ஆ.ராசா தனிமைபடுத்தப் படுகிறாரா..?

-சாவித்திரி கண்ணன்

சமீபகாலமாக பெரியாரிஸ்டுகளும், திராவிடக் கொள்கையாளர்களும் திமுகவில் தனிமைப்பட்டு வருகின்றனர். ஆட்சித் தலைமை பெரியாரிடம் இருந்து  வெகு தூரம் விலகிச் செல்லும் சூழலில் – திமுக தலைமை தார்மீகத் தகுதியை இழந்து நிற்கும் நிலையில் – ஆ.ராசா பேசியுள்ளதன் பின்னணி தான் என்ன..?

நாத்திகம் என்பதும், பிராமண ஆதிக்க எதிர்ப்பு என்பதும், வெறும் பொழுது போக்கிற்காகப் பேசப்படும் திண்ணை பேச்சு தானா? ஆட்சியாளரான பிறகும் பொறுப்பாக செயல்பட வேண்டிய விவகாரத்தில் எல்லாம் கோட்டை விட்டுவிட்டு, பழைய பல்லவியான ”மனு தர்மத்தில் எட்டாவது அத்தியாயத்தில், 415 வது சுலோகத்தில் என்ன சொல்லப்பட்டு உள்ளது தெரியுமா…?” என்று பேசுவதின் நோக்கம் என்ன? பயன் தான் என்ன..?

அ.ராசாவின் பேச்சு பெரியாரிசத்தை பேசுகிறது. ஆனால், அவர் பேசுகின்ற தளமும், சூழலும் தான் பொருத்தமில்லாமல் உள்ளது. இன்னும் கூட பெரியார் சொன்னதையே திருப்பி சொல்லி அரசியல் செய்ய வேண்டிய நிலையில் தமிழகம் இருப்பதற்கான பொறுப்பை யார் ஏற்பது? தொடர்ந்தும், தற்போதும் ஆட்சி செய்வதற்கான வாய்ப்பு கிடைத்த நிலையில் இந்த ஆட்சிகள் யாருக்கு பயன்படுகிறது?

சமீபகாலமாக திமுக தலைமை பெரியார் கொள்கைகளில் இருந்து விலகி வெகுதூரம் சென்று கொண்டுள்ளது. அதுவும், ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தது தொடங்கி சந்திக்கும் ஒவ்வொரு பிரச்சினையிலும் பெரியார் கொள்கைக்கு எதிரானவராக இருக்கிறார்..என்ற யதார்த்ததை கட்சிக்குள் பேச முடியாமல் குமுறிக் கொண்டிருக்கும் பெரியார் விசுவாசிகளின் குரலாக ஆ.ராசா வெளிப்பட்டு உள்ளாரா..? என்றும் தோன்றுகிறது. அதனால் தான் அவர், ”தி.க, திமுக, முரசொலி, விடுதலை ஆகியவை இதை பற்றிப் பேச நேரம் வந்துவிட்டது’’ என்கிறார்!

எதிர்பார்த்தது போலவே பாஜக முக்கியஸ்தர்களும், எடப்பாடி பழனிச்சாமியும், ”ஆ.ராசாவின் பேச்சில் முதலமைச்சர் குடும்பத்திற்கு உடன்பாடு உண்டா?” எனக் கேள்வி எழுப்பி உள்ளனர்!

”இந்துவாக இருக்கிற வரை நீ சூத்திரன். சூத்திரனாக இருக்கிற வரை நீ விபச்சாரியின் மகன். இந்துவாக இருக்கிற வரை நீ பஞ்சமன். இந்துவாக இருக்கிற வரை நீ தீண்டத்தகாதவன். எத்தனை பேர் விபச்சாரி மகனாக இருக்க விரும்புகிறீர்கள். எத்தனை பேர் தீண்டத்தகாதவனாக இருக்க விரும்புகிறீர்கள் என்ற கேள்வியை உரக்கச் சொன்னால்தான் அது சனாதனத்தை முறியடிப்பதாகும். இதை விடுதலையும், முரசொலியும், திராவிடர் முன்னேற்றக் கழகமும், திராவிடர் கழகமும் எழுப்ப வேண்டிய காலம் வந்துவிட்டது” என்று ஆ.ராசா கூறியுள்ளது பெரிய கவனம் பெற்று உள்ளது. இதில் கடைசி பாரா தான் மிகவும் கவனிக்க வேண்டியது!

பாஜக தனது மதவாத அரசியலுக்கு நெய் வார்க்கும் பேச்சாக இந்த பேச்சை மாற்றிக் கொள்ளும் வல்லமை கொண்டது தானே! அதற்கு துணை போகும் பேச்சு காலப் பொருத்தம் தானா? பாஜக தமிழகத்தில் குற்ற வழக்கில் தொடர்புள்ளவர்களை கட்சியில் இணைத்துக் கொண்டு ரவுடி கட்சியாக வலம் வரும் தைரியம் பெற்றது எப்படி?  சமீப காலமாக பெரியார் சிலைகள் தொடர்ந்து சேதப்படுத்தமடும் அளவுக்கு இந்துத்துவ சக்திகளின் கைகள் ஓங்கியது எப்படி? கோயம்பத்தூர் அருகே தந்தை பெரியார் உணவகம் எனப் பெயர் வைத்த ஒரு உணவகத்திற்குள் நுழைந்து மிரட்டி, ”ஒழுங்காக பெயரை மாற்றி வைத்துக் கொள்” என இந்துத்துவாதிகள் பேசுமளவுக்கு தற்போதைய திமுக ஆட்சியில் அவர்கள் பலம் பெற்றுள்ளது எப்படி? அதிமுக ஆட்சியில் கூட இந்த தைரியம் இந்துத்துவர்களுக்கு வரவில்லையே?

பாஜக அண்ணாமலை நாளும், பொழுதும் திமுகவை வசைமாறிப் பொழியும் போது, திமுக தலைமையே கள்ள மவுனம் காட்டுகிறது. மம்தாவைப் போலவே, சந்தரசேகர் ராவை போலவோ நமது முதல்வருக்கு ஏன் அறச் சீற்றம் வருவதில்லை..? கட்சியின் மானஸ்தர்களையும் பேச அனுமதி மறுத்து வருகிறது தலைமை ! உண்மையில் திமுக அடிமட்டத் தொண்டர்களும், கொள்கையாளர்களும், அனுதாபிகளும் தற்போதைய தலைமையின் தடுமாற்றத்தை மிகுந்த தர்ம சங்கடத்துடன் எதிர் கொண்டுள்ளனர்.  சமீப காலமாகவே திமுகவில் பெரியாரிஸ்டுகள் தனிமைபடுத்தப்பட்டு வருகின்றனர். சுப்புலட்சுமி ஜெகதீசன் விலகலே இதற்கான உதாரணம்!  ஆ.ராசாவுக்கும் இந்த நிலை உருவாகலாம்!இது குறித்து ஒரு வெளிப்படையான உள்கட்சி விவாதம் தேவைப்படுகிறது.

தருமபுர ஆதினம் 2020 ஆம் ஆண்டு தான் முதலில் பல்லக்கு யாத்திரை நடத்த இருப்பதாக அறிவித்தார். அன்றைக்கு அதை உள்ளூர் தி.கவும், விசிகவும் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தன் பல்லக்கு வைபவத்தை வாபஸ் வாங்கிக் கொண்டார்!

ஆனால், அதே தருமபுர ஆதீனம் 2022 ஆம் ஆண்டு பல்லக்கு பவனி அறிவிக்கிறார். வழக்கம் போல உள்ளூர் தி.க,விசிக எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ‘சட்டம், ஒழுங்கு பிரச்சினை மற்றும் மனிதனை, மனிதன் சுமக்கும் இழி நிலைக்கு முற்றுபுள்ளி வைக்க வேண்டும்’ என்ற உயரிய நோக்கத்தில் உள்ளூர் வட்டாட்சியர் அனுமதி மறுக்கிறார்! அந்த அனுமதி மறுப்பை பாஜகவும், இந்துத்துவ அமைப்புகளும் அரசியலாக்குகின்றன! உடனே, முதலமைச்சர் ஸ்டாலின் தலையிட்டு அந்த அறிவிப்பை பின் வாங்க வைத்தார்.

”கோவில் குடமுழுக்குகளை தமிழ் மற்றும் சமஸ்கிருதத்திற்கு சம முக்கியத்துவம் தந்து நடத்துங்கள்” சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிடுகிறது! ஆனால் இந்த ஆணையை கிஞ்சித்தும் மதிக்காமல் தமிழக அற நிலையத்துறை அதிகாரிகள் சமஸ்கிருதத்தில் மட்டுமே நடத்துகின்றனர். ஒப்புக்கு தமிழ் ஓதுவார் ஒருவரை ஒரு மூலையில் தேவார, திருமந்திரங்களை ஓத வைக்கின்றனர்! தமிழ் மந்திரங்கள் யாகசாலையில் ஒலிக்காது, கோபுரக் கலசத்தில் தமிழ் ஓதுவார்கள் ஏறி செயல்பட முடியாது! இந்த தீண்டாமையை திமுக அரசு தான் அமல்படுத்திக் கொண்டுள்ளது. இது குறித்து திமுகவுக்குள் இருக்கும் பெரியாரிஸ்டுகள் நிலைபாடு என்ன என்பது இதுவரை தெரியாத புதிராகவே உள்ளது.

சென்னை மேற்கு மாம்பலத்தில் அயோத்தியா மண்டபத்தில் ஏகப்பட்ட தில்லுமுல்லுகள் நடக்கின்றன! வெறும் ஆன்மீகப் பிரச்சாரத்திற்காக என சொல்லி ஆரம்பிக்கப்பட்ட அந்த அமைப்பில் காலப் போக்கில் சிலை வழிபாடு, அதற்கான பண வசூல், பொருளாதாரக் குற்றங்கள் என நடக்கிறது. உள்ளே இருந்த நியாய உணர்வு படைத்த பிராமணர்களே மனசாட்சியுடன் அதை எதிர்த்து அரசிடம் புகார் அளிக்கின்றனர். ஜெயலலிதா அரசு அயோத்தியா மண்டபத்தை அற நிலையத்துறையோடு இணைக்கிறது! இதை எதிர்த்து அந்த மோசடி கோஷ்டி கோர்ட்டுக்கு போகிறார்கள்!

இந்த நிலையில் ஒ.பி.எஸ் ஆட்சி, எடப்பாடி ஆட்சி எல்லாம் வருகிறது. ஜெயலலிதா எடுத்த நிலையில் இருந்து அவர்கள் பின்வாங்கவில்லை. ஸ்டாலின் ஆட்சி வருகிறது. சென்னை உயர் நீதிமன்றம் ஜெயலலிதா எடுத்த முடிவுக்கு ஆதரவாக தீர்ப்பளிக்கிறது. அயோத்தியா மண்டபத்தை தமிழக அறநிலையத்துறை எடுத்துக் கொள்ள ஆணையிடுகிறது. ஆதிக்க சக்திகள் மேல்முறையீடு செய்கிறார்கள். அயோத்திய மண்டபத்தை அறநிலையத்துறை எடுத்துக் கொண்டதற்கான நியாயத்தை மீண்டும் கோர்டில் எடுத்து வைத்து பேச தயங்கிறார் திமுக அரசின் வழக்கறிஞர். ஆகவே, மீண்டும் அயோத்தியா மண்டபம் ஆதிக்க சக்திகளின் கைகளுக்கு போகிறது.

இதே தயக்கம் தான் சிதம்பரம் கோவிலில் தீட்சிதர்களின் அடாவடித்தனங்கள் அதிகரிக்க காரணமாயிற்று. திருச்சிற்றம்பல மேடையில் தேவாரம், திருவாசகம் பாடுவதை இன்னும் கேள்விக்கு உட்படுத்தும் தினவும், திமிறும் அவர்களுக்கு எங்கிருந்து கிடைக்கிறது…? போராடும் தமிழ் ஆர்வலர்களிடம்,  ”முதலமைச்சர் வீட்டம்மாவே எங்களுக்கு ஆதரவு! உங்களால் ஒன்னும் செய்ய முடியாது” என தீட்சிதர்கள் சொன்னது சிதம்பரம் முழுக்க எதிரொலித்தது!

முதல்வர் ஸ்டாலின் மனைவி கோவில், கோவிலாக சென்று சாமி தரிசனம் செய்வது வேறு! அங்கே யாகங்கள்,வேள்வி சடங்குகள் மற்றும் இன்னபிற விசயங்களுக்காக கோடிக்கணக்கில் பணம் அள்ளித் தருவது என்பது வேறு. அரசின் ஆதரவை ஆதிக்க சக்திகளுக்கு திருப்புவது என்பது வேறு.

முதலைச்சர் மருமகன் திருச்செந்தூரில் ‘சத்ரு சம்கார யாகம்’ நடத்தும் அளவுக்கு மூடத்தனத்தில் மூழ்கி கிடப்பது திமுகவில் உள்ள பெரியாரிஸ்டுகளை எப்படி துடிக்க வைத்திருக்கும்…?  இதை எல்லாம் ஸ்டாலின் ஒரு கணமேனும் நினைத்து பார்த்திருப்பாரா? அதிகாரத்தை அனுபவிக்கும் வாய்ப்பு, பணம் சேர்க்கும் வாய்ப்பு போன்றவை கட்சியின் பதவியில் உள்ள பலரை நீர்த்து போக வைத்தாலும் கொள்கையாளர்களை அமைதிபடுத்திவிட முடியாது!

ஆ.ராசா இப்படியாக பொதுவெளியில் அதிரடியாக பேசுவதை தவிர்த்து, ஆக்கபூர்வமாக தங்கள் கட்சிக்குள் விவாதிக்க வேண்டியவை பற்றி யோசிக்க வேண்டும். தற்போது கள்ளக்குறிச்சி தொடங்கி பல்வேறு விவகாரங்களில் ஆர்.எஸ்.எஸ்க்கு அடிபணிந்து ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் ஸ்டாலின் மனசாட்சியை உலுக்கி நேர்வழிப்படுத்த முயற்சிக்கலாம். இந்துத்துவ சக்திகள் விஸ்வரூபம் எடுத்து வரும் தற்போதைய சூழலில் அதை எதிர்கொள்வதற்கு எந்த முன் தயாரிப்பும், திட்டமிடலும், ஒருங்கிணைப்பும் இன்றி ஸ்டாலின் இருக்கிறார் என்பதை புறம் தள்ள முடியாது.

ஆளுநர் ஆர்.என். ரவி ஒரு இணை அரசாங்கத்தை நடத்திக் கொண்டிருப்பதை ரொம்ப காலம் மறைத்துவிட முடியாது. திமுக, அதன் அண்ணா காலத்து சுயத்தை மீட்டெடுக்க வேண்டிய காலகட்டம் இது! ஆ.ராசா போன்ற கொள்கையாளர்கள் உள்ளுக்குள் கட்சி உளுத்துப் போய்க் கொண்டிருக்கும் நேரத்தில் வெளியில் பேசுவதைத் தவிர்த்து, உள் கட்சியில் விவாதிக்க வேண்டும்.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time