ஜெயகாந்தனைக் குறித்த சிறப்பான நூல்கள் இரண்டு!

-சிதம்பரநாதன்

ஜெயகாந்தனை நேசிக்கும் தீவிர வாசகப் பரப்புக்காக இரு நூல்கள் வெளி வந்துள்ளன. ஜெயகாந்தனை குறித்து எவ்வளவு வாசித்தாலும், பேசினாலும் திகட்டுவதே இல்லை! இரண்டு நூல்களையும் படைத்தவர், ஜெயகாந்தனைக் குறித்து உள்ளும், புறமும் நன்கறிந்த எழில்முத்து. அறியப்படாத கூடுதல் தகவல்கள்!

நூலாசிரியர் எழில்முத்து மறைந்த புலவர் கோவேந்தனின் மகன்! கோவேந்தன் தமிழ் கூறும் நல்லுலகு அறிந்த நல்ல கவிஞர், கட்டுரையாளர், மொழிப் பெயர்ப்பாளரும் கூட. அது மட்டுமல்ல, நூலாசிரியரின் மாமனார் எழுத்தாளர் தேவபாரதியும் ஜெயகாந்தனின் நெருங்கிய மிக நெருங்கிய ஆரம்ப கால சகா தான்!

நூலாசிரியர் எழில்முத்து தன் வாழ்க்கையையே  ஜெயகாந்தனுக்கு அர்ப்பணித்து கொண்டு வாழ்ந்தவர் என்பது பல பேர்களுக்குத் தெரியாது. ஜெ.கே.யின் குடும்பத்தில் ஒருவராக தன்னை வரித்துக் கொண்டவர் எழில்முத்து என்றால், அது மிகையல்ல.

ஜெ.கேயுடன் சம்பந்தப்படுத்தி ஆசிய வளர்ச்சி வங்கியின் உயர் பொறுப்பில் இருந்த திரு.கே.எஸ் சுப்பிரமணியன் பேசப்படுவதுண்டு.அவர் ஜெ.கே.யின் படைப்புகள் பலவற்றை ஆங்கில மொழிக்கு மொழியாக்கம் செய்தவராவார். அதே போல பி.சா.குப்புசாமி அவர்களும் ஜெ.கேயின் சக்ருதியர்களில் ஒருவராகப் பேசப்பட்டவர்.

இவ்வாறு பலரைப் பட்டியலிட்டாலும் எழில் முத்துவைப் பொறுத்த வரை ஜெ.கேயின் வாழ்க்கையில் கரைந்து போனவர் என்றால் தான் சரியாக இருக்கும். அதற்கு சாட்சியாக நிற்பது தான் அவரது படைப்பான ‘எழுத்து நாயகன் ஜெயகாந்தன்’ என்ற நூல்.நான் அதை வாசித்தேன் என்பதை விட, அதிலேயே வசித்து வந்தேன் என்பது தான் சரி.

பாரதிக்கு பின் – பாரதிக்கு முன்-என்று தமிழ்ப் படைப்பிலக்கியத்தைப் பாகப்பிரிவினை செய்தால், ஜெ.கே தான் பாரதிக்குப் பின்னால் முதலாவதாக நிற்கிறார். எழுத்தாளர் புதுமைப்பித்தனை இதில் முதன்மைப்படுத்துபவர்களும் உண்டு.

பாரதி ஒரு யுகத்தையே கட்டி ஆண்டவர் என்றே கூறலாம். ஜெயகாந்தனும் தன் காலகட்டத்தில் தமிழ் இலக்கிய உலகில் தன்னிகரற்று கோலோச்சியவர் தான்! ஜெ.கேயின் படைப்புகளை தனித்தனியாக: சிறுகதைகள், நாவல்கள், குறுநாவல்கள் கட்டுரைகள் வரலாற்று நூல்கள், மொழிபெயர்புகள், திரை உலகம் என வாசித்த அனுபவங்கள் நமக்கு நிறைய உண்டு. அதில் குறையொன்றும் இல்லை.

ஆனால், அவற்றை எல்லாம் காலவரிசைப்படுத்தி நூலாக்குவதற்கு நுட்பமான செயல் ஒன்று வேண்டும். ரசனை தன் வயப்பட்டதாகவே இருக்கும். அந்தத் தன் மகரந்தச் சேர்க்கையை அயல் மகரந்தயாக்குவதற்கு ஜெ.கேயை கணுக்கணுவாக ருசித்து உறிஞ்சி அனுபவித்தாலன்றி அது சாத்தியப்படாது.

அப்படி கணுக்கணுவாக அல்ல அணு அணுவாக அனுபவித்தவர் தான் இந்நூலின் படைப்பாளி.

ஜெ.கேயை எப்படியெல்லாம் படம்பிடித்து சித்தரித்துள்ளார் என்பதை எழுத்து நாயகன் நூலில் தான் நாம் அனுபவிக்க முடியும்.

ஜெ.கே.குழந்தைப் பருவம் கோயில் குளத்தில் முழ்கிய சம்பவத்தையும், அவனைக் கண்டுபிடித்துக் காப்பாற்றிய சம்பவத்தில், முருகேசனான குழந்தை எப்படி ஜெ.கே.ஆனார் என்பதற்கான மணியோசையை ரத்தினச் சுருக்கமாக காட்டியுள்ளார்.

ஜெ.கே பள்ளிப்பருவமோ, பள்ளிப் படிப்பு வேண்டாம் என்பதைக் காட்டுகிற நகைமுரணாக உள்ளதையும் காணலாம்.

ஜெகே ஒரு ப்ரூப் ரீடராக, ஜனசக்தியை தினசரி விற்பவராக, சிறுகதை படைப்பாளியாக, இவர் வளர்முகம் காட்டி வாழ்க்கையின் மேடு பள்ளங்களை கடந்துவந்ததை எல்லாம் வழங்கியிருக்கும் பக்கங்களை வாசிக்க, வாசிக்க புத்தகத்தைவிட்டு வெளியேற முடியாமல் செய்து விடுகிறார்.

தி.மு.க.,தி.க, இவற்றின் பார்ப்பன எதிர்ப்பு, இந்தி எதிர்ப்பு, காங்கிரஸ் எதிர்ப்பு, என அரசியல் தளங்களில் கொந்தளித்த அலைகளை, ஜேகே எப்படி எதிர்கொண்டார் என்பதை இந்த நூல் விவரிக்கிறபோது தமிழ் நாட்டின் பாரதி வரலாற்றையும் வாசித்தவர் காக்கும் விதமாக அப் பக்கங்கள் நமக்கு உதவுகின்றன.

கம்யூனிஸ்ட் கட்சி மீதுள்ள தடை நீக்கப்பட்ட செய்தி கேட்டு செருப்புக் கடையில் வேலை செய்து வந்த ஜெ.கே.மகிழ்ச்சியடைந்தார் என்கிற எழில் முத்துவின் பதிவில் ஜெகே பார்த்த வேலை என்ன தெரிந்துகொள்கிறபோது, ஜெகேவுக்காக செய்யப்பட்டு வந்த சிம்மாசனத்தைப் பற்றி நாம் நினைத்திருக்கவே முடியாது.

சமரன் பத்திரிகை, சரஸ்வதி பத்திரிகையில் எழுதிய ஜெ.கே தீவிர தி.மு.க எதிர்ப்பாளராக இருந்த விவரங்களை அறிகிறோம். அந்த எதிர்ப்பில் தான் எத்தனை தர்மாவேச உணர்வுகள் பொங்கி வழிகின்றன!

எழுத்து நாயகன் நூல். ஜெ.கேயின் எழுத்தை பிம்பப் படுத்துகிற பணியில் தமிழ்நாட்டு மக்களின் சமூக வரலாற்றையும் இணைத்து காட்டி  நமக்குத் தந்துள்ளார்.

ஜெகேயின் ‘உன்னைப்போல் ஒருவன்’ திரைப்படத்தைப் பார்த்த காமராஜர் சொன்ன செய்தி, காமராசரை அத்திரைப்படம் ஒரு தேர்ந்த ரசனையாளனாக்கியதை தான் கண்டேன்.

இதனை பதிவு செய்துள்ள ஆசிரியருக்கு தங்கப் பதக்கமே தர வேண்டும்.

ஜெ.கே சொல்வார், ” எனது படைப்பு ஒவ்வொன்றும் காகிதப் புத்தகம் அல்ல. அது படைப்பாளனின் இதயம்” என்று!

அதையே நான் இரவல் வாங்கி உரக்கச் சொல்கிறேன். எழுத்து நாயகன் ஜெயகாந்தன் நூல் வாசகனின் கையில், காகிதங்களில் அச்சான புத்தகமாக அல்ல, எழில் முத்துவின் இதயத்தையே மலர்த்தியுள்ளது என்பேன்.

ஞானபீடம் ஜெயகாந்தன் என்ற நூல், அவர் ஞானபீடம் விருது பெற்ற போது வந்த பத்திகைச் செய்திகள், கட்டுரைகள், ஜெ.கே.யின் நேர்காணல்களையும் தொகுப்பாக வாசிக்க ஒரு வாய்ப்பாகிறது.

ஒற்றை மல்லிகையை முகர்ந்தால் அதன் வாசனையின் அளவுக்கு எல்லை உண்டு. கொத்துமல்லிகையை அள்ளி எடுத்து முகர்ந்தால் அள்ளியக் கைகளும் மணக்கும். பக்கத்திலும் அதன் மணம் பரவும். அதே போலத்தான் ஞானபீடம் ஜெயகாந்தன் மணக்கிறது. அதனை மாலையாக இணைத்து கட்டிய எழில் முத்து., ரெ. மருதசாமி  இருவரையும் தமிழ் இலக்கிய வாசக உலகம் மனமார பாரட்ட வேண்டும்.

நேர்காணல் ஒன்றில் ஒருவர் கேட்கிறார்:

” ஜெ.கே.உங்களுக்குத் தமிழ் தெரியுமா?

ஜெ.கே பதில்” எனக்குத் தமிழ் தெரியாது.

அதற்குப் பிறகு கேள்வி கேட்டவருக்குத் தகவலாக அவர் கூறுகிறார்;

”தமிழ் எனக்குத் தெரியாது தான். ஆனால் தமிழுக்கு என்னைத் தெரியும்.” இந்த அடக்கம் நிறைந்த பதிலுக்குள் ஆன்று அவிந்து அடங்கிய சான்றோரின் சத்தியம், சத்தமே இல்லாத இடிமுழக்கமாக உள்ளதை ரசிக்கலாம். ரசித்துக் கொண்டே இருக்கலாம்.

இந்த இரண்டு நூல்களுக்காகவும் எழில் முத்து கொண்டாடப்பட வேண்டியவராக உள்ளார்.

சமரசமற்ற வாழ்க்கையை மேற்கொண்டுள்ள எழில் முத்து, செம்மையை எண்ணி தமது வறுமைக்கு சமாதானம் சொல்லிக் கொள்கிற சக்ருதியராக வாழ்கிறார்.

ஜெ.கேயின் வாழ்க்கை வரலாற்றையும், சிகர சாதனைகளையும், மகுட வேளைப்பாடுகளுடன் மகோததனமாக படைத்துள்ள இந்த இரு நூல்களுக்கும் நிச்சயமாக தமிழ் வாசகர்களின் வரவேற்பு கிடைக்கும் என்பதில் எனக்கு எள்ளவும் சந்தேகம் இல்லை.

இந்த நூல்களுக்கு கிடைக்கும் வாசகர் ஆதரவும், அங்கீகாரமும் அச்சமற்ற ஜே.கேயின் ஆன்மாவை ஆராதனை செய்து வந்த மெய்யான பக்தனுக்கு சக்ருதியர்கள் செய்யும் நன்றியும், விசுவாசமும் ஆகும்.

கட்டுரையாளர்; சிதம்பரநாதன்

பத்திரிகையாளர்

நூல்; ஞான பீடம் ஜெயகாந்தன்

மயிலவன் பதிப்பகம்.

தொடர்பு எண் : 9840591349

விலை. ரூ.220

நூல்; எழுத்து நாயகன் ஜெயகாந்தன்

காலமும் கருத்தும்.

சத்யா.

தொடர்பு எண் : 9500045615

விலை: ரூ.350.

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time