கால்களில் வீக்கம்… அலட்சியம் வேண்டாம்!

எம்.மரியபெல்சின்

கால் வீக்கம் என்பது ஏதாவது ஒரு நோயின் அறிகுறியாகும்! ஆகவே, அந்த வீக்கத்திற்கான மூலத்தை கண்டறிந்தால் மட்டுமே சரி செய்யலாம்! இதற்கு மேம்போக்கான சிகிச்சை பலனளிக்காது! எது எதனால் வீக்கம் வரும். எதைத் தவிர்த்து, எதை உட்கொண்டால் தீர்வு பெறாலாம் என ஒரு அலசல்!

முதலில் நோய்க்கான காரணத்தை கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியம். அடிபட்ட வீக்கம் அல்லது சுளுக்கால் வரக்கூடிய வீக்கத்தை சரிசெய்ய மிக எளிதான வழிகள் உள்ளன. ஆனாலும், வீக்கத்துக்கான மூல காரணத்தை கண்டறிய வேண்டும்.

இன்றைக்கு நாம் உண்ணும் உணவுகளாலும், அருந்தும் நீரினாலும் தவறான உணவுப்பழக்கம் மற்றும் வாழ்க்கைமுறை மாற்றத்தாலும் புதிதுபுதிதாக பல்வேறு நோய்கள் அணிவகுக்கும் சூழலில் வீக்கம்தானே… அது சரியாகிவிடும் என்று அலட்சியப்படுத்தாமல் கவனமாக செயல்பட வேண்டியது அவசியம்/

நீண்ட தூர பஸ் பயணம் அல்லது ரெயில் பயணத்துக்குப் பிறகு கால்கள் வீங்குவது பலருக்கும் வரக்கூடிய ஒரு பிரச்சினை.

உடலில் இயல்பான ரத்த ஓட்டம் தடைபட்டால் கூட கால்கள் வீங்கும்!

உடலில் அடிபடுவதன் மூலம் ஏற்பட்ட காயத்தை அலட்சியமாக விட்டாலும் ஏற்படும்!

இதய இயக்கத்தில் ஏற்படும் கோளாறுகளின் அறிகுறியாகவும் இருக்கும்!

தவறான உணவுகளால் கல்லீரல் செயல் திறன் குறைவதாலும் ஏற்படும்!

சிறுநீரகங்களின்  செயலிழப்பு காரணமாக சிறுநீர் சரியாக வெளியாகாமல் போனாலும் ஏற்படும்!

மற்றும் நல்ல சத்துள்ள ஆகாரம் உட் கொள்ளாதால் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாட்டாலும் ஏற்படும்!

எடுத்தற்கெல்லாம் அதிக மாத்திரைகள் சாப்பிடுவர்களுக்கும் ஏற்படும்.

நீர் கோர்த்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களாலும்கூட உடலில்… கால்களில் வீக்கம் ஏற்படலாம்.

இது தவிர எதிர்பாராமல் கால்களில் ஏற்படும் வீக்கத்திற்கு, ‘டீப் வெயின் திராம்போசிஸ் – டிவிடி’ என்று பெயர். பலருக்கும் தற்போது இது வந்து கொண்டுள்ளது. பெரும்பாலும் கால்களில் ஏற்படும் வீக்கம் கவனிக்கத்தக்க ஒன்று. அது பெரும்பாலும் மேலே சொன்ன அல்லது வேறு சில நோய்களின் அறிகுறியாகவோ அல்லது சாதாரண அறிகுறியாகவோகூட இருக்கலாம்.

ரத்தசோகை இருந்தாலோ அல்லது அடிபட்ட காயம் மற்றும் புண் மூலம் பாக்டீரியாக்கள் நுழைந்து வீக்கம் உண்டாகலாம். கணுக்காலில் அடிபடுவதாலும் காலில் வீக்கம் உண்டாகலாம். பிரசவத்தின் போது கூட பல பெண்களுக்கு வீக்கம் ஏற்படலாம். வீக்கம்… எத்தகையதாக இருந்தாலும் அதைக் கண்டறிந்து சரிசெய்ய வேண்டியது அவசியம். வீக்கம்தானே.., அது தானாக சரியாகிவிடும் என்று சிலர் எண்ணெய் தடவுவது, ஒத்தடம் கொடுப்பது, வலி நீக்கும் ஆயின்மென்ட்டுகளைத் தடவுவது என செயல்படுவார்கள். அப்படியில்லாமல் மூல காரணமறிந்து வீக்கத்தை சரிசெய்ய வேண்டியது அவசியம்.

# உடலில் நச்சுப் பொருட்கள் தேங்குவது,

# போதிய அளவு நீர் அருந்தாதது,

# உணவில் அதிக அளவு உப்பு சேர்ப்பது,

# அளவுக்கதிகமாக மது அருந்துவது

ஆகியவற்றால் கல்லீரல் செயலிழக்கும். அது கால்களில் வீக்கம் உண்டாக காரணமாகிவிடும்! ஆகவே மேற்படியானவற்றை தவிர்த்துப் பாருங்கள் கணிசமான தீர்வு கிடைக்கும்!

எனவே, மூலகாரணத்தை கண்டறிய வேண்டியது அவசியம். இன்றைக்கு பெரும்பாலும் நீண்டநேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்வது அதிகரித்துவிட்டது. எனவே, அத்தகையோருக்கு கால்களில் வீக்கம் வர வாய்ப்பு உள்ளது. சர்க்கரை நோயாளிகளுக்கு சரியான ரத்த ஓட்டம் கிடைக்காமல் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டு கால் வீக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வாய்வு, வாதக்கோளாறுகளால் கூட கை கால் மூட்டுகளில் வீக்கம் ஏற்படும்.

தவறான உணவுப் பழக்கம், வீரியமிக்க மருந்து மாத்திரைகளை உட்கொள்வது மற்றும் பல்வேறு காரணங்களால் இன்றைக்கு கிட்னி ஃபெயிலியர் எனப்படும் சிறுநீரக செயலிழப்பு அதிகரித்து வருகிறது. கிரியாட்டின் அளவை பரிசோதித்து பார்ப்பதன் மூலம் சிறுநீரகம் எந்தளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை அறியலாம். இத்தகைய நிலையில் கால்கள் வீங்கி வலியை ஏற்படுத்தும். இதற்கென பல்வேறு சிகிச்சைகள் உள்ளன. நாம் இயற்கை மருத்துவத்தை பார்ப்போம்.

மூக்கிரட்டை கீரையுடன் ஓமம், சீரகம், பெருஞ்சீரகம் சேர்த்து நீர்விட்டு காய்ச்சி குடிப்பதன் மூலம் கிரியாட்டின் அளவைக் குறைத்து நல்ல பலனை அடையலாம். சிறு நெருஞ்சில் முழு தாவரத்துடன் கொத்தமல்லி விதை (தனியா) சேர்த்து கொதிக்கவைத்து குடிப்பதும் பலன் தரும். கால் வீக்கம் படிப்படியாக குறையும்.

தேவையில்லாமல் வீக்கம் ஏற்படுவதில்லை என்பதை புரிந்துகொண்டு செயல்பட வேண்டும்.

உடலில் தேவையற்ற அல்லது நச்சு நீர் சேர்ந்திருந்தால் பார்லி அரிசியை வேக வைத்த நீரை வடிகட்டி குடித்து வந்தால் சிறிது சிறிதாக வீக்கம் வடியும். வெறுமனே பார்லியை மட்டும் வேகவைத்து உப்பு அல்லது இனிப்பு சேர்த்து அருந்தலாம். பார்லியுடன் இஞ்சி, பூண்டு, கிராம்பு, லவங்கப்பட்டை சேர்த்துக் கொதிக்கவைத்து வடிகட்டி சூடு ஆறியதும் எலுமிச்சைச்சாறு, தேன் கலந்து அருந்தினால் வீக்கம் குறைவதுடன் உடல் எடை குறைக்க நினைப்போர் இதை தொடர்ந்து அருந்தி பலன் பெறலாம்.

கர்ப்பிணிகளுக்கு சிறுநீர் வெளியேறுவதில் சிரமம் ஏற்பட்டாலோ, ரத்த அழுத்தத்தாலோ கால்களில் வீக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இத்தகைய சூழலில் கர்ப்பிணிகள் பார்லி வேக வைத்த நீரை அருந்தி பலன் பெறலாம்.

அத்திமரத்தின் பாலினை எடுத்து வீக்கங்களின்மீது தடவினால் வீக்கம் வடியும். இதேபோல் பப்பாளி இலையின் தளிர் இலைகளை எடுத்து அரைத்து வீக்கங்களின்மீது மேல்பூச்சாக பூசி வந்தாலும் வீக்கம் வடியும். சந்தனக்கட்டையை ரோஜா, நீர் சேர்த்து அரைத்து வீக்கங்களின்மீது பற்று போடலாம். கோதுமை உமியை அரைத்து வீக்கங்களின்மீது பற்று போடலாம். நொச்சி இலையை அரைத்துப் பூசுவது மற்றும் நொச்சி இலை அல்லது எருக்கன் இலைகளை நீர் விட்டு கொதிக்க வைத்து அதில் ஒரு துணியை நனைத்து வீக்கங்களின்மீது ஒத்தடம் கொடுத்தாலும் நிவாரணம் கிடைக்கும்.

பூவரசு இலைகளை அரிசி மாவுடன் சேர்த்து அரைத்து சூடாக்கி வீக்கத்தின்மீது பூசினாலும் வீக்கம் கரையும். அமுக்கரா சூரணத்தை லேசாக சூடாக்கி வீக்கத்தின்மீது பூசலாம். சோற்றுக்கற்றாழையின் உள்ளேயிருக்கும் சதைப்பகுதியை எடுத்து சூடாக்கி கட்டினாலும் வீக்கம் வடியும். நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும் மாசிக்காயை உரசியோ அல்லது உடைத்துப்பொடியாக்கியோ வீக்கத்தின்மீது தடவினாலும் நல்ல பலன் கிடைக்கும்.  மாசிக்காய்… கட்டிகளைக்கூட கரைக்கக்கூடியது என்பதால் வீக்கம் மிக எளிதாக வற்றும். கல் உப்பை ஒரு துணியில் கட்டி வெதுவெதுப்பான நீரில் நனைத்து ஒத்தடம் கொடுப்பது அல்லது கல் உப்பை வறுத்து துணியில் கட்டி ஒத்தடம் கொடுத்தாலும் பலன் கிடைக்கும்.

அடிபட்ட வீக்கமாக இருந்தால் வேப்பெண்ணெயில் இஞ்சி, வெள்ளைப்பூண்டு சேர்த்து கொதிக்க வைத்து பொறுக்கும் சூட்டில் தடவி நீவி விட்டால் நல்ல பலன் கிடைக்கும். இதேபோல் நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும் கரியபவளத்தை (ரத்த போளம் அல்லது மூசாம்பரம்) வாங்கி ஒரு கரண்டியில் போட்டு நீர் விட்டு சூடாக்கி வீக்கத்தின்மீது தடவினால் வீக்கம் வற்றும். அடிபட்ட வீக்கம் மற்றும் சுளுக்கின்மீது கரியபவளம் பற்று போடுவது கைமேல் பலன் தரும். கல் உப்புடன் புளி சேர்த்துப் பிசைந்து கொதிக்க வைத்து அடிபட்ட வீக்கத்தின் மீது தடவலாம். பிரண்டையுடன் உப்பு, புளி சேர்த்து அரைத்து கொதிக்க வைத்து பூசினாலும் அடிபட்ட வீக்கம், சுளுக்கு சரியாகும்.

புங்கன் இலையை ஆமணக்கு எண்ணெய் சேர்த்து வதக்கி வீக்கத்தின்மீது கட்டினாலும் வீக்கம் வடியும். வலியுடன் கூடிய வீக்கம் இருந்தால் நொச்சி, நுணா (மஞ்சணத்தி), வேப்பிலை சேர்த்து நீர் விட்டு கொதிக்கவைத்து பொறுக்கும் சூட்டில் ஊற்றுவது அல்லது குளிப்பதும் நல்ல பலனைத் தரும். எருக்கிலையை நீர் விட்டு கொதிக்கவைத்து சூடு ஆறியதும் பொறுக்கும் சூட்டில் சில நிமிடங்கள் காலை வைத்து எடுத்தாலும் வீக்கம் வடியும்.

இவை எல்லாவற்றையும் செய்யும் அதேநேரத்தில் சிறுநீரகம் சார்ந்த பிரச்சினை அல்லது கல்லீரல் சார்ந்த பிரச்சினை அல்லது சர்க்கரை நோய் இருந்தால் அது அதற்கான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டியது அவசியம். ஏற்கெனவே முன்பே சொன்னதுபோல நோயின் மூல காரணத்தை அறிந்து அதற்கான சிகிச்சையை எடுக்க வேண்டியது அவசியம்!

கட்டுரையாளர்; எம்.மரியபெல்சின்

மூத்த பத்திரிக்கையாளர் மற்றும் மூலிகை ஆராய்ச்சியாளர்.

வீடுகளைச் சுற்றி வளரக்கூடிய மிகச் சாதாரண மூலிகைகள் மற்றும் அஞ்சரை பெட்டியில் உள்ள மிளகு, சீரகம் போன்றவற்றைக் கொண்டு தலைவலி முதல் கொரோனா காய்ச்சல் வரை சரி செய்ய முடியும் என்பதை அனுபவப்பூர்வமாகச் சொல்பவர்.

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time