தமிழ் வீராங்கனை மரணத்தில் பி.டி.உஷா கள்ள மெளனம்!

கா.சு.வேலாயுதன்

அத்லடிக்கில் நூற்றுக்கணக்கான மெடல்களை அள்ளிக் குவித்தவரும், கோல்டு மெடல் வென்ற சாதனையாளருமான தமிழ் பெண் ஜெயந்தி, பாஜக எம்.பியான பி.டி. உஷாவின் கேரள விளையாட்டுப் பள்ளியில்  மர்ம மரணம் அடைந்துள்ளார்! கோவையைச் சேர்ந்த இந்த இளம் பெண்ணின் உயிரை பறித்தது யார்?

கேரளத்தில் பி.டி.உஷா நடத்தும் கோழிக்கோடு விளையாட்டு பயிற்சிப் பள்ளியில் 27 வயது இளம் ஆசிரியை இரவில் தூங்கப் போய் அதிகாலையில் பிணமாய் தொங்கிய சம்பவம் நடந்துள்ளது. ஆசிரியை தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பதும், பள்ளியின் உரிமையாளர் பாஜக எம்பி, உலகப்புகழ் பெற்ற ஒலிம்பிக் தங்க மங்கை பி.டி.உஷா என்பதும் கவனிப்பிற்குரிய விஷயங்கள்.

அதை விட முக்கியம் இந்த ஆசிரியையின் மரணத்திற்கான காரணம் பத்து நாட்களுக்கு மேலாகியும் போலீஸ் துப்புதுலக்காமல் இருப்பதும், இதை விசாரிக்கச் சொல்லி தமிழக, கேரள முதல்வர்களுக்கு கொழிஞ்சாம் பாறையில் உள்ள கேரள தமிழ்பாதுகாப்பு மையம் கோரிக்கை விடுத்து மனு அளித்துள்ளதும், இறந்த ஆசிரியையின் குடும்பத்தினர், ‘எங்கள் பெண் தற்கொலை எண்ணம் கொண்டவள் அல்ல; பி.டி. உஷாவுக்கு இணையாக ஒலிம்பிக்கில் சாதிக்கத் துடித்தவள். எப்போதும் உற்சாகம் ததும்ப விளங்கியவள்!’ என்றெல்லாம் பொங்கிக் கொண்டிருப்பது மேலும், மேலும் இந்த பிரச்சனையை வீரியமாக்கிக் கொண்டிருக்கிறது.

இறந்த ஆசிரியையின் பெயர் ஜெயந்தி. கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரைச் சேர்ந்தவர். அப்பா பழனிசாமி லாரி டிரைவர். பஞ்சர் கடை நடத்தி வந்தவர். ஆறு வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். அப்போது முதுகலைப் படித்துக் கொண்டிருந்த ஜெயந்தியை அவருடைய தம்பி மணிகண்டன்தான் கூலி வேலைக்குச் சென்று படிக்க வைத்திருக்கிறார். நிராதரவாக நின்ற குடும்பத்தையும் தாங்கியிருக்கிறார். ஜெயந்தி வாங்கிய மெடல்களும், பாராட்டுச் சான்றிதழ்களும், பெற்ற பரிசுகளும், கலந்து கொண்ட போட்டிகளும், அவள் நிச்சயம் உலக அளவில் சாதிப்பாள் என்றெண்ணி உள்ளங்கையில் வைத்துத் தாங்கி வந்திருக்கிறது அந்தக் குடும்பம் என்பதுதான் இதில் உள்ள வேதனையான விஷயம்.

தொண்டாமுத்தூர் தீயணைப்பு நிலையம் அருகில் ஒரு ஒண்டிக்குடித்தனத்தில் வாடகைக்கு குடியிருக்கிறது இந்தக்குடும்பம். அவர்களை நேரில் சென்று பார்த்தோம். வீடே சோகம் கப்பியிருக்க, ஜெயந்தியின் அம்மா கவிதா தன் மகளின் பதக்கங்களை, மெடல்களையெல்லாம் எடுத்துக் காட்டி கண்ணீர் விட்டு அழுதார். தன் மகள் பி.டி.உஷாவின் பள்ளியில் இறந்து போன நிலையில் அவர் விட்டுச் சென்ற விளையாட்டு ஆடைகள், பூட்ஸ், கேன்வாஸ் ஷூக்கள் எல்லாவற்றையும் பொறுக்கி எடுத்து வைத்துக் கொண்டு கதறினார்.

‘‘என் பொண்ணு எந்த நிமிஷமும் விளையாட்டில் சாதிக்கணும் என்ற எண்ணம் கொண்டவள் சார். வயசு ஏறுதேம்மா. உனக்கு ஒரு தம்பி இருக்கான். அவனுக்கும் காலகாலத்துல கல்யாணம் செய்யணும்ல/ நீ ஒரு கல்யாணம் செஞ்சுட்டு அப்புறம் உன்னோட சாதனையை செய்யலாமேன்னு கேட்டாக்கூட, இல்லம்மா ஒரு ரெண்டு வருஷம் பொறுத்துக்க. கண்டிப்பா நான் உலகப்புகழ் பெற்ற விளையாட்டுக்காரியாகி உம் முன்னால நிற்பேன். அப்புறம் தான் மத்தது எல்லாம்ன்னு சொல்லுவா.

சாகறதுக்கு முன்தினம் ராத்திரிதான் என் கூட பேசினா. உடம்புக்கு எப்படியிருக்கு. சாப்பிட்டியா? நல்லா தூங்குன்னு வழக்கம்போலவே கலகலன்னு பேசினா. காலையில ரூம்ல தூக்குல தொங்கினதா தகவல் வந்திருக்கு. அதுவும் எனக்கு சொல்லலை. முதல்ல எனக்கு ஒரு போன் அவள் பள்ளிக்கூடத்திலிருந்து வந்தது. யாரு என்னன்னு கேட்கறதுக்குள்ளே கட் ஆயிருச்சு. என் பையன்கிட்ட சொல்லலாம்ன்னு நினைக்கறதுக்குள்ளே அவனுக்கே போன் வந்துடுச்சு. பேசினவங்க யாருன்னு தெரியலை. உங்க அக்காவுக்கு ரொம்பவும் உடம்புக்கு முடியலை. உடனே புறப்பட்டு வாங்கன்னு மட்டும் சொல்லியிருக்காங்க. பையனுக்கு கையும் ஓடலை காலும் ஓடலை. பைக் எடுத்துட்டு கோயமுத்தூர்ல இருந்து கோழிக்கோடுக்கு ஒரு நண்பரைக் கூப்பிட்டுப் போயிருக்கான்.

ஜெயந்தியின் தாயார் கவிதா

காலையில் ஏழு மணிக்குப் புறப்பட்டுப் போனவனுக்கு ஒன்றரை மணி நேரத்தில் மறுபடியும் போன். எங்கே இருக்கீங்கன்னு கேட்டுட்டு, இந்த மாதிரி உங்க அக்கா இறந்துட்டாங்க. கோழிக்கோடு ஆஸ்பத்திரியில் பாடி வச்சிருக்கு. அங்கே வாங்கன்னு சொல்லியிருக்காங்க. எப்படி இறந்தா? ஏன் இறந்தான்னு ஏதும் சொல்லலை. நான் பிபி பேஷண்ட். ஏற்கனவே ஆறு மாசம் முன்னால பிபி அதிகமாகி மூக்குல, வாயில எல்லாம் ரத்தமா வந்து ஆஸ்பத்திரியில் சேர்த்து பொழைச்சிருக்கேன். அதனால பையன் எதுவும் எங்கிட்ட சொல்லலை. சாயங்காலம் ஆறு மணிக்குத்தான் ஆளாளுக்கு வீட்டுக்கு வந்து துக்கம் கேட்க ஆரம்பிச்சாங்க. அப்புறம் தான் விஷயமே எனக்குத் தெரிந்தது!’’ என்று சொல்லி விட்டு கேவிக் கேவி அழ ஆரம்பித்தார். தொடர்ந்து ஜெயந்தியின் தம்பி மணிகண்டனுடன் பேசினோம்.

‘‘அக்காவுக்கு படிப்பும், விளையாட்டும் வெறி. அது தான் எல்லாம். பிஎஸ்ஸி, எம்எஸ்ஸி கம்யூட்டர் சயின்ஸ் படித்தார். சரி வேலைக்குப் போகட்டும்ன்னு இருக்கயைில் நான் பிபிஎட்ங்கிற ஸ்போர்ட்ஸ் டீச்சர் படிக்கிறேன்னாங்க. சரி, படிக்க ஆசைப்படறவங்களை ஊக்கப்படுத்தறதுதானே நியாயம்ன்னு விட்டோம். அதுல பாரதியார் பல்கலைக்கழகத்தில் கோல்டு மெடல் கவர்னர் கையால் வாங்கினாள். அப்புறமும் என்ஐஎஸ்னு ஒரு கோர்ஸ் ஸ்போர்ட்ஸூக்காக (கோச்சர்) இருக்குன்னு பெங்களூர் போய் ஒரு வருஷம் படிச்சாள்.

அப்புறம் பக்கத்துல ஒரு ஜிம்முக்கு வேலைக்குப் போனாள். நாலஞ்சு மாசம்தான். அந்த நேரத்துலதான் பிடி உஷாவோட ஸ்கூல்ல அசிஸ்டெண்ட் கோச்சரா எனக்கு அப்பாயிண்ட்மெண்ட் வந்திருக்கு. போறேன்னு சொன்னார். எங்களுக்கெல்லாம் ரொம்ப சந்தோஷம். பெரிய இடம்தான். உலகப்புகழ் பெற்ற பி.டி. உஷா கோச்சரா இருந்து சொந்தமாக நடத்தும் பயிற்சிப் பள்ளியில், அவருக்கு அடுத்த நிலையில் அசிஸ்டெண்ட் கோச்சர் பதவி என்றால் சாதாரணமா? நிச்சயம் ரெண்டு வருஷத்தில் நல்ல நிலைமைக்கு வந்துடுவான்னு அனுப்பி வச்சோம். அம்மாதான் அங்கே கொண்டு போய் விட்டுட்டு வந்தார்.

தன் சகோதரி ஜெயந்தி வாங்கிய மெடல்களுடன் மணிகண்டன்

இப்ப அங்கே போய் ஒன்றரை வருஷம் ஆச்சு. இதுவரைக்கும் எந்தப் பிரச்சனையும் வந்ததில்லை. அக்காகிட்ட சம்பளம் என்ன ஏதுன்னு கூட நாங்க கேட்டுகிட்டதில்லை. மாசம் பத்தாயிரம் அம்மாவுக்கு அனுப்புவா. அதுவும் இரண்டு மூணு மாசமா ஐந்தாயிரம் அனுப்புவா. அதுக்குக் காரணம் இப்பவும் அண்ணாமலை யுனிவர்சிடியில் படிச்சிட்டிருக்கா. அதுக்கு செலவாகும்லன்னு நாங்க கணக்குப் பார்க்கலை. பி.டி. உஷாவோட பயிற்சிப் பள்ளியில் விளையாட்டுதான் சொல்லிக் கொடுக்கறாங்க அதுவும் நேசஷனல், ஆசியாட், ஒலிம்பிக் லெவல்ல போகக்கூடிய பொண்ணுகளுக்கு கோச்சரா இருந்து பயிற்சி கொடுக்கறதுதான் அக்காவோட வேலை.

இவகிட்ட பயிற்சி பெற்ற பெண்ணுக ஸ்டேட், நேஷனல் லெவல்ல மெடல்கள் தட்டீட்டு வந்திருக்காங்க. இப்படி வந்த பொண்ணுக ஜூனியர் ஒலிம்பிக் போட்டிக்கும் போகப்போறதா அக்கா சொல்லுவா. எப்பவும் விளையாட்டுப் பத்தியே தான் பேசுவாள். அப்படிப்பட்டவதான் இப்படி பொசுக்குன்னு செத்துப் போனான்னு சொன்னதும் அதிர்ச்சியாயிட்டோம். அம்மாவுக்கும் சொல்ல முடியலை என் பிரண்ட்டைக் கூப்பிட்டுட்டு பைக்லயே கோழிக்கோடு போயிட்டேன். ஆஸ்பத்திரிக்குப் போய்ப் பார்த்தா சொன்னபடி அங்கே அக்காவோட உடல் இல்லை.

போன் பண்ணிக் கேட்டா ஸ்கூலுக்கு வரச் சொன்னாங்க. அது அங்கிருந்து 30 கிலோமீட்டர். எனக்கு போன் வந்தது காலையில ஆறு மணிக்கு.  நான் அங்கே போய் சேர்ந்தது பனிரெண்டு மணி. அப்ப வரைக்கும் அங்கே ஒரு ஸ்டெரச்சர்ல தான் பாடிய கிடத்தி வச்சிருந்தாங்க. போலீஸ் உட்கார்ந்து பி.டி. உஷாவோட கேஷூவலா பேசிட்டு இருக்காங்க. நாங்க போன பிறகு அக்காவுக்கு வீட்ல ஏதும் பிரச்சனை இருக்கா என்னன்னு எங்களைத்தான் விசாரிச்சாங்க போலீஸ். அவுங்களே அதுக்கப்புறம் பாடிய ஆஸ்பத்திரி அனுப்பினாங்க. அங்கே ஸ்கூல்ல உள்ள ஒரு பையன்கிட்டவே புகார் ஒண்ணு வாங்கிட்டாங்க. எங்களை எதுவுமே கேட்கலை. பாடிய போஸ்ட்மார்ட்டம் பண்ணி ஒப்படைக்கும் போதுதான் ஒரு வெற்றுத்தாள்ல, இது போல அக்கா இறந்து போஸ்ட்மார்ட்டம் செஞ்ச பாடிய ஒப்படைத்தார்கள். பெற்றுக் கொண்டேன்’ன்னு எழுதி கையெழுத்து வாங்கிட்டாங்க.

பத்திரிகையில் வந்த தடகளப் போட்டியில் ஜெயந்தி விளையாடிய போட்டோ

அந்த பேப்பர் ஒண்ணு மட்டும் தான் கொடுத்து விட்டாங்க. பி.டி. உஷா பள்ளிக் கூடத்தில் பார்த்ததோட சரி. ஆஸ்பத்திரிக்கு நாலு பேர் வந்தாங்க. ஆம்புலன்ஸ்ல நாங்க புறப்பட்டு வரும் போது பின்னாடியே வந்தவங்க, குறிப்பிட்ட தூரத்தில அவங்களும் போயிட்டாங்க. அடுத்தநாள் இங்கே பாடிய அடக்கம் பண்ண ஆஸ்பத்திரி டெத் சர்டிபிகேட் இல்லாம சுடுகாட்டுல பிரச்சனை ஆயிருச்சு. அதுக்கே நாங்க ஸ்கூலுக்கும், போலீஸிற்கும் போன் பண்ணி படாத பாடு பட்டோம். கடைசியில அதை அவங்க ஸ்கேன் பண்ணி அனுப்பறதுக்குள்ளே ரொம்ப நேரமாகிப் போச்சு. அதனால நாங்க அக்கா உடம்பை எரிக்க வாய்ப்பில்லாம புதைச்சுட்டோம்!’’ என்றவர் சற்று நிறுத்தி விட்டு செருமினார். கண்ணி்ல் ததும்பிய நீரை துடைத்து விட்டுத் தொடர்ந்தார்.

‘‘அதுக்கப்புறம் நாலு நாள் கழிச்சு அக்கா விட்டுட்டுப் போன பொருளை எடுக்கறதுக்கும். அக்கா எப்படி எதனால் இறந்ததுன்னு கேட்கிறதுக்கும் ஸ்கூலுக்கு அம்மாவைக் கூட்டீட்டுப் போனேன். ஸ்கூல்ல பி.டி. உஷாவைப் பார்க்க விரும்பினோம். ஆனால் முடியலை. அவங்க பிசின்னு சொல்லிட்டாங்க. அவங்க என்ன நடந்ததுன்னு விவரமா சொல்லி இருந்தால் கூட மனசு ஆறுதல் அடைந்திருக்கும். ஆனால், எவ்வளவு கேட்டும் அவங்களை பார்த்து பேச முடியலை! போலீஸ்ல போய்க் கேட்டோம். அவங்க தற்கொலைதான். பாரன்சிக் ரிப்போர்ட் வந்த பிறகு விஷயம் சொல்றோம்ன்னாங்க. செல்ஃபோன் முக்கிய தடயம். அதுவும் ஆய்வுக்கு அனுப்பியிருக்கோம்ன்னாங்க. யாரும் எந்த ரெஸ்பான்ஸூம் பண்ணலை. நாங்க எதுவும் பேசாம திரும்ப வேண்டியதாயிற்று!’’

என்றவர் தன் அக்கா படித்து வாங்கிய சான்றிதழ்களையும், பாராட்டுப் பத்திரங்களையும், மெடல்களையும் எடுத்து காண்பித்தார். அவற்றை எண்ணவும், முடியவில்லை. அடுக்கவும் இயலவில்லை. அந்த அளவு குவிந்திருந்தது. 100 மீட்டர் ஓட்டம், 1000 மீட்டர் ஓட்டம், கபடி, வலுதூக்குதல், குண்டு எறிதல் இப்படி விளையாட்டுகளில் மட்டுமல்லாது, கட்டுரை, ஓவியம், கவிதைப் போட்டிகளிலும் ஜெயந்தி முதல் பரிசு வாங்கின சான்றிதழ்களை காண முடிந்தது.

ஜெயந்தியின் தாய் கவிதா, ”என் பொண்ணு தற்கொலை செஞ்சுக்கற பொண்ணில்லை. அதற்கான சூழலும் அவளுக்கு இல்லை. அதனால விடாதீங்கன்னுதான் சொல்றாங்க. நாங்க என்ன செய்ய முடியும். தினம் பத்துத் தடவை ஸ்கூலுக்கும், கேரள போலீஸிற்கும் போன் பண்றோம். ஒரு துப்பும் கிடைக்கறதில்லை. இப்ப இந்த மாத சம்பளத்தை மட்டும் என் மகன் பேருக்கு செக் போட்டு பள்ளிக்கூடத்திலிருந்து அனுப்பியிருக்காங்க. பாருங்க!” எனக்காட்டினார்.

கேரள மாநிலம் கோழிக்கோடு பாலுச்சேரி. இந்த போலீஸ் சரகத்தில் உள்ளடங்கியுள்ள ஒரு கிராமத்தில் தான் பி.டி. உஷா தடகளப் பயிற்சிப் பள்ளி நடத்தி வருகிறார். இதில் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவிலேயே பயிற்சி ஆசிரியர்கள், உதவியாளர்கள் உள்ளனராம். அதில் பி.டி. உஷாவுக்கு அடுத்த நிலையில் உள்ள பயிற்சி ஆசிரியர் ஜெயந்தி மட்டும் தானாம். பி.டி.உஷா கேரள ஊடகங்களுக்கு தந்த பேட்டியில் ”இறந்த ஆசிரியை மிக துடிப்பானவர், உற்சாகமானவர். விளையாட்டு குறித்து நாங்கள் அடிக்கடி பேசியுள்ளோம். ஆனால், தனிப்பட்டு எதுவும் பேசியதில்லை’’ எனக் கூறியுள்ளார்!

பிரதமர் நரேந்திர மோடியுடன் பாஜக எம்.பியான பி.டி.உஷா

‘‘அப்படியானவரின் மரணம் ஏன், எதற்காக எப்படி நடந்தது. அது பற்றி போலீஸ் ரிப்போர்ட் சொல்வது என்ன? அந்தப் பெண் தன்னைப் போலவே சாதிக்கத் துடிக்கும் ஒரு விளையாட்டு வீராங்கனை. அவர் குடும்பம் இந்த சின்ன வயதில் அவரை இழந்து விட்டு என்ன பாடுபடும். அவர்களுக்கு ஆறுதல் சொல்லுவதும், தேற்றுவதும் அவசியம் என ஒலிம்பிக்கில் தங்கம் வாங்கின புகழ்மிக்க தங்கமங்கை பி.டி. உஷா ஏன் உணரவில்லை.இப்படியாக பி.டி.உஷா கண்டு கொள்ளாமல் இருப்பதும், போலீஸ் நடவடிக்கையில் சுணங்கி இருப்பதும்,  கேரள மாநில அரசு தரப்பில் காணப்படும் அலட்சியப் போக்கும் இது விஷயத்தில் நிறைய சந்தேகங்களை கிளப்புகின்றன. எனவேதான் இரண்டு மாநில முதல்வர்களும் இதில் சிறப்புக்கவனம் எடுத்து விசாரிக்க வேண்டும். அந்தக்குடும்பத்துக்கு உரிய நிவாரணத்தை வழங்க வேண்டும்!’’ என்று கோரினோம் என்கிறார். கேரள தமிழ்பாதுகாப்பு அமைப்பின் நிறுவனர் ஆசிரியர் பேச்சிமுத்து.

பேச்சி முத்து

நமக்கும் கூட இப்படி நிறைய சந்தேகங்கள் ஜெயந்தியின் மரணத்தில் விசாரிக்க, விசாரிக்க துளிர் விடுகின்றன. ஏன் எனில் வழக்கமாக தற்கொலை செய்பவர்கள் எழுதி வைக்கும் கடிதமும் இல்லை! சம்பந்தப்பட்ட கேரளாவின்  பாலுச்சேரி காவல்நிலைய சப் இன்ஸ்பெக்டருக்கு போன் செய்து கேட்டோம். ‘‘ஆ, பெண் தற்கொலைதான். காரணம் ஏதும் கிட்டிட்டில்லா. எதற்கும் பாரன்சிக் ரிப்போர்ட், செல்ஃபோன் தகவல் வந்தால் தான் சொல்ல முடியும்!’ என்றே தெரிவித்தனர்.

ஆசிரியை தூக்கில் தொங்கியது 28-ந்தேதி. நாம் எஸ்ஐயிடம் நாம் விளக்கம் கேட்டது 5-ந்தேதி. ஒரு வாரத்திற்கும் மேலாக துப்பு துலக்கிக் கொண்டே இருக்கிறார்கள். அது இன்னமும் பெருத்த சந்தேகத்தை கொடுத்தது. உண்மை என்ன என்பதை அறியத் துடிக்கும் இந்த ஏழைக் குடும்பத்தின் ஏக்கத்திற்கும், வேதனைக்கும் நியாயம் கிடைக்குமா? தெரியவில்லை. இறந்தது தமிழ் நாட்டுப் பெண் என்பதாலோ என்னவோ.. கேரள  மக்களும், அரசியல் கட்சிகளும், பொது அமைப்புகளும், ஊடகங்களும் இந்த அநியாயமான மர்ம மரணத்தை விவாத பொருளாக்கவில்லை.

பி.டி.உஷா பாஜகவில் இணைந்தவர், பாஜக மூலம் எம்.பி., பதவி பெற்றவர், அதன் மூலம் ஆர்.எஸ்.எஸ் பின்னணியை உருவாக்கிக் கொண்டிருக்கிறார் என்றெல்லாம் சிந்தித்துப் பார்த்தால் பாஜக தொடர்பில் உயர் பதவி பெற்றவர்கள் ஏன் மனித நேயத்தை தொலைத்து விடுகிறார்கள் என்று நினைப்பதை தவிர்க்க முடியவில்லை. ‘பி.டி.உஷாவுடன் இணைந்து சாதிக்க துடித்தவரை சாகடித்தது யார்? ‘ என்ற கேள்விக்கு கண்டிப்பாக விடை தெரிய வேண்டும்.

கட்டுரையாளர்; கா.சு.வேலாயுதன்

மூத்த ஊடகவியலாளர், எழுத்தாளர், ‘யானைகளின் வருகை’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time