அற்புதப் பயன்களை அள்ளித் தரும் அகத்தி!

-அண்ணாமலை சுகுமாரன்

அகத்திக் கீரை பயன்பாடு குறைவதால் அனாவசிய நோய்கள் உருவாகின்றன! அகத்திக் கீரையை பல வகைகளில் சமைக்கலாம். இது அகத்தை தூய்மையாக்கி, முகத்தை பொலிவாக்கும். மாத்திரை, மருந்து, மது  உட்கொள்வதால் ஏற்படும் பக்க விளைவுகளை தீர்க்கும். மருத்துவ செலவுக்கு முற்றுப் புள்ளி வைக்கும்;

அகத்தி ஆயிரம் காய்த்தாலும் புறத்தி புறத்தியே’ என்று ஒரு பழமொழி அகத்தியைப் பற்றிக் கூறப்படுகிறது. அகத்தியை வெற்றிலைக் கொடிக் கால்களில் ஊன்று கால்களாக வளர்ப்பர். அகத்தியர் நிழலில் மூலிகை கொடிகள் நன்கு வளரும் என்பது நம்பிக்கை! அகத்தி என்பது அகத்தியருடன் தொடர்புடையது என்ற நம்பிக்கைக்கு, இந்த கொடிகால் முறை சான்று , என்பதுடன் மேலே செல்வோம் .

அதே சமயம், அகத்தை சுத்தப்படுத்துவதால் ‘அகத்தி’ என பெயர் வந்திருக்கலாம் என்ற எண்ணமும் வருகிறது .சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் ‘மருந்து வைத்து வசியப்படுத்தல்’ என்ற ஒரு நம்பிக்கை தமிழ் மக்களை ஆட்டி படைத்திருக்கிறது; மனைவியின் அன்பு தொடரக் கணவனும், கணவனின் அன்பு தொடர மனைவியும், விலை மாதர்கள் தங்களுக்கு தொடர்ந்து வாடிக்கையாளர் கிடைக்கவும் ‘இந்த மருந்து வைத்தலைப்’ பயன் படுத்தியதாகக் கூறப்படுகிறது.

ஒரு சில கூட்டு  மருந்துகளைச் சேர்த்துக் உள்ளுக்குள் கொடுத்து விட்டால், அதை அருந்தியவர் கொடுத்தவரிடம் தொடர்ந்து ஒருவித நெருக்கத்துடனும், ஈர்ப்புடனும்  இருப்பாராம்.
இது ஆராயத்தக்கது; அத்தகைய மருந்திடுதல் எனும் தோஷத்தை அகத்தி நீக்குமாம்.


ஒரு மூலிகை பற்றிய பழம் பாடல் இவ்வாறு விவரிக்கிறது!

”மருந்திடுதல் போகுங்காண் வங்கிரந்தி வாய்வாம்
திருந்த அசனம் செரிக்கும்- வருந்தச்
சகத்திலெழு பித்தமது சாந்தியாம் நாளும்
அகத்தியிலை தின்னு மவர்க்கு.”
–   குணபாடம்

அகத்தியை உண்ணில் இடுமருந்து என்னும் மருந்திடுதல் எனும் தோஷத்தில் இருந்து விடுதலையும்,  இன்னமும் பித்து எனும் மனக் கோளாறும் நீங்கும்; ஆகாரம் எளிதில் ஜீரணமாகும். வாயு உண்டாகும் என்கிறது. இதன் பொதுவான குணங்கள் இலகு மலகாரி, சமனகாரி ( மூன்று தோஷங்களையும்  சமன் செய்யும்), விஷ நாசகாரி. என்கிறது இந்தப் பாடல்.

அகத்தி இடு மருந்தை முறிப்பது போல் எல்லா மருந்துகளின் வீரியத்தையும் முறித்து விடும். எனவே, சித்த மருந்துகள் சாப்பிடும் போது  இதைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். சிலர் மது அருந்தும் நாட்களில் தவிர்ப்பார்கள்! அதே சமயம் தொடர்ந்து ஆங்கில மருந்துகளைச் சாப்பிட்டு அதன் பக்க விளைவுகளை சரி செய்ய இது நல்ல  நிவாரணம். ஆனால், வாரம்  ஒரு முறை மட்டுமே அகத்தியை உபயோகிக்க வேண்டும். அதிகம் உபயோகித்தால் சொறி சிரங்கு வரும்.


வாரம் ஒருமுறை அகத்தியை உபயோகித்தால் தேகத்தில் இருக்கும் உஷ்ணம் குறையும்;கண்கள் குளிர்ச்சியாகும்; மலம் இலகுவாகப்  போகும்; சிறுநீர் தடையில்லாது தாராளமாகப் போகும்; நீரடைப்பு, பித்த மயக்கம் இவை நீங்கும் .
அடிபட்டு ரத்தம் கசியும் ரணங்களுக்கு அகத்தியை அரைத்து வைத்து ரணத்தில் கட்டினால்  விரைவில் ஆறும்; சீழ் பிடிக்காது.

அகத்திக் கீரையில் இரும்பு சத்து அதிகம் உள்ளதால், ரத்த சோகையை குணமாக்கும். ரத்த அழுத்ததை சம நிலையில் வைத்திருக்கும்.
நெஞ்சு சளி, தோல் நோய் போன்றவைகளுக்கு அகத்திக் கீரை நல்ல பலனை தரும்.
வாய்ப் புண்ணால் அவதிப்படுபவர்கள் அகத்திக் கீரையுடன் தேங்காய் துருவல் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய்ப் புண் விரைவில் குணமாகும். அகத்திக் கீரை வயிற்றுப் புண் என்னும் பெப்டிக் அல்சர் நோயைக் குணப்படுத்துகிறது.  அகத்தி கீரை, தேங்காய் பால் சேர்த்து முன்பெல்லாம் தண்ணீர் சாறு ஒன்று ஒன்று ரசம் போல வைப்பார்கள். அது வயற்று புண், வாய் புண் இவைகளை ஆற்றும். இப்போது அப்படி வைத்து தருபவர்கள் அதிகம் இல்லை.


அகத்திக் கீரையில் நீர்ச்சத்து 73 சதவீதம், புரதச்சத்து 8.4 சதவீதம், கொழுப்பு 1.4 சதவீதம், தாது உப்புக்கள் 2.1சதவீதம், நார்ச்சத்து 2.2 சதவீதம், மாவுச்சத்து 11.8 சதவீதம் உள்ளன

அகத்தியைக் கீரை என்பார்கள். நம் பண்டைய தமிழர்கள் தாவரங்களை பெயர்  வகைகளைப் பிரிப்பதில் இருந்தே , அவர்கள் தங்களது   தாவரவியல் அறிவை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.
அத்தி, மா, பலா, வாழை, ஆல், அரசு, வேம்பு, பூவரச்சு (இன்னும் பல) போன்ற மரங்களின் இலைகளுக்கு மட்டும் ‘இலை’ என்று பெயர்;

அகத்தி, பசலை வல்லாரை, முருங்கை போன்றவற்றின் மரங்களின் இலைகள், இலையாகாமல் ‘கீரை’ ஆகின்றது;
மண்ணில் படர்கின்ற கொடிவகை இலைகளுக்குப் ‘பூண்டு’ என்று பெயராகிறது;
அறுகு, கோரை முதலியவற்றின் இலைகள் ‘புல்’ எனப்படுகின்றன;
மலையில் விளைகின்ற உசிலை முதலியவற்றின் இலைகளுக்குப் பெயர் ‘தழை’;
நெல், வரகு முதலியவற்றின் இலைகள் ‘தாள்’ ஆகும்;
சப்பாத்தி, கள்ளி, தாழை இனங்களின் இலைகளுக்குப் பெயர் ‘மடல்’;
கரும்பு, நாணல் முதலியவற்றின் இலைகள் ‘தோகை’ ;
தென்னை, கமுகு, பனை முதலியவற்றின் இலைகள் ‘ஓலை’ என்றே சொல்லப்படுகின்றன.


இவ்வாறு தாவரங்களுக்கு வழங்கி வரும் சொற்களுக்குள்ளே இலக்கணம் மட்டுமல்லாது, தாவரவியல் அறிவியலும் அடங்கி இருக்கிறது. ஆனால், இவை எல்லாம் பார்க்கும்போது இத்தனை அறிவையும் நம் பண்டைத் தமிழர்கள் எங்கே கற்றனர்..?
இதற்கு அகத்திக் கீரையை நன்றாகச் சுத்தம் செய்து நான்கு பங்கு சின்ன வெங்காயம் சேர்த்து சூப் தயாரித்து தினசரி ஒரு  வேளை குடிக்கலாம்.

வேறு  மொழியில் அகத்தியின் பெயர்கள்;
•Hindi: गाछ मूंगा Gaach-munga, Hathya, अगस्ति Agast
•Malayalam: Akatti
•Telugu: Ettagise, Sukanasamu
•Kannada: Agasi
•Urdu: Agst
•Sanskrit: Varnari, Munipriya, Agasti, Drigapalaka
தாவரப்பெயர் : Sesbania grandiflora
குடும்பம் : Fabaceae (Pea family)

இதிலும் அகத்தி – செவ்வகத்தி என இரு  பிரிவு உள்ளது. இரண்டுக்குமே மருத்துவ குணங்கள் ஒன்றே. வெள்ளைப் பூவுடையது அகத்தி எனவும், சிவப்பு நிறம் கொண்டது செவ்வகத்தி எனவும் அறியலாம். சீமை  அகத்தி என்பது வெளிநாட்டில் இருந்து வந்தது. அது தனி மருத்துவ குணம் கொண்டது. தோல் நோய்களுக்கு சிறந்த மருந்து.

அகத்திக் கீரைச்சாறு ஒரு பங்கும், தேன் ஐந்து பங்கும் சேர்த்து கலந்து  தலை உச்சியில் விரல்களால் தடவி வந்தால், குழந்தைகளுக்கு நீர்க்கோவையும், மூக்கில் சிறிது விட்டால் தலை வலியும் நீங்கும். இதன் பட்டையைக்  கொதிக்க வைத்து குடிநீர் செய்து அம்மைக் காய்ச்சல், விஷக் காய்ச்சல் போன்றவற்றுக்குக் கொடுத்து வரலாம். தண்டின் சாறு பெரியம்மையைக் குணப்படுத்தும்.

பீடி, சிகரெட், சுருட்டு, மது  போன்றவற்றைப் பயன்படுத்துவதால்  ஏற்படுகின்ற விஷச் சூட்டையும், பித்தத்தையும், வெயிலினால் உண்டாகும் சூட்டையும் நீக்கும்.


பொலிவிழந்த தோலிற்கு கரு வளையங்கள் நிறைந்த முகத்திற்கு அகத்தி ஒரு நல்ல தீர்வாக அமைகிறது. இது ரத்த சோகையை நீக்குகிறது. பிராணவாயு சரியாக செல்லாததால் தோல் பொலிவிழந்து காணப்படும். அதற்கு , இரும்புச் சத்து அதிகம் உள்ள உணவுகளை எடுத்து கொள்ளுதல் தோலுக்கு நல்ல நிறத்தை தருகிறது
அகத்தி கீரையை அரைத்து உச்சந் தலையில் ஒரு மணிநேரம் வைத்திருந்து குளித்தால் சூட்டை நீக்கும்.

இதில் வைட்டமின்- சி (Vitamin-C) உள்ளதால் , நோய் எதிர்ப்பு (Immunity) சக்தி அதிக அளவில் உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி அனைவருக்கும் தேவை என்றாலும் முதியர்வர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிக குறைவாக இருக்கும். எனவே, அவர்கள் இக் கீரையை எடுத்துக் கொள்வதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்திக் கொள்ள முடியும்.

உடல் சூடு குறையும் மற்றும் இளநரை ஏற்படுவதையும் தடுக்கும்.
அகத்திக் கீரை, மருதாணி இலை மற்றும் மஞ்சள் மூன்றையும் சமஅளவு எடுத்து அரைத்துத் தடவினால், கால்களில் ஏற்படும் பித்த வெடிப்புகள் குணமாகும்! அகத்தி கீரையுடன் சிறிது மஞ்சள், அகத்தி இலை மற்றும் மருதாணி இலை இவை அனைத்தும் ஒரு சேர அரைத்து பித்த வெடிப்பு உள்ள இடத்தில தடவி வந்தால், பித்த வெடிப்பு இருந்த இடம் காணாமல் போகும்.

அகத்தி கீரை சாம்பார்!

ஒரு சிலருக்கு எலும்பு பலமற்று போகும். லேசாக தட்டினாலே எலும்புப் பகுதி வலி எடுக்கும்.
இப்படிப்பட்டவர்கள் அகத்திக் கீரையை உணவோடு சாப்பிட்டு வந்தால், எலும்பு பலமடையும்.

அகத்திக் கீரை சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள்:
மூளைக் கோளாறுகள், மலச்சிக்கல், இரத்தக் கொதிப்பு , பித்தம், உடல் உஷ்ணம்,சளி
இருமல்,தொண்டை வலி, தொண்டைப் புண், மார்புவலி, காய்ச்சல், பெரியம்மை நோய் என பல்வேறு நோய்களைப் போக்கும் அகத்திக் கீரையை வாரத்தில் இரு  நாட்கள் மட்டும் சாப்பிடுங்கள்.

கோவில்களில் மாடுகள் சாப்பிட அகத்தி கீரையை வாங்கித் தருவதால் புண்ணியம் கிடைக்கும் என வாங்கிக் கொண்டு போய் தருகின்ற பலர், தங்கள் குடும்பத்தின் ஆரோக்கியத்திற்கு அகத்திக் கீரையை பயன்படுத்த தவறுகின்றனர்.


அகத்தியை ஏகாதசி அன்று விரதமிருந்த பின் துவாதசியன்று உணவில் சேர்க்கும் வழக்கம் தமிழகத்தில் உண்டு; அதோடு, நெல்லிக் காயையும் சேர்த்துக் கொள்வர். எதையும் அர்த்தத்துடன் தான் நம் முன்னோர்கள் வகைப்படுத்தியுள்ளனர். நாம் தான் பண்டைய  முது சொற்களை மதிக்கத் தவறிவிட்டோம். மரண விகிதம் அப்போதை விட, இப்போது குறைந்திருக்கலாம். வாழும் காலமும் இப்போது நமக்கு நீண்டிருக்கலாம்.


ஆனால், ஆரோக்கியமானவர்களாக உள்ளோமா? மாத்திரை, மருந்துகளோடு காலத்தை தள்கிறோமா? என எண்ணிப் பார்க்க வேண்டும். நாம்  உணவுடன்  சேர்ந்து உண்ணும் ரசாயனங்கள் இருக்கிறதே! அதை  எண்ணிப் பார்க்கவே நடுக்கமாக இருக்கிறது.
நீண்ட  காலம் வாழ நாம் கொடுக்கும் விலையும், இழக்கும் இன்பமும் மிக மிக அதிகம்.

இந்தச் சூழலில் அகத்தி உடலில் இருக்கும் தேவையற்ற ரசாயன நஞ்சை நீக்கும் நல்ல மருந்து.
ஆனால், இதை அளவோடு சாப்பிடுங்க!

வாழ்க வளமுடன்!

கட்டுரையாளர்; அண்ணாமலை சுகுமாரன்

‘நம்ம ஊரு மூலிகைகள்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time