பட்ட பிறகும், அந்த யூனிட்டில் உள்ள பேட்டரிகள் நீக்கப் படாததால்கண்ட்ரோல் யூனிட் இயங்கிக் கொண்டு தான் இருக்கும்.  ஆகவே, கீழ்க் கண்ட மாதிரி ஒரு நிகழ்வு நடக்க வாய்ப்புள்ளது:

சீல் வைக்கப் பட்ட சில மணி நேரத்தில் எடுத்துக் காட்டாக, 72 மணி நேரத்திற்குப் பிறகு ஒவ்வொரு நிமிடத்திலும் 10 வாக்குகள் ஒரு குறிப்பிட்ட சின்னத்தில் அதிகமாகும் படி செய்யலாம். அதே நேரம் மற்ற ஏதாவது ஒரு சின்னத்தில் 10 வாக்குகள் குறையும். ஆனால் மொத்த வாக்குகளின் எண்ணிக்கை மாறாது. இது போல பல சாத்தியக் கூறுகள் இருக்கிறது.

தேர்தல்பணியில் ஈடுபடுத்தப் பட்டிருக்கும் பல்லாயிரக் கணக்கான இயந்திரங்களில் சில நூறு  மாதிரி இயந்திரங்களை ஒரு பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். அதாவது இந்த இயந்திரங்களில் ஒரே மென் பொருள் தான் உள்ளதா? என்பதை உறுதிசெய்ய வேண்டும்.

இதை சில ஆவணங்களின் மூலம் நிரூபித்துப் பலனில்லை. இயந்திரங்களில் இருக்கும் மென்பொருளை பதிவேற்றி அவற்றை ஒப்பிட்டால் மட்டுமே நம்ப முடியும். மென்பொருளில் வித்தியாசம் இருந்தால் இயந்திரத்தின் நம்பகத் தன்மை கேள்விக்குறி மட்டுமல்ல, கேலிக் கூத்தாகி விடும்.

மென்பொருளை பதிவேற்றும் முறை பற்றி தேர்தல் ஆணையத்தால் உத்திரவாதம் தர முடியாவிட்டால், அவர்கள் மீதான நம்பகத் தன்மை நொறுங்கி விடும்’’ என்கிறார்.

ஆக, உச்ச நீதிமன்றம் சொல்கிறதே என்பதற்காக கருப்பு காக்கையை மக்கள் வெள்ளை காக்கை எனச் சொல்லமாட்டார்கள்!

-சாவித்திரி கண்ணன்

 

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time