வெற்றிலை மருத்துவம், தமிழகத்தின் தனித்துவம்!

-அண்ணாமலை சுகுமாரன்

சுபமங்கள காரியம் தொடங்கி சுகமான தாம்பத்தியம் வரை தமிழர் வாழ்வுடன் பின்னிப் பிணைந்தது, வெற்றிலை! இதன் சமூக வரலாறு சுவாரசியமானது. குரல் வளத்தைக் கொடுக்கும். ஜீரணத்திற்கு உதவும் என்பது மட்டுமல்ல, பாரம்பரிய மருத்துவத்தில் வியக்கதக்க வகையில் பல்வேறு நோய்களைத் தீர்க்கப் பயன்படுகிறது;

நம் முன்னோர்கள் ஆரோக்கிய வாழ்வுக்கான அடிப்படையாக வெற்றிலையை உட்கொண்டனர். சாப்பிட்ட பிறகு வெற்றிலை தரிப்பது சம்பிரதாயமாக மட்டுமல்ல, நோயற்ற வாழ்வுக்கான உத்திரவாதமாக பார்க்கப்பட்டது. வாய்துர் நாற்றத்தை தவிர்க்கும். பற்களை பாதுகாக்கும், நெஞ்சில் சளி சேராமல் காக்கும்.. போன்ற பல நோக்கங்கள் இதில் இருந்தன!

வெற்றிலை மலேசியாவில் தோன்றியதாகக் கூறப்படுகிறது. இக்கொடி  இந்தியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் மிகுதியாகக் காணப்படுகிறது.  இது ஒரு பயிரிடப்படும் கொடிதான்; இது தானாக எங்கும் விளைவதில்லை; தமிழகத்தில் பாரம்பரிய வெற்றிலை விவசாயத்தில் கொடிகட்டிப் பறந்த ஊர் திண்டுக்கல் மாவட்டத்தின் வத்தலக்குண்டாகும். வெற்றிலைக் குன்று என்ற ஊரே பின் பெயர் மருவி, வத்தலக்குண்டானது. அந்தக் காலத்தில் வத்தலகுண்டு வெற்றிலைக்கு சந்தைகளில் தனி மவுசு உண்டு. தற்போது நாட்டு வெற்றிலையே வெகு அரிதாகிவிட்டது. வீரிய ரக வெற்றிலை தான் சந்தையை ஆக்கிரமித்துள்ளது! இது வருத்தத்திற்கு உரியதாகும்.

வெற்றிலை வளரும் இடத்தைக் கொடிக்கால் என்று கூறுவர் . பெரும்பாலும் தமிழ்நாட்டில் அது அகத்திச் செடிகளின் மேல் படர விட்டு வளர்க்கப்படுகிறது . இது செடியைச் சுற்றிப் படர்வதால் நாகவல்லி என்றும் பெயர் பெற்றுள்ளது. தென்னந் தோப்புகளில் இதை ஊடுபயிராகவும் விளைவிப்பதுண்டு. தமிழகத்தின் தென் மாவட்டங்களில் தனித்து பயிரிடுவதும் உள்ளது.


வெற்றிலை வெறும் இலை மட்டுமன்று; மூலிகை மட்டுமன்று. அது மிகுந்த சமூக மதிப்பு கொண்டது . வெற்றிலை இல்லாது எந்த விழாவும் , விருந்தும் நிறைவடையாது.

அந்தக் காலத்தில் மன்னர்கள் தொடர்ந்து வெற்றிலையைத் தாம்பூலமாகப் பயன்படுத்தினர். அந்த வெற்றிலையை மடித்துக் கொடுப்பதற்காக அமைச்சர் மதிப்பில் ஓர் அதிகாரியும்  மன்னரின் அருகில் இருப்பார். அவருக்குச் சில சமயம் அமைச்சரை விட மதிப்பு அதிகம் உண்டு; அவருக்கு பெயரே அடைப்பக்காரர்.

அரியநாயகம் என புகழ்பெற்ற மதுரை நாயக்கர் முதலில் கிருஷ்ண தேவராயரிடம் அடைப்பக்காரராக இருந்ததாகக் கூறப்படுகிறது. எந்த ஒரு செயலுக்கும் அச்சாரம் போடுவதற்கு வெற்றிலை பாக்குக் கொடுத்து விட்டால் போதும்; அதுவே ஒப்பந்தம் ஆன மாதிரிதான். எந்த ஒரு முக்கிய ஒப்பந்தமும் வெற்றிலை இன்றி இராது .

இன்றும் கூட திருமண நிச்சயத்தை வெற்றிலை பாக்கு (தாம்பூலம்) மாற்றிக் கொள்வது என்று தானே கூறுகிறோம். நமது சமூக வாழ்வில் அத்தனை மதிப்பு வெற்றிலைக்கு உண்டு. தமிழர்களிடையே எந்த முக்கியமான வைபவமாக இருந்தாலும் வெற்றிலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.


வெற்றிலை இல்லாமல் எந்த சுப காரியமும் தமிழர் வாழ்வில் இல்லை; வெற்றிலை இல்லாத கடவுள் வழிபாடும் தமிழர் வாழ்வில் இல்லை. ஏன் என்றே தெரியாமல் தொடர்ந்து வழக்கமாக நாம் வெற்றிலையை நமது வாழ்வின் அத்தனை செயல்களிலும் உபயோகித்து வருகிறோம். கடவுளை மறுப்போர் கூட இதை ஏன் என்று கேட்கவில்லை .

வெற்றிலை என்பதே பன்மை தான்; வெற்றிலைகள் என்று கூறப்படுவதில்லை. அதை என்றும் ஒன்றாகவும் உபயோகிப்பதில்லை.  இதுவும் இதன் தனித்துவத்தை ,உயர்வை காண்பிக்கிறது .

வெற்றிலையைப் பயிர் செய்ய விதை என்று எதுவும் இல்லை. காம்புகளை வெட்டிப் பதியன் போட்டுத் தான் பயிர் செய்கிறார்கள். வெற்றிலையில்  கரும் பச்சை நிறத்திலிருப்பது ஆண் வெற்றிலை என்றும், இளம்பச்சை நிறத்திலிருப்பது பெண் வெற்றிலை என்றும் இரண்டு வகையாகப் பிரிக்கிறார்கள். சிலர் அதில் பின்புறம் இருக்கும் நரம்புகளைப் பார்த்தும் ரகம் பிரிப்பதுண்டு.

வெற்றிலையைக் கொண்டு ஆருடம், சோதிடம் கூடப் பார்ப்பதுண்டு. மாந்திரீகத்திலும் இதற்குத் தனி இடம் உண்டு.

மூலிகையின் பெயர்  -: வெற்றிலை
தாவரப் பெயர் -: PIPER BETEL
தாவரக் குடும்பம் -: PIPER ACEAE

தாம்பூலம், நாகவல்லி, வேந்தன் என்று வேறு பெயர்களும் இதற்கு உண்டு.

வெற்றிலை வெப்பம் தரும்; உமிழ்நீர் பெருக்கும்; பசியை உண்டாக்கும்; பால் சுரக்க வைக்கும்; காமத்தைத் தூண்டும்; தாம்பத்தியம் சிறக்கும். நாடி நரம்பை உரமாக்கும்; நறுமணம் அளிக்கும்.


வெற்றிலைச் சாற்றுடன் பாலையும் கலந்து பருகி வர, சிறு நீர் நன்கு பிரியும். குழந்தைகளுக்கு வரும் சுரம், சன்னிக்கு, வெற்றிலைச் சாற்றில் கஸ்தூரி, கோரோசனை ஏதேனும் ஒன்றைச் சேர்த்துக் கொடுக்கச் சளி, இருமல், மாந்தம், இழுப்பு குணமாகும்.

பல மருந்துகளுக்கு வெற்றிலை அனுபானமாகும். (உட்செல்லும் மருந்தோடு இதையும் உண்பதால் வீரியம் மிகும்) ஒரிசாவில் சில பகுதிகளில் பெண்கள் குழந்தைகள் பிறக்காமல் தடுக்கச் சிறிது வெற்றிலை வேரையும், மிளகையும் சம அளவு வைத்து அரைத்து 40 நாட்கள் சாப்பிட்டு வருகிறார்கள். இது ஒரு சிறந்த கருத்தடை மருத்து.

வெற்றிலை வாயிலிட்டு மென்று வர குரல் வளம் உண்டாகும். எனவே தான் இசைக் கலைஞர்கள் இதனை அதிகம் பயன்படுத்துகிறார்கள். கும்பகோணம் வெற்றிலையும், இசையும் பெயர் பெற்றவை. நுரையீரல் சம்பந்தமான நோய்களுக்கு வெற்றிலைச்சாறும், இஞ்சிச் சாறும் சம அளவு கலந்து அருந்திவர நன்மை ஏற்படும்.

”அடைக்காய் தின்பதில் ஊறுமுதல் நீர் நஞ்சாம்
அதி பித்தம் இரண்டாவதூறு நீரே
கடையமிர்தம் மூன்றாவதூறு நீர் தான்
கனமதுர நான்காவதூறு மந்நீர்
மடையெனவே ஐந்தாறிற் சுரந்துள் ஊறி
வருநீர் களைச் சுகித்து
தடையுருப் பித்தமொடு மந்த நோயும் தளர்பாண்டு நோயும்
உண்டாம் தரம் சொன்னோம்.”

தேரையர்

இதே கருத்தை வள்ளல் பெருமானும் தமது வசனப்பகுதியில் கூறி இருக்கிறார். அதாவது வெற்றிலை எப்படி போடுவது, முதல் ஊறும் எச்சிலை துப்பி விட்டு, பிறகு எடுத்துக் கொள்ள வலியுறுத்துகிறார்.


இரண்டு வெற்றிலையோடு, ஒன்பது மிளகை மடித்து வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்கி, தேங்காய்த் துண்டுகள் சிலவற்றினையும் மென்று தின்றால், தேள் விஷம் உடனே முறியும்.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் இரண்டு வெற்றிலையுடன் வேப்பிலை ஒரு கைப் பிடியளவும், அருகம்புல் ஒரு கைப்பிடியளவும் ஒரு சட்டியில் போட்டு அரை லிட்டர் தண்ணீர் விட்டு நன்றாகக் கொதிக்க விடவும். தண்ணீரின் அளவு கால் லிட்டர் ஆகக் குறையும் வரை கொதிக்க விட்டு, பின்பு வடிகட்டி ஆற வைத்து,  மூன்று வேளை உணவுக்கு முன்பு அருந்தினால் குணமாவதாகக் கூறப்படுகிறது.

உணவுக்குப் பின் வெற்றிலையை அளவாக  உபயோகிக்க உண்ட உணவு ஜீரணமாகும். ஜப்பானிய டீ விருந்து முறை போல் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு  இவைகளைச் சேர்த்து  அந்தக் காலத்து மனிதர்கள் அதை லாவகமாக  போடும் விதமே ஒரு தனியான கலையாகும்; இதை மிகவும் ரசித்துச் செய்வர்.

பின்புறம் இருக்கும் நரம்பை நீக்கிவிடவேண்டும்; அதில் சுண்ணாம்பு தடவ வேண்டும். வெற்றிலை, பாக்குடன் சேரும் போது சுண்ணாம்பு உண்ணத்தக்கதாக மாறி விடுகிறது; உடலுக்குச் சுண்ணாம்பு சத்தும் கிடைத்து விடுகிறது. அந்தக் காலத்து பாட்டிகளுக்கு நாளுக்கு இரண்டு முறை பிரஷ் செய்யும் இந்தக் காலத்து நாகரிக மனிதரை விடப் பற்கள் வலுவாக இருந்தன.


இன்னும் வெற்றிலையின் மகிமை சொல்லச் சொல்ல விரியும்; ’வெற்றிலை போடுவதல்ல, தரிப்பது’ என்பர். அதுவே, அதன் மதிப்பை உயர்த்தும்.

இந்தியாவில், பண்டைய கலாச்சாரத்திலிருந்து வெற்றிலை  முக்கிய பங்கு வகிக்கிறது. உணவுக்குப் பிறகு வெற்றிலை  மெல்லும் பழக்கம் கிபி 75 மற்றும் கிபி 300 க்கு இடையில் இந்தியாவில் அதிகம் இடம் பெற்றிருந்தது. 13 ஆம் நூற்றாண்டில், இங்கு பயணம் செய்த ஐரோப்பிய பயணியான மார்கோ போலோ இந்தியாவில் அரசர்கள் மற்றும் பிரபுக்கள் மத்தியில் வெற்றிலை மெல்லுவதை அதிகம் கண்டதாக பதிவு  செய்திருக்கிறார்!

சீன நாட்டுப்புற மருத்துவத்தில் கூட  வெற்றிலை பல்வேறு உடல் நிலை கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது! இதில்  நச்சு நீக்கம், ஆக்ஸிஜனேற்றம் மற்றும் ஆண்டிமுட்டேஷன் பண்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இது  நீரிழிவு எதிர்ப்பு, இருதய, அழற்சி எதிர்ப்பு, இம்யூனோமோடூலேட்டரி, அல்சர் எதிர்ப்பு உள்ளிட்ட  பல்வேறு உயர் மருத்துவ பண்புகளைக் கொண்டுள்ளன. ,

மிக பழங்காலத்திலிருந்தே வெற்றிலையை பாக்குவுடன் சேர்த்து மென்று சாப்பிடும் தொல்பொருள் சான்றுகள் உள்ளன. இந்த இரண்டு வெவ்வேறு தூண்டுதல் பொருட்கள் முதலில் எப்போது ஒன்றாக இணைக்கப்பட்டன என்பது தெரியவில்லை.


பைபர் பீட்டில்  என்றும் அழைக்கப்படும் வெற்றிலை, பாரம்பரிய மருத்துவத்தில் பல்வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. வெற்றிலை சாறுகள் மற்றும் அதன்  சுத்திகரிக்கப்பட்ட கலவைகள் பல முக்கிய பண்புகளைக் கொண்டிருப்பதாக ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது!
அவற்றுள்:
அழற்சி எதிர்ப்பு, நீரிழிவு எதிர்ப்பு, இருதய, அல்சர் எதிர்ப்பு, ஹெபடோ-பாதுகாப்பு, தொற்று எதிர்ப்பு மற்றும் இம்யூனோமோடூலேட்டரி முக்கியமானது.

வாஸ்து படி, ( இப்போது இதற்கு நல்ல மதிப்பு சமூகத்தில் இருக்கிறது ) உங்கள் வீட்டில் ஒரு வெற்றிலை செடியை நட்டால், இதனால் பல நன்மைகள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

இது வீட்டிற்குள் நேர்மறை ஆற்றல், நல்லிணக்கம் மற்றும் செழிப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதாக கருதப்படுகிறது.வெற்றிலை மங்களகரமானதாகக் கருதப்படுகிறது மற்றும் செல்வ மிகுதியின் குறியீடான  லட்சுமியை யாராவது விரும்பாமல் இருப்பார்களா !

வெற்றிலை என்னும் போதே வெற்றி வந்து சேரும்.  இது  வெற்று இலை மட்டுமல்ல, வெற்றியையும், மங்களத்தையும் தரும் ஒரு  மூலிகை !

கட்டுரை; அண்ணாமலை சுகுமாரன்

‘நம்ம ஊரு மூலிகைகள்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time