நீதி கேட்கும் சாமானியனின் கதை! – ‘நா தான் கேஸ் கொடு’ 

- தயாளன்

அதிக செலவில்லாமல் எளிமையாக படம் எடுக்கிறார்கள்! சாமானிய மனிதன் சந்திக்கும் பிரச்சினைகளை சமரசமின்றி அலசுகிறார்கள்! மென்மையான காதலை தென்றலாய் வீச விடுகிறார்கள்! கதாபாத்திரங்களை கச்சிதமாக வடிவமைக்கிறார்கள்! மலையாள சினிமாக்கள் மலைக்க வைக்கின்றன!

மலையாளத்தில் ஹோம், ஜோ அண்ட் ஜோ, படங்களைத் தொடர்ந்து வெளியாகி இருக்கும் எளிய சினிமா “நா தான் கேஸ் கொடு”.  குஞ்சாக்கா போபன் இணைந்து தயாரித்து கதை நாயகனாக நடித்திருக்கும் இந்தப் படத்தை ரத்தீஷ் எழுதி இயக்கி இருக்கிறார். ரதீஷ் ஏற்கனவே அண்ட்ராய்ட் குஞ்சப்பன் என்ற சினிமாவின் மூலம் கேரள திரையுலகத்திற்கு அறிமுகமானவர். இந்தப் படத்தையும் மிகச் சிறப்பாக எழுதி இருக்கிறார்.

மிக எளிமையான சிறிய கதை!  ஆனால், எடுக்கப்பட்டிருக்கும் விதத்தில் முன் பின்னாக நகரும் திரைக்கதையில் பார்வையாளர்களை கட்டிப் போடுகிறார் இயக்குனர்.  திருடனாக இருந்து திருந்தி வாழும் மிக சாமானியமான கதாபாத்திரத்தில் குஞ்சாக்கா போபனும், நாயகியாக தமிழ் பேசும் பாத்திரத்தில் காயத்ரியும்  அசத்தலாக பொருந்துகின்றனர்.

முன்பு திருடனாக இருந்த காரணத்தினால் பொய்யான திருட்டு வழக்கில் கைது செய்யப்படுகிறார் ராஜீவன். ஆனால், நீதிமன்றத்த்தில் ஆதாரங்களைத் திரட்டி நடந்த சம்பவத்தை விளக்கி வழக்கில் இருந்து வெளிவரப் போராடுகிறார் ராஜீவன்.  நீதிமன்றம் கடைசியில் உண்மையைக் கண்டறிந்ததா..? என்பதே திரைக்கதை.

எதிர்பாராத நிகழ்வினால் ஒரு எம் எல் ஏ வீட்டு மதில் சுவரை தாண்டிக் குதிக்கிறார் ராஜீவன். அப்போது, இரண்டு நாய்கள் அவரை கடித்து குதறி விடுகின்றன. பொதுமக்கள் திருடனை பிடித்து போலீசில் ஒப்படைக்கிறார்கள். படத்தின் மிக முக்கியமான சம்பவமான இதிலிருந்து கதை வேகம் எடுக்கிறது.


படத்தின் நாயகனாக நடித்திருக்கும் குஞ்சாக்கா போபன், காயம்பட்ட தனது கால்களை வைத்துக் கொண்டு, வழக்கை சொந்தமாக நடத்தி போராடும் பாத்திரத்தில் அசத்துகிறார்.  சட்ட நுணுக்கங்களை தெளிவாகப் பேசுவதில் ஆரம்பித்து, நீதிபதியின் நம்பிக்கையைப் பெறும் வரை, ஆர்ப்பாட்டமில்லாத இயல்பான நடிப்பை வெளிப்படுத்துகிறார்.  குறுக்கு விசாரணை செய்யும் வழக்கறிஞர்களை திணறடிக்கும் காட்சியில் போபன் அட்டகாசம் செய்கிறார். இப்படி ஒரு கதாபாத்திரத்தை நடிக்க தேர்ந்தெடுத்ததிலேயே போபன் வெற்றி பெறுகிறார்.

அவருக்கு இணையான நாயகி பாத்திரத்தில் காயத்ரி, திருடனை காதலிக்கும் அதே நேரம் அவன் மீதிருந்த சந்தேகம் மெல்ல மெல்ல மாறும் காட்சிகளில் நுட்பமான உடல் மொழியை வெளிப்படுத்தி இருக்கிறார்.  படத்தில் வரும் எல்லா பாத்திரங்களுக்குமான தேர்வில் கவனத்துடன் செயல்பட்டிருக்கிறார் இயக்குனர். வழக்கறிஞர்கள், முதல் கேஸை கண்டுபிடிக்கும் போலீஸ், தெய்யம் ஆட்டம் ஆடும் போலீஸ், பொதுப்பணித்துறை பொறியாளர், அமைச்சர், எம் எல் ஏ எல்லாரும் கச்சிதமாக பொருந்துகிறார்கள்.

குறிப்பாக, நீதிபதியாக நடித்திருக்கும், பிபி குன்னிகிருஷ்ணன் நடிப்பில் தெறிக்க விடுகிறார்.  நீதிமன்ற கட்டிடத்தில் சுற்றித் திரியும் புறாக்களை கவனித்துக் கொண்டே, வழக்கையும் கவனிக்கும் காட்சிகளிலும், கண்ணாடிக்கு வெளியே எட்டிப் பார்க்கும் குறும்பான பார்வைகளிலும் அசத்துகிறார்.  “ஏய் ராஜீவா?” என்று அவர் அழைக்கும் காட்சிகளில்,  வெளிப்படுத்தும் தொனியும் “கிராஸ்” என்று சொல்லும் போதும் அபூர்வமான நடிப்பை வெளிக்கொண்டு வந்திருக்கிறார் குன்னி கிருஷ்ணன். மிகச் சிறந்த துணை நடிகருக்கான விருதை அவர் பெறக்கூடும்.


திரைக்கதை எழுதி இருக்கும் ரத்தீஷ் ஒரு சம்பவத்தின் பல்வேறு கோணங்களை முன் பின் நகர்த்தி, மிக சுவாரஸ்யமான சினிமாவாக மாற்றி இருக்கிறார். வெறும் கோர்ட் ட்ராமாவாக மட்டுமே போயிருக்கக் கூடிய திரைக்கதையை காட்சிகளை பிணைப்பதின் மூலம் உயிரோட்டமான விறுவிறுப்பான கதையாக மாற்றி இருக்கிறார். படம் முழுக்க வெளிப்படும் நகைச்சுவையும், அரசியல் நையாண்டியும், பட்டுத் தெறிக்கும் பகடியான வசனங்களும் திரைக்கதைக்கு வலு சேர்க்கின்றன.

படத்தின் இசையில் அவ்வப்போது ஒலிக்கும் அதீதமான இசைக் குறிப்பு நமது ஆழ் மனதில் கதையின் இன்னொரு பரிமாணத்தை தருகிறது.  படத்தொகுப்பில் கச்சிதமாக வெட்டப்பட்டும் இடங்களில் கதையின் சுவாரஸ்யம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பல்வேறு கோணங்களில் நீதிமன்ற வளாகத்தின் முன் இருக்கும் காந்தி சிலை காட்டப்படுவதன் மூலம் சில செய்திகள் கடத்தப்படுகின்றன.

படம் முழுக்க வரும் பெட்ரோல் விலையின் ஏற்றத்தை காலத்தின் குறீயீடாக பயன்படுத்தி இருக்கிறார் ரத்தீஷ். இது அவரின் இயக்கத்தின் முத்திரை. இது போன்ற எளிமையான கதைகளும், சினிமா உருவாக்கமும் இந்திய படங்களில் மலையாள படங்களுக்கு தனித்த மரியாதையை தருகின்றன. நாயக பிம்பங்களுக்கு கதை எடுக்காமல், கதையை நம்பி சினிமா எடுக்கும் மலையாள சினிமாவில் இருந்து தமிழர்கள் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது.

திரை விமர்சனம்; தயாளன்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time