டம்பாச்சாரி விலாசமும், ரத்தக் கண்ணீரும்!

-சாவித்திரி கண்ணன்

தமிழின் முதல் சமூக நாடகமாகவும், திரைப்படமாகவும் கருதப்படும் டம்பாச்சாரி 150 ஆண்டுகளுக்கு முன்பான தமிழ்ச் சமூகம் சந்தித்த அவலங்களை அப்பட்டமாக தோலுரித்தது. அதன் தாக்கம் முக்கால் நூற்றாண்டு நீடித்தது. டம்பாச்சாரியும், ரத்தக் கண்ணீரும் காட்டும் சமூக  நிகழ்வுகள் இன்றும் தொடர்கின்றன;

எம்.ஆர்.ராதா நடித்து புகழ்பெற்ற ரத்தக் கண்ணீர் நாடகமும், திரைப்படமும் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த திரைப்படம் வெளியான பிறகும் ஊர்தோறும் ரத்தக் கண்ணீர் நாடகத்தை சுமார் கால் நூற்றாண்டுகள் நடத்தியிருப்பார் எம்.ஆர்.ராதா!

ரத்தக் கண்ணீர் நாடகத்தை எழுதியது திருவாருர் தங்கராசு. இவர் ஒரு மிகச் சிறந்த பெரியாரிஸ்ட்! ஆகவே, மூட நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள், பக்தியின் பெயரிலான ஏமாற்றுத் தனங்கள் ஆகியவற்றை சாடியிருப்பார். அத்துடன் விதவை மறுமணம் போன்ற அந்த நாட்களில் ஏற்க மறுத்த புரட்சி கருத்துக்களையும் காட்சிப்படுத்தி இருப்பார். தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் ஓடி வசூலைக் குவித்த படம் தான் இது. அதே போல எம்.ஆர்.ராதாவும் இந்த நாடகத்தை தமிழகத்தின் அனைத்து ஊர்களிலும் மட்டுமல்ல, மலேசியா,சிங்கப்பூர் போன்ற இடங்களிலும் அரங்கேற்றி உள்ளார். தற்போது வரை கூட ரத்தக்கண்ணீர் ஒரு பேசப்படும் படமாகத் தான் உள்ளது!

திருவாரூர் தங்கராசு, ரத்தக் கண்ணீர் போஸ்டர்.

இத்தனை சிறப்பு வாய்ந்த ரத்தக் கண்ணீர் என்ற படைப்பு உருவாக இன்ஸ்பிரஷனாக இருந்தது டம்பாச்சாரி விலாசம் என்ற பிரபல நாடகம் தான் என்பது பலருக்கு தெரியாது. இந்தப் பிரபல நாடகம் 1857-ல் சைதாபுரம் ( இன்றைய சைதாப்பேட்டை) காசி விஸ்வநாத முதலியார் என்பவரால் எழுதப்பட்டு சுமார் 80 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் போடப்பட்ட நாடகமாகும்.

1885 ல் தான் இது எழுத்து வடிவம் பெற்றது. இதை பதிப்பித்தவர் திருநெல்வேலியைச் சேர்ந்த காசி முகைதீன் ராவுத்தர் என்பதில் இருந்து இந்த நாடகம் மதம் கடந்து மனிதர்களை வென்றெடுத்துள்ளது என்பதை நாம் அறியலாம். ஆனால், புத்தகமாவதற்கு சற்று முன்னதாகவே பாலாமணி என்ற பிரபல நாடக நடிகை நடத்திய நாடக கம்பெனியால் அரங்கேற்றப்பட்டுள்ளது. இதில் நடிப்பவர்கள் அனைவரும் பெண்களாகவே இருந்துள்ளனர். ஆண் வேடத்தையும் பெண்களே போட்டுள்ளனர்…என்பது தனிச் சிறப்பாகும்.

இந்த நாடகம் 19 ஆம் நூற்றாண்டைக் கடந்து இருபதாம் நூற்றாண்டிலும் பல்வேறு புகழ் பெற்ற நாடகக் குழுக்களால் அரங்கேற்றப்பட்டுள்ளது. மதுரை தத்துவ மீனலோசனி வித்வ பாலசபா, வேலூர் நாராயணசாமி பிள்ளை, ஆலந்தூர் ஒரிஜனல் டிராமாடிக் கம்பெனி, மதுரை ஒரிஜனல் பாய்ஸ் கம்பெனி, சிலோன் சாயபு கம்பெனி, ராஜாம்பாள் கம்பெனி, சாமண்ணா ஐயர், ராகவய்யா.. போன்ற பல நாடகக் குழுக்களால் 1940 கள் வரையிலும் நாடகமாக அரங்கேற்றப்பட்டுள்ளது.

இதை ஒரு வகையில் தமிழின் முதல் சமூக நாடகம் என்றே வரலாற்றாசிரியர்கள் கூறுகிறர்கள். புராணங்கள், பக்தி நாடகங்கள், ராஜா,ராணி கதைகள் நாடகங்களாக நடைபெற்று வந்த காலகட்டத்தில் சமகால சம்பவங்களை விமர்சனத்துடன் பேசியது இந்த நாடகம். இதற்கிடையில் 1935-ல் இது, திரைப்படமாகவும் வெளியாகி உள்ளது. மாணிக்கலால் டாண்டன் என்ற பிரபல இயக்குனரின் இயக்கத்தில் எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி, எ.எஸ்.ரத்னா, பி.எஸ் சரஸ்வதி ஆகியோர் நடிப்பில் வெளியாகி வெற்றி கண்டது.

ஜிமீன்தார் பரம்பரையின் மெத்தப் படித்த இளைஞன் கிருஷ்ணமூர்த்தி டாம்பீகமாக வாழ்வதும், ஒன்றுக்கும் உதவாத வேலைவெட்டி இல்லாத நண்பர்கள் புடை சூழ கெட்ட பழக்க, வழக்கங்களுக்காக ஆடம்பரமாக செலவு செய்வதும், உத்தமியான தன் மனைவியை புறக்கணித்து, மதனசுந்தரி என்ற தாசியிடம் தன் செல்வங்களை எல்லாம் தூக்கிக் கொடுத்து, கடனாளியாகி சிறைப்பட்டு, மீள்வதுமாக கதை அமைத்திருப்பார் காசிவிஸ்வநாத முதலியார்.

சரி, இதில் என்ன புதுமை இருக்கிறது எனக் கடந்து போக முடியாதபடிக்கு அந்தக் கால சமூகச் சூழல்களையும், சமூக பித்தலாட்டங்கள், அவலங்களையும் துல்லியமாக படம்பிடித்து விளக்கி இருப்பது தான் இந்த படைப்பு இன்று வரை பேசப்படுவதற்கான காரணமாகும்.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இருந்த உயர்ந்த உத்தியோகஸ்தர்கள், தாசில்தார், மணியக்காரர், கணக்குபிள்ளை போன்றோரின் ஊழல்கள் சொல்லப்பட்டு இருக்கிறது. எந்த உழைப்புமில்லாமல் ஜமீந்தார்கள் ஆடம்பர வாழ்வில் திளைப்பதையும், ஏகப்பட்ட வேலையாட்களை கொண்டிருந்ததையும், தங்களிடம் வேலை செய்வோர்களை ஜமீந்தார்கள் எவ்வளவு அடிமைகளாக நடத்தினார்கள் என்பதையும், அதில் மிக விஸ்வாசமான வேலைக்கார்கள் ஒருபுறமும், கிடைத்ததை சுருட்டிக் கொள்ளும் வேலைக்காரர்கள் சிலருமாக பல பாத்திரங்கள் வருகின்றன.

ஊரை அடித்து உலையில் போடும் அயோக்கிய செல்வந்தர்கள் பலர் தோலூரித்து காட்டப்பட்டு இருக்கிறார்கள்! ஒரு அயோக்கிய சிகாமணி பேசுவதாக அமைந்த ஒரு வசனத்தை பார்ப்போம்;

”அகப்பட்டவர்களை ஏமாற்றி, அவர்களுக்கு ஆயிரம் பொய்களை சொல்லி, ஜகஜல்லி அடித்து, கையில் இருப்பதை தட்டிக் கொண்டு, சடகோபம் வைத்து வருகிறேன்…”

இதில் சடகோபம் என்பது பெருமாளின் கிரீடமாகும். பெருமாள் கோயிலில் பக்தர்களுக்கு தலையில் கிரீடம் வைத்து எடுப்பதன் மூலம், தட்டுகளில் சில்லறையை பார்ப்பதை ஒரு ஏமாற்றாக கணித்துள்ளார் ஆசிரியர்!

கதையின் நாயகன் வாழும் இடம் அக் காலத்தில் தூய்மையான கூவம் ஆறு ஓடிய சிந்தாதிரிப் பேட்டை! இப்பகுதியில் வாழ்ந்தவர்களும் கூவத்தார் என்றே அன்று அழைக்கப்பட்டுள்ளதும் இந்த நாடகத்தின் வழியே தெரிகிறது. அத்துடன், ”குஜராத்தி பேட்டை வியாபாரிகள் ஆபத்தானவர்கள். இவர்களிடம் கடன் வாங்காதே. நம் சொத்தையே அபகரித்துவிடுவார்கள்” என டம்பாச்சாரி தன் கணக்குபிள்ளையிடம் ஓரிடத்தில் பேசும் வசனமானது செளகார் பேட்டையில் குடியேறிய குஜராத்தி சேட்டுகளை குறிப்பதாக இருக்கிறது.

இந்த நாடகத்தில் ஏகப்பட்ட பாடல்கள் இடம் பெற்றுள்ளன. ஆங்காங்கே  பொருத்தமான பழமொழிகள் தெறிக்கின்றன. தேவைக்கேற்ப நகைச்சுவை வசனங்களுக்கும் பஞ்சமில்லை.

இப்படி அந்நாளின் பலதரப்பட்ட சென்னைவாசிகள் வந்து போகும் இந்த நாடகத்தில் தெலுங்கு, உருது, இந்தி, ஆங்கிலம், பார்சி.. என பல மொழிகளில் வசனம் இடம் பெற்றுள்ளன!

”வெயிட்டு செய் சட்டுவாஜி, கெயிட்டு போல பறந்தே ஓடி, பைட்டனை போட்டுக் கொண்டு, என் ரைட்டரை வரச் சொல்வாயே!”

இதை இன்றைய வாசகனுக்கு மொழி பெயர்த்தால் தான் புரியும்.

”காத்திரு சட்டுவாஜி, பார்வையின் ஒளிபோல பறந்தே ஓடி, நான்கு சக்கர  காரை எடுத்துக் கொண்டு, என் எழுத்தரை வரச் சொல்வாயே..” என்கிறார்.

டம்பாச்சாரியை பணம் கறந்து மொட்டை அடிப்பதற்காக தாசி மதனசுந்தரி பேசும் வசனங்கள், டம்பாச்சாரியின் உதாரி நண்பர்கள் பொய், பித்தலாட்டம் செய்து பணத்தை பெறுவது, அந்த நாளின்  ஆங்கிலேயர்கள் நடத்திய புகழ் பெற்ற ஹோட்டல்களில் பரிமாறப்பட்ட நவீன பேக்கரி அயிட்டங்களின் பெயர்கள்.. என ஒவ்வொன்றும் சுவாரஷ்யம் குறையாதவையே!

இதில் தாசியிடம் மாமா வேலை செய்யும் ஒரு பிராமண கேரக்டர் தான் தில்லானா மோகானாம்பாளில் வரும் நாகேஷ் நடிக்கும் வைத்தி கேரக்டருக்கு முன்னோடியாக இருந்திருக்கக் கூடும் எனத் தோன்றுகிறது.

இந்த நாடகம் உண்மையிலேயே ஒரு சமூக விழிப்புணர்வு நாடகம் என்றால், மிகையில்லை. இந்த நாடகத்தை அரங்கேற்றிய ஒவ்வொரு நாடகக் குழுவும் அவரவர் பார்வைக்கு ஏற்ப ஆங்காங்கே கூடுதல் காட்சிகள், வசனங்களை பின்னாளில் சேர்த்திருக்க வாய்ப்புள்ளது. ஆனால், இதன் ஒரிஜினலான மூலப் பதிப்பு இன்றும் சென்னை ரோஜா முத்தையா நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதன் டிஜிட்டல் வடிவத்தை கூகுளில் சென்றும் பார்க்க முடியும்.

இதில் வரும் மோகனசுந்தரி ஜமீந்தாரிடம் மோகித்து பேசுவது போன்ற ஒரு கவிதை நூலை திருப்போரூர் கோபால் நாயக்கர் என்ற ஒரு புலவர் 1914-ல் யாத்துள்ளதன் மூலம் இந்த நாடகத்தின் தாக்கம் பல்லாண்டுகளாக பெரும் பேசுபடு பொருளாக, சென்னை மகாணத்தில் இருந்துள்ளதை உணர முடிகிறது. இன்றைக்கும் டி.என்.பி.எஸ்.சி தேர்வில் தமிழின் முதல் சமூக நாடகமான டம்பாச்சாரி விலாசம் நாடகத்தை எழுதியது யார்? என்ற கேள்வி இடம் பெறுவதில் இருந்து இதன் முக்கியத்துவத்தை உணரலாம்.

காசிவிஸ்வநாத முதலியார் அன்றைக்கு மாஜிஸ்திரேட்டாகவும், மொழி பெயர்ப்பாளராகவும், உருவ வழிபாட்டை மறுக்கும் பிரம்ம ஞான சபையின் உறுப்பினராகவும் இருந்துள்ளார். 1806-ல் பிறந்து 1871 -ல் மறைந்துள்ளார். இவர் மறைவுக்கு பிறகு தான் இந்த நாடகம் பெரும் புகழ் பெற்றது. இவர் இது தவிர மற்ற சில நாடகங்களையும் எழுதி உள்ளார். பெண் கல்வி, விதவை மறுமணம் ஆகிய கருத்துக்களை கூறியுள்ளார்.

ஆக, ரத்தக் கண்ணீருக்கு இது முன்னோடி படைப்பாக இருந்துள்ளது என்றாலும், திருவாரூர் தங்கராசுவின் தனித்துவமான கூர்மையான சமூக அரசியல் பார்வைகளைக் கொண்டிருந்தது! ஒரு இடத்தில் எம்.ஆர்.ராதா பேசும் வசனம் இன்றைக்கும் நூறு சதவிதம் பொருந்துவது வியப்பளிக்கிறது.

”சாதிக்கட்சி, சாமியார் கட்சின்னு இந்தியாவுல க்ரோர்ஸ் கணக்கா  வச்சுருக்கான் கட்சிய. எல்லா கட்சியும் பிஸினசில் புகுந்து சம்பாதிக்கிறான்…, வேற ஒன்னுக்கும் லாயக்கில்ல….”

இதே போல வட நாட்டு சேட்டுகள் குறித்து அன்றைக்கே காசிவிஸ்வநாத முதலியார் அம்பலப்படுத்திய நிலையில், இன்றைக்கு தமிழகத்தில் வட நாட்டு ராஜஸ்தான், குஜராத்தி வியாபாரிகள் எண்ணிக்கை 16 லட்சத்தை தாண்டியுள்ளதென்ற  சமீபத்திய தகவலோடு பொருத்தி பார்க்கையில், ‘கலை, இலக்கிய வரலாற்றின் வழியே நாம் என்ன பாடம் பெற்றோம்..?’ என்ற சுய பரிசீலனைக்கு நம்மை உட்படுத்த வேண்டியுள்ளது.

-சாவித்திரி கண்ணன்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time