அடிக்கடி வயிற்றைக் கலக்குதா? சரி செய்யலாம்!

-எம். மரிய பெல்சின்

மலச்சிக்கல்… பல்வேறு நோய்கள் வருவதற்கு காரணமாவதை போல, அடிக்கடி சிலருக்கு வயிற்றைக் கலக்கி மலம் கழிக்கும் பிரச்சினை உள்ளது. செரிமானக் கோளாறு மற்றும் குடல் இயக்கத்தில் ஏற்படும் பிரச்சினையாக இருக்கலாம். இதை இயற்கையான வழிமுறைகளில் எளிதில் சீராக்கலாம்!

அடிக்கடி மலம் போவது சில நீண்டகால மற்றும் தீவிர நோய்களின் வெளிப்பாடாகவும் இருக்கலாம் என்பதால், அதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். வாந்தியுடன் கூடிய பேதி, வெறும் நீராக வயிற்றுப்போக்கு ஏற்படுவது, ரத்தமும் சீழுமாக மலம் வெளியேறுவது போன்றவை நிகழ்ந்தால் அதுவிஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

கடந்த சில நாட்களாகவே அடிக்கடி மலம் போவதாகவும், என்னென்னவோ சிகிச்சை எடுத்தும் குணமாகவில்லை என்றும் சொல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனாவுக்குப் பிறகு… தடுப்பூசி செலுத்திய பிறகு அடிக்கடி மலம் கழிக்கும் பிரச்சினை வருகிறது என்கிறார்கள்.  ஆகவே, அடிக்கடி மலம் கழிப்பது என்பது குடல் பகுதியில் ஏதோ பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது என்று பொருள். பல்வேறு ஆராய்ச்சிகளும் கூட இதை உறுதிபடுத்தியுள்ளது. இந்தப் பிரச்சினை ஒவ்வொருவருக்கும் வேறுபடலாம் என்றாலும் அடிக்கடி மலம் கழித்தால் உடல் சோர்வு ஏற்பட்டு அன்றாட நடவடிக்கைகளில் பாதிப்பு ஏற்படும். எனவே இதில் மிக கவனமாக இருக்க வேண்டும்.

அடிக்கடி மலம் போகும் பிரச்சினை ஏற்படுவதற்கு சிலநேரங்களில் மலச்சிக்கலும் கூட காரணமாக இருக்கலாம். நாள் கணக்கில் மலம் வெளியேறாமல் குடல் பகுதியில் தேங்கியிருந்தால் அது ஒருநாள் வயிற்றுக் கழிச்சலை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. ஆகவே, மலச்சிக்கல் இருப்பவர்கள் முதலில் அதை சரிசெய்ய வேண்டும். மலம் அடிக்கடி வெளியேறுவதற்கான சிகிச்சை பற்றி பார்ப்பதற்குமுன் மலச்சிக்கலை சரி செய்வது பற்றி பார்ப்போம். சிகிச்சைக்குமுன் முதலில் ஒவ்வொரு நாளும் மூன்று வேளையும் என்னென்ன சாப்பிடுகிறோம் என்பதை பார்க்க வேண்டும். அடிக்கடி வறுத்த, பொரித்த மற்றும் வெந்தும் வேகாத உணவுகளை உட்கொண்டால் முதலில் அதை நிறுத்த வேண்டும். அதேபோல் உண்ணக்கூடிய உணவு நன்றாக செரிமானமாகிறதா என்பதை பார்க்க வேண்டும்.

நள்ளிரவைத் தாண்டி செயல்படக்கூடிய மிட்நைட் மசாலா உணவகங்களில் நடப்பன, ஊர்வன, பறப்பன என சகல ஜீவராசிகளையும் சாப்பிட்டால் அதை நிறுத்துவது நல்லது. இது போன்ற இன்னும் பல தவறான உணவுப் பழக்கங்கள் மலச்சிக்கலுக்கும், அடிக்கடி மலம் போவதற்கும் காரணமாக அமைகின்றன. மேலும், உணவு சுவையாக இருக்கிறது என்பதற்காக ஒத்துக் கொள்ளாத உணவாக இருந்தாலும் கூட அதைச் சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது. சிக்கன் பிரியாணி சாப்பிட்டு விட்டு செவன் அப், கோகோ கோலா, ஸ்பிரைட் குடித்தால் அது எத்தகைய எதிர் விளைவுகளை ஏற்படுத்தும் என்பது பலருக்கு தெரியாதது வருத்தமே.

ஆனால், அந்த குளிர்பானங்களை குடித்தால் தான் நிறைவாக இருக்கிறது, சாப்பிட்ட பிரியாணி செரிக்கிறது என்று தவறாக நினைத்துக்கொண்டு அதை பின்பற்றுகிறார்கள். ஆக, இது போன்ற தப்பும் தவறுமான உணவுப் பழக்கங்களை முதலில் நிறுத்த வேண்டும்.

பழ உணவைப் பழக்கப்படுத்துங்கள்

மலச்சிக்கல் இருப்பவர்கள் காலை ஒருவேளை உணவாக பழங்கள் சாப்பிடுவது நல்லது. பழங்கள் என்று சொன்னதும் பலர் வாழைப்பழமா? என்பார்கள். பப்பாளி, அன்னாசி, கொய்யா, மாதுளம், ஆப்பிள், ஆரஞ்சு மற்றும் திராட்சை உள்ளிட்ட பல பழங்களைச்  சாப்பிடலாம். மதிய உணவில் கீரை, காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். மாலையில் சுக்கு மல்லி காபி, இரவில் திரிபலா சூரணம் சாப்பிடுவது நல்லது. இரவு உணவாக இட்லி, இடியாப்பம் அல்லது சோறு சாப்பிடலாம். சப்பாத்தி, பூரி, தோசை, பரோட்டா மற்றும் இறைச்சி உணவுகளை இரவில் சாப்பிடாமல் தவிர்ப்பது மிகவும் நல்லது.

அதேபோல் இடையிடையே அடிக்கடி நீர் அருந்த வேண்டும். வழக்கமான காபி, டீ அருந்துவதைத் தவிர்த்து தேங்காய்ப்பால், மல்லித்தழையுடன் கூடிய தேங்காய், நாட்டுச்சர்க்கரை கலந்த சாறு, கொய்யா இலை தேநீர், ஆவாரம்பூ, செம்பருத்தி மற்றும் பல பூக்களில் தேநீர் செய்து அருந்துவது வயிற்றுக்கு நலம் தரும். இந்த வழிமுறையை தொடர்ந்து பின்பற்றினால் மலச்சிக்கலும் வராது, அடிக்கடி மலமும் போகாது.

இங்கே நாம் சொன்ன வழிமுறைகள் பிரச்சினைகள் வராமல் தடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாகும். ஆனால் பாதிப்பு வந்தபிறகு என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கே சொல்லியாக வேண்டும். அது தான் பலருக்கும் தேவையாக இருக்கிறது. அடிக்கடி மலம் போகும் பிரச்சினை ஏற்பட்டால் முதலில் நான் சொல்வது புதினா ஜூஸ். பகல் வேளையில் புதினா ஜூஸ், இரவில் புதினா தேநீர் அருந்தலாம். புதினா ஜூஸ் தயாரிக்க வேண்டுமென்றால், கைப்பிடி அளவு புதினா இலைகளுடன் சிறு துண்டு இஞ்சி சேர்த்து அரைத்து நீர் விட்டு வடிகட்ட வேண்டும். அதனுடன் அரை எலுமிச்சம்பழத்தைப் பிழிந்து சாறு எடுத்து சேர்த்து தேனும் தேவைப்பட்டால் சர்க்கரையும் சேர்த்துக்கொள்ளலாம். இந்த ஜூஸை ஒருவேளைக்கு அருந்தலாம். ஒருநாளைக்கு மூன்று அல்லது நான்குதடவை இதேபோல் ஜூஸ் செய்து அருந்தினால் வாந்தி, பேதி நிற்கும். புதினா தேநீர் என்றால் வெறும் வாணலியில் 10 புதினா இலைகளைப்போட்டு வதக்கி நீர் விட்டு கொதிக்கவைத்துக் குடிக்க வேண்டும்.

சமீபத்தில் அடிக்கடி மலம் போகும் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட ஒருவரை மாசிக்காய் சாப்பிடச் சொன்னேன். நாட்டு மருந்துக்கடையில் கிடைக்கும் மாசிக்காயை உடைத்து அதில் மிளகு அளவு எடுத்து வாயில் போட்டு மென்று சாப்பிடச் சொன்னேன். மாசிக்காயை வாயில் போட்டு சுவைத்து உமிழ்நீரை சுரக்கச் செய்து மெதுவாக விழுங்க வேண்டும். அப்படிச் செய்ததில் இரண்டே நாளில் அடிக்கடி மலம் போகும் பிரச்சினை சரியானது. இதற்குமுன் அவர் இந்தப் பிரச்சினைக்காக செலவு செய்தது பல ஆயிரம் மட்டுமல்ல, பல நாட்களும் ஆனது. தொடர்ந்து மலம் போனதால் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்த நிலையில் மாசிக்காய் அவரை வாழ வைத்திருக்கிறது. பெரிய பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

மகத்துவம் மிக்க மாசிக்காய்!

அடிக்கடி மலம் கழிக்கும் பிரச்சினையை சரி செய்ய மேலும் சில வழிமுறைகளைப் பார்ப்போம். தேயிலையை கொதிக்க வைத்து அதனுடன் எலுமிச்சம்பழச்சாறு சேர்த்துக் குடித்தால் அதிக பேதி, வயிற்றுப் போக்கு சரியாகும். வெந்தயத்தைப் பொடியாக்கி அதனுடன் சிறிது பெருங்காயத்தூள் சேர்த்து ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை என வெந்நீரில் கலந்து மூன்று வேளை குடித்தால் வயிற்றுப் போக்கு சரியாகும். சுண்டை வற்றலை நல்லெண்ணெயில் வறுத்துப் பொடியாக்கி சுடுசோற்றில் பிசைந்து சாப்பிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.

கசகசாவை வறுத்துப் பொடியாக்கி நாட்டு சர்க்கரை சேர்த்து காலை, மாலை சாப்பிட பேதி நிற்கும். மலை வாழைப்பழத்தை நல்லெண்ணெயில் கலந்து சாப்பிட்டாலும் பேதி நிற்கும்.  அவரை இலைச்சாற்றை மோரில் கலந்து குடிப்பது, மோரில் பெருங்காயத்தூள் சேர்த்துக் குடிப்பது, தேன் சாப்பிடுவது போன்றவையும் வயிற்றுப்போக்கை நிறுத்தும். இவை எல்லாவற்றையும்விட இனிவரும் காலங்களில் இதுபோல் வராமலிருக்க முறையான உணவுப்பழக்கத்தை பின்பற்ற வேண்டும்.

கட்டுரையாளர்; எம்.மரிய பெல்சின்

இயற்கை வழி நோய் தீர்க்கும் ஆலோசகர், மூத்த பத்திரிகையாளர்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time