பூப்பெய்தும் வயது குறைந்து கொண்டே வருவது ஏன்?

-நாகப்பன் சூரியநாராயணன்

பெண் குழந்தைகள் பூப்பெய்தும் வயது குறைந்து கொண்டே வருகிறது. எட்டு வயது, பத்து வயதுகளில் பூப்பெய்துவது பெண் குழந்தைகளின் உடல் நலத்தையும், மன நலத்தையும் பெருமளவில் பாதிக்கும். உணவு முறைகளில் ஏற்பட்டுள்ள சில தவறுகளைக் களைந்தாலே இதை தவிர்க்க முடியும்!

சமீபத்தில் திருப்பூரில் என் உறவினர் குடும்பத்தில் ஒரு சின்னப் பொணணுக்கு சீர் செய்றோம் என்று அழைப்பிதழை வாட்ஸ்ஆப்ல அனுப்பியிருந்தார்கள். அதைப் பார்த்ததும் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஏன்னா அந்தப் பொண்ணு 4ஆம் வகுப்புலதான் படிக்கிறாள். ரொம்பச் சின்னப் பொண்ணு பத்து வயசு கூட ஆகியிருக்காது, அதற்குள், அவ பெரிய பொண்ணாயிட்டா அவளுக்கு சீர் செய்றோம்னு சொன்னது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அந்தப் பெண்ணின் அக்காவும் இப்படித்தான் பத்து வயசுலயே பெரிய பொண்ணாயிட்டா. என்பதும் என்னோட ஞாபகத்துக்கு  வந்தது.

ஏன் சின்னச் சின்னக் குழந்தைகளுக்கு இந்த நிலைமை? இப்படி எட்டு வயசுலயும், பத்து வயசுலயும் பெண் குழந்தைங்க பெரிய பொண்ணானா அவளோட கஷ்டங்களை நினைச்சுப் பாருங்க. விளையாட அனுப்ப மாட்டார்கள். திடீர்னு அந்தக் குழந்தையோட உடம்புல ஏற்படுற இந்த மாற்றம் அந்தக் குழந்தையோட மன நிலைமையை கடுமையா பாதிக்கும். இது அவளோட படிப்பையும், அவளுடைய எதிர் காலத்தையும் பாதிக்கும். இந்தப் பிரச்சனையில இருந்து பெண் குழந்தைகளை எப்படிக் காப்பாற்றப் போகிறாம்?

இந்தியப் பெண் குழந்தைகளின் பூப்பெய்தும் சராசரி வயது 14 என்று இந்திய குடும்பலநலத்துறை புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றது.அமெரிக்காவுல பெண் குழந்தைகள் பூப்படைகிற சராசரி வயது வெறும் 11 தான். ஆனால் சீனவின் கிராமப்புறங்களில் பெண்குழந்தைகள் பூப்பெய்தும் வயது சராசரியாக 17 வயது அப்படின்னு தன்னோடு ஆய்வுகளில்  தெரிவிக்கிறார் ஆய்வறிஞர் டாக்டர்.காலின் கேம்பல்.

இதற்குக் காரணமாக அவர் சொல்லும் உணவுப் பழக்கம் என்னவென்றால் சீனாவின் கிராமப்புறங்களில் அதிக அளவில் காய்கறிகள், பழங்கள், கீரைகள் போன்றவற்றை  உணவில் சேர்த்துக் கொள்கிறார்கள். கொழுப்பு உள்ள உணவுகளைக் குறைவாகவும், அதிக நார்ச்சத்துள்ள உணவுகளையும் பெருமளவிலும் சாப்பிடுறார்கள் ! அவரது The China Study என்ற நூலில். சீனாவின் கிராமப்புறங்களில் இறைச்சி, பால், மீன், எண்ணெய் போன்ற எல்லா வகையான கொழுப்புகளையும் குறைவாகப் பயன்படுத்துகிறார்கள்! அப்படிங்கிறது அவரது 30 ஆண்டு கால ஆய்வு முடிவு தெளிவாக் காட்டுது.

தமிழ்நாட்டிலும் அப்படி நிலை இருந்தது. 1980க்கு முன்னர் பொதுவாக பத்தாம் வகுப்பு விடுமுறையிலோ அல்லது ப்ளஸ் ஒன்னு படித்துக் கொண்டிருக்கும் பொழுதோ தான் பெண் குழந்தைகள் பூப்பெய்தினார்கள்.
அப்புறம் ஏன் இப்ப இப்படி பத்து வயசுலயும், எட்டு வயசுலயும் பெண் குழந்தைகள் பூப்பெய்துறாங்க?. அதுக்கு என்ன காரணம். ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

எண்ணெயின் பயன்பாடு

1980க்குப் பிறகு பாம் ஆயில் என்ற சேச்சுரேட்டட் கொழுப்பு நிறைந்த எண்ணெயின் பயன்பாடு  ரொம்ப அதிகமாகியது. விலை குறைந்த பாமாயில் கிடைக்க ஆரம்பித்த உடன் மக்கள் அதிக அளவுல பொறிச்சு, வறுத்துத் தின்பதற்கு ஆரம்பித்தார்கள். அரசு நியாயவிலைக் கடைகளில் பாமாயிலை விற்பனை செய்தது, மக்களிடத்தில் பெருமளவில் பாம் ஆயில் பயன்படுத்தும் பழக்கத்தை உருவாக்கியது. நொறுக்கு தீனிகளை வாங்கி உண்ணும் நுகர்வு கலாச்சாரம் அதிகரித்தது! இவை ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல!

மாட்டுப்பால்

பாலில் கால்ஷியம் என்ற சுண்ணச் சத்து இருக்கிறது அதனால் அதை அதிகம் பயன்படுத்த வேண்டும் என்ற ஒரு கோயபல்ஸ் பொய்ப் பரப்புரை வேகமாக பரப்பப்பட்டது. பாலின் மிகச் சிறந்த சத்துக்கள் உங்கள் உடம்பில் சேர வேண்டும் என்றால் நீங்கள் ஒரு கன்றுக் குட்டியாகத்தான் இருக்க வேண்டும். உலகில் எந்த உயிரினமும் இன்னொரு உயிரினத்தின் பாலைக் குடிப்பதில்லை. குழந்தைப் பருவத்தைத் தாண்டியபின் எந்தப் பாலுட்டி விலங்குகளும் பால் குடிப்பதில்லை. மாட்டுக்கு கால்ஷியம் எதில் இருந்து கிடைக்கிறது? புற்களில் இருந்தும் தாவரங்களில் இருந்தும் கால்ஷியத்தைப் ‍பெறுகிறது. எந்ந மாடாவது பால் குடிக்கிறதா? மா‍ட்டின் எலும்புகள் எவ்வளவு வலிமையாக இருக்கிறது. மனிதர்களின் எலும்பு வளர்ச்சிக்குத் தேவையான கால்ஷியம் தாவரங்களில் இருந்தே பெறப்பட ‍வேண்டும். பால் ஒரு விலங்குக் கொழுப்பு. பாலில் அதிகம் இருப்பது சேச்சுரேட்டட் கொழுப்பு. பாலு, தயிரு, வெண்ணெய், நெய், பாலாடைக் கட்டி இதுல எல்லாம் இருக்கிறது கெட்ட கொழுப்பான சேச்சுரேட்ட் கொழுப்புதான்.  1990க்குப் பிறகு மக்கள் பாலை வழக்கத்தை விட நான்கு மடங்கு அதிகமாகப் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். இதுவும் பெண் குழந்தைகள் சிறு வயதில் பூப்படைய ஒரு காரணமாக அமைந்தது.

அதிகரித்த இறைச்சி உணவுப் பழக்கம்

எப்பொ‍ழுதாவது வீட்டிற்கு விருந்தினர் வந்தால் இறைச்சி, அல்லது வருடத்திற்கு சிலமுறை இறைச்சி என்றிருந்த நிலை மாறியது. மக்களின் பொருளாதார நிலை மேம்பட்டதும், மக்கள் அதிக அளவில் இறைச்சி உணவுக்கு மாறினார்கள். வாரம் தவறாமல் சிக்கன், மட்டன், நாள் தவறாமல் முட்டை என்று முழுமையாக சேச்சுரேட்டட் கொழுப்புக்கு அடிமையானார்கள். அது மட்டும் இல்லை, வறுத்தது பொறிச்சதுன்னு மொத்த உணவுப் பழக்கமும் நம்ம சமூகத்தில் மாறியது. பெண் குழந்தைகள்  8 வயதிலிருந்து 12 வயதுக்குள் பூப்படையும் நிலையும் தமிழ்ச் சமூகத்தில் உருவானது.

பெரிய பண்ணையில் வளர்க்கப்படும் எல்லா பிராய்லர் கோழிகளுக்கும் ஆன்டிபயோட்டிக் என்ற நோய் எதிர்ப்பு ஊசிகள் ஒவ்வொரு மாதமும் செலுத்தப்படுகின்றன.  இந்த இறைச்சி, முட்டைகளை அதிகமாகச் சாப்பிடும் பொழுது பெண் குழந்தைகள் சீக்கிரமாக பூப்படைகிறார்கள்!.

அதிகரித்த பதப்படுத்தப்பட்ட உணவுகள்

1990க்கு அப்புறம் குழந்தைகள் பொறித்த பாக்கெட்ல அடைச்சு விக்கிற பல நிறுவனங்களோட உற்பத்திப் பொருட்களை சாப்பிட ஆரம்பிச்சாங்க. பிஸ்கெட், சிப்ஸ், சாக்லேட் போன்ற அதிக அளவில் செயற்கை இனிப்புகள், டிரான்ஸ்ஃபேட் நிறைந்த, சேச்சுரேட்டட் ஃபேட் நிறைந்த இந்த குப்பை உணவுகள் குழந்தைகளோட ஹார்மோன்கள் தவறான விதத்துல தூண்டுவதற்குக் காரணமாக இருந்தது.

எண்ணெயில வறுத்தது, பொறிச்சத இயன்ற அளவு குறைக்கணும். நாள்தோறும் நம்ம வீட்டுல பயன்படுத்துல சமையல் எண்ணெயோட அளவ நாம குறைக்காம எந்த மாற்றமும் வராது. அதே நேரத்துல அதிக அளவுல காய்கறிகள், கீரைகள், பழங்கள், அவரை, துவரை, மொச்சைப் பயறுகளைக் கொடுக்கணும். சத்தான சிறுதானியங்களையும், கைக்குத்தல் அரிசியையும் பெண் குழந்தைகளுக்குக் கொடுக்கணும். அப்பத்தான் அவங்கள இந்தப் பிரச்சனையில இருந்து காப்பாத்த முடியும்.

ச்சீஸ்ன்னா என்னன்னே தெரியா வளர்ந்தோம். ஆனா இன்னிக்கு பீசா, பீசான்னு எங்க பார்த்ததாலும் பீசா மேனியாவா இருக்குது. இந்தப் பீசால இருக்கிற பாலாடைக் கட்டி,   அதாங்க ச்சீஸ் விலங்குக் கொழுப்பு. சேச்சுரேட்டட் கொழுப்பு. அதிக அளவு ஈஸ்ட்ரோஜன்ங்கிற ஹார்மோன் அடர்த்தியா இருக்கிறது.பொதுவாக அனைவருமே இதை தவிக்க வேண்டும். இந்த சீஸ் பீசாவை  பெண் குழந்தைகள் சாப்பிட்டு வரும் போது அந்தக் குழந்தைகள் சின்ன வயசுலயே பூப்படையுறதை தவிர்க்க முடியாது!

ரொம்ப சின்ன வயசுலயே பெண் குழந்தைகள் வயசுக்கு வந்தா அவங்களுக்கு சீக்கிரமே மெனோபாஸ் வர்றதுக்கான வாய்ப்பு இருக்கு. அது மட்டுமில்லைங்க அப்படிச் சின்ன வயசுலயே வயசுக்க வர்ற பெண் குழந்தைகளுக்கு பின்னாளில் மார்பகப் புற்றுநோய் வர்றதக்கான வாய்ப்பும் அதிகரிக்குது அப்படிங்கிறத ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்காங்க. இந்தக் கட்டுரையில் இதற்கான தரவுகளை இணைத்துள்ளேன். இணைப்புகளை சுட்டி அவற்றையும் தவறாமல் படித்து விடுங்கள்.

சத்தான காய்கறிகள், கீரைகள், பழங்கள், பருப்புகள், பீன்ஸ், லெகூம்ஸ்ககளை பெண் குழந்தைகளுக்கு அதிகம் கொடுக்கணும். சிறுதானியங்கள், கம்பு, ராகி, கோதுமை கைக்குத்தல் அரிசி இப்படி முழுயைமான உணவுகளை அதிகமா உணவுல சேர்த்துக்கணும். இ்ப்படி உணவு முறையில மாற்றத்தைக் கொண்டு வந்தா நிச்சயம் பெண் குழந்தைகளை மிகப் பெரிய சிக்கல்ல இருந்து காப்பாற்ற முடியும். குழந்தைகளை, குழந்தைகளா இருக்க விடுறது தான் இந்த சமூகத்துக்கு நல்லது.

பெண் குழந்தைகள் எட்டு வயதிலும், பத்து வயதிலும் பூப்படைவதை அவர்களின் உடல் சார்ந்த பிரச்சனையாக மட்டும்  பார்க்கக் கூடாது. பெண் குழந்தைகளின் மேல் நடத்தப்படும் பாலியல் வன்முறைகள் அதிகரித்து வரும் சமூகச் சூழலில், இதை ஒரு சமூகப் பிரச்சனையாகப் பார்க்க வேண்டும். பெண் குழந்தைகளின் உடல் நலத்தையும், மன நலத்தையும் காக்க வேண்டியது ஒவ்வொரு குடிமைச் சமூகத்தின் பொறுப்பு.

Beyond overweight: nutrition as an important lifestyle factor influencing timing of puberty
https://academic.oup.com/nutritionreviews/article/70/3/133/1903732?login=false

Menarche, menopause, and breast cancer risk: individual participant meta-analysis, including 118 964 women with breast cancer from 117 epidemiological studies
https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3488186/

Is There a Link between a High-Fat Diet during Puberty and Breast Cancer Risk?
https://journals.sagepub.com/doi/full/10.2217/WHE.10.83

கட்டுரையாளர்; நாகப்பன் சூரியநாராயணன்

ஸ்டேன்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில், நியூட்ரிஷியன் அறிவியலில் சான்றிதழ் பெற்றவர்.

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time